கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 7 – ராதா மனோகர்



மேடைபோட்டு நாடகம் ஆரம்பம்!

பாலாவோரை நகரத்திலும் பாக்கியத்த மாளின் வழுக்கியாற்று தேசத்திலும் அரச நிர்வாக பணிகள் மிகவும் அமைதியாக நடைபெற்று கொண்டிருந்தது.

குலதிலகனின் பரிவாரங்கள் வேக வேகமாக தங்கள் திட்டங்களை நிறை வேற்றி கொண்டிருந்தனர்.

கோவில் கட்டுமான பணிகளுக்கு என புதிதாக வேற்று மொழிகள் பேசும் பணியாட்களும் சிற்பிகளும் வேற்று மதவாதிகளுமாக நகரே ஒரு வித விழாக்கோலம் கொண்டது போல ஆயிற்று.

மாலைவேளைகளில் ஆடல் பாடல் வினோத நிகழ்சிகளை நகரின் புதியவரவான பார்ப்பனர்கள் அரங்கேற்றிய வண்ணம் இருந்தனர். அவர்களின் வரவு மக்களுக்கு பலவிதமான பொழுது போக்குகளை அளித்தது.

குலதிலகனை மகிழ்விக்க அவர்கள் நடத்தும் நாடகங்கள் குடியானவர்களை பெரிதும் கவர்ந்தது.

கற்றறிந்தோர் மத்தியில் அந்த அந்நியர்களின் வரவு மெதுவாக கவலையை அளித்தது. அவர்களின் நோக்கங்கள் பற்றிய சந்தேகங்கள் எழுவதற்கு பல காரணிகள் இருந்தன.

குறிப்பாக நேமிநாதர் பள்ளியை நேமிநாதர் கோவில் என அரசனும் பரிவாரங்களும் அழைக்க தொடங்கிய போதே வேண்டாத விளைவுகள் துளிர் விடதொடங்கியது.

சமண கோட்பாடுகள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அதிலும் அவர்கள் தமிழை புறக்கணிக்க தொடங்கியதும் தங்கள் அந்நிய மொழிகளை அடிகடி சிலாகித்து பேசுவதும் அறிஞர் குழாமில் கவலையை தோற்றுவித்தது.

அதிலும் அரசன் குலதிலகன் அந்நியர்களுக்கு ஏராளமான சலுகைகளை கொடுப்பதுவும் மக்களின் முணுமுணுப்புக்கு உந்துதலாகியது.

தம்பி குலதிலகனின் பூரண நம்பிக்கையை பெற்ற அக்கா பாக்கியத்தமாள் மெதுவாக தனது திட்டங்களை செயல்படுத்த தொடங்கினாள்.

ஏற்கனவே யாரும் அறிவா வண்ணம் ஒரு இரகசிய புலனாய்வு குழுவை அவள் உருவாக்கி இருந்தாள். அதில் கற்றறிந்த மேதைகளும் சமண சான்றோர்களும். சமுக கட்டமைப்பு நிர்வாக விற்பனர்களும் நியமிக்க பட்டிருந்தனர்.

இந்த குழு பற்றிய தகவல்கள் மிகவும் இரகசியமாக இருந்தது. அவர்களின் நோக்கம் செயல்பாடு பற்றி எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. பாக்கியத்தம்மாளின் மிக மிக நெருக்கியவர்களுக்கு மட்டும் அது பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தது, ஆனால் அவர்களுக்கு கூட அதன் செயல்பாடு நோக்கங்கள் பற்றி தெரிந்திருக்கவில்லை.

அந்த இரகசிய குழுவை சந்திக்க தனது அணுக்க தோழி மூலம் காலமும் இடமும் குறித்து ஓலை அனுப்பினாள்.

மேடை போட்டு நாடகம் ஆரம்பம்!

ஒரு சோலை போன்ற அழகான அடர்த்தி இல்லாத காட்டின் நடுவே சுடு மண்ணும் ஓலைகளும் சேர்த்து கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.

அதுதான் பாக்கியத்தம்மாள் இரகசிய குழுவினரை சந்திக்கும் கரந்துறை அரண்மனையாகும்.

பதினான்கு புலனாய்வு அறிஞர்கள் அங்கு குழுமினர். பாலவோரை நகரில் புதிதாக குடிகொண்டிருக்கும் அன்னியர் களின் செயல்பாடுகள் நோக்கங்கள் பற்றித்தான் பெரிதும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

புதிதாக குலதிலகனின் மனம் கவர்ந்த பார்ப்பனர்கள் ஏற்கனவே பல தேசங்களில் ஊடுருவி மன்னர்களை தங்கள் மயக்கு வித்தைகளால் கைப்பாவைகள் ஆக்கி நாடுகளை கவர்ந்த செய்திகள் பற்றி ஏராளமான செய்திகளை அவளுக்கு தெரியப்படுத்தினர்.

ஏற்கனவே இது பற்றி ஓரளவு அவள் அறிந்து இருந்தாலும் ஆதிக்க பார்ப்பனர்களை பற்றி மிக சரியாக எடை போடவேண்டியது அவசியம் என்பதால் இந்த குழுவை அமைத்திருந்தாள்.

இறுதியில் எப்படியாவது பார்ப்பனர்களை பாலவோரையை விட்டு துரத்துவதுதான் சரியான வழி என்று பலரும் ஆலோசனை கூறினர்.

அது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல என்று அவள் எண்ணினாள். அவர்கள் தம்பி குலதிலகனின் சிறகிற்குள் அல்லவா ஒழித்திருக்கிறார்கள்.

போதாதற்கு மேனகா பிராட்டியாரின் மயக்கத்தில் தம்பி தன்னை மறந்து இருக்கிறான், என்னதான் செய்ய முடியும்?

நாடகத்தை ஆரம்பித்து விட்டால் தம்பி அக்கா என்று பார்க்க முடியுமா? நாடகத்தை நடத்தி தானே தீரவேண்டி இருக்கிறது.

அது எவ்வளவு கொடுமையான நாடகமாக இருந்தாலும் தயவு தாட்சண்யம் பார்க்கமுடியுமா? என்று பலவாறு எண்ணினாள்.

இதுகாறும் பாக்கியத்தம்மாளின் முகத்தில் மென்மை, மந்தகாசபுன்னகை எல்லாம் மறைந்து விட்டிருந்தது.

எந்த உணர்ச்சி பாவமும் அற்ற மர்மம் நிறைந்த ஓவியம் போல காணப்பட்டது. அவளை பற்றி நன்றாக தெரிந்த அமைச்சர்களும் நிர்வாகிகளும் மெதுவாக நிலைமையின் இறுக்கத்தை புரிந்து கொண்டனர். யாருக்கும் எதுவும் பேச பயமும் தயக்கமுமாக இருந்தது.

தங்களை சுற்றி ஒரு சூறாவழி நிலை கொண்டிருப்பதை அந்த கூட்டத்தில் இருந்த எல்லோரும் உணர்ந்து கொண்டனர்.

முடிவில் பாக்கியத்தாம்மாள் அங்கு உள்ள ஐந்து அறிஞர்களை மட்டும் நிற்குமாறு கூறிவிட்டு ஏனையோருக்கு விடை பகர்ந்தாள்.

பின்பு, இதுவரை நீங்கள் எல்லோரும் கூறியது என்ன வென்றால், பாலாவோரை மெதுவாக ஆனால் நிச்சயமாக அந்நியர்களில் கைகளில் விழுந்து கொண்டு இருக்கிறது.

அதிலும் அவர்கள் சமணர்கள் அல்லர்.

புரியாத மொழியில் மந்திர தந்திரங்களை காட்டி மன்னர்களை புகழ்ந்து தேசங்களை கவர்ந்த ஒரு தீய சக்திகள்.

அரசன் குலதிலகனே தற்போது அவர்களின் வலையில் சிக்கி இருப்பதால் இந்த ஆபத்தில் இருந்து மீள்வது மிகவும் இடுக்கண் நிறைந்த முயற்சியாகும்.

எவ்வளவு இடுக்கண் நிறைந்த பணியாக இருப்பினும் நாம் அக்கருமத்தை ஆற்றவேண்டிய கடமை இருப்பதாகவே கருதுகிறேன்.

நாம் நிச்சயமாக பாலவோரையின் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும். இப்பொழுது குலதிலகனின் போக்கிற்கு விட்டுவிட்டால் எமது மக்கள் எதிர்காலத்தில் ஒரு அடிமை களாகவே வாழவேண்டிய நியதியை எதிர்கொள்ள வேண்டும்.

பாக்கியத்தம்மாளின் மென்மையான வார்த்தைகள் வானத்து இடிமுழக்கத்தின் சக்தியை கொண்டிருந்தது.

அடுத்து வரப்போகும் ஒரு யுத்தத்திற்கு தயாராவது போல எல்லோர் மனதிலும் தோன்றியது.

அந்த குழுவில் இருந்த ஒருவர் மெதுவாக கேட்டார். ஈற்றில் அக்காவும் தம்பியும் யுத்தத்தில் எதிரிகளாக பொருத போகிறீர்களா?

அங்கு ஒரு கொடுமையான அமைதி நிலவியது. அந்த அமைதியை பாக்கியத்தம்மாள் அப்படியே நீடிக்க விட்டாள். அது மிகவும் பயங்கரமாக இருந்தது.

அவளின் முகம் எந்தவித பாவத்தையும் காட்ட மறுத்தது. அவள் என்னதான் எண்ணுகிறாள் அல்லது ஏதாவது கூறப் போகிறாளா என்று ஊகிக்க முடியாமல் எல்லோரும் திணறினார்கள்.

அவள் மெதுவாக எழுந்தாள்.

அவளின் முகத்தில் மெல்லிய மூன்றாம் பிறை போன்ற ஒரு புன்னகை மட்டுமே தெரிந்தது. கண்களில் தெரிந்த கோபம் மட்டும் அப்படியே இருந்தது.

அது எந்த தெளிவான செய்தியையும் கண்டு பிடிக்க முடியாத மர்ம புன்னகையாகும்.

அதையே பதிலாக அங்குள்ளவர்கள் பெற்று கொண்டனர்.

Previous Post Next Post

نموذج الاتصال