ஐஸ்வர்யா ராய் இல்லை மனுஷி சில்லர்!
இந்தியாவுக்கு உலக அழகி பட்டம் முதன்முதலில் கிடைத்தது எப்போ தெரியுமா?
1966 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ரெய்டா பரியா என்ற பெண்ணுக்குத்தான் முதன்முதலில் உலக அழகிப் பட்டம் கிடைத்தது. அவரும் ஒரு மருத்துவ மாணவிதான்.
இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, ஆசியாவிலிருந்தே முதன்முதலில் தேர்வான உலக அழகியும் இவர்தான். அதன்பிறகு நீண்டநாட்கள் காத்திருந்து, 1994ல் ஐஸ்வர்யா ராய் மூலமாக உலக அழகிப்பட்டம் இந்தியாவுக்கு கிடைத்தது.
அப்போதுதான் உலக மயம், தாராளமயம் கொள்கைகளுக்குள் இந்தியா நுழையத் தொடங்கிய நேரம். உலக அழகுசாதனப் பொருட்களின் சந்தையை இந்தியாவில் விரிவுபடுத்த கார்பரேட்டுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்த நேரம். ஐஸ்வர்யா ராய் மீது விழுந்த விளம்பர வெளிச்சம் இதுவரை யார்மீதும் விழவில்லை என்பதைப் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.
அதைத் தொடர்ந்து 1997ல் டயானா ஹேடனும், 1999ல் யுக்தா முகியும், 2000மாவது ஆண்டில் பிரியங்கா சோப்ராவும் உலக அழகிப் பட்டங்களை கொண்டுவந்தனர்.
ஐய்வர்யா ராயோடு உலக அழகிப்பட்டத்தின் மீது இருந்த ஈர்ப்பு இந்தியர்களுக்கு இல்லாமல் போயிற்று.
எப்போதேனும் ஒருமுறை கிடைக்கும் பொருளுக்குத்தான் மவுசு அதிகம் என்பது உண்மையாயிற்று.
கடந்த 17 ஆண்டுகளாக உலக அழகிப் பட்டம் இந்திய அழகிகள் யாருக்கும் கிடைக்கவில்லை. அதைப்பற்றி யாரும் கவலையும் படவில்லை.
சமீப ஆண்டுகளாக செயற்கை அழகுசாதனப் பொருட்களுக்கு இருந்த மார்க்கெட் வெகுவாக சரியத் தொடங்கிவிட்டது. அழகுசாதனப் பொருட்களில் உள்ள ரசாயனக் கலவை குறித்து இளைய தலைமுறையிடம் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது ஒரு முக்கியமான விஷயமாகக் கூறப்பட்டது.
அழகு சாதனப் பொருட்களின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தவோ, வேறு ஏதோ பிளானை இந்தியாவில் அரங்கேற்றவோ இப்போது மீண்டும் இந்திய அழகியை உலக அழகியாக தேர்வு செய்திருக்கிறார்கள்.
ஆனாலும், மனுஷி சில்லர் இந்தப் பட்டத்துக்கு எல்லா வகையிலும் பொருத்தமானவர் என்று அவரை இந்திய அழகியாக தேர்வு செய்த 5 நடுவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஃபெமினா இந்திய அழகிப்போட்டியில் நடுவர்களாக இடம்பெற்ற 7 பேரில் 5 பேர் மனுஷி சில்லரை தேர்வு செய்தனர். அவர்கள் அனைவருமே மனுஷியின் அறிவுக்கூர்மையை அதிகமாக புகழ்கிறார்கள். அழகும் அறிவுக்கூர்மையும் இணைந்திருந்தால்தான் உலக அழகியாக முடியும். அந்த வகையில் உலக அழகிப் போட்டியின் கேள்வி பதில் பகுதியில் மிகச்சிறப்பாக பதில் அளித்தார் என்கிறார்கள்.
இந்தியாவின் முதல் உலக அழகி மருத்துவ மாணவி. இப்போது மனுஷியும் ஒரு மருத்துவ மாணவி என்பது எதிர்பாராத நிகழ்வாக கருதப்படுகிறது. ஹரியானாவில் பிறந்தவர் மனுஷி சில்லர். இவருடைய அப்பா டாக்டர் மித்ரா பாஸு சில்லர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் விஞ்ஞானியாக இருக்கிறார். இவருடைய அம்மா டாக்டர் நீலம் சில்லர் நியூரோகெமிஸ்ட்ரி பேராசிரியராக பணிபுரிகிறார்.
டெல்லியில் பள்ளிப்படிப்பை முடித்து, சோனிப்பட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்தார். குச்சுப்புடி நடனத்தில் நல்ல பயிற்சி பெற்றவர். தேசிய நாடகப் பள்ளியில் நடிப்புப் பயிற்சியும் பெற்றிருக்கிறார்.
இவ்வளவு திறமைகளை வைத்துக்கொண்டு சும்மாவா இருப்பார்? அழகிய மாடலாக வலம் வந்தார். டாப் மாடல் போட்டியில் செமிஃபைனல் வரை வந்தார். சமூகநல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்றிருக்கிறார்.
இந்தத் தகுதிகள் எல்லாமே மனுஷியை, உலக அழகியாக்க பெரிய அளவில் உதவியிருக்கின்றன என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.
(2017ல் எழுதியது...)