கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 6 – ராதா மனோகர்வீசும் காற்றிலும் போரின் வாடை

பாக்கியத்தம்மாள் தங்களை தேடி வந்ததில் பெருமகிழ்ச்சி கொண்ட குலதிலகன் பரிவாரம் விழுந்து விழுந்து உபசரித்தது. தங்களின் விருப்பங்களை வேண்டுதல்களை எல்லாம் மிகுந்த நம்பிக்கையோடு பாக்கியத்தம்மாளிடம் கூறினார்கள்.

அவர்களை பற்றிய முழு விபரமும் அவளுக்கு தேவையாக இருந்தது. தனது அடுத்த நகர்வுக்கு அது பெரும் உதவி செய்யும் என்று எண்ணினாள். அதனால்தான் இந்த நல்லெண்ண வரவை அவள் மேற்கொண்டிருந்தாள். அவளின் ஆழமான நோக்கத்தை தம்பி எள்ளளவும் சந்தேகப்படவில்லை. பார்ப்பனர்களும் இதர பரிவாரங்களும் முற்று முழுதாக பாக்கியத்தம்மாளை நம்பினார்களோ என்னவோ தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு வேறு மார்க்கமும் இருக்கவில்லை. அக்காவும் தம்பியும் திடீரென்று அன்பு பரிமாறி கொண்டிருப்பது அவர்கள் இதுவரை காணாத காட்சியாகும். தம்பியை போல அக்கா ஒரு வெகுளி அல்ல என்பது மட்டும் அவர்களுக்கு புரிந்தது.

தாங்கள் என்ன சொன்னாலும் தலையாட்டி கேட்டு கொண்டிருப்பான் குலதிலகன். ஆனால் அக்காவோ அப்படி அல்ல. குறுக்கு கேள்விகள் கேட்டு திணறடித்து கொண்டிருந்தாள். அங்கே வீசிய காற்றில் குதிரை சாணத்தின் மனமும் கலந்திருந்தது. அதில் ஒரு போரின் வாடையும் வீசியதை ஏனோ பலரும் கவனிக்க தவறி விட்டார்கள்.

அக்காவும் தம்பியும் மிகவும் ஒற்றுமையாக இருந்தால் தாங்கள் நினைப்பது நடக்காதே என்ற அவநம்பிக்கையும் ஏற்பட தொடங்கியது. அவர்களின் மன ஓட்டத்தை உணர்ந்து கொண்டாள் பாக்கியத்தமாள். அவர்களை பகைத்து கொள்வது நல்லதல்ல என்று எண்ணியவளாக, அவர்களின் அறிவு கூர்மையையும் மந்திர மேன்மைகளையும் பலவாறாக புகழ்ந்து அவர்களை குளிர்வித்தாள். மேலும் தனது வழுக்கியாற்று குளக்கட்டுமான கூடாரத்துக்கு அவர்கள் வருகை தந்து பூஜைகள் புரியவேண்டும் என்றும் வேண்டி கொண்டாள். மிகுந்த மன மகிழ்வுடன் அவர்கள் எப்பொழுது அழைத்தாலும் வந்து பூஜைகள் மேற்கொண்டு தெய்வ ஆசீர்வாதங்களை பெற்று தருவதாக வாக்கு கொடுத்தனர்.

அங்கு உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கங்களுக்காக பொய்யாக பேசினார்கள் பொய்யாகவே சிரித்தார்கள். அவர்களின் கூடாரமே ஒரு திருவிழா கோலம் கண்டது. தான் எண்ணிய விதமாகவே எல்லாம் நடைபெற்ற திருப்தியுடன் வழுக்கியாற்று மகாராணி மானமிகு பாக்கியத்தமாள் தனது குதிரையில் ஏறி கம்பீரமாக விடை பகர்ந்தாள்.

பாலாவோரை நகரம் முக்கால்வாசியும் எதிரிகளிடம் வழுக்கி விழுந்துவிட்டதை நேரடியாகவே கண்டு கொண்டாள்.

வீழ்ந்து கொண்டிருக்கும் தேசத்தை மீட்டு எடுக்க வேண்டிய கடமையின் சுமை வழுக்கியாற்று குளக்கட்டுமானத்தை விட பல மடங்கு அதிகம் என்பது அவளின் மனதில் பெரும் பாறாங்கல்லாக இறங்கியது.

முன்னோர்கள் பெரும் அர்ப்பணிப்போடு உருவாக்கிய அழகான தேசம் தவறான ஒரு வாரிசால் அந்நியர்களிடம் பறிபோவதை அனுமதிக்கலாமா?

எப்படி தம்பியின் துர்மந்திரிகளையும் குழிபறிக்கும் பார்ப்பனர்களையும் துரத்துவது என்று பலவாறாக சிந்தித்து தூக்கம் தொலைத்தாள்.

ஆயத்த வேலைகள்ஆரம்பமாகின

தற்போதெல்லாம் அக்காவும் தம்பியும் அடிக்கடி ஒருவர் கூடாரத்துக்கு ஒருவர் வருவதும் போவதுமாக நல்ல புரிந்துணர்வுடன் கருமங்கள் ஆற்றினர்.

ஏராளமான கட்டுமான பணியாளர்களை கொண்டிருந்த அக்காவின் உதவி அடிக்கடி கோவில் கட்டுமானத்துக்கும் தேவைப்பட்டு கொண்டே இருந்தது. தம்பியின் ஆட்கள் கேட்கும் எந்த உதவியையும் கூடுமானவரை செய்து கொடுக்கு மாறும் பாக்கியத்தம்மாள் உத்தரவு நல்கியிருந்தாள்.

அவளின் இந்த போக்கு பலருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. குளக்கட்டுமானத்துக்கே போதிய அளவு பணியாளர் கள் கிடைப்பது அரிதாக இருக்கையில் ஏன் கோவில் கட்டுமானத்துக்கு பணியாளர்களை அனுப்ப வேண்டும் என்று தமக்குள் கேள்விகள் கேட்டனர்.

அது மட்டுமல்ல வேறு பல பொருள் உதவிகளையும் அடிக்கடி தம்பியின் பணியாளர்கள் வந்து பெற்று கொண்டு செல்வது மிகவும் வாடிக்கையாகி விட்டது. இதற்கு எதிராக கொஞ்சம் வெளிப்படையாகவே முணுமுணுப்பு கேட்க தொடங்கியது.

தம்பியின் பரிவாரங்களோடு தனது பணியாளர்கள் சிலர் அடிக்கடி வாய் தர்க்கத்தில் ஈடுபடுவதும் அறிந்தாள்.

ஒருநாள் தனது பணியாளர்களை அழைத்து தனது கட்டளைகளை மேற்கொள்ள தயக்கம் உள்ளவர்கள் தயவு செய்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபடவேண்டாம். விருப்பம் இல்லாவிடில் பணியில் இருந்து விலகி விடலாம் என்று கூறினாள்.

அவளின் நேர்மையான ஒளிமிகுந்த கண்களும் தெளிவான வார்த்தைகளும் பணியாளர்களை சிலைகள் போல் கட்டி போட்டது. எல்லோரும் உரத்த குரலில் தாங்கள் ஒருபோதும் விலகப் போவதில்லை என்றும் தங்களால் மனம் வருந்த வேண்டாம் என்று உறுதி கூறினர்.

அவர்களின் உறுதியான அன்பினால் மனம் நெகிழ்ந்த பாக்கியத்தம்மாள் மிக உறுதியான குரலில் இனி வரப்போகும் காலங்கள் மிகவும் முக்கியமானதாகும். உங்கள் மீது ஒரு பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. தயவு செய்து எல்லோரும் மிகவும் பொறுமையோடு கடமையாற்ற வேண்டும். இப்பொழுதே எல்லாவற்றையும் விபரமாக கூற முடியாது என்று கூறிவிட்டு கூட்டத்தை உற்று நோக்கினாள். எல்லோரும் மிகுந்த ஆர்வத்துடன் மௌனமாக செவி மடுத்தனர்.

மேற்கொண்டு அவள் ஒன்றும் பெரிதாக பேசவில்லை. அவள் பூடகமாக பேசிய வார்த்தைகள் பெரும் சிந்தனையை பலருக்குள்ளும் தூண்டி விட்டிருந்தது. ஆம் அவள் பேசிய வார்த்தைகள் வரலாற்றை திசை திருப்ப போகும் மர்மங்கள் கொண்ட வார்த்தைகள்தான். அவை தற்போது விளங்கியும் விளங்காமல் மறைபொருளாக இருப்பதுதான் முழு பாலவோரை தேசத்துக்கும் நல்லது.

வல்லாளன் என்ற பெயரில் வீசிய வசந்தம்.

பாக்கியத்தமாளின் வாழ்க்கையில் பலருக்கும் தெரியாத ஒரு பக்கம் இருக்கிறது. அவளின் மனம் கவர்ந்து பின்பு அவளின் மகிழ்ச்சியையும் கவர்ந்து விட்ட ஒருவனின் கதையும் உண்டு.

அது, அவள் வாழ்வில் ஒரு வலிமிகுந்த அத்தியாயமாகும். நெஞ்சுக்கு வலியை தந்தவன் பெயர் வல்லாளன். அவள் சிலகாலம் அவனோடு வாழ்ந்திருக்கிறாள். அவர்களின் அந்த உறவுக்கு என்ன பெயர் கொடுக்கலாம் என்று யாருக்கும் தெரியவில்லை. அதை பலரும் பலவிதமான கோணத்தில் விவாதித்த சம்பவங்கள் எல்லாம் உண்டு. அவளின் பெற்றோருக்கு அது ஓரளவு தெரிந்து இருந்தது. ஆனால், அது வெறும் காதல் என்றும் அதை காலப்போக்கில் அவளே கைவிட்டு விடுவாள் என்று அவர்கள் எண்ணி இருந்தனர். அவர்கள் நம்பியது போலவே அந்த தொடர்பு அற்று போய்விட்டது. ஆனால் அவர்களுக்குள் காதலைத் தாண்டி ஒரு ஆழமான உறவு இருந்த விடயம் பெற்றோருக்கு தெரிந்தே இருந்ததா என்பது யாருக்கும் தெரியவில்லை.

அவனோ ஒரு வியாபாரி மகன். அவனது பெற்றோர் அச்சம் காரணமாக அவனை அவளிடம் இருந்து பிரித்து விட்டனர்.

மிகவும் மன உறுதி படைத்தவள் பாக்கியத்தமாள்.

காதல் குடும்பம் கணவன் எல்லாவற்றையும் விட நாட்டையும் மக்களையும் அதிகம் நேசித்த காரணத்தால் மனதின் வலிகளை தாங்கி கொண்டு முழு நேரமும் அரச நிர்வாகத்தில் கவனம் செலுத்தினாள். காலங்கள் ஓடிவிட்டன.

அன்று அவளின் மென்மையான உள்ளத்தை கொஞ்சம் அசைத்து பார்க்கும் ஓலை ஒன்றை வல்லாளன் அனுப்பி இருந்தான். அது உறவை புதுப்பிக்கும் கோரிக்கையை கொண்டிருந்தது. மரணித்து போயிருந்த காதலும் கண்ணீரும் அவளை பதம் பார்த்தது. அவளால் என்ன செய்ய முடியும்?

தற்போது பெரும் பொறுப்புக்கள் அல்லவா அவள் தலைமேல் வந்து சேர்ந்திருக்கிறது? விதி என்பது இதுதான் போலும்.

அவளின் ஒவ்வொரு அசைவையும் முழு தேசமே உற்று நோக்கி கொண்டிருக்கிறது. அவள் எங்கேயாவது ஒரு இடத்தில் தடுக்கி விழுந்து விட மாட்டாளா என்று பார்ப்பனர்கள் ஒருபுறமும் இனம் தெரியாத அயல்தேச அரசர்கள் மறுபுறமும் கழுகு கண்களோடு காத்திருக்கிறார்கள்.

கவனமாக அல்லவா காலடியை எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது.

அந்த ஓலைக்கு பதிலேதும் அனுப்பாமல் அதை நெருப்பிலிட்டாள்.

Previous Post Next Post

نموذج الاتصال