பிறவிப் போராளி கலைஞர்! - ஆதனூர் சோழன்


கலைஞர் திருவாரூர் பள்ளியில் படிக்கும்போது 1937 ஆம் ஆண்டு முதல்வரான ராஜாஜி கட்டாய இந்திக் கல்விக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து தந்தை பெரியார் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கினார். இதுதான் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம்.

அதிலேயே பள்ளி மாணவராக கலந்து கலந்துகொண்டார் கலைஞர். ‘இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!’ என்று வீதிகளில் கொடிபிடித்து முழக்கமிட்டவர். தனது இந்தி ஆசிரியரிடமே இந்தியை எதிர்த்து எழுதப்பட்ட துண்டு நோட்டிஸை கொடுத்தவர்.

சுமார் 3 ஆண்டுகள் தந்தை பெரியார் இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினார். முடிவில் முதல்வராக இருந்த ராஜாஜி பதவியிலிருந்து விலகியதும்தான், கட்டாய இந்திக் கல்வி உத்தரவு நீக்கப்பட்டது. இந்தப் போராட்டம்தான் கலைஞரின் தமிழார்வத்துக்கும், போராட்ட குணத்திற்கும் தொடக்கமாக அமைந்தது.

1953 ஆம் ஆண்டு திமுக மும்முனை போராட்டத்தை கையில் எடுக்கிறது. ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து ஈ.வி.கே.சம்பத் தலைமையில் சாலை மறியல் போராட்டம். அரியலூர் அருகே டால்மியாபுரம் என்று பெயர் சூட்டுவதை எதிர்த்து கல்லக்குடி என்று பெயர்சூட்டும் போராட்டம். பெரியார் உள்ளிட்ட தமிழக தலைவர்களை நான்சென்ஸ் என்று நேரு கூறியதைக் கண்டித்து அவருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம்.

இதில் டால்மியாபுரம் எதிர்ப்பு போராட்டத்தை கலைஞர் தலைமையில் நடத்த அண்ணா உத்தரவிட்டார். அதாவது, டால்மியாபுரம் என்ற பெயர் பலகையில் கல்லக்குடி என்று எழுதப்பட்ட தாளை அமைதியாக ஒட்டுவது. தடுத்தால் மறியல் செய்து கைதாவது என்பதுதான் திட்டம்.

ஆனால், அந்த ரயில் நிலையத்துக்கு வழக்கமாக 9.50 வரும் ரயில் போராட்ட சமயத்தில் வந்து நின்றது. யாரும் எதிர்பாராத நேரத்தில், கலைஞர் அந்த ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுக்கிறார். அவரைத் தொடர்ந்து சில பிரமுகர்களும் படுக்கிறார்கள்.

அதிகாரிகள் மிரட்டியும் கலைஞரும் தோழர்களும் எழவில்லை. உடனே, அவர்களை அச்சுறுத்த ரயிலை இயக்கினார்கள். அஞ்சி எழுவார்கள் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்தார்கள். ரயில்தான் அஞ்சி நின்றது. வேறு வழியின்றி கலைஞரும் மற்றவர்களும் கைதாகி 6 மாதம் சிறைத்தண்டனை பெற்றனர். கலைஞர் பற்றவைத்த போராட்ட நெருப்பு தமிழகம் முழுவதும் பரவியது.

நெருக்கடி நிலையின்போது திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். யாரெல்லாம் கைது செய்யப்பட்டனர் என்பதுகூட கலைஞருக்கு தெரியாது. ஆனால், கலைஞர் வீட்டில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். கலைஞர் குடும்பத்தின் உறுப்பினர்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர். அவமானப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில்தான், தமிழகம் முழுவதும் சிறைகளில் கழக நிர்வாகிகள் கடும் சித்திரவதைக்கு ஆளாவதாக கலைஞருக்கு தகவல்கள் வந்தன. இதையடுத்து ஒரு நாள் தனி நபராக கழகக் கொடியுடன் அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை முன் காரில் வந்து இறங்கினார். தன்னை கைது செய்யும்படியும், கழகத்தினரை விடுவிக்கும்படியும் அவர் முழக்கங்களை எழுப்பினார்.

நெருக்கடி நிலைக் காலத்தில் கலைஞரின் போராட்டக் குணம், அதுவரை உலகம் கண்டிராத புதுமையான வடிவத்தில் வெளிப்பட்டது. மத்திய அரசின் அடக்குமுறைகள் அனைத்தையும் தனது புத்திசாலித்தனத்தைக் கொண்டு முறியடித்தார். அவரை தடுக்க முடியாமல் மத்திய அரசே திணறியது.

நெருக்கடி நிலை திரும்பப் பெறப்பட்டு எம்ஜிஆர் தலைமையில் அதிமுக அரசு அமைந்தபிறகு கலைஞரின் எதிர்க்கட்சி அரசியல் எம்ஜிஆரை திணறடித்தது. கலைஞரின் எதிர்ப்பை முறையாக எதிர்கொள்ள முடியாத எம்ஜிஆர் கலைஞரின் இமேஜை சிதைக்கும் அநாகரிக அரசியலை கையில் எடுத்தார். தமிழ் ஈழ ஆதரவுப் போரில் கலைஞர் ஒரு போராட்டம் அறிவித்தால் அதை அதிமுகவும் ஆதரிப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவார் எம்ஜிஆர்.

1987 ஆம் ஆண்டு இந்தித் திணிப்பை எதிர்த்து, திமுக சார்பில் அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் நடைபெறும் என்று கலைஞர் அறிவித்தார். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார் எம்ஜிஆர். கலைஞர் உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. தலைவர்களை விடுதலை செய்யக்கோரி தொடர் போராட்டம் நடைபெற்றது. ஆனால், எம்ஜிஆர் பிடிவாதமாக கலைஞர் உள்ளிட்டோரை விடுவிக்க மறுத்தார். முடிவில் கலைஞருக்கு 10 வார கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறை உடை கொடுக்கிற அளவுக்கு போன எம்ஜிஆர், திடீரென கலைஞர் உள்ளிட்டோரை விடுதலை செய்வதாக அறிவித்தார். கலைஞருக்கு ஆதரவான மனநிலை மக்களிடம் உருவாகிவிடும் என்று பயந்தே எம்ஜிஆர் இந்த முடிவை எடுத்தார் என்று அப்போது கூறப்பட்டது.

2001 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி நள்ளிரவு ஜெயலலிதா உத்தரவின் பேரில் கலைஞரை வீடுபுகுந்து கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டபூர்வமான எந்த நடவடிக்கைக்கும் ஒத்துழைப்புக் கொடுக்கக்கூடிய மூத்த அரசியல்வாதி கலைஞரை நள்ளிரவில் வீடுபுகுந்து கைது செய்தது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்தபிறகு கலைஞரை அங்கும் இங்குமாக அலைக்கழித்தனர். பின்னர் மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைக்க கொண்டு சென்றனர். சிறை வாசலிலேயே கலைஞர் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். கலைஞர் கைதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தை ஒடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

எல்லாவற்றுக்கும் உச்சமாக, தமிழினத்தின் மீது கொண்ட கலைஞரின் பற்றை வெளிப்படுத்தியது 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெறும் சண்டையை நிறுத்தக்கோரி கலைஞர் தொடங்கிய உண்ணாவிரதம்தான். அந்தச் சமயத்தில் கலைஞர் முதுகுத் தண்டுவட பாதிப்புக்காக அறுவைச் சிகிச்சை செய்திருந்தார். சக்கரநாற்காலிக்கு மாறியிருந்தார்.

அப்படிப்பட்ட நிலையில் 2009 ஏப்ரல் 26 அன்று விடுதலைப்புலிகள் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை அறிவித்தனர். இதையடுத்து 26 ஆம் தேதி அதிகாலை வரை நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார் கலைஞர். இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்று அறிந்ததும் அதிகாலை 5 மணிக்கு அறிவாலயம் செல்வதாக கூறிவிட்டு, அண்ணா நினைவிடத்திற்கு சென்றார் கலைஞர். வீட்டாரிடம் கூறினால் தடுப்பார்கள் என்பதால், தனது உடல்நிலையைப் பற்றி கவலைப்படாமல் உண்ணாவிரதம் தொடங்கினார்.

அன்று மதியம் 12 மணி அளவில் வடக்கில் போர் முடிந்துவிட்டது. இனி கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என்று ராணுவத்துக்கு உத்தரவிட்டிருப்பதாக இலங்கை ராணுவம் அறிக்கை வெளியிட்டது.

அதைத்தொடர்ந்து பிரதமரும், சோனியா காந்தியும், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கேட்டுக் கொண்டதால் 1 மணியளவில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் கலைஞர்.

அவருடைய உண்ணாவிரதம் சுமார் 8 மணி நேரம் நீடித்தது என்பதே உண்மை. பிறவிப் போராளியான கலைஞர் தனது இறுதிக்காலம் வரை தன்னை ஒரு போராளியாகவே நிரூபித்தார்.

-ஆதனூர் சோழன்

Previous Post Next Post

نموذج الاتصال