ஜிஎஸ்டி கொள்ளையின் வரலாறு 1 - ஆதனூர் சோழன்

 


முன்னுரை

2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்தும் தொடக்கவிழா நிகழ்ச்சியாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டியது.

தான் எதிர்த்த ஜிஎஸ்டி வரிவிதிப்பை தானே அமல்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டியது பாஜக அரசு.

பாஜகவின் இந்த முயற்சியை எதிர்ப்பவர்களை தேசவிரோதிகள் என்றுகூட அந்தக் கட்சியின் தலைவர்கள் பட்டம் சூட்டினார்கள்.

1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. அன்று நாடாளுமன்றத்தின் கூட்டுகூட்டம் கூட்டப்பட்டது. அதன்பிறகு, 1972 ஆம் ஆண்டு இந்திய விடுதலையின் வெள்ளிவிழாவை முன்னிட்டும், 1997ல் இந்திய விடுதலையின் பொன்விழாவை முன்னிட்டும் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் கூட்டப்பட்டது.

ஆனால், 120 கோடி மக்கள் தலையில் சரக்கு மற்றும் சேவை வரி என்ற பேரில் புதிய சுமையை  சுமத்தி, அனைத்து பொருட்களின் விலையை உயர்த்தி மக்களின் வாழ்க்கையை சீரழிக்கின்ற அறிவிப்பினை வெளியிடுவதற்கு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டிவிட்டு, மக்கள் நலனுக்கான கூட்டம் என்று சொல்லும் துணிச்சல் பாஜகவைத் தவிர வேறு யாருக்கும் வராது.

அஜித் நடித்த வாலி திரைப்படத்தில் ஒரு காமெடி சீன் வரும்.

விவேக்கும் பாலாஜியும் நடித்த அந்தக் காட்சியில் பாலாஜிக்கு காது கேட்காது, கண்பார்வை இருக்காது, மூலம், கைகள் வராது என்று வரிசையாய் நோய்கள் இருக்கும். எல்லாவற்றுக்கும் ஒரே மருந்து வேண்டும் என்று பாலாஜி கேட்பார்.

அதற்கு பூச்சி மருந்துதான் சரியான வழி என்று விவேக் கூறுவார்.

அந்த வழியில் இந்தியப் பிரதமர் மோடி இந்திய மக்களின் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே மருந்து ஜிஎஸ்டி என்று சொல்கிற லெவலுக்கு போய்விட்டார்.

ஆனால், அது நோய் தீர்க்கும் மருந்தா, உயிர்க்கொல்லி மருந்தா என்பது விரைவிலேயே தெரிந்துவிடும் என்றார்கள் பொருளாதார நிபுணர்கள்.

அறிமுகமாகி 7 ஆண்டுகளில் அது எப்படிப்பட்ட மாபெரும் பகல் கொள்ளை என்பதை மக்களே உணரும் நிலைக்கு வந்துவிட்டார்கள்...

எனவே, ஜிஎஸ்டி அறிமுகமான வரலாறை மீண்டும் அறிந்துகொள்ள தருகிறேன்...

 

 அதிகாலையில் நடந்த கொள்ளை!

 

2017 ஜூலை மாதம் 1ம் தேதி காலை 6.30 மணி.

நடைப்பயிற்சி முடித்துவிட்டு வழக்கமாக டீ சாப்பிடும் ஹோட்டலுக்கு வந்தேன்.

வழக்கம்போலவே, 10 ரூபாயை டேபிளில் வைத்தேன்.

“இன்னும் ஒரு ரூபாய் வேணும் சார்”

“ஏம்ப்பா டீக்குமா ஜிஎஸ்டி வரி?”

“ஆமா ஸார். 1.20 வரி. நாங்க 1 ரூபாய்தான் போட்டிருக்கோம்.”

“மிச்சம் 2 பைசாவை நீங்க கையிலேருந்து போடப் போறீங்களாக்கும்”

“மொதலாளி போதும்னுட்டார் ஸார்”

“அப்போ இட்லி எவ்வளவுப்பா? சப்பாத்தி ஒரு செட் எவ்வளவுப்பா?” என்று கேட்டேன். ஏனென்றால் இது இரண்டு வகைதான் நான் அடிக்கடி பார்சல் வாங்குவது.

“8 ரூபாய் இட்லி இனி 9 ரூபாய் ஸார். சப்பாத்தி ஒரு செட் 37 ரூபாய் ஸார்.”

“விலையெல்லாம் அதிகரிக்காதுன்னு நிர்மலா சீதாராமன்னு ஒரு லேடி அமைச்சர் சொன்னாங்களேப்பா”

“ஸார், இதெல்லாம் எனக்கு தெரியாது ஸார்”

வழக்கமா டீ சாப்புடுற ஹோட்டல் என்பதால் சகஜமாக பேசிவிட்டேன். பில் பையனும் பொறுமையா பதில் கூறிவிட்டான்.

மாலையில் எதிர்த்த ஹோட்டலில் டீ சாப்பிடப் போனேன். அங்கு கொடுக்கப்பட்ட பில்லில் ஜிஎஸ்டி குறிப்பிடப்படவில்லை.

ஜிஎஸ்டி குறிப்பிடப்பட்டு டீ 10 ரூபாய் என்று இருந்திருந்தால் பரவாயில்லை. ஜிஎஸ்டி என்ற இடத்தில் எதுவுமே போடப்படவே இல்லை.

மற்ற உணவுப் பொருட்களின் விலைகளுக்கும் இதுவே நிலைமை.

இட்லி 8 ரூபாய்தான். சப்பாத்தி ஒரு செட் 33 ரூபாய்தான்.

எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. உடனே எதிர் ஹோட்டலுக்குப் போனேன். இரண்டுமே மதுரையில் செயின் ஹோட்டல்கள். பல கிளைகள் இருக்கின்றன.

“இது என்னாங்க கொடுமை? எதிர்த்த ஹோட்டலில் ஜிஎஸ்டியே போடவில்லை. ஒங்களுக்கு மட்டும் போட்டிருக்கீங்க?”

“ஸார். அது எங்களுக்குத் தெரியாது. ஆனா, ஜிஎஸ்டி கட்டும்போதுதான் அவுங்களுக்கு புரியும்” என்றார்கள்.

அரசாங்கத்தை முதல் நாளிலேயே ஏமாற்றும் இரண்டு நிறுவனங்களை நான் பார்த்தேன்.

சுமாராக இந்த நூல் எழுதப்படும்வரை இதுதான் தொடர்கிறது.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட முதல்நாளில் வேறு பல இடங்களில் எப்படியெல்லாமோ நுகர்வோர் கஷ்டப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

புதிய வரிவிதிப்பு முறை, புரட்சிகரமான வரிவிதிப்பு முறை, இந்திய வரலாற்றை புரட்டிப்போடப்போகிற வரிவிதிப்புமுறை என்று பாஜக அரசும் மோடியும் தினந்தோறும் கூக்குரல் எழுப்பிய இந்த ஜிஎஸ்டி அமலான முதல் நாளிலேயே மக்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

எந்தப் பொருளின் விலையும் உயராது என்று அரசு சொல்லி வந்தாலும், அனைத்துப் பொருட்களின் விலையும் பெருமளவு உயர்ந்தது.

ஹோட்டலில் சாப்பிடுவோர் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து வினா எழுப்பியபோது வீட்டில் சமைத்துச் சாப்பிட்டால் இந்தச் சிரமம் இருக்காது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கிண்டலாக சொன்னது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

1947 ஆம் ஆண்டு நள்ளிரவில் நாடு விடுதலை பெற்றது.

அதற்கு நிகராக இது இந்தியாவின் இரண்டாவது விடுதலைப் பொன்னாள் என்ற வர்ணிப்போடு, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இரு அவைகளின் உறுப்பினர்கள் அடங்கிய கூட்டுக்கூட்டம் கூட்டப்பட்டது.

2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதை ஜூன் மாதம் என்று அழைப்பதே தவறு. ஜூலை 1ம் தேதி அதிகாலை 12.01 மணி என்றுதான் குறிப்பிட வேண்டும்.

ஆனால், இந்த வரலாற்று புகழ்மிக்க கூட்டம் என்று வர்ணிக்கப்பட்ட கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் முக்கிய கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

இதுவும்கூட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்தான்.

சரி, அப்படி என்னதான் முக்கியத்துவம் இந்தக் கூட்டத்திற்கு?

வேறு ஒன்றுமில்லை. நாடுமுழுவதும் எல்லாப் பொருட்களுக்கும் ஒரேமாதிரியான வரிவிதிப்புக்கு வகைசெய்யும், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதற்கான கூட்டம் இது.

இப்படி ஒரு கூட்டத்தை கூட்டப்போகும் அறிவிப்பு வெளியானவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட கருத்து என்ன தெரியுமா?

“ஜி.எஸ்.டி வரியை ஜூலை 1 முதல் அமல்படுத்துவதற்கு போதிய கட்டமைப்பை மத்திய அரசு உருவாக்கவில்லை. போதுமான முன்னேற்பாடுகளும் செய்து கொள்ளவில்லை. நாடும் இதை எதிர்கொள்ள தயாராகவில்லை. பலதரப்பட்ட விலை பட்டியல், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும்.

இதன் காரணமாக  ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவை பரிசீலிக்கும்படி நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவிடம் கேட்டுள்ளோம். ஆனால் பாஜக அரசு கண்காணிப்பு குழுவின் பரிசீலனை தேவையில்லை என்கிறது.

இது ஒரு நல்ல ஜனநாயகமோ அல்லது நல்ல அரோக்கியமான பொருளாதார நடைமுறையோ கிடையாது. இது வரை மூன்று முறை மட்டுமே நள்ளிரவில் நாடாளுமன்றம் கூடியுள்ளது. அதுவும் சுதந்திர போராட்டத்தின் நினைவாக தான் கூடியிருக்கிறது.

இதுதான் நாடாளுமன்ற நள்ளிரவு கூட்டத்தின் புனிதம். ஆனால் ஜி.எஸ்.டி ஒன்றும் சுதந்திர போராட்டத்திற்கு இணையானது இல்லை. வழக்கம் போலவே, இது மத்திய அரசின் பகட்டான செயல். இந்த நிகழ்ச்சிக்காக மக்களின் பணம் ரூ.5 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த வழியில்  ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்துவதை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம்.”

யெச்சூரியின் கருத்து இதுவென்றால், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்து பாஜக அரசின் மோசடி வேலையை அம்பலப்படுத்துவதாக அமைந்தது.

ஜிஎஸ்டிக்கு எதிரான மக்கள் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத பாஜக அரசு, இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை முதன்முதலில் கொண்டுவர முடிவு செய்ததே காங்கிரஸ் கூட்டணி அரசுதான் என்று கூறத் தொடங்கியது.

அது உண்மைதான் என்பதை காங்கிரஸ் கட்சி மறுக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் அரசு இந்த வரிவிதிப்பை அறிமுகப்படுத்த முயன்றபோது, குஜராத் முதல்வராக பொறுப்பு வகித்த இன்றைய பிரதமர் மோடி என்ன சொன்னார் என்பதையும் காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

தனது பிணத்தின் மீதுதான் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட வேண்டியிருக்கும் என்று மோடி மிரட்டியதை காங்கிரஸ் அம்பலப்படுத்தியது. ஆனால், அதே மோடி, இப்போதுஅதே ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை தனது சாதனை என்பதைப்போல பிரச்சாரம் செய்வதையும் அது கிண்டல் செய்தது.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இந்த ஜிஎஸ்டி குறித்து கூறியது என்ன தெரியுமா?

“மதிப்புக் கூட்டு வரியை 2005 & -06ஆம் ஆண்டிலேயே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு, 2006 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தியது. 2010 ஆம் ஆண்டுக்குள் ஜிஎஸ்டி- வரிவிதிப்பு முறையை நடைமுறைப்படுத்திவிடலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அது முடியாமல் போனது. நாங்கள் அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டிக்கு பாஜக கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது.

ஜிஎஸ்டி-யை காங்கிரஸ் எதிர்ப்பது போன்று சித்திரிப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜிஎஸ்டி, நாட்டுக்கு நல்லது. ஆனால், தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் ஜிஎஸ்டி, காங்கிரஸ் கொண்டுவர திட்டமிட்ட உண்மையான ஜிஎஸ்டி அல்ல. இந்த ஜிஎஸ்டி, பல்வேறு குழப்பங்களுடன், சோதனை ஓட்டங்கள் இன்றி அவசர அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாடு இதற்கு தயாராக இல்லாத போது இந்த ஜிஎஸ்டி வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய தவறு.

இந்த வரிவிதிப்பில் துல்லியமில்லை. பலதரப்பட்ட சமரசங்களும் இதில் நிகழ்ந்துள்ளன, இந்த வரிவிதிப்பில் உள்ள மிகப்பெரிய குறைபாடு பலதரப்பட்ட வரிவிதிப்பாகும். மத்திய அரசு, மாநில அரசு இரண்டுக்குமே இதில் அதிகாரம் உள்ளது. எந்த வியாபாரி எந்த அரசுக்கு வரி செலுத்தவேண்டும் என்ற குழப்பம் நீடிக்கிறது. இந்த வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டால்தான் அதன் வீரியம் தெரியும்.

தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் ஜிஎஸ்டியால் சிறு, குறு, நடுத்தர வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்த வரி குறித்து விளக்கப்படவில்லை. அவர்கள் கேட்ட கால அவகாசம் கொடுக்கப்படவில்லை. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டியால், 80 சதவிகித  பொருள்களுக்கு மேல் விலை அதிகரிக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது.

பெட்ரோல், மின்சாரம், ரியல் எஸ்டேட், மதுபானம் இந்த வரி விதிப்புக்குள் வரவில்லை. இந்தக் குழப்பமான பிரிவை வடிவமைத்தவர்களுக்கு பொருளாதாரம், வணிகம், சந்தைப் பொருளாதாரம் என்று எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  இதில் வெறுக்கத்தக்க பகுதி என்னவென்றால் லாபத்துக்கு எதிரான பிரிவு. இப்படி இருக்கும்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி அதிகரிக்கும்.

ஆகவே, பழைய வரிமுறை, சேவை வரி, ஜிஎஸ்டி இந்த மூன்று வரிமுறையும் தொடர்ந்து இருக்கும்.

ஜிஎஸ்டி வந்து என்ன பயன் இருக்கு?

காங்கிரஸ் திட்டமிட்ட ஜிஎஸ்டி மூன்று விகிதங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர்கள் பல விகிதங்களாக பிரித்திருக்கிறார்கள்.

நிலையான விலைக்கு 18 சதவிகிதம் அறிவித்திருக்கிறார்கள். உலக நாடுகளோடு ஒப்பிட்டால் இது அதிகம். இந்த ஜிஎஸ்டி உண்மையானது அல்ல.

இந்த வரியை யார் நிர்வாகம் செய்யப்போகிறார்கள்? மத்திய அரசா, மாநில அரசா என்கிற விவரம் இல்லை. ஒன்னறைக்கோடிக்கு வியாபாரம் செய்வோர் மத்திய, மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவார்கள். இரண்டுகோடிக்கு மேல் வியாபாரம் செய்வோர் யாருடைய கட்டுப்பாட்டில் வருவோம்னு தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.

ஏழு மாநிலங்களில் தொழில் செய்பவர், ஏழு மாநிலங்களிலும் தலா 36 ரிட்டன்ஸ் பைல் செய்ய வேண்டும்.

பிறகு எப்படி தொழில்வளர்ச்சி ஏற்படும்? வேலைவாய்ப்பு அதிகரிக்கும்? சமரசம் என்கிற பெயரில் விசித்திரமான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். இது போகப்போகத்தான் தெரியவரும்.”

ப.சிதம்பரம் வெளியிட்ட இந்தக் கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதாவது பாஜக இந்த வரிவிதிப்பை எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பதைப் போல சித்தரித்தது. ஆனால், உண்மை அதுவல்ல என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.

பிரதமர் மோடியோ, பண மதிப்பிழப்பு விவகாரத்திலும் கருப்புப்பணத்தை ஒழிந்துவிடும் என்பதையே மையமாக வைத்து மக்களை திசைதிருப்பினார். ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தாலும் கருப்புப்பணம் ஒழியும் என்றுதான் கூறினார்.

பணமதிப்பிழப்பு விவகாரத்தில் அடுத்த மூன்று மாதங்களில் பலன் தெரியும் என்றார். ஆனால், பொருளாதார வளர்ச்சி எப்போதுமில்லாத அளவுக்கு பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகும் பலன் தெரிய கால அவகாசம் வேண்டும் என்றுதான் மோடி கூறியிருக்கிறார்.

மொத்தத்தில் மோடி சாமான்ய மக்களுக்கு எதிராகவும், பன்னாட்டு கார்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாகவும் செயல்படுகிறார் என்பது மட்டும் ஒவ்வொரு முறையும் வெளிப்படுகிறது என்று நடுநிலையாளர்கள் கேலியாக குறிப்பிடுகிறார்கள்.

(தொடரும்)

Previous Post Next Post

نموذج الاتصال