சந்திரகுப்தனின் பேரரசு பற்றி நேரு - ஆதனூர் சோழன்

சந்திரகுப்தனின் பேரரசு 

ஜனவரி 25, 1931

பீகார் மாநிலம் இருக்கும் இப்போது இடத்தில் பழங்காலத்தில் மகதப் பேரரசு அமைந்திருந்தது. இந்த பேரரசு குறித்து முன்பு எழுதிய கடித்தில் கூறியிருக்கிறேன். 

இந்தப் பேரரசு மிகவும் பழமையானது. பாடலிபுத்திரத்தை தலைநகராக கொண்டது. இன்றைய பாட்னா நகரம்தான் பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்டது. நந்த வம்சத்தை சேர்ந்தவர்கள் இதை ஆட்சி செய்தார்கள். அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்த சமயத்தில் நந்த வம்ச அரசன் ஒருவன் ஆண்டான். அவனுடை உறவினர்களில் சந்திரகுப்தன் என்ற இளைஞன் இருந்தான்.

நாம் பேசிக் கொண்டிருக்கும் அக்காலத்தில் நந்த அரச வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள் மகத நாட்டை ஆண்டுவந்தார்கள். அலெக்சாந்தர் இந்தியாவின் வடமேற்கில் படையெடுத்து வந்தபோது பாடலிபுத்திரத்தில் நந்த வம்சத்தைச் சேர்ந்த ஓர் அரசன் ஆண்டுவந்தான். இவனுடைய உறவினர்களில் சந்திரகுப்தன் என்று ஓர் இளைஞன் இருந்தான். அவனுடைய புத்திக் கூர்மைக்கு பயந்தோ, அல்லது அவன் ஏதும் தவறு செய்த காரணத்தாலோ அவனை நாட்டை விட்டு விரட்டினான் அரசன். விரட்டப்பட்ட சந்திரகுப்தன் வடக்கே சென்றான். அவனுடன் விஷ்ணுகுப்தன் என்ற பிராமணன் இருந்தான். சாமர்த்தியசாலியான அவனை சாணக்கியன் என்றும் அழைத்தார்கள். 

சந்திரகுப்தனும் சாணக்கியனும் ‘விதியின் செயல்’ என்று எதற்கும் பணிந்துபோகிற ஆட்கள் இல்லை. இருவருக்குமே பெரிய ஆசைகளும் திட்டங்களும் இருந்தன. அலெக்ஸாண்டரின் பெரும்புகழைக் கேட்டு அவனைப்போல ஆகலாம் என்று சந்திரகுப்தன் விரும்பியி ருக்கலாம். சாணக்கியன் அவனுக்கு ஏற்ற நண்பனாகவும் மதி மந்திரியாகவும் இருந்தான். இருவரும் தட்சசீலத்தில் என்ன நடக்கிறது என்பதை கூர்மையாகக் கவனித்துக் கொண்டு தகுந்த காலத்தை எதிர் நோக்கியிருந்தார்கள்.

அலெக்சாண்டர் இறந்த செய்தியைக் கேட்டவுடன் சந்திரகுப்தன் செயலில் இறங்கினான். ஜனங்களைத் தூண்டிவிட்டு அலெக்ஸாண்டர் விட்டுச் சென்ற கிரேக்கப்படையை விரட்டி அடித்தான். தட்சசீலத்தை கைப்பற்றினான். பின்னர் பாடலிபுத்திரத்தின் மீது படையெடுத்து நந்த அரசனை வென்றனர்.  அலெக்சாண்டர்  இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின் கி.மு.321ல் இது நிகழ்ந்தது. 

இந்த நாளில் இருந்து மௌரிய வம்ச ஆட்சி தொடங்குகிறது. சந்திரகுப்தன் ஏன் மௌரியன் என்று அழைக்கப்பட்டான் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இவனுடைய தாயார் பெயர் மூரா என்பதிலிருந்து மௌரியன் என்று ஆனதாக கூறுகிறார்கள். எது எப்படி இருந்தாலும் இவனுக்கு பின்னால் பல நூற்றாண்டுகளுக்கு பின் ஒரு சந்திரகுப்தனும் அரசாண்டான். இருவரையும் வேறுபடுத்தவே இவனை சந்திரகுப்த மவுரியன் என்று அழைக்கிறார்கள்.

மகாபாரதத்திலும் மற்றப் பழைய நூல்களிலும் பாரதநாடு முழுவதையும் ஒரு தலைமையில் ஆண்டதாக கூறுகிறார்கள். பாரதநாடு என்பதற்கான எல்லை எதுவரை என்பதை யாரும் குறிப்பிடவில்லை. பழைய அரசர்களின் வல்லமையை மிகப்படுத்தி கூறியிருக்கலாம்.  ஆனால், சரித்திரத்தில் நமக்குத் தெரிந்த வரையில் இந்தியாவில் பரப்பளவும் பலமும் பொருந்திய முதல் பேரரசு  சந்திரகுப்த மௌரியனுடையதே ஆகும்.

அவனுடைய அரசாங்கம் சிறப்பும் பலமும் பெற்றிருந்தது. இப்படிப்பட்ட அரசு அமைக்க அதற்கு முன்பே வலுவான அடித்தளம் அமைத்திருக்க வேண்டும். சந்திரகுப்தனுடைய ஆட்சியில் அலெக்சாண்டரின் தளபதியான செலூகஸ் ஆசியா மைனரிலிருந்து இந்தியா மீது படையெடுத்து வந்தான். ஆனால் அவன் தனக்கு சொந்தமான இப்போது ஆப்கானிஸ்தான் என்று அழைக்கப்படும் காந்தார தேசத்தின் பெரும்பகுதியை சந்திரகுப்தனிடம் தோற்க நேர்ந்தது. காபூல், ஹீரெட் வரையில் உள்ள பகுதியை வென்ற சந்திரகுப்தன் செலூகசின் பெண்ணையும் மணந்துகொண்டான். தென் இந்தியா மட்டும் அவனுக்குக் கீழ் வரவில்லை. இந்தப் பெரிய பேரரசுக்கு பாடலிபுத்திரம் தலைநகராக இருந்தது. 

சந்திரகுப்தனுடைய அரசவையில் இருந்த மெகஸ்தனிஸ் என்ற கிரேக்கத் தூதர் அந்தக்கால வரலாறை எழுதியிருக்கிறார். அதைவிட சிறப்பாக கவுடில்யர் என்பவர் அர்த்தசாஸ்திரம் என்ற நூலில் எழுதியிருக்கிறார். கவுடில்யர் யார் தெரியுமா? விஷ்ணுகுப்தன் என்றும் சாணக்கியன் என்றும்  அழைக்கப்பட்ட சந்திரகுப்தனின் நண்பன்தான். அர்த்த சாஸ்திரம் என்றால் பொருளியல் நூல் என்று அர்த்தம்.

அரசர், அமைச்சர், ஆலோசனையாளரின் கடமைகள், சபை கூடுவது, அரசாங்கத்தின் பல்வேறு கிளைகள் அல்லது இலாக்காக்கள், வர்த்தகம், வியாபாரம், நகர நிருவாகம், கிராம நிருவாகம், நீதி, நீதிமன்றங்கள், சமூக வழக்கங்கள், பெண்ணுரிமைகள், வயது முதிர்ந்தோரையும் ஆதரவற்றவர்களையும் காப்பாற்றுவது, திருமணம், விவாகரத்து, வரி விதிப்பது, தரைப்படை, கடற்படை, யுத்தம், சமாதானம், ராஜதந்திரம், விவசாயம், நூல்நூற்றல், நெசவு, கைத்தொழில், அனுமதிச்சீட்டுக் கொடுப்பது, சிறை நிர்வாகம் ஆகியவற்றை அர்த்தசாஸ்திரம் விரிவாக பேசுகிறது.

அரசன் பதவி ஏற்கும்போது “உங்களை நான் துன்புறுத்தினால் இந்தப்பிறவியிலும் மறுபிறவியிலும் கிடைக்கவேண்டிய பயன்களையும் குழந்தைப்பேறையும் இழக்கக் கடவேனாக” என்று பிரமாணம் செய்ய வேண்டும். அரசனுக்கு சொல்லப்பட்ட அன்றாட காரியங்களைக் கவனிக்க அவன் எப்போதும் தயாராக வேண்டும்.   “அரசன் முயற்சி உடையவனாக இருந்தால் அவன் கீழ் வாழும் குடிகளும் முயற்சி உடையவர்களாக இருப்பார்கள். அரசின் நலம் குடிகளின் நலனில் அடங்கியிருக்கிறது. தனக்கு இதமானதை அரசன் நன்மையென்று கருதாமல் குடிகளுக்கு இதமானவற்றையே நன்மையென்று கருதி நடக்கவேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது. 

இப்போது உலகிலிருந்து அரச பதவி ஒழிக்கப்படுகிறது.  இருக்கின்ற சில அரசர்களும் விரைவில் போய்விடுவார்கள். ஆனால் பழங்கால இந்தியாவில் அரசுரிமை என்பது மக்களுக்குத் தொண்டு புரிவதாக இருந்திருப்பதை நினைக்க ஆறுதலாக இருக்கிறது. ஆனால் பல அரசர்கள் இந்த லட்சிய நெறிப்படி நடக்க முடியாமல் தங்களுடைய அறியாமையால் தங்களுக்கும் நாட்டுக்கும் தீமையைத் தேடிக்கொண்டார்கள். 

‘ஓர் ஆரியன் மற்றோர் ஆரியனை அடிமைப்படுத்துவது கூடாது’ என்னும் பழைய கொள்கையையும் அர்த்தசாஸ்திரம் வற்புறுத்துகிறது. வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சில அடிமைகள் இருந்தார்கள் என்று தெரிகிறது. ஆனால் ஆரியர்களைப் பொறுத்தவரை ஒருவர் மற்றவருக்கு அடிமையாகாமல் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்து வந்தார்கள்.

மௌரிய சாம்ராஜ்யத்தின் தலைநகரம் பாடலிபுத்திரம். கங்கைக் கரையில் ஒன்பது மைல் நீளமுள்ள முகப்போடு இருந்தது.  அந்நகருக்கு அறுபத்து நான்கு பிரதான வாயில்கள் இருந்தன. வீடுகள் பெரும்பாலும் மரத்தாலர் கட்டப்பட்டிருந்தன. தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாக்க  நகரின் முக்கிய வீதிகளில் ஆயிரக்கணக்கான பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தார்கள். வீட்டு உரிமையாளர்கள் தீப்பிடித்தால் அணைக்க பாத்திரங்களில் தண்ணீரும், ஏணி, கொக்கி முதலியவற்றையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது.

நகரின் தெருக்களில் யாராவது குப்பை கூளங்களை எறிந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்கிற விதியைக் கௌடில்யர் குறிப்பிடுகிறார். பாடலிபுத்திரத்தின் நிர்வாகத்தைக் கவனிப்பதற்கு ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரசபை இருந்தது. சபை முழுவதும் சுகாதாரம், நிதி, குடி தண்ணீர் வசதி, பூங்காவனங்கள், பொதுக்கட்டடங்கள் ஆகியவற்றை பராமரித்து வந்தது.

நீதி வழங்குவதற்குப் பஞ்சாயத்துக்களும். ‘அப்பீல்’ செய்வதற்கு உயர் நீதிமன்றங்களும் இருந்தன. பஞ்சகாலத்தில் உதவ பொருட்கள் கையிருப்பு இருந்தது. 2200 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரகுப்தன் அரசு இவ்வாறு இருந்தது. கப்பல்கள் கடல் மார்க்கமாகப் பர்மாவுக்கும் சீனாவுக்கும் சென்று வந்தன. இருபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த சந்திரகுப்தன் கி.மு.296ல் இறந்தான். 

Previous Post Next Post

نموذج الاتصال