கலைஞர் ரசித்த கட்டுரை - மூத்த பத்திரிகையாளர் மணாஜூன் 3. தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்.

அவரை விமர்சித்தவர்கள் கூட அவரிடம் பாராட்டிய அம்சங்கள் நிறைய. எழுத்தில் குறைகள் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டுகிற அவரே பிடித்திருந்தால் மனம் திறந்து பாராட்டுவார்.

பிரபல வார இதழில் ‘நதிமூலம்’ என்கிற தொடரை ஆரம்பித்தபோது கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கும், திருவாரூருக்கும் சென்றிருந்தேன்.

அவருடைய உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் சந்தித்து எழுதப்பட்ட கட்டுரை வெளிவந்து, தனிப்புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு வெளிவந்தது.

‘நதிமூலம்’ முதல் பதிப்பு தயாரானபோது கலைஞர் முதல்வர். கையில் ஐந்து புத்தகங்கள் இருந்தன. ஒரு புத்தகத்தை அவரிடம் கொடுத்ததும் அவருடைய வாழ்க்கைச் சுருக்கத்தைப் போலிருந்த கட்டுரையைப் படிக்க ஆரம்பித்ததுமே நிமிர்ந்து பார்த்தார்.

“இங்கே வாய்ய்யா’’

அருகில் போனதும் “கட்டுரையை ஆரம்பிச்சுருக்கிறது அருமையா இருக்குய்யா’’ மெல்லத் தட்டினார்.

தொடர்ந்து கட்டுரையை வாசித்து முடித்ததும் அவரது முகத்தில் மலர்ச்சி. “சரி… இந்த புத்தகம் எத்தனை காப்பி வைச்சிருக்கீங்க?’’

“ஐந்து இருக்கு’’

“அப்படியே கொடுத்துப் போய்யா’’- ரசனையும், அன்புமாகப் புன்முறுவலுடன் சொன்னார் கலைஞர்.

அவர் ரசித்துப் பாராட்டிய அந்தக் கட்டுரை உங்கள் பார்வைக்கு :

#

பெயரிலேயே மரியாதையை இணைத்துக் கொண்டிருக்கிற சின்ன கிராமம் – திருக்குவளை.

நாகை மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து நாகப்பட்டினத்திற்குப் போகிற வழியில் இருக்கிற அந்தக் கிராமத்தில் செழிப்பில்லை.

அங்கங்கே வறண்டு கிடக்கிற கிராமத்தின் ஒரே சிறப்பு நான்கு முறை முதல்வராகியிருக்கிற கலைஞர், மத்திய அமைச்சர் முரசொலி மாறன், சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் என்று பலருக்கும் சொந்தக் கிராமம் என்பது தான்.

ஐந்தாயிரம் பேர் வரை இருக்கும் திருக்குவளையில் மையமாக தியாகராஜர் சுவாமி கோவில். எதிரே குளம். குளத்தங்கரையை ஒட்டிய தெற்கு வீதியில், வரிசையாக அந்தக்கால ஓடு வேய்ந்த வீடுகள். அதில் கடைசியில் கலைஞரின் பூர்வீக வீடு.

ஐம்பது அடி நீளம் நாற்பதடி அகலமுள்ள அந்த வீட்டை 72-ல் புதுப்பித்து நூலகமாக்கியிருக்கிறார்கள். அந்த வீட்டில் தற்போது திரும்பவும் மராமத்து வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவ்வப்போது கலைஞரின் குடும்பத்தினர் வந்து போகிறார்கள்.

அந்தத் தெருவில் கலைஞரின் வீட்டையடுத்து அவரது உறவினர்களின் வீடுகள். பெரும்பாலானவர்கள் அருகிலுள்ள கோவிலுடன் இசையின் மூலமாக ஏதோ ஒரு விதத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

“பதிமூன்று வயசு வரைக்கும் இங்கே இருந்தார் கலைஞர். பிறகு அவர் திருவாரூரில் படிக்க போனதுக்கப்புறம் அவரோட குடும்பமும் போயிடுச்சு. எம்.எல்.ஏ.வான பிறகு அடிக்கடி இந்த ஊருக்கு வருவார்… ஊர்க்காரர்களை விசாரிப்பார்.

முதல்வரான பிறகு கூட இந்த ஊர்ப் பிரச்சினைக்காக அவரைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தனிப்பட்ட முறையில் ஏதாவது தேவைக்காக அவர்கிட்ட போய் நிற்க மாட்டோம்” என்றார் கலைஞரின் பூர்வீக வீட்டருகே குடியிருப்பவரான சந்தானம்.

அதற்கு இரண்டு வீடுகள் தள்ளி குடியிருக்கிற நாதஸ்வரப் பாரம்பரியமான குடும்பத்தின் ஒரே வாரிசாக இருக்கும் தியாகராஜனின் சமீபத்திய சந்தோஷம் கலைஞரின் கையால் கலைமாமணி விருது வாங்கியிருப்பது.

“கலைஞரோட அப்பா முத்துவேலரும் நாதஸ்வரத்தில் பிரபலமாக இருந்தவர். நல்ல தேர்ச்சி அவருக்கு. நாதஸ்வரத்தில் தங்கப்பட்டை போட்டு வாசித்தவர் அவர்.

அதோடு ஏதாவது சின்ன வியாதி என்றால் மந்திரிக்கவும் செய்வார். ஒரு ஆண் வாரிசு. அதிலும் தனது கடைசி காலத்தில் பிறந்தவர் என்பதால் கலைஞர் கிட்ட ரொம்ப செல்லம்.

என்னோட அப்பா முத்துக்குமாரசாமிகிட்டே கலைஞரை கூட்டியாந்து சின்ன வயசிலே நாதஸ்வரம் கத்துக்கச் சேர்த்துவிட்டார்.

ஆனா கொஞ்சநாள்ல விருப்பமில்லாம அவர் தொடர்ந்து கத்துக்கலை. அரசியல்ல நுழைஞ்சி இப்படி புகழடையணும்னு இருந்திருக்கு” என்று சொல்கிற தியாகராஜன், விழுந்து விடுகிற மாதிரியான அந்தக் கால வீட்டில் பொருளாதாரக் கஷ்டம் என்பதையும் சொல்கிறார்.

“கலைஞருக்கு பதினைந்து வயதான சமயத்தில் இங்கே ஒரு காங்கிரஸ் மாநாட்டுக்கு வந்திருந்தார். நான்தான் அப்போது தேசியகீதம் பாடுவது வழக்கம்.

அப்போது கலைஞர் என்னைத் தனியாக கூப்பிட்டு ‘வந்தே மாதரம்’னு பாடுவது தப்பு ‘வந்தே ஏமாத்துறோம்னு தான் பாடணும்னு சீரியஸாக சொன்னார். நானும் அதை நம்பி வந்தே ஏமாத்துறோம்னு பாடினேன்.

பாடிட்டு வீட்டுக்கு வந்ததும், எங்க அப்பா புளிய விளாறால அப்படியே விளாசித் தள்ளிவிட்டார்.

அந்த அளவுக்கு குறும்பு பண்ணினதை அவரே கலைமாமணி விருது கொடுத்தபோது சொன்னார்” என்ற பழைய நினைவுகளைப் பகிர்ந்தபடி, தெருமுனையில் இருக்கிற கோவிலுக்கு மத்திய கால பூஜைக்கு நாதஸ்வரம் வாசிக்க கிளம்பினார் தியாகராஜன்.

அங்காள பரமேஸ்வரி திருக்கோவில். இதுதான் கலைஞரின் உறவினர்களுக்குக் குலதெய்வம்.

கலைஞரின் குடும்பத்தினர் எப்போதாவது இந்தக் கோவிலுக்கு வந்து போகிறார்கள்.

நான்கு முறை முதல்வராக வந்தும்கூட திருக்குவளைக்காரர்கள் கலைஞரிடம் நிரம்ப எதிர்பார்க்கவில்லை.

70-ல் திருக்குவளையில் கலைஞர் முயற்சியில் உருவாகி தற்போது, மேல்நிலைப்பள்ளியும், தாய்சேய் நலவிடுதி அமைய முயற்சி எடுத்ததையே நிறைவுடன் சொல்கிறார்கள்.

“கலைஞர் தனது சொந்தப் பணத்தை ஓரளவுக்கு கொடுத்துத்தான் இந்த பள்ளியும், தாய்சேய் நலவிடுதியும் ஊருக்கு வந்திருக்கு. கலைஞர் இன்றைக்கும் மறக்கவில்லை.

இங்கே இருக்கும் போது தாழ்த்தப்பட்டவங்க வீடுகளிலெல்லாம் தீவைத்து கொளுத்தப்படுவதை நேரடியாக உணர்ந்ததால்தான், அவர்களுக்கு தீப்பிடிக்காத வீடுகள் கட்டி கொடுக்கணும்னு அதைச் செயல்படுத்தினார்.

கலைஞரின் மகனாக மு.க.அழகிரி, இங்கே இருக்கிற பள்ளியில் வருஷா வருஷம் இலவசமாக புத்தகங்களைக் கொடுத்துகிட்டிருக்கிறார்.

அதோட கலைஞரோட இரண்டு அக்காக்களுக்கு இந்த ஊர் மேலே பிரியம் அதிகம்” என்கிறார் கலைஞர் குடும்பத்திற்கு நெருக்கமானவரான திருக்குவளையைச் சேர்ந்த பாவாடை சாமி.

கலைஞர் குடும்பத்தினருக்குத் திருக்குவளை கிராமத்தில் மிஞ்சியிருப்பது அவரது வீடும், உறவினர் பெயரிலிருக்கிற 6 சென்ட் நிலமும் தான்.

பக்கத்திலிருக்கிற நாகப்பட்டினம் போன்ற நகர்ப்புறங்களில் எவ்வளவோ மாற்றங்கள் வந்தும்கூட அப்படியே இருக்கிறது திருக்குவளை கிராமம்.

கலைஞர் முதல்வரானதும் திருக்குவளையில் வழக்கமான வரவேற்பு விழா நடைபெற்றது.

”ஆளுகிற இடத்தில் இருந்தாலும் எதிர்வரிசையில் இருந்தாலும் எப்போதும் இன்முகத்துடன் வரவேற்பவர்கள் திருக்குவளை மக்கள். நான் பிறந்து தவழ்ந்த இந்த மண்ணுக்கு என்ன செய்யப்போகிறேன்?” என்று நெகிழ்ந்திருக்கிறார். அந்த விழாவில் கலந்து கொண்ட கலைஞர்.

ஐந்தாவது வகுப்புக்கு மேல் படிக்க திருக்குவளை கிராமத்தில் வசதியில்லாததால் கலைஞரின் குடும்பமே அவரது படிப்பை முன்னிட்டு திருவாரூருக்கு வந்திருக்கிறது.

படித்துக் கொண்டிருக்கும்போதே சிறுவர்களைச் சேர்த்துக்கொண்டு ‘சிறுவர் சீர்திருத்தச் சங்கம்’ என்கிற அமைப்பை வைத்து பலக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்.

சமீபத்தில் கலைஞரே ஒரு வார இதழில் எழுதி இருந்தபடி அவரது முதல் காதல் உருவானதும் தோல்வியடைந்ததும் கூட இதே திருவாரூரில் தான்.

அரசியல் ரீதியாகக் கலைஞரை உருவாக்கின திருவாரூரில் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் கலைஞரின் பால்ய காலத்தை நினைவு கூர்ந்து சொல்கிறார்கள்.

1942ல் முரசொலி ஒரு துண்டு பிரசுரமாக துவக்கப்பட்டிருக்கிறது. சேரன் என்கிற பெயரில் அப்போது எழுதியிருக்கிறார்.

எட்டாவது வகுப்புப் படிக்கும்போதே ஒரு சிறுகதை எழுதி அண்ணா நடத்திக்கொண்டிருந்த திராவிடநாடு பத்திரிகைக்கு அனுப்பினார். இளமைப் பலி என்ற அந்தக் கதை உடனே பிரசுரமாகியிருக்கிறது.

பெரியார் அப்போது திருவாரூர் பகுதிக்குச் சுற்றுப் பயணம் வந்த நேரம், பரிட்சை எழுதின கையோடு அப்போது பார்த்து பாராட்டின பெரியார், மறுநாள் நாகப்பட்டினத்தில் நடந்த கூட்டத்தில் பேசுவதற்கு முன் இயக்கத்துக்காரர்களிடம் இப்படி சொல்லியிருக்கிறார்.

“நாளைக்கு நான் வர்றதுக்கு முன்னாடி அந்த திருவாரூர் பிள்ளையாண்டானைப் பேசச் சொல்லுங்க… ரொம்ப வேகமாக பேசுறான்… இங்கே பேசறப்ப கொஞ்சம் அடக்கிப் பேச சொல்லுங்க…”

கலைஞருடன் அறுபது வருடங்களுக்கு மேலாக நெருங்கிப் பழகி வருபவரான திருவாரூரைச் சேர்ந்த தென்னன் கலைஞரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

”கலைஞர் பதிமூன்று வயதில் திருவாரூருக்கு வந்ததிலிருந்து எனக்குப் பழக்கம். அப்போதே அவருக்கு சுயமரியாதை இயக்க உணர்வு உண்டு.

அப்போ கீழ் சாதிக்காரர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் பொது இடத்தில் மோசமா நடத்தப்பட்ட விதம் அவரை பாதித்தது… அதனாலே தான் பெரியாருடைய ஜாதிய எதிர்ப்பிலே உடனே இணைஞ்சுக்க முடிஞ்சது…

ரொம்பப் பொருளாதார வசதி இல்லேன்னாலும் வீட்டுக்கு ஒரே பையன்ங்கிறதனால அவரோட அம்மாவும் அவரோட இரண்டு அக்காக்களும் சௌகரியமாகத்தான் அவரை வளர்த்தாங்க.

திருவாரூரில் அப்போ பத்தாவது வகுப்புப் படிக்கிறப்போ இவருக்கு அரசியல் தொடர்புகள், கூட்டங்கள் அதிகமாகித் தொடர்ந்து படிக்க முடியலை. மூணு முறை பத்தாவது தேர்வில் தோல்வி அடைய வேண்டியதாயிடுச்சு.

அப்போ காதல் தோல்வி வேற… அந்த வருத்தத்திலே இருந்த கலைஞரை சமாதானப்படுத்தி சிதம்பரத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து கலைஞருக்கு கல்யாணம் திருவாரூரில் நடக்கிறப்போ, இருபத்தி ஒன்னு அல்லது இருபத்திரண்டு வயசிருக்கும்…” என்கிறார் தென்னன்.

கலைஞரைப் பற்றி சொல்வதற்குத்தான் அடர்த்தியாக எவ்வளவு விஷயங்கள் இவரிடத்தில்?

”கடும் உழைப்புங்கிறது சின்ன வயசிலேயே அவருக்கு பழகிப் போன ஒன்று… இயற்கையிலேயே அவருக்கிருந்த பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் அவருக்குப் பெரிய பலம்.

சின்ன வயசிலிருந்தே அவரைச் சுற்றி ஒரு நண்பர்கள் கூட்டம் எப்போதும் இருந்துக் கிட்டே இருக்கும்.

சாதிப் பாகுபாட்டை அப்போதிருந்தே உணர்ந்ததால் யாரையும் அலட்சியப்படுத்த மாட்டார். எந்தக் காரியத்தை எடுத்தாலும் ஒழுங்கா முடிக்கணும்னு நினைப்பார்.

மற்றவங்க கிட்டயும் அப்படி எதிர்பார்ப்பார். அப்போ கூட்டங்களுக்கு இவரே உட்கார்ந்து கொடிகள் கட்டுவார்… தெரியுமா?

சின்ன வயதிலிருந்தே நிறைய புத்தகங்கள் படிப்பார். அப்போ. வீ.சி.காண்டேகர் நாவல்கள்னா அவருக்கு ரொம்ப பிடிக்கும். சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஒருநாள் அவரும் நானும் திருக்குவளை போயிருந்தோம்.

அப்போ வயசான ஒருவர் கதர்ச்சட்டை கொடியோட ஊர் ஊராகப் போய்ப் பிரச்சாரம் பண்றதைப் பார்த்ததும் ”இந்த வயசிலயும் எப்படி இருக்கார்னு பாருங்க… அந்த மாதிரி நம்ம கொள்கையில் நாம இருக்கணும்” னு சொன்னார்.

42-ல் முரசொலியை அவரும், நானுமாகச் சேர்ந்துதான் நடத்தினோம். அவரே எழுதுவாரு. 43-ல் முரசொலியின் முதலாமாண்டு விழாவை திருவாரூரிலே நடத்தினோம்.

அதுல பேசுவதற்கு நெடுஞ்செழியனையும் பேராசிரியர் அன்பழகனையும் கூப்பிட்டிருந்தோம். நாராயணசாமிங்கிற பெயர் நெடுஞ்செழியனா மாறினது அந்தக் கூட்டத்தில்தான்.

விதவைத் திருமணத்தை வலியுறுத்திச் சின்ன வயசிலேயே பழனியப்பன்னு ஒரு நாடகம் எழுதினார். அதிலே அவர், நான் எல்லாம் சேர்ந்து நடித்தோம். பாண்டிச்சேரியில் அந்த நாடகத்தைத் தொடர்ந்து 25 நாட்கள் போட்டோம். நல்ல கூட்டம் இத்தனைக்கும் கடுமையான எதிர்ப்பு வேற.

அதிலே சிவகுருங்கிற பாத்திரத்தில் கலைஞர் நடிச்சாரு. நாடகம் தீவிரமாக இருந்ததற்காக இவர் தெருவிலே போய்க் கொண்டிருந்தபோது ‘அதோ சிவகுரு போறான்யா’ ன்னு கலைஞரை தாக்கினாங்க.

சாதிப்பிரச்சனைகள் சண்டைகள் நடக்கிற இடம்னா விலகிப் போயிட மாட்டார். அப்பவே திருவாரூர் பக்கத்திலே கிராமத்திலே ஒரு கூட்டம். அங்கே இருந்த ஒரு இளைஞர் தான் கூட்டம் நடத்த வரச்சொல்லியிருந்தார்.

அதற்குள்ளே கிராமமே கூடி அந்தக் கூட்டத்திற்கு யாரும் போகக் கூடாதுன்னுட்டாங்க… நாங்க போறோம். கூட்டம் நடத்த ஒரு விளக்கு கூட இல்லை.

கலைஞர் போனதும் ஊரிலே இரண்டு சட்டியை எடுத்துட்டு வரச் சொல்லி அதிலே எண்ணையை ஊத்தித் துணியைப் போட்டு எரிய வச்சாரு.

மைக் எதுவுமில்லை. கூட்டம் நடத்தினாரு. இவர் பேசப் பேசக் கூட்டம் சேர்ந்திடுச்சு. அப்படி என்ன எதிர்ப்பிருந்தாலும் அங்கே போய் சமாளிக்கிற குணம் அப்பவே இருந்திருக்கு.

கலைஞரோட இந்த அளவு வளர்ச்சிக்குக் காரணம், அவங்க அம்மாவும் இரண்டு அக்காளும் தான். அந்த அளவுக்கு இவருக்கு அனுசரணையா இருந்திருக்காங்க.

கலைஞரோட தாயார் அஞ்சுகத்தம்மா படிக்காட்டியும் கூட கலைஞர் செய்கிற காரியங்கன்னா பிடிக்கும்.கட்சியிலே கலைஞரோட இருக்கிறவங்க மேலே பிரியமா இருப்பாங்க. ஒரு சமயம், சென்னை மேயராக இருந்த முனுசாமி, சம்பத்தோட கட்சியில் சேர்ந்தப்போ பார்க்க வந்திருந்தார். வந்ததும் அஞ்சுகதம்மாவைத்தான் பார்த்தார்.

“நீ கூடவா போயிட்டே”னு கேட்டதும் முனுசாமி கண் கலங்கிப் போயிட்டாரு. அந்த அளவுக்குப் பற்றுதலோட இருந்தவங்க அந்த அம்மா.

அவங்க சென்னையில் இறந்தாலும் அவங்க அஸ்தியைக் கொண்டு வந்து இங்கே பக்கத்திலே இருக்கிற காட்டூர்லே சமாதியா வைச்சிருக்காங்க.

இப்ப வந்தாலும் அங்க போகாம இருக்க மாட்டார் கலைஞர்…” என்று பலவற்றை ஞாபகப்படுத்தி சொல்கிற தட்சிணாமூர்த்தி என்கிற தென்னனுக்கு வயது எழுபத்தி ஆறு.

இன்னும் வாடகை வீட்டின் மாடி போர்ஷனில் தான் குடும்பத்துடன் இருக்கிறார். குடும்பம் பொருளாதார நிலை நலிவுடன் இருந்தாலும் தன்னுடன் அறுபதாண்டுக்கு மேல் பழகின நண்பரான கலைஞரைச் சந்தித்து சலுகைகள் கேட்பதை மறுக்கிறார்.

“அவருக்குப் பதிமூன்று வயசாகிற காலத்திலிருந்தே எங்க நட்பு நீடிக்குது. எவ்வளவோ சண்டைச் சச்சரவுகள் வந்திருக்கு. சட்டென்று திட்டினாலும் மறுநாளே கூப்பிட்டுச் சமாதானப்படுத்துவாரு.

இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்து பழகுறோம். இத்தனை பழகியிருந்தும் என்னோட நலனுக்காக இவர் கிட்டேப்போய் நின்னதில்லை.

நட்பா இருந்துட்டு அப்படி எதிர்பார்க்கலாமா? இன்னைக்கும் அவரும், அவர் குடும்பத்தினரும் நம்ம மேலே பிரியமா இருக்காங்க…. அது போதும்” என்கிறார் மனநிறைவுடன்.

“என் கல்யாணத்தை நடத்தினதே அவர்தான்.

அப்போ எங்களுக்கு ஊர்லே உருப்படாதவங்கன்னு பேரு…

அதையே கல்யாணத்திலே பேசும்போது “இங்கே… ஒரு உருப்படாததுக்கு கல்யாணம் நடக்குது… இன்னொரு உருப்படாதது வாழ்த்தி பேசிக்கிட்டிருக்கு…ன்னார் கலைஞர்” என்றபடி சிரிக்கிறார்.

இந்த மாதிரி நெருக்கமான நண்பர்கள், பொருளாதாரத்தில் சரிந்திருந்தாலும் அதைச் சொல்ல விருப்பப்படாத, கலைஞரின் பிறந்து வளர்ந்த சூழலுடன் ஒன்றிணைந்த இவர்களுக்குப் பின்னி இருப்பதும் கலைஞரை உருவாக்கத் தூண்டுதலாக இருந்த அதே சுயமரியாதை உணர்வுதானே?.

Previous Post Next Post

نموذج الاتصال