நல்லாதானே போய்க்கிட்டிருக்கு நிர்வாகம்… பிறகெப்படி நல்லாட்சிக் கனவு சிதையும் என்று இயல்பாகவே கேட்கத் தோன்றுகிறதா இல்லையா?
அதுதான் இன்றைய நிலைமை. கொள்கை முடிவுகளை, சட்டத் திருத்தங்களை அமல்படுத்த முடியாத ஒரு அரசை நல்லரசு என்றோ, நல்ல நிர்வாகம் என்றோ எப்படி கூற முடியும் என்று அரசுத் துறையின் பல்வேறு தரப்பினர் புலம்புகிறார்கள்.
நல்ல ஆட்சி என்ற தோற்றத்தை உருவாக்கி, நல்ல முதல்வர் என்று எலைட் தரப்பினர் சமூக வலைத்தளங்களில் ஒரு கருத்தை உருவாக்கி, முதல்வர் மு.க.ஸ்டாலினையே நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தப் பிம்பத்தை தொடர்ந்து காப்பாற்றுவது எப்படி என்று புதுப்புது ஐடியாக்களை உருவாக்குவதே முதலமைச்சர் ஸ்டாலினை சுற்றி இருக்கிற 11 பேர் கொண்ட குழுவின் முழுநேர வேலை என்று கோட்டை வட்டாரத்தில் கமுக்கமாக சிரிக்கிறார்கள்.
சில விஐபிக்களும், திமுகவுக்கும் கலைஞருக்கும் எதிரான ஊடகங்களும், மூத்த பத்திரிகையாளர்களும் ஸ்டாலினை புகழ்ந்து பேசுவதற்காகவே அவ்வப்போது அறிவிப்புகளை தயார் செய்கிறார்கள். அதை முதல்வர் அறிவித்தவுடன் ஆஹா, ஓஹோ என்று பாராட்டுவார்கள்.
எல்லாமே சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கப்படும். பிறகு அடுத்த அறிவிப்புக்கான ஐடியாவை உருவாக்கும் வேலையில் ஆழ்ந்து விடுவார்கள்.
இந்த அறிவிப்புகள் எந்த அளவுக்கு மக்களை அடைந்திருக்கின்றன என்பதை முதல்வர் அறிந்திருக்கிறாரா? கட்சிக்காரர்களிடம் மக்கள் மனநிலையை கேட்டு அறிந்திருக் கிறாரா என்பதுதான் அடிமட்டத் தொண்டர்களின் கேள்வியாக இருக்கிறது.
“நாம என்னா நல்லது பண்ணாலும் தேர்தலின் போது பணம் கொடுத்தால்தான் வாக்களிப்பார்கள்” என்று மக்களை கேவலமாக நினைக்கும் போக்கு உருவாகி இருக்கிறது. ஆனால், கள எதார்த்தம் அப்படி இல்லை என்பதே உண்மை.
எதற்காக இதை சொல்கிறார்கள்? 2024 மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளையும் ஜெயிக்க தொண்டர்களின் முழு ஈடுபாடு கிடைக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்ததால் சொல்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போதைக்கு திமுக என்ற கார்பரேட் நிறுவனத்தின் முதலாளியாக மாறிவிட்டார். அல்லது மாற்றப்பட்டுவிட்டார் என்ற தோற்றம் உருவாகிறது. திமுக தலைவராக அவர் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்களுடனும் நெருக்கமாக இருக்கிறாரா? கட்சியின் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட மகளிரணி செயலாளர்கள் யாரென்று அடையாளம் வைத்திருக்கிறாரா?
மாவட்டச் செயலாளர்களையோ, கட்சிக்காரர்களையோ சந்திப்பதற்கு அறிவாலயத்தில் அவர் நேரம் ஒதுக்குகிறாரா?
இப்போது நேரம் ஒதுக்க தவறினால், ஆட்சி இல்லாதபோது அவரைச் சந்திக்க யார் வருவார்? என்றெல்லாம் கட்சிக்காரர்கள் பேசுவது அவருக்கு கேட்கிறதா? அவரைச் சுற்றி இருப்போர் கேட்க விடுவார்களா?
அதிகாரிகளை மட்டுமே நம்பி நல்லாட்சி நடத்தலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால், அவர் தேர்வு செய்த அதிகாரிகளுக்கே வேட்டு வைக்க இன்னொரு குழு கோட்டைக்குள் செயல்படுகிறது என்பதாவது ஸ்டாலினுக்கு தெரியுமா? என்று கோட்டைவாசிகள் கேட்கிறார்கள்.
ஸ்டாலினை ஆண் ஜெயலலிதாவாக உருவாக்கவும், சின்ன மோடியாகவும் பிம்பம் கட்டமைக்க ஒரு பக்கம் முயற்சி நடக்கிறது. அதேசமயம், அந்த பிம்பத்தை உடைத்து நொறுக்க, வாய்ப்பு மறுக்கப்பட்ட வட இந்திய அதிகாரிகள் அண்ணாமலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்கிறார்கள் என்கிறார்கள்.
2021 பிப்ரவரியிலேயே ஸ்டாலினை சுற்றி அதிகாரிகள் குழு அமைக்கும் வேலை தொடங்கியதாக சொல்கிறார்கள். 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் ஸ்டாலினுக்கு நெருக்கமான அதிகாரியாக இருந்தவர் அசோக் வர்தன் ஷெட்டி. 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஸ்டாலினை பழிவாங்க, ஷெட்டியை துணைக்கு அழைத்தார். அவர் மறுத்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு பல நெருக்கடிகளை கொடுத்தார் ஜெயலலிதா. இதையடுத்து, அவர் மத்திய அரசு பணியில் சேர்ந்தார்.
பின்னர் கனடா சென்ற அவர், 2021 தேர்தலில் திமுக அணி வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வராவார் என்பதை உறுதிப்படுத்தினார். முதல்வராக பொறுப்பேற்றவுடன், ஸ்டாலினுக்கு உதவ தமிழ் அதிகாரிகள் குழுவை அமைக்கும் பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட்டது.
அவர், தனது சீடரான உதயசந்திரனையும் அவருடைய ஜூனியர்கள் சிலரையும் கொண்ட குழுவை ஏற்பாடு செய்தார். தலைமைச் செயலாளர் முடிவாகாத நிலையில், அன்றைய தலைமைச் செயலாளராக இருந்த ராஜிவ் ரஞ்சனையே நீடிக்கச் செய்ய வட இந்திய அதிகாரிகள் பலர் முதல்வரை சந்தித்தனர்.
ஆனால், அவர்களுடைய கோரிக்கை நிறைவேறவில்லை. இறையன்புவிடம் பேசி அவரை தலைமைச் செயலாளராக முடிவு செய்தார் ஷெட்டி. ஆக, ஸ்டாலினுக்கு நம்பகமான குழு அமைந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், இந்த அதிகாரிகள் முதல்வரை கைக்குள் போட்டுக்கொண்டு, கட்சியில் சீனியர்களான அமைச்சர்களையே மதிக்காத போக்கு தொடங்கியது.
ஒவ்வொரு துறையிலும் அப்படியே பழைய பெருச்சாளிகளே அதிகாரம் செலுத்தும் நிலையில், மேலெழுந்த வாரியாகவே அரசு நிர்வாகம் நடப்பது முதல்வருக்கு தெரியவில்லையா என்று கேட்கத் தொடங்கினார்கள். பழைய பெருச்சாளிகள் கட்சிக்காரர்களை மதிப்பதே இல்லை.
அதிகாரிகள் கட்சிக்காரர்களை மதிப்பதில்லை என்றால், அமைச்சர்களே ஒருவருக்கொருவர் ஈகோ பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். இது இப்படி என்றால் மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்குள்ளும், தலைமைக் கழக செயலாளர்களுக்கு உள்ளும் புகைச்சல் தொடங்கிவிட்டதாக பரபரக்கிறார்கள்.
கலைஞர் கோட்டையில் இருக்கும்போது முதலமைச்சராகவும், அறிவாலயத்துக்கு வந்தால் கட்சித் தலைவராகவும் இருப்பார். அரசு வேறு அரசியல் வேறு என்பதை ஸ்டாலின் உணர்ந்து, இரண்டையும் பேலன்ஸ் செய்ய வேண்டும் என்றே கட்சிக்காரர்களும், திமுக மீது நல்லெண்ணம் கொண்ட சீனியர் லீடர்களும் விரும்புகிறார்கள். கட்சியின் அடித்தளம் பாதிக்கப்பட்டால், நல்லாட்சிக் கனவு சிதைந்துவிடும் என்பதை ஸ்டாலின் உடனடியாக உணரவேண்டும். உதயநிதியும், தனது சினிமா தொழிலை கைவிட்டு, கட்சிக்குள் தனக்கான ஆட்களை தயார் செய்ய வேண்டும்.
கட்சியை கார்பரேட் நிறுவனமாக்கி, நிர்வாக இயக்குனர், சிஇஓ, எச்.ஆர்., ரேஜனல் மேனேஜர்கள் என்று நிர்வாக நடத்த திட்டமிட்டால், எதிர்காலம் ரொம்பப் பெரிய பின்னடைவைச் சந்திக்கும் என்பதை உணர்ந்தால் நல்லது என்பதே நல்லோர் விருப்பம்..
உளவாளி