அலைகளின் அரசர்களே!
ஆழியை ஆள்பவர்களே!
விண்மீன்கள் வழிகாட்டும் இருளிலேயே
வலைகளுடன் விரைந்தோடும் வீரர்களே!
நீலக்கடலின் நேசர்களே - உங்கள்
நாளுக்கு வணக்கம்!
காற்றும் கடலும் கொந்தளித்தாலும்
கண்ணீரும் உப்பும் கலந்த கரங்களால்
நங்கூரம் பாய்ச்சி நம்பிக்கை விதைக்கும்
நாட்டின் முதுகெலும்பு நீங்கள்!
உங்கள் வலைகளில் சிக்குவது மீன்கள் மட்டுமல்ல
உலகின் உணவுப் பாதுகாப்பும்தான்!
உங்கள் கைகளில் இருப்பது துடுப்புகள் மட்டுமல்ல
உயிர்களின் நலனும்தான்!
புயலின் பேரொலியிலும் அஞ்சாது
பரந்த பெருங்கடலின் பாதையறிந்து
பசியாய் காத்திருக்கும் வயிறுகளுக்கு
தாயாய் உணவளிக்கும் பெருமக்கள் நீங்கள்!
உங்கள் வியர்வையில் செழிக்கிறது நகரம்!
உங்கள் உழைப்பில் வாழ்கிறது குடும்பம்!
உங்கள் வீரத்தில் வேரூன்றுகிறது சமூகம்!
உங்கள் தியாகத்தில் படிக்கிறது வருங்காலம்!
கடலின் காவலர்களே!
இன்றைய நாள் உங்களுக்கே!
இந்த உலகம் உங்களைக் கொண்டாடட்டும்!
🌊 உலக மீனவர்கள் நாள் வாழ்த்துகள்!🐟
- சகாய டர்சியூஸ் பீ