பத்திரிகையாளர் கலைஞர்! - ஆதனூர் சோழன்

மாநில முதல்வராக, மிகப்பெரிய அரசியல் தலைவராக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவராக இருந்தாலும், கலைஞர் தன்னை ஒரு பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்வதையே பெருமையா கருதினார்.

அதற்கு காரணம் இருந்தது. பள்ளிப்பருவத்தில் 12 வயதில் மாணவநேசன் என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தி தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர். அந்தப் பத்திரிகை வழியாக மாணவர் இயக்கத்தை தொடங்கியவர்.

பின்னர், கலைஞர் தனது 18 ஆவது வயதில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதன்முதலாக துண்டறிக்கையாக வெளியிட்டார். யுத்தம் நடைபெற்ற சமயம் என்பதால் நல்ல தாளில் கூட அச்சடிக்க முடியாத நிலை இருந்தது. அந்த துண்டறிக்கைகள் இதழுக்குரிய தன்மையுடன் வெளியாகவில்லை. அந்த இதழ் 1944 வரைதான் வெளியாகியது. 

துண்டறிக்கையாக வெளிவந்த சமயத்தில் கலைஞரின் பள்ளியிறுதி வகுப்பு முடிந்திருக்கவில்லை. எனவே சேரன் என்ற பெயரில்தான் எழுதினார். கலைஞரின் இந்தப் பணியில் அவருடைய நண்பர் தென்னனின் பங்கு முக்கியமானது என்று குறிப்பிட்டிருக்கிறார். வார இதழில் தமிழ் சமஸ்கிருத ஆண்டுக்கு பதிலாக பெரியார் ஆண்டு என்று அறிமுகப்படுத்தியதே கலைஞர்தான்.

முரசொலியை அவர் தனது முதல் பிள்ளை என்று அழைப்பார். அந்த அளவுக்கு அவர் முரசொலியை நேசித்தார். எப்பேர்பட்ட பொறுப்புகளில் இருந்தாலும் முரசொலி அலுவலகத்துக்கு வந்து உடன்பிறப்புக்கு கடிதம் எழுதுவதையும், பிழை திருத்துவதையும் விருப்பமாக செய்தவர் கலைஞர்.

அண்ணாவை கேலி செய்யும் பத்திரிகைகளுக்கு உடனுக்குடன் பதில் அளிப்பதில் கலைஞர் முன்னோடும் பிள்ளையாக இருந்தது. 75 ஆண்டுகள் முரசொலியை வெற்றிகரமாக நிர்வகித்தவர். அனைத்துப் பத்திரிகைகளையும் படிக்கிற பத்திரிகைப் பிரியராக இருந்தார். அதிகாலை 4 மணிக்கு எழும் பழக்கமுடைய கலைஞர், அந்த அதிகாலையிலேயே அனைத்து பத்திரிகைகளையும் படித்து, பதில் சொல்ல வேண்டிய விஷயங்களை குறிப்பெடுத்து விடுவார்.

அன்றைக்கு பத்திரிகைகளுக்கு தர வேண்டிய அறிக்கைகளுக்கும், உடன்பிறப்புகளுக்கு எழுத வேண்டிய கடிதத்திற்கும் விஷயத்தை எடுத்துக் கொள்வார். அதுபோக, பதிலளிக்க வேண்டிய சின்ன விஷயங்களுக்கு தானே கேள்விகளை தயாரித்து கரிகாலன் பதில்கள் என்ற தலைப்பில் நறுக்கென்று பதிலளித்துவிடுவார்.

ஒரு பத்திரிகையாளர் என்ற வகையில் தனது அறிக்கைகள் அடுத்த பத்திரிகைகளுக்கு எப்போது கிடைத்தால் சரியாக இருக்கும் என்பதை அறிந்திருந்தார்.

காட்சி ஊடகம் வந்த பிறகுகூட செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தி எழுதுகிறவர்களின் வேகத்துக்கு ஏற்ப தங்கு தடையின்றி நிதானமாக பதில் அளிப்பதில் கலைஞருக்கு நிகர் அவர்தான் என்று மூத்த பத்திரிகையாளர்கள் கூறுவார்கள்.

பத்திரிகையாளர் சந்திப்பை கலகலப்பாக நடத்தும் தலைவராகவும், சுருக்கமாக பளிச்சென்று பதில் சொல்லுவதிலும்கூட கலைஞரின் ஆற்றல் தனித்துவமானது. நெருக்கடி நிலையை பிரதமர் இந்திரா பிரகடனம் செய்தபோது, கொஞ்சம் கொஞ்சமாக இந்திரா ஹிட்லராகி வருவதை கார்ட்டூனாக போட்டவர் கலைஞர். அந்த கார்ட்டூனே திமுக ஆட்சியைக் கலைக்க காரணமாக இருந்தது என்றுகூட சொல்வார்கள்.

நெருக்கடி நிலைக் காலத்தில் முரசொலியை தனது வாளும் கேடயமுமாக பயன்படுத்தினார். தணிக்கையாளர்கள் கண்களுக்கு திரைபோடும் வகையில் தான் சொல்ல நினைத்ததை, உடன்பிறப்புகளுக்கு போய் சேர வேண்டிய விஷயங்களை திறமையாக எழுதுவார்.

இந்தக் காலகட்டத்தில்தான் சங்க இலக்கியங்களில் இருந்தும், உலக வரலாற்று நிகழ்வுகளில் இருந்தும் இந்தியாவின் நிலையை தனது உடன்பிறப்புகளுக்கு பாடம் எடுத்தார் கலைஞர். அவர் சொல்லும் கதையை தணிக்கை செய்ய எந்த அதிகாரிகளாலும் முடியவில்லை.

நெருக்கடி நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கழக நிர்வாகிகள் குறித்த விவரத்தை தமிழகம் முழுவதும் உள்ள உடன்பிறப்புகளுக்கு எப்படி தெரிவித்தார் தெரியுமா? அண்ணா நினைவு நாளைக்கு மறுநாள், அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வர இயலாதோர் என்று முரசொலியில் பட்டியலிட்டார் கலைஞர்.

முரசொலி கட்சிப் பத்திரிகையாக வெளிவந்தாலும், ஒரு வெகுஜனப் பத்திரிகையில் உள்ள அம்சங்கள் அனைத்தும் இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டார் கலைஞர். முரசொலியில் இன்றைய செய்தி நாளைய வரலாறு என்ற வாசகத்தை கலைஞர் பயன்படுத்தினார். அந்த வாசகத்துக்கு ஏற்ப முரசொலியை முழுவதுமாக ஆவணப்படுத்துவதிலும் கலைஞர் கவனம் செலுத்தினார். முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதங்கள், உலக அளவில் நீண்டகாலம் வெளிவந்த தொடராக கருதப்படுகிறது. திமுக தொண்டர்களுக்கு அன்றாட நிகழ்வுகள் குறித்து அரசியலாய் உரையாடும் வழியாகவே கலைஞர் அந்த கடிதங்களை பயன்படுத்தினார். கலைஞரின் கடிதங்கள் வழியாக திமுக நிர்வாகிகளுக்கு அரசியல் பாடம் நடத்தினார் கலைஞர் என்றும் சொல்வார்கள்.

-ஆதனூர் சோழன்

06-08-2018 நக்கீரனில் எழுதியது.,,

Previous Post Next Post

نموذج الاتصال