மரணத்திலும் தனித்துவம் பெற்ற தலைவர் கலைஞர்! - ஆதனூர் சோழன்



கலைஞருடைய மரணம், அவரைப் பற்றி இதுவரை பரப்பப்பட்ட அவதூறுகளை நம்பிப் பரப்பிவந்த இன்றைய தலைமுறையினருக்கு உண்மைகளை உரக்க உரைத்திருக்கிறது. மீடியாக்களில் வேலைசெய்யும் இளைஞர்களேகூட அவரைப்பற்றிய உண்மைகளை இப்போதுதான் படித்து செய்தியாக வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள்.

அட, இவர் இவ்வளவு செய்திருக்கிறாரா என்பது இப்போதுதான் அவர்களுக்கே புரியத் தொடங்கியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், அவருடைய நீண்டகால அரசியல் பயணcமும். அவர் கடந்து வந்த வேறுபட்ட சூழல்களில் வளர்ந்து வந்த தலைமுறைகள்.

இன்றைக்கும்கூட அவருடைய சாதனைகளை சொல்ல முயன்றால் முழுவதையும் யாராலும் வரிசைப்படுத்திவிட முடியாது. பலரும் பல சாதனைகளை வரிசைப் படுத்துகிறார்கள். நாம் வரிசைப் படுத்தியதில் இல்லாத பல சாதனைகள் மற்றவர்களின் பட்டியலில் இடம்பெற்று இருக்கும்.

இதற்கு காரணம் எல்லாமே மக்கள் நலன் சார்ந்தவையாகவும், சமூகநீதி சார்ந்தவையாகவும், தமிழ்நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தும் நீண்டகாலத் திட்டங்களாகவும் அமைந்திருப்பதுதான்.

கிராமங்களுக்கு பேருந்துகள் வரக் காரணம் கலைஞர்தான் என்றால் அப்படியா என்கிறார்கள்… காமராஜர் காலத்தில் பஸ்களை விடவில்லையா? என்கிறார்கள்.

காமராஜர் காலத்தில் பேருந்துகள் முதலாளிகளுக்கு சொந்தமாக இருந்தது. சாலைகள் நன்றாக இருக்கும் பெரிய ஊர்களுக்கு மட்டுமே பஸ்கள் வரும். கலைஞர்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து போக்குவரத்தை அரசுடைமையாக்கி குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். ஒற்றையடிப் பாதைப் பயணத்தை சாலைவழிப் பயணமாக்கியவர் அவர். ஆம், குக்கிராமங்களையும் சாலைகளால் இணைத்தவர் அவர்தான்.

குடிசைகளாய் நிரம்பியிருந்த கிராமங்கள் இன்றைக்கு தீப்பிடிக்காத வீடுகளால் நிரம்பியிருக்கின்றன என்றால் கலைஞரின் குடிசை மாற்று வாரியமும், வீட்டுவசதி வாரியமும்தான் காரணம்.

பள்ளிகள் இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை தமிழகம் அடையக் காரணமாக இருந்தவர் கலைஞர் என்றால் அப்படியா என்கிறார்கள்… காமராஜர் காலத்தில் 6 ஆயிரம் பள்ளிகளை திறந்தார் என்கிறார்கள். அவருக்கு முன் காங்கிரஸ் அரசின் முதல்வராக இருந்த ராஜாஜி மூடிய 6 ஆயிரம் பள்ளிகளைத்தான் திறந்தார் என்று உண்மையைச் சொன்னால் வியப்படைகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக கல்லூரியில் பட்ட வகுப்புவரை இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியவர் கலைஞர் என்றால் விவரம் தெரியாமல் மலைக்கிறார்கள். பெண்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பெருமைப்படுவதற்கு கலைஞரே காரணம் என்றால் எப்படி என்று கேட்கிறார்கள்.

5 ஆம் வகுப்பு முடித்தவுடன் பெண் பிள்ளைகளை பள்ளியிலிருந்து நிறுத்திவிடுவார்கள் என்றால் நம்ப மறுக்கிறார்கள். 1989 ஆம் ஆணடு மூன்றாவது முறையாக கலைஞர் முதல்வரானவுடன், எட்டாம் வகுப்புவரை படித்தால் அவர்கள் திருமணத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியும், 10 ஆம் வகுப்புவரை படித்தால் திருமணத்திற்கு 8 ஆயிரம் ரூபாய் நிதியும், 12 ஆம் வகுப்புவரை படித்தால் 10 ஆயிரம் ரூபாய் நிதியும் கொடுப்பதாக அறிவி்த்தார். பிளஸ்டூ வரைக்கும் இலவச புத்தகங்கள் வழங்கினார். இந்தத் திருமண உதவியை பெறுவதற்காகவே பெண்களை படிக்க வைத்தார்கள். பிளஸ்டூ வரை நன்றாக படிக்கும் பெண்களை வீட்டாரே மேற்கொண்டு படிக்க வைக்க விரும்பினார்கள்.


1989ல் பதவியேற்ற சமயத்தில்தான் இந்தியாவில் முதன்முறையாக பெண்களுக்கு சொத்துரிமை, ஆரம்பக் கல்வி வரை அனைத்து வகுப்புகளுக்கும் பெண்களே ஆசிரியர் என்ற அறிவிப்பு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற திட்டங்களையெல்லாம் அறிவித்தார்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற அறிவிப்புதான், தமிழகம் விவசாயத்தில் தன்னிறைவு பெற அடிப்படை காரணம் என்பது விவசாயிகளுக்கு தெரியும். அவரை மட்டும் 1977ல் மீண்டும் முதல்வராக்கியிருந்தால் தமிழகம் இலவசமே பார்க்காத எல்லா வகையிலும் முன்னேறிய மாநிலமாக ஆக்கியிருப்பார் என்கிறார்கள்.

இந்த ஆட்சிக் காலத்தில்தான், இடஒதுக்கீட்டு அளவை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20%, மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 30%, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18%, பழங்குடியினருக்கு 1% என 69 சதவீதமாக உயர்த்தினார் கலைஞர். பெண்கள் ஒருங்கிணைந்து சுயதொழில் வாய்ப்பைப் பெருக்கும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை இந்தியாவில் முதன்முறையாக தர்மபுரியில் தொடங்கி வைத்தார் கலைஞர். வெறும் பருப்பு கலந்த சோறாக இருந்த சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டத்தையும், அரசு நிறுவனங்களின் பணியிடங்களில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கியதும் 1989-1991 இடைப்பட்ட இரண்டே ஆண்டு ஆட்சியில்தான்.

1977ல் இருந்து 1987 வரை எம்ஜியார் ஆட்சியில் தேடிப்பார்த்தாலும் இதுபோன்ற சாதனைகள் எதையும் பார்க்கவே முடியாது. தமிழகம் சாதி அரசியலுக்கு திரும்பியதும், நீண்டகாலத் திட்டங்களிலும், கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தாமலும் வெறும் கவர்ச்சித் திட்டங்களிலேயே காலத்தை ஓட்டினார் எம்ஜியார் என்பதுதான் உண்மை.

1989ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர் அவசர அவசரமாக அத்தனை சட்டங்களை பிறப்பித்தார். தமிழகத்தில் மட்டுமே அமலில் இருந்த இடஒதுக்கீடு முறையை இந்தியா முழுவதும் அமல்படுத்துவதிலும் முக்கிய பங்குவகித்தார். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அன்றைய பிரதமர் வி.பி.சிங் மூலம் அமல்படுத்தச் செய்தார். பார்ப்பனீயத்தின் வேரை அசைக்கும் அவருடைய சட்டங்களை நிறைவேற்றும் கலைஞரின் ஆட்சியை பார்ப்பனீய சக்திகள் அனுமதிக்கவில்லை. விடுதலைப் புலிகளைக் காரணமாக காட்டி அடிப்படை காரணமே இல்லாமல் 1991ல் கலைஞர் ஆட்சியைக் கலைத்தன.

ஆனால், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் கலைஞருக்கு சாதகமாக இருந்தன. மீண்டும் திமுகவே வெற்றிபெறும் நிலை உருவாகியது. அதைச் சீர்குலைக்கவே, தமிழகத்தில் ராஜிவ் கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது. இந்தக் கொலைக்கு பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கிறது என்று இன்றுவரை சொல்லப்பட்டாலும், கலைஞரையும் திமுகவையும் ராஜிவ் கொலையில் சம்பந்தப்படுத்தி தோற்கடித்தனர்.

திமுகவின் செல்வாக்கு குறையவில்லை என்பதை அறிந்த ஒருகூட்டம், 1993ல் பொய்யான காரணங்களை குற்றச்சாட்டாக முன்வைத்து கட்சியை மீண்டும் பிளவுபடுத்தியது. ஆனால், கலைஞர் கட்சியை கட்டிக் காப்பாற்றினார். 1996ல் மீண்டும் நான்காம் முறையாக முதல்வரானார். தலைநகர் சென்னையின் ஆங்கிலப் பெயரான மெட்ராஸ் என்பதை நீக்கி, அனைத்து மொழியிலும் சென்னை என்றே அழைக்கும்படி சட்டம் இயற்றினார்.

கிராமப்புற மேம்பாட்டுக்காக நமக்குநாமே, அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் ஆகியவற்றை அமல்படுத்தினார். இந்தத் திட்டங்கள் கிராமப்புற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க உதவியது. விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை லாபகரமாக விற்க உழவர் சந்தைகளை உருவாக்கினார். அனைத்து சமுதாயத்து மக்களும் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் 100க்கு மேற்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்களை தமிழகம் முழுவதும் உருவாக்கினார்.

உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு, பிளஸ்டூ வரை மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், கணினி தமிழை மேம்படுத்தும் வகையில் சென்னையில் இணைய மாநாடு நடத்தி தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தனியார் மூலம் குக்கிராமங்களுக்கு மினிபஸ்கள் என்று 1996ல் பொறுப்பேற்ற கலைஞரின் சாதனைகள் பிரமிப்பூட்டுகின்றன.

2006 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஐந்தாவது முறையாக பொறுப்பேற்ற கலைஞர், பதவியேற்பு மேடையிலேயே கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கவும், கூட்டுறவுக்கடன் ரூ 7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தும், சத்துணவுத் திட்டத்தில் வாரம் 2 முட்டை வழங்கியும் உத்தரவிட்டார்.

கலைஞரின் இந்த பதவிக் காலத்தில்தான், சாமான்ய மக்களின் கனவான இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி,  இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பு ஆகியவை அனைத்துக் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டன. 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் நாள் முதல் 1 கிலோ அரிசி 1ரூபாய் என்ற விலையில் மாதம் 20 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இதையடுத்து, பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றினார் கலைஞர்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 மாதங்களுக்கு மாதம் 1000 ரூபாய் நிதியுதவி,  படித்தும் வேலைகிடைக்காத இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை, ஆதரவற்ற முதியோருக்கு மாதம் 400 ரூபாய் உதவித்தொகை, திருமணமாகாத மூத்த பெண்மணிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கானச் சட்டம், இஸ்லாமியர்களுக்கு கல்வி-வேலை வாய்ப்புகளில் 3.5% தனி இடஒதுக்கீடு, அருந்ததியர் சமுதாயத்தினருக்கு 3% உள் ஒதுக்கீடு, அரவாணிகள் என அழைக்கப்பட்டோரை திருநங்கைகள் எனப் பெயர் மாற்றம் செய்து அவர்களுக்கென தனி நல வாரியம், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு நல வாரியம், ஊனமுற்றோர் என இழிவாக ஒதுக்கப்பட்டவர்களை மாற்றுத் திறனாளிகள் எனப் பெயர் மாற்றம் செய்து அவர்களுக்கெனத் தனி அமைச்சகத்தை உருவாக்கினார். மாற்றுத் திறனாளிகளுக்கு அரசாங்கம் என்ன செய்யவேண்டும் என ஐ.நா.மன்றம் வழிகாட்டியதை இந்தியாவிலேயே முதன்முறையாகச் செயல்படுத்தியது கலைஞர் அரசு.

2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 108 ஆம்புலன்ஸ் இலவச சேவைத் திட்டம், ஏழைகளுக்கும் உயர்தரமான சிகிச்சைகள் கிடைக்க வசதியாக 2009 ஆம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி முதல் கலைஞர் காப்பீட்டுத்திட்டம், 2010-ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் நாள் முதல் கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டம் ஆகியவற்றின் மூலம் பல லட்சம் மக்கள் பலன் அடைந்தனர்.

சென்னைக்கு அருகே கார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் நிறுவப்பட்டு, உற்பத்தி வருவாயும் வேலைவாய்ப்பும் பெருகச் செய்தார். ஒரே பாடத்திட்டத்துடனான சமச்சீர் கல்வி முறை, ஒரு குடும்பத்திலிலிருந்து முதல் தலைமுறையில் பட்டதாரியாகும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் கட்டணம் இலவசம், பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப் பாடம், பள்ளி மாணவர்களுக்கு ஊட்டமளிக்கும் வகையில் சத்துணவில் வாரம் 5 முட்டைகள் எனப் பல திட்டங்களை கலைஞர் நடைமுறைப்படுத்தி சாதனை படைத்தார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய வளமும், பண்பாட்டுப் பெருமையும் கொண்ட தமிழ்மொழிக்கு மத்திய அரசின் செம்மொழித் தகுதியை பெற்றுக்கொடுத்தார் கலைஞர். அதைத்தொடர்ந்து, 2010 ஜூன் 23 முதல் 27 வரை கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையும்,  தமிழ் இணைய மாநாட்டையும் நடத்தினார். தமிழில் படித்தோருக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் வேலை அளிப்பதற்கான அவசரச் சட்டத்தையும் நிறைவேற்றினார் கலைஞர்.

இவ்வளவு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றினாலும், பொய்ப்புகார்களை ஊதிப் பெரிதாக்கி, ஈழப் பிரச்சனையை திமுகவுக்கு எதிராக திசைதிருப்பி, எல்லாக் கட்சிகளும் அணிசேர்ந்து திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தன என்பதுதான் சோகம்.

2011ல் ஆட்சிக்கு வந்திருந்தால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக்கும் சட்டத்தின்படி, அர்ச்சகர் பொறுப்புகளிலும் இட ஒதுக்கீடுப்படி ஏராளமானோரை நியமித்திருப்பார்.  சமூகநீதி முழுமை அடைந்திருக்கும். ஆனாலும் என்ன அவருடைய சட்டப்படி, அவர் காலத்தில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களில் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் பணிநியமனம் பெற்றசமயத்தில்தான் கலைஞர் உயிர் பிரிந்திருக்கிறது.

தமிழ்நாட்டுக்காக, தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக, தமிழ் மொழிக்காக பாடுபட்ட, பெண்களின் நலனுக்காக சட்டப்பாதுகாப்பு வழங்கிய கலை, இலக்கியத்தில் குறிப்பிட்த்தக்க தொண்டாற்றிய கலைஞருக்கு அண்ணா நினைவிடத்தில் இடமில்லை என்று தமிழக அரசு மறுத்தபோது தமிழகம் நிஜமாகவே கொந்தளித்தது.

சொத்துக்குவிப்பு வழக்கி்ல் சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்ற ஜெயலலிதாவுக்கு எம்ஜியார் சமாதியில் இடம் கொடுத்த அரசு, தமிழக வரலாற்றில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கும், தமிழகத்தில் வேறு யாருமில்லாத அளவுக்கு 19 ஆண்டுகள் ஆட்சி செய்து அரிய சாதனைகளைப் படைத்த கலைஞருக்கு இடமில்லை என்று தமிழக அரசின் வழியாக ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் மறைமுகமாக தடை ஏற்படுத்தின.

ஆனால், போராட்டமே வாழ்க்கையாக கொண்ட கலைஞர், அவருடைய மரணத்துக்கு பின்னரும், நீதிதேவதையுடன் ஆதரவுடன் அண்ணா நினைவிடத்தில் இடத்தை பெற்று ஓய்வெடுக்கிறார்.

தமிழ்நாட்டுக்காக உழைத்த மாபெரும் தனித்துவமிக்க தலைவர் என்ற வகையில் அண்ணா நினைவிடத்தில், திமுக சார்பில் கொடுத்திருக்கும் வரைபடத்துக்கு ஏற்ப அரசு இடம் ஒதுக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்றுப் புகழ்பெற்ற தீர்ப்பை வழங்கியது கலைஞரின் இறப்புக்கு பிறகான சாதனைதான்.

-ஆதனூர் சோழன்

10-08-2018 ல் நக்கீரனில் எழுதிய கட்டுரை

Previous Post Next Post

نموذج الاتصال