உதயநிதி v/s விஜய்? - பா.சரவணகாந்த்

உதயநிதி v/s விஜய்? 

பா.சரவணகாந்த் 

விஜய் அரசியலை யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு தற்குறித்தனம். பெரிய வாக்கு வங்கி அவருக்கு வரப்போவதில்லை. இருந்தாலும், அவருக்கு கிடைக்கும் வாக்கு தேர்தல் களத்தில் இருக்கிற யாருக்கோ சேதாரத்தை உண்டு பண்ண போகிறது என்பது நிச்சயம். அந்த அளவில் அவரும் களத்தில் இருக்கிறார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். 

ஆனால், அவரோ அல்லது அவரையோ அவருடைய ரசிக தற்குறிகளையோ உதயநிதி அளவுக்கோ. ஸ்டாலின் அளவுக்கோ ஒப்பிடும் அளவுக்கு வொர்த் இல்லை என்பது விஜயின் கார் ஓட்டுநருக்கே தெரியும். 

இருவருக்குமே அப்பாவின் அடையாளம் பெரிய உதவி என்றால் யாராலும் மறுக்க முடியாது. அதற்காக இருவருக்கும் திறமை இல்லை என்றாகிவிடாது.

இருவருமே அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு எழுந்து நின்றவர்கள். உதயநிதி எப்படி அரசியல்வாதிகள் சூழ வளர்ந்தாரோ விஜய் சினிமா நடிகர்கள் சூழ வளர்ந்தார். அந்த வகையில் அவர்களின் தேர்வு வியக்க வைத்த ஒன்று இல்லை. 

விஜய் சினிமாவில் தொட்ட உச்சம் என்பதில் (கடைசி எட்டு ஆண்டுகள் நீங்கலாக) அவரின் மெனக்கெடல் அதிகம். அவரின் எல்லா படங்களும்  அப்பா எஸ் ஏ சி கேட்டு ஒகே சொன்ன பிறகு விஜய் ஒப்புக்கொண்டவைதான்.
 
சில சமயம் அப்பாவின் நம்பிக்கைகாக மட்டுமே சில படங்களில் நடித்திருக்கிறார். விஜயை இந்தளவு உயர்த்தியதில் அவரின் அப்பாவின் பங்கு பெரியது. விஜயின் கடைசி பதினைந்து படங்களுக்கு அவரின் தலையீடு இல்லாமல் இருந்திருக்கலாம். மத்தபடி விஜயின் பாதையை உருவாக்கியவர் சந்திரசேகர்தான்.

அதேசமயம், இந்த பக்கம் நேரெதிர். உதயநிதிக்கு என ஸ்டாலின் எதையும் செய்யவில்லை. காரணம் அவரே கட்சிக்குள் மிகவும் சிரமப்பட்டே மேலே எழுந்து உயரத்துக்கு வந்தார். அப்போது கட்சிக்குள் இருந்த பெரிய தலைவர்களை மீறி அவருக்கு பெரிய பொறுப்பு எதையும் தர கலைஞர் மறுத்துவிட்டார்.  கட்சிக்குள் அவரைக் காட்டிலும் ஜூனியர்களுக்கு கிடைத்த முக்கியத்துவம்கூட அவருக்கு கிடைக்கவில்லை.  அமைச்சரவையிலும் இதே நிலைமைதான். 

அவருடைய காத்திருத்தல்கள் மிக நீண்டது. பாமகவில் அன்புமணிக்கு கிடைத்ததைப் போலவோ, மதிமுகவில் துரைவைகோவுக்கு கிடைத்ததைப் போலவோ தட்டில் வைத்து அவருக்கு எந்தப் பதவியும் வந்துவிடவில்லை.

அடுத்து உதயநிதியை வளர்த்தேன் என சொல்ல அவரால் முடியாது. அது முழுக்க முழுக்க அம்மாவை சார்ந்தது. உதயநிதியின் நண்பர்கள் எல்லாரும் கட்சியை சார்ந்தவர்களாகவும் சினிமாவை சார்ந்தவர்களாகவும் அமைந்து போனது அவரின் இயல்பான சூழல். இருந்தாலும் உதயநிதி அரசியலை அவராகத் தேர்வு செய்யவில்லை.

தொழில் தொடங்குவதில்தான் அவருக்கு விருப்பமாக இருந்தது. சென்னையில் மிகப் புதுமையாக ஸ்னோ பவுலிங் என்ற வித்தியாசமான விளையாட்டை அவர் அறிமுகப்படுத்தினார். 

அதில்தான் விஜய்க்கும் உதயநிதிக்கும் நெருக்கமானது. அது சினிமா நட்பு கிடையாது.  விஜய் ரசிகராக இருந்த உதயநிதியை படம் தயாரிக்க அழைத்தது விஜய்தான். 

கில்லி படம் போல மட்டுமே சினிமா தயாரிக்க விரும்பிய உதயநிதிக்கு, முதலில் கிட்டியது தோல்விதான்.  ஆனாலும், சுதாரித்து, வெற்றியாளராக எழுந்து நின்றார். படத் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் தன் பயணத்தை தொடர்ந்தார். 

சினிமாவில், இன்றளவும் கண்ணியமான விநியோகஸ்தர் என்ற பெயர் அவருக்கு மட்டுமே நீடிக்கிறது. பண விவகாரத்தில் அவருடைய நேர்த்தியான செயல்பாடுகளை கமல்ஹாஸனே பெருமையாக பேசியிருக்கிறார். 

அந்த அளவுக்கு மிகத் தெளிவான நிர்வாகத்தை நடத்தினார். ஆனால் விஜய் அழைப்பால் தன் பயணத்தை தொடங்கியவர் ஒரு கட்டத்தில் விஜய் படங்கள் வாங்கி வெளியிடுவதை தவிர்க்க தொடங்கினார். தமிழ்நாடு முழுக்க நேரிடையாக தொடர்பு உள்ள ஒரு நிறுவனம் தன்னை  தவிர்ப்பதை விஜயால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

உதயநிதி தவிர வேறு பல நிறுவனங்கள் இருந்தாலும் தமிழ்நாடு முழுக்க நேரிடையாக செல்வாக்கு மிக்க நிறுவனம் கிடையாது.

உதயநிதிக்கு முன்பாக அந்த வேலையை தொடங்கியவர் பாஸ்கரன் என்பவர். வசீகரா படத்தை அப்படித்தான் வெளியிட்டார்கள். பாஸ்கரன் யார் என்பதை தினகரன் குழுவிடம் கேட்டால் சொல்லுவார்கள். 

சினிமாவில் விஜய் மூத்தவர். அரசியலில் உதயநிதி மூத்தவர். வயதில் விஜய்  மூத்தவர். இருவரின் அரசியலை பார்க்கும் போது உதயநிதிக்கு ஒரு கட்டுகோப்பான இயக்கம் கையில் இருக்கிறது.

அதனை அப்படியே காப்பாற்றி கொண்டார்.  அவரின் முதல் இளைஞர் மாநாடு பற்றி ஒரு நியாயமான ஊடகவியலாளரிடம் கேட்டால் அவரின் திட்டமிடலை சொல்லுவார். 

உதயநிதிக்கு ரசிகர்கள் கிடையாது என்பது ஒரு வரம். அவருக்கு நண்பர்கள் அதிகம் என்பது இன்னொரு வரம். விஜய்க்கு ரசிகர்களை மட்டும் பெற்றிருக்கிறார் என்பது அவருடைய சாபம். நெருக்கமான அறிவார்ந்த நண்பர்கள் கிடையாது என்பது இன்னொரு சாபம். 

அரசியலில் அவருக்கு பொறுப்புக் கிடைப்பதற்கு முன்பே திராவிட இயக்கம் தொடர்பாகவும், கொள்கை கோட்பாடுகள் குறித்தும் அனுபவம் மிக்க முன்னோடிகளிடம் கற்றுக்கொண்டார்.

அவருடைய கட்சியில் முன்னணி தலைவர்களிடமோ, அடிமட்டத் தொண்டர்களிடமோ செல்வாக்குப் பெறுவது எளிதல்ல என்பது அவருக்கு புரிந்திருந்தது.

அவர் தன்னை முதலில் நிரூபிக்க வேண்டியிருந்தது. கட்சியின் அனைத்து தரப்பினரும் கொண்டாடும்படி, அவர் தனது முன்னோரைப் போல அமைப்பு ரீதியாகவும், கொள்கை அளவிலும் எழுந்து நின்றார். சித்தாந்த அடிப்படையில் அவருடைய செயல்பாடுகள் மிகவும் மெச்சத்தக்கதாக இருந்தது. 

இயல்பாகவே பணக்கார வீட்டு செல்ல பிள்ளை, ஆனால், இந்திய அளவில் குறிவைக்கப்படும் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

 அடக்குமுறைகளையும் அவமானங்களையும் நேரடியாக கண்டு வளர்ந்தவர். அவருக்கு இயல்பாகவே மக்கள் மொழியில் பேசத் தெரிந்தது. அவருடைய பேச்சை எளிய மக்கள்கூட ரசிக்கத் தொடங்கினார்கள்.

விஜய்க் இது மைனஸ். அவருடைய சினிமா வாழ்க்கையில் ஜெயலலிதாவிடம் எதிர்கொண்ட ஒரு பிரச்சினைக்கு கைகட்டி நின்ற வரலாறே மறையாமல் இருக்கிறது. ஜெயலலிதா என்று இல்லை. எடப்பாடிக்குக்கூட பயந்த கதை என்பது வரலாற்றில் காமெடி கலந்த சோகம். 

எந்தப் பிரச்சினையிலும் மாட்டிக் கொள்ளக்கூடாது. நா வருவேன், பேசுவேன், மத்த எல்லாம் நீங்க பார்த்துகோங்க என்ற சினிமா கால்ஷீட் மனப்பாங்குதான் விஜயிடம் இருக்கிறது. 

கரூர் படுகொலையில் அவருடைய நடவடிக்கைகள் கடுமையான விமர்சனத்தை உருவாக்கின.திருப்பரங்குன்றம் தீபப் பிரச்சனை, திட்டங்களுக்கு ஒன்றிய அரசு செய்யும் பெயர் மாற்றம் என எதற்குமே வாய்திறக்காமல் தவிர்க்கிறார். இதிலிருந்தே அவர் அரசியலில் யாருக்காக செயல்படுகிறார் என்பது பகிரங்கமாக தெரிகிறது.

ஆனால், மறுபக்கம் சனாதனம் குறித்த தன் கருத்தை உதயநிதி பதிவு செய்த விதம் அனைத்து இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பான நீதிமன்ற வழக்குகளை அவர் எதிர்கொண்டு, உச்சநீதிமன்றமே அந்த வழக்குகளை தள்ளுபடி செய்யும் நிலை உருவானது.

திமுக என்ற இயக்கம்தான் தனது வாழ்க்கை என்ற புரிதல் உதயநிதிக்கு இருக்கிறது. இயக்கத்தை அவர் வழிநடத்த பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறார். கார்பரேட் அரசியல் யுகம் இது. அதற்கேற்றவாறு, தனது மைத்துனரின் உதவியோடு இயக்கத்தை கட்டமைக்கிறார். மூத்த தலைவர்களே அவரை ஏற்றுக் கொள்கிறார்கள். 

தன்னைக் காட்டிலும் அனுபவம் மிக்க தலைவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுடைய கருத்துக்கும் செயல்பாடுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்ற புரிதல் அவருக்கு இருக்கிறது.

இளைஞர் அணியை கட்சி அமைப்புக்கு இணையாக வளர்த்து இருக்கிறார். அவர் நடத்திய பாசறைக் கூட்டங்களில் பயிற்சி பெற்ற மிகப்பெரிய திராவிட இயக்க இளைஞர் கூட்டம் உருவாகி இருக்கிறது. 

வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் லட்சத்திற்கு மேற்பட்டோரை கூட்ட மாநாடு நடத்தி இருக்கிறார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இளைஞர் அணி சார்பில் நடத்திய அறிவுத்திருவிழாவும், முற்போக்கு புத்தகத் திருவிழாவும் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் எளிதில் சந்திக்கும் ஆளாக தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறார். தனது தொகுதியில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ஓயாது சுற்றி வருகிறார்.

விஜய் நிலைமை இந்த வகையில் பரிதாபமாக இருக்கிறது. தன்னை யாரோ விரட்டிவிட்டது போல அரசியலுக்கு வந்திருக்கிறார். வந்தது சரி. ஆனால், அதற்காக நேரம் ஒதுக்காமல் ஒளிந்து கொள்கிறார். அவருடைய வாழ்க்கை முறை மிகவும் ரகசியமாக இருக்கிறது. அரசியல்க் கற்றுக்கொள்ளக்கூட முயற்சி செய்யவில்லை.

சினிமா வசனம் போலவே எழுதித் தரப்பட்டதை சரி பார்க்காமல்கூட ஒரே மாடுலேஷனில் கத்தி கத்தி பேசுகிறார். மக்களுடன் அவர் உரையாட விரும்பவில்லை. அவர்கள் மொழியில்கூட பேச முயற்சி செய்யவில்லை.

தனக்கு முன்னால் இருக்கும் கூட்டம் தனது பேச்சை ரசிக்காது. தன்னைதான் ரசிக்கும் என்ற அறிவு அவருக்கு தெளிவாக இருக்கிறது. அதையே முதலீடாக மாற்றவும் செய்கிறார். அந்த கூட்டம் ரசிக்கவும் செய்கிறது. 

ஸ்டாலின் -  விஜய் என களம் உருவாக்க விஜய் நினைக்கிறார். ஆனால் திமுக மாவட்ட செயலாளருக்கு இணையாகக்கூட விஜய் தன்னை உருவாக்கிக் கொள்ள தவறிவிட்டார். 

தமிழ்நாடு அரசியலில் தூக்கி எறியும் பிஸ்கட்டுக்கு ஏற்ப விஜய் செயல்படுகிறார். இன்னும் காலம் இருக்கிறது விஜய்க்கு. • 
Previous Post Next Post

نموذج الاتصال