இந்தியாவை தனது வீரத்தாலும் பீரங்கிப் படையாலும் பாபர் வென்றான். ஆப்கானிய சுல்தானை எளிதில் வென்று டில்லியை கைப்பற்றிய பாபர், சித்தூர் ராணா சங்கனின் ராஜபுத்திரர் படையை எளிதில் வெல்ல முடியவில்லை. ராணா சங்கன் ராஜபுத்திர வரலாற்றில் நீங்காப் புகழ்பெற்றவன். ஒருவழியாக ராஜபுத்திரர்களை பாபர் வென்றான், என்றாலும் அவன் மகன் ஹுமாயூனுக்கு கஷ்டமான எதிர்காலத்தை விட்டுச் சென்றான்.
ஹுமாயூன் படித்தவனாகவும், கலைப்பண்பு மிக்கவனாகவும் இருந்தான். ஆனால், தந்தையைப் போல போர்வீரன் அல்ல. அவனுடைய பேரரசு முழுவதும் நெருக்கடிகள் சூழ்ந்தது. 1540ல், அதாவது பாபர் இறந்து பத்தாண்டுகளில் பீஹாரில் இருந்த ஆப்கானிய தலைவனான ஷேர்கான் ஹுமாயூனைத் தோற்கடித்து இந்தியாவை விட்டு விரட்டினான். மொகலாய பேரரசனாக இருந்த ஹுமாயூன் ராஜபுதனத்தின் பாலைவத்தில் கர்ப்பினி மனைவியுடன் அலைந்தான். அப்போதுதான், 1542ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் ஓர் ஆண் குழந்தைய பெற்றாள். அந்தப் பிள்ளைதான் பிற்காலத்தில் பேரரசர் அக்பர் ஆனான்.
ஹுமாயூன் பாரசீகம் சென்று மன்னன் ஷாதமஸ்ப்பிடம் அடைக்கலம் பெற்றான். இதற்கிடையில், ஷேர்கான் வட இந்தியாவில் தனது ஆட்சியை நிலைப்படுத்தினான். ஐந்தாண்டுகள் ஷேர்ஷா என்ற பெயருடன் ஆட்சி செய்தான். அவனுடைய அரசாங்கம் சுறுசுறுப்பாகவும் திறமையாகவும் செயல்பட்டது. இந்தியாவுக்கு சிறப்பான நிலவரி முறையை ஏற்படுத்தினான். நிறுவ அவனுக்கு அவகாசம் கிடைத்தது. இந்தியாவை ஆண்ட ஆப்கானிய அரசர்களில் மட்டுமல்ல, வேறு பல அரசர்களிலும் திறமை மிக்கவன். ஆனால், அவன் இறந்தவுடன் பேரரசு சீர்குலைந்தது.
இதையடுத்து 1556ல் பாரசீகத்திலிருந்து ஒரு படையுடன் ஹுமாயூன் திரும்பி வந்தான். நாட்டை கைப்பற்றினான். பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த அவன், அடுத்த ஆறே மாதங்களில் மாடிப்படியில் தடுக்கி விழுந்து இறந்தான். ஆப்கானியனாகிய ஷேர்ஷாவின் நினைவிடம் பீஹாரின் சஹஸ்ரம் என்ற இடத்தில் இருக்கிறது. அது அவனைப்போலவே கட்டுறுதியாகவும் கடுமையான தோற்றத்துடனும் இருக்கிஹ—§. டில்லியில் உள்ள ஹுமாயூனின் நினைவிடமோ, வெகு சொகுசாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. இந்த நினைவிடங்களில் இருந்தே, இரண்டு மன்னர்களின் இயல்புகளையும் நாம் நன்றாக உணரமுடியும்.
சிம்மாசனத்துக்கு வந்தபோது அக்பருக்கு பதின்மூன்று வயதுதான். பாபரைப் போல சிறுவயதில் ஆட்சிக்கு வந்த அவனுக்கு, பைராம்கான் என்ற தளபதி கார்டியனாகவும் காவலனாகவும் இருந்தான். கான் பாபா என்று அழைக்கப்பட்ட அவனுடைய பாதுகாவல் அக்பருக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. இளம் வயதிலேயே அரசாங்கத்தைத் தானே நடத்தத் தொடங்கினான்.
அக்பர் 1556 தொடக்கத்தில் இருந்து 1605ஆம் ஆண்டு முடிவு வரை 50 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அக்பர் சில வழிகளில், சில சமயம், அசோகப் பேரரசரை நமக்கு நினைவு படுத்துகிறான். கிறிஸ்துவுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்தியாவின் பௌத்த பேரரசன் அசோகன். கிறிஸ்துவுக்குப் பதினாறு நூற்றாண்டுகளுக்கு வாழ்ந்த இந்தியாவின் முஸ்லிம் பேரரசர் அக்பர். இருவரும் மதம் குறித்து ஒரே மாதிரியான கருத்தை கொண்டிருந்தார்கள். அது வியப்பை ஏற்படுத்துகிறது. ஒருவேளை இந்தியாவே தன்னுடைய மதத்தை தன் இரு பெரும் புதல்வர்கள் மூலம் உலகுக்கு வெளிப்படுத்துகிறதோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. அசோகன் அவனே அவனைப் பற்றி கல்லில் பொறித்து விட்டுப் போனதுதான் நமக்கு தெரியும். அக்பரைப் பற்றியோ நாம் மிகவும் அதிகமாக அறிந்திருக்கிறோம். அவன் காலத்தில் அவனுடைய அரசவையில் இருந்த இரண்டு வரலாற்று ஆசிரியர்கள் நிறைய எழுதி வைத்திருக்கிறார்கள்.
மொகலாய வம்சம் இந்திய மண்ணில் நிலைத்ததற்கும், இந்தியத் தன்மை அடைந்ததற்கும் அக்பரின் ஆட்சியே காரணம். அக்பருடைய ஆட்சியில் தான் மகா மொகலாயப் பேரரசர் என்ற பட்டம் ஐரோப்பாவில் வழங்கப்பட்டது. அக்பர் எல்லையற்ற அதிகாரம் செலுத்தினான். அவன் வைத்ததுதான் சட்டம். ஆனாலும், புத்திசாலியாக இருந்தான். இந்திய மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு உழைத்தான். ஒருவிதத்தில் பார்த்தால், அவனை இந்திய தேசியத்தின் தந்தை எனலாம். தேசத்தில் தேசிய உணர்ச்சி மறையும் நேரத்தில், மதமானது மக்களைப் பிரிப்பதற்குப் பயன்பட்ட காலத்தில் அக்பர் ஆட்சி செய்தான். எனவேதான், பிரிவினை செய்யும் மதத்தின் உரிமைகளைப் புறக்கணித்தான். இந்திய தேசிய லட்சியத்துக்கு முதலிடம் கொடுத்தான். இதில் அவன் முழுவெற்றி பெற்றதாக சொல்ல முடியாது. ஆனால், அதில் குறிப்பிடத்தக்க பலன் கிடைத்தது உண்மை.
அக்பருடைய வெற்றி முழுவதற்கும் அவனே காரணம் என்று சொல்ல முடியாது. இந்தியாவில் அவனுக்கேற்ற கால சூழ்நிலை இருந்தது. அதை உணர்ந்து செயல்பட்டதால்தான் மக்கள் ஆதரவு அவனுக்கு இருந்தது. அவனுடைய ஆட்சிக்கு முன்பே, இஸ்லாம் மற்றும் இந்து மதங்களில் உள்ள பொதுவான அம்சங்களை கண்டறிந்து இரண்டையும் ஒன்றுபடுத்த ராமானந்தர், கபீர்தாஸ், குரநானக் போன்ற பெரியோர்கள் முயன்றனர் என்று ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். உருது அல்லது ஹிந்துஸ்தானி மொழி வளர்ச்சியை எழுதியிருக்கிறேன். மக்கள் உள்ளத்தில் ஒருவித சமரச உணர்வு இருந்தது. அக்பரோ மகா மேதாவியாக எதையும் கிரகிக்கக்கூடிய புத்தி படைத்தவனாக இருந்தான். அந்தச் சமரச உணர்வை தனக்குள் அனுபவித்து மாறுதல் அடைந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
ஒரு ராஜதந்திரி என்ற முறையில் போரினால் வரும் ஆதாயத்தை விட அன்பினால் வரும் ஆதாயமே சிறந்தது, நிலையானது என்று அக்பர் கருதினான். எனவேதான், ஹிந்து மக்களின் நல்ல எண்ணத்தையும் பிரியத்தையும் பெறும் செயலில் அவன் ஈடுபட்டான். முஸ்லிம் அல்லாதார் மீது அதுவரை விதிக்கப்பட்ட ‘ஜஜியா’ என்ற தலைவரியையும், ஹிந்து யாத்ரீகர் மீது விதிக்கப்பட்டிருந்த வரியையும் அவன் நீக்கினான். ராஜபுத்திர வம்ச பெண்ணை அவன் திருமணம் செய்தான். தன் மகனுக்கும் ஒரு ராஜபுத்திர பெண்ணை திருமணம் செய்து வைத்தான். இத்தகைய கலப்பு மணங்களை அவன் ஆதரித்தான். ராஜபுத்திரர்களை அவன் மிக உயர்ந்த அரசுப் பதவிகளில் அமர்த்தினான். படைத் தளபதிகளிலும், அமைச்சர்களிலும், கவர்னர்களிலும் பலர் ஹிந்துக்களாக இருந்தனர். ராஜா மான்சிங் காபூலின் கவர்னராக இருந்தார். ராஜபுத்திரர்களின் நல்லெண்ணத்தையும், ஹிந்து மக்களின் அன்பையும் பெறும் முயற்சியில், இஸ்லாமியர்ளுக்கே அநீதி இழைக்கும் அளவுக்கு சென்றுவிட்டான். அவன் ஹிந்துக்களின் உள்ளார்ந்த அன்பைப் பெற்றான். அவனுக்குச் சேவகம் புரிய ராஜபுத்திரர்கள் கூடி வந்தார்கள். மேவார் மன்னன் ராணா பிரதாப சிம்மன் மட்டும் அக்பருக்குத் தலைவணங்க மறுத்துவிட்டான். அவன் அங்கே பெரிதும் மதிக்கப்படுகிறான். அவனைப் பற்றி பல கதைகள் அங்கே வழங்குகின்றன.
ஆக, அக்பர் ராஜபுத்திரர்களைத் தன் வசப்படுத்தினான். பொதுமக்களின் பிரியத்தையும் பெற்றான். அவன் பார்சிகளிடத்திலும், தன்னுடைய அரசவைக்கு வந்த கிறிஸ்தவ பாதிரிகளிடமும் கூடக் கருணை காட்டினான். பிற மதத்தினரிடம் அவன் காட்டிய கருணையையும், முஸ்லிம் மத நடைமுறைகள் கடைப்பிடிப்பதில் அவன் காட்டிய அவன் காட்டிய ஒருவித கவனக் குறைவும் முஸ்லிம் பிரமுகர்களே அதிருப்தி அடைந்தார்கள். அவனுக்கு எதிராக சில கலகங்கள் கூட நிகழ்ந்தன.
நான் அக்பரை அசோகனோடு ஒப்பிட்டேன். ஆனால், அக்பர் தணியாத நாடாசை கொண்டவன். கடைசிவரையில் அவன் தன் பேரரசின் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டிருந்தான். அவனைப் பற்றி கிறிஸ்தவ பாதிரிகள் இப்படி எழுதி வைத்திருக்கிறார்கள்...
“அக்பர் அறிவுக்கூர்மை படைத்தவன். விவகாரங்களைத் தீர்க்கமாகப் பரிசீலனை செய்வான். அவன் முடிவுகள் சரியானவையாகவே இருக்கும். காட்சிக்கு எளியவனாகவும், அன்பு உடையவனாகவும், அருள் உடையவனாகவும் இருந்தான். இந்தக் குணங்களோடு தீரம் மிக்கவனாகவும் இருந்தான். அவன் பல விஷயங்களில் அக்கறையும், அவற்றை அறியும் ஆவலும் உடையவனாக இருந்தான். ராணுவ, அரசியல் விஷயங்களின் நுட்பங்களை அறிந்திருந்தான். பல கைத்தொழில்களைப் பற்றிய ஞானமும் அவனுக்கு இருந்தது. தனக்குக் கேடு செய்தவர்களிடமும் இரக்கம் காட்டினான். அவன் கோபம் கொள்வது அபூர்வம். கோபம் வந்துவிட்டாலோ அது கோபாவேசமாகத் தான் முடியும். ஆனால் அவனுடைய சினம் விரைவிலேயே ஆறிவிடும்.”
வெளிநாட்டைச் சேர்ந்த மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவன் இப்படி எழுதியிருக்கிறான் என்பதை நீ நினைவில் வைக்கவேண்டும்.
அக்பர் அசாதாரணமான உடல் வலிமையும் உழைப்பும் உடையவன். கொடிய காட்டு விலங்குகளை வேட்டையாடுவான். ஆக்ராவிலிருந்து ஆமதாபாத்துக்கு ஒன்பது நாட்களில் அவன் படையுடன் சென்றான். அந்த அளவுக்கு சக்தி பெற்றிருந்தான். குஜராத்தில் ஒரு கலகம் என்றதும், சிறு படையுடன் ராஜபுதனத்தின் பாலைவனத்தைக் கடந்து 450 மைல் பயணம் செய்தான். ரயிலோ, மோட்டார் காரோ இல்லாத காலத்தில் இதெல்லாம் பெரிய சாதனைதான்.
பெரியோர்கள் இத்தகைய குணங்களை பெற்றிருக்கிறார்கள். அவர்களிடம் ஒருவித காந்த சக்தி இருக்கிறது. அக்பர் இத்தகைய காந்த சக்தியையும் மோகன சக்தியையும் பெற்றிருந்தான். அவன் கண்ணெடுத்து ஒருவரைப் பார்த்தால் அந்தப் பார்வையே அவரை அவனிடம் பிணைத்துவிடும். அவனுடைய கண்கள் ‘கதிரவன் ஒளியில் அலை விசிறும் கடல்போல்’ இருந்தன என்று கிறிஸ்தவ பாதிரிகள் ஆச்சரியப்படுகிறார்கள். ஆகவே, இந்த மனிதன் இன்னும் நம்மை மயக்குவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
அக்பர் வட இந்தியா முழுவதையும் தட்சிணத்தையும்கூட வென்றான். மத்தியப் பிரதேசத்தை ஆண்ட ராணி துர்காவதியைத் தோற்கடித்தது அவனுக்குப் பெருமை அளிப்பதாக இல்லை. அவள் நல்ல தைரியசாலி. நீதியுடன் அரசாண்ட அவள் அக்பருக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. ஆனால், நாடாசை இதை எங்கே பொருட்படுத்ப் போகிறது. தட்சிணத்தில் ஆமத் நகரை ஆண்டுவந்த சாந்த்பீபி என்ற புகழ்பெற்ற அரசியின் வீரத்தை கண்டு அவளுடன் அக்பர் படை சமாதானம் செய்தது. ஆனால், அவளுடைய வீரர்களே அவளை கொன்றார்கள். அக்பருடைய படை சித்தூரையும் முற்றுகையிட்டன. ஜெயமல் என்பவன் சித்தூரை வெகு தீரத்துடன் காத்துநின்றான். அவன் போரில் மடிந்தவுடன் ராஜபுத்திரப் பெண்கள் தீக்குளித்தார்கள். ராஜபுத்திர ஆடவர் போரில் சண்டையிட்டு உயிரிழந்தனர். சித்தூர் வீழ்ச்சியுற்றது.
அக்பருக்கு திறமையான பல அமைச்சர்கள் இருந்தனர். அவர்களில் பைசி, அபுல் பாசல் என்ற இரு சகோதரர்களும் பீர்பாலும் முக்கியமானவர்கள். அவர்களைப்பற்றிப் பல கதைகள் இருக்கின்றன. தோதர்மால் என்பவன் அக்பருடைய நிதிமந்திரி. அவன்தான் நிலவரிமுறை முழுவதையும் திருத்தி அமைத்தவன். அக்காலத்தில் ஜமீன்தாரி முறையோ, ஜமீன்தார்கள், தாலுக்காதார்கள் என்போரோ இல்லை என்பது உனக்கு ஆச்சரியமாக இருக்கும். அரசாங்கம் விவசாயிகள் அல்லது ரயத்துகள் செலுத்த வேண்டிய வரியைத் தானே நிர்ணயம் செய்தது. இதைத்தான் நாம் இப்போது ரயத்துவாரி முறை என்று அழைக்கிறோம். தற்போது இந்தியாவில் உள்ள ஜமீன்தார்கள் பிரிட்டிஷாரால் நியமிக்கப்பட்டவர்கள்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராஜா மான்சிங் அக்பரின் தலைசிறந்த தளபதிகளில் ஒருவன். அக்பருடைய அரசவையில் தான்சேன் என்ற இசைக் கலைஞன் இருந்தான். இந்தியாவிலுள்ள பாடகர்கள் அனைவருக்கும் மானசீக குருவாக அவன் இருக்கிறான்.
தொடக்கத்தில் அக்பருடைய தலைநகராக ஆக்ரா இருந்தது. அவன் அங்கே ஒரு கோட்டையைக் கட்டினான். பிறகு, ஆக்ராவுக்குப் பதினைந்து மைல் தூரத்திலுள்ள பதேபூர் சிக்ரி (வெற்றி நகரம்) என்ற இடத்தில் அவன் புதிய நகரம் ஒன்றை உருவாக்கினான். அவன் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு, ஷேக்சலீம் சிஷ்டி என்ற பெரியார் ஒரு காலத்தில் அங்கு வாழ்ந்ததுதான் காரணம். பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக பதேபூர் சிக்ரி தலைநகராக இருந்தது. அதற்குப் பின் லாகூரைத் தலைநகர் ஆக்கிக் கொண்டான்.
நமது அலகாபாத் நகரும் அக்பர் உருவாக்கியதுதான். ஆனால் அலகாபாத் நகர் உள்ள இடம் மிகவும் புராதனமானது என்பதில் சந்தேகம் இல்லை. ராமாயண காலத்திலிருந்து அங்கு பிரயாகை பெருமையுடன் இருந்திருக்கிறது. அலகாபாத்திலுள்ள கோட்டை அக்பரால் கட்டப்பட்டது.
அக்பருடைய இன்னொரு முக்கியமான குணம் உண்மையை அறிவதில் அவனுக்குள்ள ஆர்வம். அவன் எப்போதும் உண்மையைத் தேடிக்கொண்டே இருந்தான். ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி ஒருவவுக்கு தெரியும் என்று கேள்விப்பட்டால், அவரை அழைத்துவரச் செய்து அதை தெரிந்துகொள்வான். தொழுகை இடத்தில் பல மதத்தினரும் அவனைச் சூழ்ந்து அமர்ந்திருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அக்பரை தங்கள் மதத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள். அக்பர் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டும், அவர்களிடம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டும் இருப்பான். உண்மை என்பது எந்த மதத்துக்கும் ஏகபோக உரிமை அல்ல என்கிற உண்மை அவனுக்கு புரிந்திருந்தது என்று தெரிகிறது. ‘எம்மதமும் சம்மதமே‘ என்பதே தனது திடமான கொள்கை என்று அவன் பிரகடனம் செய்தான்.
அக்பர் காலத்தில் வாழ்ந்த பதௌனி என்ற வரலாற்று ஆசிரியர் அவனைப் பற்றி இப்படி எழுதியிருக்கிறார்... “பெருமைக்குரிய மன்னர் அனைவரின் கருத்தையும் கேட்டுக் கொள்வார். குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்களின் கருத்துகளையும் தெரிந்து கொள்வார். அவற்றில் தனக்கு சரியானவற்றை மட்டும் வைத்துக் கொள்வார். தனது இயல்புக்கும் விருப்பத்துக்கும் எதிரானவற்றை ஒதுக்கிவிடுவார். குழந்தைப் பருவத்தில் இருந்து முதுமைவரை அக்பர் பலவகை அனுபவங்களை பெற்றிருக்கிறார். அதன் பயனாக, மிகவும் சாதாரணமான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமய நெறி அவருடைய உள்ளத்தில் பதிந்தது. எல்லா மதங்களிலும் அறிவாளிகளும், தவ ஞானிகளும் இருக்கிறார்கள். எல்லா நாடுகளிலும் அற்புத சக்திவாய்ந்த பெரியார்கள் இருக்கிறார்கள் என்று அவர் எண்ணத் தொடங்கினார். இவ்வாறு, உண்மை ஞானம் எங்கும் காணப்படுமாயின், அது ஒரே மதத்தில் மட்டும் கட்டுண்டு கிடப்பது எவ்வாறு சாத்தியமாகும் என்று அவர் சிந்தித்தார்.”
இதே காலகட்டத்தில்தான், ஐரோப்பா, மத விஷயங்களில் படுபாதக கொலைகளையும், கொடுமைகளையும் காட்டி வந்தது உனக்கு நினைவிருக்கும். ஸ்பெயினிலும், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் மத விசாரணை சபையின் அட்டகாசம் தாங்க முடியாத அளவுக்கு இருந்தது. கிறிஸ்தவ மதப்பிரிவுகளே ஒருவருக்கு ஒருவர் சகித்து வாழ்வதை பாவம் என்று கருதினார்கள்.
அக்பர் ஆண்டுதோறும் சகல சமய குருக்களை அழைத்து அவர்களுடைய உரைகளையும் வாதங்களையும் கேட்டு வந்தான். கடைசியில் அவர்களுக்கே சலிப்பு ஏற்பட்டுவிட்டது. தங்கள் மதங்களில் அக்பரைச் சேர்க்கலாம் என்ற நம்பிக்கையை அவர்கள் கைவிட்டார்கள். எல்லா மதங்களிலும் சிறிது உண்மை இருக்கிற போது அவன் எதைக் கைக்கொள்வான்? ஹிந்துக்கள் தங்களுடைய தருமத்தையும், அப்படியே முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் அவரவர் தருமத்தையும் மேலானது என்கிறார்கள். இந்த நிலையில் நாம் எந்தத் தருமத்தைத் தழுவுவது?” என்று ஒருமுறை அக்பர் கேட்டதாக கிறிஸ்தவ பாதிரிகள் கூறுகிறார்கள். அக்பருடைய கேள்வி நியாயமானது. ஆனால், கிறிஸ்தவ பாதிரிகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் தங்களுடைய புத்தகத்தில், எல்லா நாஸ்திகர்களுக்கும் பொதுவான குற்றம் அக்பரிடத்திலும் காணப்படுவதாக எழுதி வைத்திருக்கிறார்கள். ஒரு நாஸ்திகனுக்குரிய அடையாளம் இதுதான் என்றால் இத்தகைய நாஸ்திகர்கள் அதிகமாவதால் நன்மையே தவிர வேறில்லை.
அக்பருடைய நோக்கம் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை. மதப் பிரச்சினையை வெறும் அரசியல் பிரச்சினையாகவே கருதினானா? பொதுவான இந்திய தேசியத்துவத்தை உருவாக்கும் ஆசையில் எல்லா மதங்களையும் ஒரே நெறியில் செலுத்த முயன்றானா? அல்லது, அவனுடைய நோக்கமும் தத்துவ விசாரணையும் மதம் ஒன்றையே மையமாக கொண்ட வையா? என்ற கேள்விகளுக்கு என்னிடம் விடை இல்லை. ஆனால், மதச் சீர்த்திருத்தம் என்பதைவிட அவனுக்கு ராஜதந்திர நோக்கம் அதிகமாக இருந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. அவனுடைய நோக்கம் எதுவாயினும், அவன் ஒரு புது மதத்தைப் பிரகடனம் செய்தான். அதற்கு ‘தீன் இலாஹி’ (கடவுள் மதம்) என்று பெயர். அந்த மதத்தின் தலைவனும் அவனே. அந்தப் புதிய மதத்திலும் தரையில் விழுந்து வணங்குவது, காலை முத்தமிடுவது போன்ற சடங்குகள் இருந்தன. புதிய மதம் மக்களைக் கவரவில்லை. முஸ்லிம்கள் கோபம் கொண்டதுதான் பலன்.
மத சுதந்திரம் இருக்கவேண்டியது அவசியம் என்றால் மக்களுக்கு அதிகமான அரசியல் சுதந்திரம் ஏன் இருக்கக் கூடாது? விஞ்ஞான அறிவு அக்பரை ஈர்த்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கெடுவாய்ப்பாக, ஐரோப்பாவில் அந்தக்காலத்தில் தோன்றி வளர்ந்த இந்தக் கருத்துக்கள் இந்தியாவில் தோன்றவே இல்லை. இந்தியாவில் அச்சு யந்திரமும் உபயோகத்துக்கு வரவில்லை. ஆகவே, சிலர்தான் கல்வியறிவு பெற்றவவ்களாக இருந்தார்கள். அக்பருக்கே எழுதப்படிக்கத் தெரியாது என்றால் நீ ஆச்சரியப்படுவாய். ஆயினும், அக்பர் உயர்ந்த கல்வி கேள்வி உடையவன். நூல்களைப் படிக்கச் சொல்லிக் கேட்பதில் அவனுக்கு வெகு பிரியம். அவனுடைய உத்தரவின்கீழ் பல சமஸ்கிருத நூல்கள் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.
ஹிந்து விதவைகள் உடன்கட்டை ஏறும் ‘சதி’ என்னும் வழக்கத்தை அவன் சட்டபூர்வமாகத் தடை செய்தான். போர்க் கைதிகளை சிறையில் அடைக்கக்கூடாது என்றும் அவன் சட்டம் இயற்றினான். அக்பர் தனது அறுபத்து நான்காவது வயதில் 1605ஆம் ஆண்டு மரணம் அடைந்தான். ஆக்ராவுக்கு அருகில் சிக்கந்தர் என்ற இடத்திலுள்ள அவனுடைய நினைவிடம் மிகவும் அழகானது.
அக்பருடைய ஆட்சியில், வட இந்தியாவில், அதாவது காசியில் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய பெயர் எல்லாருக்கும் தெரியும். அக்பராவது அல்லது வேறு எந்த அரசனாவது அவரைப்போல் அனைத்து மக்களும் விரும்பும் நபராக இருக்க முடியாது. ஹிந்தியில் ராமாயணம் பாடிய துளசிதாஸரையே நான் குறிப்பிடுகிறேன்.
அக்பரைப் பற்றி போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவ பாதிரியார்கள் எழுதிய வரலாறு என்னை எழுதத் தூண்டுகிறது. ஏனென்றால், அவர்களுடைய கருத்து அரசு அதிகாரிகள் சொல்வதைப் போன்றது அல்ல. அது வரலாறு. கிறிஸ்தவ மதத்தில் சேர அக்பர் மறுத்ததால் அவன் மீது அவர்களுக்கு பெரிய ஏமாற்றம்கூட இருந்தது. இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அப்படியிருந்தும், அவர்கள் அவனைப் மனதார புகழ்கிறார்கள்.
அவர்கள் அக்பரைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என்று பார்... “அக்பர் பெரிய அரசன் என்பதில் சந்தேகமே இல்லை. எந்த அரசன்மீது குடிமக்கள் அன்பு, அச்சம், அடக்கம், பணிவு, அனைத்தும் ஒருங்கே காட்டுகிறார்களோ அவனே உத்தமமான அரசன் என்பதை அக்பர் அறிந்திருந்தான். அக்பரிடம் அனைவரும் அன்பு செலுத்தினார்கள். அவன் உயர்ந்தோரிடத்தில் உறுதியாகவும் தாழ்ந்தோரிடத்தில் அன்பாகவும் நடந்துகொண்டான். அதனால், ஒவ்வொருவனும் அரசன் தன் பக்கம் இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தான்.”
“அரசு வேலையை பார்ப்பான். ஒட்டகங்களுக்கு ரோமம் கத்தரிப்பான். மரம் வெட்டுவான். இரும்படிப்பான். இப்படி எந்தத் தொழிலையும் தனக்குரிய தொழிலைப் போல முயற்சியுடன் செய்வான். இரவில் மூன்று மணிநேரம் தூங்குவதே பெரிய விஷயம். அவனுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான யானைகள், குதிரைகளின் பெயர்களும் நினைவில் வைத்திருந்தான். அவனுடைய நினைவாற்றல் அபாரமானது. அக்பருக்கு எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும், தன்னுடைய விரிந்த பேரரசில் நிகழ்வதையெல்லாம் அவன் அறிந்திருந்தான். பட்டினியாய்க் கிடந்தவன் உணவு முழுதையும் ஒரே வாயாக விழுங்கிவிட முயற்சிப்பதுபோல், அவன் பல விஷயங்களையும் ஒரே மூச்சில் கற்க முயன்றான். அவ்வளவு பெரிய அறிவுப் பசி அவனுக்கு இருந்தது.” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அவன் மக்களுக்கு வரும் அச்சத்தைப் போக்கி அவர்களுடைய வரிச் சுமையைக் குறைத்து பாதுகாத்தான். ஆயினும், அவர்களுக்குக் கல்வியும் பயிற்சியும் அளித்து அவர்களுடைய நிலையை உயர்த்தத் தவறிவிட்டான். மற்ற சர்வாதிகார மன்னர்களோடு பார்க்கும்போது, அரசன், மனிதன் என்கிற முறையில் அக்பருடைய பெருமை நிகரற்றது.
அக்பருக்கு முன் ஹுமாயூனும் பாபரும் ஆட்சி செய்திருந்தாலும், மொகலாய வம்சத்தை இந்தியாவில் நிலைபெறச் செய்தவன் அக்பர்தான். அக்பர் காலத்தில் இருந்துதான் மொகலாய வம்சம் இந்திய வம்சமாகிறது. தன்னுடைய பேரரசை பலப்படுத்துவதற்காக அக்பர் ஆற்றிய பெருஞ் செயலால், அவனுடைய வம்சம் அவன் இறந்தும் நூறாண்டுகள் வரையில் நிலைத்திருந்தது.