வாழ்வியல் சிந்தனைகள் - ராதா மனோகர்

பொய்களும் நிஜங்களும்…

அன்புள்ள நண்பர்களே,

இந்நூல் நிச்சயம் உங்களுக்கு ஒரு இனிய அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்நூல் எழுதவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்பதை சுருக்கமாக கூறுகிறேன்.

கட்டுரைகளாக பிளாக்கில் எழுதினேன் பின்பு முகநூலிலும் பதிவேற்றினேன். முகநூல் வழியாக எனக்கு பல நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.திரு. ஆதனூர் சோழன் அவர்களின் அறிமுகமும் இவ்வழியாகவே கிட்டியது

இவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தமை பெரும் நல்வாய்ப்பாகவே கருதுகிறேன். நண்பர் ஆதனூர் சோழன் அவர்களின் பெருமுயற்சியால் எனது கட்டுரைகள் நூல் வடிவில் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.

என்னை பற்றிய ஒரு சிறு அறிமுகம் :
நான் சராசரி மனிதர்களை விட சற்று அதிகமாகவே ஒரு பக்திமானாக அல்லது ஆத்மீகவாதியாகவே வாழ்வின் பெரும்பகுதியை இலங்கையில் (யாழ்ப்பாணத்தில்) கழித்தவன்.

என்னதான் முழு நேர பக்திமானாக இருந்தாலும் எனக்குள் பிறப்பு, இறப்பு, வாழ்க்கை, எம்மைச் சுற்றி உள்ள இந்த பிரபஞ்சத்தின் பொறிமுறை போன்றவற்றை அறியும் தேடல் இருந்தது.

நானாகவே தேடிப்போய் அறிந்த எந்த மார்க்கமும் எந்த வழிபாடும் எனது தேடல்களுக்கு பதில்களை தரவில்லை. நாடு விட்டு நாடு இடம் பெயர்ந்து சென்ற போதும், செல்லும் இடமெல்லாம் சதா ஆத்மிக பெருமக்களை தேடுவதும் அவர்களின் கருத்துக்களை செவி மடுப்பதுமே எனது முக்கிய குறிக்கோளாக இருந்தது.

ஆனாலும் என்னுள் ஏராளமான கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது. அக்கேள்விகள் பதில்களை காணாத வெறும் ஒற்றை அடி பாதைகளாகவே சென்று கொண்டிருந்தன.

எதிலும் திருப்தி அடையாத எனது இயல்பு வாழ்வில் பல பிரச்சனைகளை எனக்கு தந்த போதும், பிரபஞ்சம் பற்றி எனக்குள் எழுந்த கேள்விகள் உண்மையில் எனக்கு கிடைத்த ஒரு நல்வாய்ப்புக்கள் என்றே கருதுகிறேன்.

மெதுவாக என்னை சுற்றி உள்ள உலகம் கொஞ்சம் சுவாரசியமாக இருப்பதை உணர்ந்தேன். பிரபஞ்சத்தின் இந்த சுவாரசியமான தன்மைகள் பற்றி மதங்களோ குருமார்களோ பெரிதாக ஒன்றும் கூறவில்லை என்று தோன்றியது.

எல்லோருமே வெறும் கிளிப்பிள்ளைகள் போல செயற்கையான கற்பிதங்களையே பதிலாக கூறுவது போல தெரிந்தது. எனவே எனக்கு தெரிந்த அந்த சுவரசியங்களை, அல்லது எனக்கு தோன்றிய அந்த கருத்துக்களை எழுதவேண்டும் என்று எண்ணினேன்.

எந்த வித பெரிய திட்டமிடலும் இன்றி எழுத ஆரம்பித்தேன். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு அவ்வப்போது தெரிந்த உண்மைகளை எழுதிக்கொண்டே இருந்தேன்.

காலம் செல்ல செல்ல பிரஞ்சத்தின் நுட்பமான இயங்கு முறை என்னை அளவு கணக்கில்லாமல் வியக்க வைத்தது. இப்போதும் வியக்க வைத்து கொண்டிருக்கிறது.

எம்மை சுற்றி உள்ள இந்த பிரபஞ்சத்தின் பெரும் இரகசியங்கள் எல்லாம் மிகவும் வெளிப்படையாகவே இருக்கிறதே என்ற வியப்பு மேலிட்டது. எமது வாழ்வியலின் பொறிமுறை எவ்வளவு துல்லியமாக இயங்குகிறது? இந்த அழகான துல்லியமான பொறிமுறையின் மேன்மை மனிதர்களுக்கு ஏன் பெரிதும் புரியாமல் போய்விட்டது?

எமது இந்த வாழ்க்கை எவ்வளவு பெரிய நல் வாய்ப்பு? இந்த உண்மையை எல்லோரும் அறியவேண்டும் என்ற பேராசையே தொடர்ந்து எழுத தூண்டியது. உண்மையில் நான் கூறும் விடயங்கள் ஒன்றுமே புதிதில்லை. ஏற்கனவே பல பெரியவர்கள் காலத்திற்கு காலம் கூறியவைதான்.

ஆனால் இந்த கருத்துக்களை மழுக்கடிக்கும் அளவுக்கு மதவாதிகளும் கலாசார கோட்பாட்டாளர்களும் ஏராளமான தவறான கருத்துக்களை விதைத்து விட்டார்கள். சமூக பொதுவெளியில் உண்மை மட்டுமே இலகுவில் வெளிப்படுவதில்லை. பொய்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன உங்கள் ஒவ்வொருவரையும் அவை தேடியே வருகின்றன.

உண்மைகளை நீங்களாகவே தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியி உருக்கிறது. இந்நூல் ஒரு சிந்தனை பயணம் என்று கருதுகிறேன். இது ஒரு இனிய நீண்ட வெற்றிகரமான பயணமாகும். இந்த பயணத்தில் இணைந்து கொண்ட உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்.

அன்புடன்
ராதாமனோகர்

வாழ்வியல் சிந்தனைகள் – 1 – ராதா மனோகர்

Previous Post Next Post

نموذج الاتصال