கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 12 – ராதா மனோகர்



 தன் கை கொண்டே தன் கண்ணை..!

புத்தூர் நம்பியின் முகாமில் ஏராளமான பணியாளர்கள் போர்கருவிகள்  தயாரிப்பில் முழுவீச்சுடன் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போர் கருவிகளின் அவசிய தேவை தற்போது இருப்பதாக நம்பியோ, பாக்கியத்தம்மாளோ  கருதவில்லை.

ஆனால், எதிர்கால அரசியல் சூழ்நிலைகள் எந்த திசையில் செல்லும் என்பதை எவராலும் எதிர்கூற முடியவில்லை. தற்போது பார்ப்பன சமய மேலாதிக்கம் அயலில் உள்ள பல தேசங்களிலும் பரவி வருகிறதே?

எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

அமைதியான பாலாவோரை ஒரு பலமான தேசமாக இருக்கவேண்டிய வரலாற்று நிர்பந்தம் சுமத்தப்பட்டு விட்டது.

பாலாவோரை மக்களோ அல்லது அறிஞர் பெருமக்களோ ஒருபோதும் ஒரு யுத்தத்திற்கு தயாராக இல்லை. ஆனால் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் அவர்களை ஒரு மோதலுக்கு தயார் படுத்துவது போல்தான் நடந்து கொண்டிருந்தன.

மேலும் குலதிலகன் எப்படி அவர்களின் மயக்கு வலையில் வீழ்ந்தானோ அதே போன்று அயலில் உள்ள அரசர்களும் அரசுகளும் வடவர்களிடம் வீழ்ந்து கொண்டிருக்கும் வேதனை செய்திகள் பாலவோரையின் தூக்கத்தை தொலைத்து விட்டிருந்தது.

 புத்தூர் நம்பியின் போர் கருவிக் கிடங்கை பார்த்து பெருமூச்சு விட்டாள் பாக்கியத்தம்மாள். ஏனோ அவளின் மனத்திரையில் வல்லாளன் முகம் தோன்றியது.

முதலில் நிமித்தகாரி அம்மணியை பார்ப்போம் என்று எண்ணியவளாய் புத்தூர் நம்பியையும் அழைத்தாள்.

அக்கையார் பேச்சுக்கு மறுபேச்சு கூறி அறியாத புத்தூர் நம்பி பின்தொடர்ந்தான்.

போகும் வழியில் இருவரும் அடுத்தடுத்த கட்ட நகர்வுகளை பற்றிய கருத்துக்களை பரிமாறி கொண்டனர்.

உண்மையில் இதுவரை புத்தூர் நம்பியின் ஏற்பாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் போர் ஏற்பாடுகள் பற்றி பல விடயங்கள் கொஞ்சம் மர்மகாகவே இருந்தன.

அடிப்படையில் சில கொள்கை கோட்பாடுகளை பற்றிய விளக்கம் மட்டுமே அவள் நம்பியிடம் வேண்டுகோளாக விடுத்திருந்தாள்.

ஒருவர் கூட இறப்பதை விரும்பவில்லை என்பதுதான் தலையாய வேண்டுகோள்.

அடுத்தது நாம் வெற்றி கொள்வோம் என்ற நம்பிக்கை நிச்சயம் இருக்கிறது. ஆனால் ஒருவேளை நம்மால் வெற்றி கொள்ள முடியாவிட்டால் அவர்களோடு சமரசமாக பேசி ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டியது அவசியம். அதற்கு எவ்வளவு விட்டுகொடுப்பு தேவை என்பதை அந்தந்த நேரங்களில் தீமானித்து கொள்ளலாம் என்றும் கருத்தொருமை கண்டார்கள்.

குலதிலகனின் வளாகங்களில் உள்ள புரோகித மேதாவிகள் அப்படி ஒன்றும் போருக்கு உரிய பலத்தோடு இல்லை. ஆனால் அவர்களின் வேண்டுகோளை  ஏற்று படைகளுடன் வருவதற்கு பல அரசர்கள் தயாராக இருந்தனர்.

இதிலே வேடிக்கையும் வேதனையும் நிறைந்த விடயம் என்னவென்றால், அந்த அரசர்கள் எல்லாம்  அடிப்படையில் சமண பௌத்த சமயங்களை பின்பற்றி வாழ்ந்த திராவிடர்கள்.

தற்போது பார்ப்பனீய சமய சாயங்களை பூசிக்கொண்டு தங்களை சைவர்கள் வைணவர்கள் என்று ஆகிவிட்டனர்.

தன் கையை கொண்டே தன் கண்ணை மூடும் மூடர்களாக திராவிடர்கள் மாறிவிட்டிருந்தனர்.

இருட்டும் முன்பாக நிமித்தகாரியின் குடிலை அடைந்து விடவேண்டும் என்று இருவரும் தங்கள் குதிரைகளை வேகமாக செலுத்தினர்.

இவர்கள் வருவதை எதிர்பார்த்து நிமித்தகாரி புட்டும் வெல்லமும் வைத்து காத்திருந்தாள். இருவரும் நிமித்தக்காரியை ஆச்சரியத்துடனும் கொஞ்சம் பயத்துடனும் நோக்கினர். 

“நாங்கள் வருவதை எப்படி அறிந்து கொண்டே அம்மணி என்று நம்பி கேட்டான்?“

வெறும் புன்சிரிப்பை பதிலாக தந்தாள் நிமித்தகார அம்மணி.

குறும்புக்கார நம்பி அவளது வாயை மேலும் கிளற ஆசைப்பட்டவனாக, “நாங்கள் வருவதை அறியும் கட்புலனுக்கு அப்பாற்பட்ட மறைபொருள் அறியும் ஆற்றல் உள்ள உனக்கு, எமக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறமுடியுமா“ என்று கேட்டான்.

முதலில் வெறும் புன்சிரிப்பை காட்டியவள் இப்போது இருளை கிழித்து கொண்டு வரும் மின்னல் போல பதிலளித்தாள்.

“உங்கள் நேர்மையும் அறமும் எப்படியோ அப்படியே உங்கள் எதிர்காலமும் இருக்கும். ஏனெனில் உங்கள் எதிர்காலம் உங்கள் மனதில்தான் உள்ளது.“

பாக்கியத்தம்மாள் வெடிச்சிரிப்புடன் நம்பியை நோக்கி பார்த்தாயா அம்மணியின் வாக்கு வீச்சை?

இந்த வீச்சுக்கு பயந்துதான் நான் அதிகமாக எதுவும் கேட்பதில்லை.  நகைச்சுவையாக அவள் அதை கூறினாலும் அம்மணியின் வாக்கு ஒரு சக்தி மிக்க மகா வாக்கியம் என்பது இருவருக்குமே புரிந்தது.

“எடுத்து வைக்கப்போகும் அடி வெற்றிகரமாக அமையுமா இல்லையா என்பது மர்மவாக்கியங்களில் இல்லை அவரவர்கள் மனதில்தான் இருக்கிறது என்பதுதான் அம்மணி கூறியதன் உட்பொருள்”.

பாக்கியத்தம்மாள் அம்மணியிடம் வருகை புரிந்தமைக்கு முக்கியமான ஒரு காரணம் உண்டு.

அவளின் மனதின் எங்கோ ஒரு மூலையில்,  அறம் மீறிய பாதையில் தான் செல்கிறேனோ  என்ற  ஐயம் உண்டாயிற்று.

அம்மணிக்குத்தான் பிரபஞ்சத்தின் சலனங்களை கொண்டு நடந்தது நடப்பது நடப்பவை பற்றிய தெளிந்த ஞானம் உண்டே?

அன்றிரவு அவளோடு பாலவோரையின் நிகழ்கால எதிர்கால விடயங்களை பற்றி பல வித கருத்துக்களையும் கேட்டறிந்தனர்.

நடுச்சாமம் ஆகியது நம்பியை நித்திரை ஆட்கொண்டது. பாக்கியத்தம்மாளுக்கு ஏனோ நித்திரை வரவில்லை.

தூங்குவதற்கு முயற்சி செய்து அங்கும் இங்குமாக புரண்டு புரண்டு கொண்டிருந்தாள்.

அவள் இன்னும் நித்திரை கொள்ளவில்லை என்று அறிந்து கொண்ட அம்மணி தனது கைகளால் மெதுவாக பாக்கியத்தம்மாளின் தோளை பற்றினாள்.

கண்ணை விழித்து பார்த்த அக்கையரிடம், கொஞ்சம் கேலி கலந்த குரலில், வல்லாளன் நினைவு வந்துவிட்டதோ என்றாள்.

பாக்கியத்தம்மாள் கொஞ்சம் அதிர்ச்சியாக, “ஏன் அப்படி சொல்கிறாய்? உனக்கு எப்போதும் என்னோடுதான் விளையாட்டு“ என்றாள்.

தன் மனதில் வல்லாளன் முகம் தோன்றி மறைவதை கூட கண்டு பிடித்து விடுகிறாளே இந்த பொல்லாத நிமித்தக்காரி?

“சரி“ என்று ஒரு சாகச புன்னைகையை வீசிவிட்டு கண்ணை மூடிகொண்டாள் அம்மணி.

அவள் கண்ணை மூடிவிட்டாள் ஆனால் பாக்கியத்தம்மாளின் மனதிலோ நெருப்பு பற்றி கொண்டது. பெருமூச்செறிந்தாள்.

“எனது வாழ்க்கை ஒருவழியில் புனிதமானது, அற்புதமானது. ஆனால் நான் வேறு யாரோ ஒருவரது  வாழ்க்கையை எனது வாழ்வென்று எண்ணிக்கொண்டு காலத்தை  ஒட்டி கொண்டு அல்லவா இருக்கிறேன்? பேராவூர் பெரியவரசுவின் ஆண் வாரிசு மேற்கொள்ள வேண்டிய  அரசுக்கடமைகளை நானே தேடி என்தலையில்  சுமந்து கொண்டிருக்கிறேன். இந்த அகண்ட பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு அழகிய கிராமத்தில் சிறிய குடிலில் பிறந்து இருந்தால் எவ்வளவு மகிழ்சியாக வாழ்ந்திருப்பேன்?

என்னால் சுமக்க முடியாத அளவு பாரம் நிறைந்த பாலாவோரை - வழுக்கியாற்று நிர்வாகத்தை தலைக்கு மேல் வைத்துகொண்டு என் நாட்கள் கழிகின்றன. என்ன செய்வது நான் ஒதுங்கி விட்டால் அடுத்த கணமே எல்லாவற்றையும்  அற்ப  சலுகைகளுக்காக  தாரைவார்த்து  விட உள்ளிருந்து ஒரு கூட்டமும் வெளியில் இருந்து வேறொரு  கூட்டமும்   அலைகின்றனவே? ஆண்டாண்டுகளாக அமைதியாக மகிழ்வாக வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் எதிர்காலத்தில் அனாதைகள் ஆகி அன்னியரிடம் அடிமைகள் ஆகிவிடக்கூடாது“ 

என்று தனக்குத்தானே பலவிதமான சிந்தனைகள் ஓட, அடுத்த பிறவியிலாவது நான் ஒரு சாதாரண குடியனவனின் மகளாக பிறக்க வேண்டும் என்றவாறு பலவிதமான சிந்தனைகள் அலைமோத துயின்றாள்.

வழுக்கியாற்று கட்டுமானமும் நேமிநாதர் கோவில் பணிகளும்  ஒருங்கிணைக்கப்பட்ட நாளில் இருந்து குலதிலகனின் மாளிகையில் ஒரே கூத்தும் பாட்டும் கும்மாளமுமாக கழிந்து கொண்டிருந்தது.

அங்கிருந்த பார்ப்பன பெருமக்களோ நிம்மதியை தொலைத்து விட்டிருந்தனர். அரசனின் புதிய மகிழ்ச்சி பிரவாகம் நிச்சயமாக ஒரு நல்ல சகுனம் இல்லை என்பது அவர்களின் உள்ளுணர்வுக்கு  புலப்பட்டது.

கருமங்கள் தங்களுக்கு சாதகமா இல்லையா என்பது கூட தெரியாத ஒரு மர்மப்போக்கில் செல்வதாக அவர்களுக்கு புலப்பட்டது.

மிகவும் பெரிய வெளிச்சமாக தெரிந்தாலும் ஒரு கடும் இருள் தங்களை சூழ்ந்து கொண்டிருப்பதை அவர்களின் நுட்பமான அறிவு எடை போட்டு கொண்டிருந்தது. அவர்களின் பயத்துக்கு மிகவும் அழுத்தமான காரணங்கள் இருந்தன.

அவர்கள் பார்த்த திராவிட தேசங்கள் எல்லாம் மிகவும் வெளிப்படையான ஒரு அரசியல் நகர்வுகளை கொண்டிருந்தது. யார் எதிரி, யார் நண்பன் என்பதெல்லாம் தெளிவாக தெரிந்தது. ஆனால் வழுக்கியாற்று பாக்கியத்தம்மாள் இதுவரை தாங்கள் எங்கும் பார்க்காத ஒரு புதிய ரக ராஜதந்திரியாக இருக்கிறார் என்பது அவர்களின் நிம்மதியை அடியோடு போக்கி விட்டிருந்தது.

நேற்று வரை தாங்கள் என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டு இருந்த பாலாவோரை அரசன், இன்று தாங்கள் பேச வாயை திறந்தாலே அக்கையாரிடம் கேளுங்கள் என்று ஒற்றை வரியில் கூறிவிட்டு அடுத்த களியாட்டத்திற்கு ஆரம்பமாகிவிடுகிறானே?

இது எங்கே போய் முடியுமோ என்று பயந்தார்கள். 

Previous Post Next Post

نموذج الاتصال