தமிழகம் நிறைந்த கலைஞர்! - ஆதனூர் சோழன்


சாதிப் பின்புலம் இல்லை. பொருளாதார பின்புலம் இல்லை. தனது சொத்தாக அவர் கொண்டிருந்தது தமிழ்தான். தமிழால் தமிழர்களின் இதயங்களை வென்றவர் கலைஞர்.

12 வயதில் தொடங்கிய அவருடைய தமிழ்பற்று, அவருடைய தமிழறிவை வளர்த்தது மட்டுமின்றி, தமிழர்களுக்கும் எளிய தமிழை அறிமுகப்படுத்தியது.

“கோட்டான் குயிலுக்கு குரல் கற்றுக் கொடுத்ததாம்…!”

“சிங்கங்கள் உலவும் காட்டிலே சிறுநரிகள் திரிவதுபோல, எண்ணிக்கையிலே குறைந்த அந்தக் கூட்டம் வஞ்சகத்தால் வாழ்கிறது… நிராயுதபாணிகளின் சொத்துக்களை சொந்தமாக்கிக் கொள்கிறது. அனாதைகளின் ரத்தத்தை அள்ளிக்குடிக்கிறது… அவர்கள் சிலர்… நாம் பலர்.. அவர்கள் சூழ்ச்சிக்காரர்கள், நாம் சூரர்கள்! அந்த மூர்க்கர்களின் முண்டங்களை பொடி செய்யுங்கள்… சிங்கத் தமிழர்களே சீறி எழுங்கள்..”

1950 ஆம் ஆண்டு வெளிவந்த மந்திரிகுமாரி படத்திற்காக கலைஞர் எழுதிய இந்த வசனத்தை எம்ஜிஆர் திரையில் பேசியபோது சாமான்ய தமிழர்களின் விசில் பறந்தது…

“அம்பாள் என்றைக்கடா பேசினாள் அறிவுகெட்டவனே…” என்று பராசக்தியில் பூசாரியை வெட்டப்பாய்ந்த இளைஞனின் குரலாய் கலைஞரின் பேனாவிலிருந்து வீசிய பகுத்தறிவுப் புயல் தமிழர்களின் சிந்தனைப் பாதையை திசைதிருப்பியது.

“கோவிலில் குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல… கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக! பூசாரியை தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. அவன் பக்தி பகல்வேஷமாகிவிட்டதை கண்டிப்பதற்காக!” என்று கலைஞர் எழுதிய வசனம் தமிழர்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றியதை மறந்துவிட முடியாது.

கலைஞரின் பேனா எழுத்திலே எழுச்சியூட்டியது என்றால், அவருடைய கரகரப்பான காந்தக் குரல் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பகுத்தறிவு பாடம் நடத்தியது. அண்ணாவின் தளபதிகளில் ஒருவராய், அவருடைய தம்பியரில் விரும்பத்தக்கவராய் கலைஞர் அரசியலில் வளர்ந்தபோது, அவருடைய சாதிப் பின்புலமே அவருக்கு தடைக்கல்லாய் இருந்திருக்கிறது. ஆனால், அவருடைய உழைப்பும், தமிழும் அண்ணாவின் அரவணைப்பை பெற்றுக்கொடுத்தது. தமிழ்த்தாயின் தலைமகன் அண்ணாவுக்கு பிறகு அவரை தமிழகமே தழுவிக் கொண்டது.

13 வயதில் தமிழ்க்கொடி ஏந்தி போராடிய கலைஞர் 45 வயதில் தமிழகத்தின் முதல்வரானார். அதன்பிறகு, தன்னை முதல்வராக்கிய தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக்கும் பல திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். அந்தத் திட்டங்களை அதுவரை யாரும் சிந்தித்தே இருக்க மாட்டார்கள். சமூக நலம் சார்ந்த, சமூக நீதியை நிலைநாட்டும் வகையிலான அந்தத் திட்டங்கள் சாமான்ய மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியது.

அதுவரை மனிதனை மனிதன் இழுக்கும், கை ரிக்‌ஷாவை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்‌ஷா கொடுத்தார். பிச்சைக்காரர்களுக்கும், தொழுநோயாளிகளுக்கும், ஆதரவற்றோருக்கும் இலவச மறுவாழ்வு இல்லங்களை அமைத்தார். இலவச கண்ணொளி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். எந்நேரமும் சாமான்ய மக்களின் மேம்பாட்டுக்காக சிந்தித்த அவர், குடிசைமாற்று வாரியத்தை முதன்முதலாக உருவாக்கி, குடிசைவாசிகளை அடுக்குமாடி வீடுகளிலும், கான்கிரீட் வீடுகளிலும் குடியமர்த்தினார். இந்தியாவில் முதன்முறையாக ஆதிதிராவிடர்களுக்கு கான்கிரீட் வீடுகளுடன் தனிக்குடியிருப்பை கட்டிக்கொடுத்தார்.

கலைஞர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அரசுப்பணியிடங்களில் அதுவரை இருந்த நிலை மாறத்தொடங்கியது. சாதாரணக் குடும்பங்களில் இருந்து வந்த மெத்தப்படித்த, அழகாக தமிழ் பேசக்கூடிய இளைஞர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றனர். இவர்கள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பொதுக்கூட்டங்கள் மூலம் சாதாரண மக்களின் தேவைகளையும் எண்ணங்களையும் அறிந்தவர்கள். இவர்களுடைய கருத்துக் கலவைகளை அரசின் கொள்கைகளாக மாற்றினார் கலைஞர்.

மக்களுடைய கோரிக்கைகளை கட்சி நிர்வாகிகளே முதல்வரிடம் சேர்க்க முடிந்ததால், கட்சி நிர்வாகிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை அதிகாரிகள் நிறைவேற்றும் நிலை ஏற்பட்டது. அதுவரை பண்ணையார்களையும், ஜமீன்தார்களையும் வீடுதேடி வந்து சந்தித்து அவர்கள் சொன்ன காரியங்களைச் செய்த அதிகாரிகளைத் தேடி ஆளுங்கட்சி நிர்வாகிகள் கோரிக்கைகளை கொண்டுவந்தார்கள். அதுவரை இருந்த நிர்வாக முறை மாறத்தொடங்கியது.

அரசு வேலையில் உயர்சாதியினர்தான் அதிகம் என்ற நிலை மாறி, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் இனச் சாதிகளைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றனர். இதையடுத்து அதிகாரவர்க்க கட்டமைப்பு அடியோடு மாறியது. அதாவது, மக்கள்தொகை விகிதத்துக்கு பொருத்தமே இல்லாத வகையில் அரசு வேலைகளில் பிராமணர்கள் ஆக்கிரமித்திருந்த நிலையை கலைஞர் அரசு அடியோடு மாற்றி அமைத்தது. அதுவரை அரசு வேலையைப் பற்றியே நினைத்துப் பார்க்க முடியாத பல சாதியினர் வேலைகளைப் பெற காரணமாக இருந்தார். மாவட்ட ஆட்சியரைச் சார்ந்தே இருந்த அரசு நிர்வாகம், ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளரின் ஆலோசனைகளை ஏற்று காரியமாற்றும் கட்டாயம் உருவானது. இது அந்தந்த பகுதி மக்களின் தேவைகளுக்கு ஏற்ப உடனடி பலன்களை பெற்றுத்தர உதவியது. அதாவது 1969 முதல் 1976ல் கலைஞர் தலைமையிலான அரசு மக்கள் நலப்பணிகளை விரைந்து நிறைவேற்றியதற்கு இதுதான் காரணமாக அமைந்தது.

தமிழ்நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பை மட்டுமல்ல உள்கட்டமைப்பையும் மாற்றியவர் கலைஞர். சாலைகள் இல்லாத கிராமங்கள் இல்லை. மின்சாரம் இல்லாத கிராமங்கள் இல்லை என்ற நிலையை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார். பயண தூரத்தையும், போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும் மேம்பாலங்களையும் ஆற்றுப் பாலங்களையும் கட்டினார். 1973 ஆம் ஆண்டு அவர் சென்னையில் கட்டிய அண்ணா மேம்பாலம், அன்றைக்கு இந்தியாவின் மூன்றாவது மேம்பாலம், இந்தியாவின் நீளமான மேம்பாளம், ஆசியாவின் முதல்தர மேம்பாலம் என்றால் இன்றைக்கு யார் நம்பப் போகிறார்கள். அதுதான் உண்மை. நெல்லையில் அவர் திட்டமிட்டு கட்டிய ஈரடுக்குப் பாலம், சென்னையில் கத்திப்பாரா சுழல் மேம்பாலம் ஆகியவையும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.

சென்னையில் குப்பைமேடாக காட்சியளித்த நுங்கம்பாக்கம் குப்பைமேட்டை வள்ளுவர் கோட்டமாக்கினார். கோயம்பேடு குப்பை மேட்டை சீராக்கி, ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டையும், உலகத்தரம்வாய்ந்த புறநகர் பேருந்து நிலையத்தையும் உருவாக்கினார். கடல் விழுங்கிய பூம்புகார் நகரையும், சிதைந்து சிதிலமான கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி்க் கோட்டையையும், நெற்கட்டும் செவலில் பூலித்தேவன் கோட்டையையும் கலையம்சத்துடன் கட்டினார்.

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், புதிய மருத்துவமனைக் கட்டிடங்கள், புதிய பேருந்து நிலையங்கள் என்று கலைஞரின் கலைவண்ணக் கட்டிடங்கள் தமிழகத்தில் ஏராளம். கலைவடிவமிக்க கட்டிடம் என்றாலே அது கலைஞர் காலத்துக் கட்டிடமாகத்தான் இருக்கும். 2006 முதல் 2011 வரை அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் தமிழக சட்டமன்றத்துக்கும் தலைமைச் செயலகத்துக்கும் கலைநுணுக்கமிக்க கட்டிடம் கட்டப்பட்டு திறந்துவைத்தார். அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாக வடிவமைத்து கட்டித் திறந்துவைத்தார்.

சாதாரண மக்களின் அரசாக, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் அரசாக கலைஞரின் அரசு செயல்படுவதை பொறுக்கமுடியாத ஒரு கூட்டம் கட்சியை பிளந்து அவரை ஒடுக்க முயற்சித்தது. கலைஞரைப் போல தனிப்பட்ட தாக்குதலுக்கு ஆளான தலைவர் வேறு யாரும் இருக்க முடியாது. ஆனால், அத்தனையையும் தாங்கிக்கொண்டு, தன்னை தாக்கியவர்களையும் அரவணைத்துக் கொண்டு ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழர்களின் அரணாகவே இருந்திருக்கிறார் கலைஞர்.

-ஆதனூர் சோழன்

01-08-2018 நக்கீரனில் எழுதியது..

Previous Post Next Post

نموذج الاتصال