பழைய நினைப்புடா பேரான்டி 2 - ஆதனூர் சோழன் முயல்கறி அனுபவம்

ஊர்ச்சாமி கும்புடுறதுனு முடிவெடுத்திட்டா, ஊரே குதூகலம் ஆகிரும். அதிலும் மழை தண்ணி செழிப்பா இருந்து, விளைச்சலும் நல்லா இருந்திட்டா சந்தோஷத்துக்கு அளவே இருக்காது.

எதுக்குச் சொல்றேன்னா, விளைச்சல் நல்லா இருந்தாக் கூட, திருவிழாவுக்கு தலக்கட்டு வரியை கொடுக்க முடியாத குடும்பங்களும் இருக்கும். அந்த மாதிரி குடும்பங்கள் கூலி வேலை செய்து சேர்த்து வச்ச தானியத்தை விற்றுத்தான் தலக்கட்டு வரியை கொடுக்க வேண்டியிருக்கும்.

தமிழர்களின் பொருளாதார சீரழிவுக்கு இத்தகைய வீண் செலவுகள்தான் காரணம் என்று தந்தை பெரியார் அந்தக் காலத்திலேயே கூறியிருக்கிறார். உழைத்துச் சேர்க்கும் பணத்தை, பண்டிகைகள், திருவிழாக்கள், மூன்றுநாள் திருமண விழா, காதணி விழா, பூப்பு விழா என்று ஏதோ ஒரு வகையில் பாப்பான்கள் பயனடையும் வகையில் செலழித்து விடுகிறார்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

உண்மை அதுதான், வசதியானவர்கள் செய்யும் இத்தகைய செலவுகளைப் பார்த்து, ஏழை ஜனங்களும் தங்கள் சக்திக்கு ஏற்றபடி செலவு செய்து, மேலும் மேலும் கஷ்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் என்பது உண்மைதான்.

ஆனால், ஊர் ஜனங்களின் மகிழ்ச்சி, உறவை அழைத்து சோறு போடும் அந்த சந்தோஷம் இதெல்லாம் கிடைக்குமா? என்று கேட்டு அவருடைய அடிப்படை கருத்தை திரிப்பார்கள்.

அதுகிடக்கட்டும், ஊர்க்கோவிலுக்கு எங்கள் குடும்பம்தான் பூசாரி. இந்த பூசாரித்தனம் எப்படி கிடைத்தது என்பது தனிக்கதை. மாசி மாதம் பொறந்துட்டா போதும் இந்த வருஷம் சாமி கும்பிடுவாங்களா என்ற எதிர்பார்ப்பு உருவாகிவிடும்.

நாட்டாமை பங்காளிகள்தான் சாமி கும்பிடுவதை முடிவு செய்ய வேண்டும். சித்திரை மாதம் அவர்களுடைய சீலைக்காரி சாமிக்கு சோறு ஆக்கி வைக்க வேண்டும். இதை செய்துவிட்டால், ஊர்ச்சாமி கும்பிட தயார் என்று அர்த்தம். அதன் பிறகு ஊர்க்கூட்டம் போட்டு எஸ்டிமேட் போட்டு தலக்கட்டு வரி போட்டு சாமி சாட்டுவார்கள்.

மாசி மாதம் வேட்டைக்கு போவார்கள். ஊருக்கு பக்கத்தில் உள்ள கட்டியாரங்கரடு, கிலுவமலையில் எல்லாம் வேட்டை தேடுவார்கள். நானெல்லாம் இப்படிப்பட்ட நாளில் வேட்டைக்கு போயிருக்கிறேன். அதுக்கென்று இரும்புப் பூன் போட்ட தடிகள், குத்தீட்டிகள் எங்கள் வீட்டில் இருக்கும். சின்ன வயதில் அது கெத்தாக இருக்கும். 

புதர்களை கலைத்து, குத்தீட்டியால் குத்தி, உள்ளே விலங்குகள் பதுங்கியிருந்தால் விரட்டு வார்கள். முயல் புழுக்கை கிடந்தால் அதை வைத்து இடம் கண்டுபிடிப்பார்கள். ஒரேநாளில் இந்த வேட்டை முடிந்தாலும் முடியும். சில நாட்கள் ஆனாலும் ஆகும். 

வேட்டை கிடைக்காவிட்டால், சாமி சோதிப்ப தாக சொல்வார்கள். வேட்டை கிடைத்துவிட்டால் சாமி கும்பிடும் தேதியை குறிப்பார்கள்.

ஒரே ஒரு முயல் கிடைத்தாலும் அதை எல்லா வீடுகளுக்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி பகிர்ந்து கொடுப்பார்கள். என்னுடைய அப்பா பூசாரியாக இருந்ததால், அவருக்கு முயல் காது கிடைத்தது. அவர் சாப்பிட மாட்டார். அதைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்து சாப்பிட சொன்னார். அது என்னவென்று எனக்கு தெரியாது. 

தீயில் வாட்டி கருகியிருந்தது. ஒருமுறை கடித்ததும் குமட்டிக் கொண்டு வந்தது. 

“சாப்பிட்டுருயா. சாமி குத்தம் ஆயிரும்யா" என்று அம்மா கெஞ்சினாள். கஷ்டப்பட்டு அரை குறையாக மென்று விழுங்கிவிட்டேன்.

அதன்பிறகு, கல்லூரிக் காலத்தில், என் வீட்டுக்கு பின்புறம் உள்ள அண்ணன் ஒருநாள் அதிகாலையில் முயல் கொண்டுவந்தார். அது உயிரோடு இருந்தது. ஊரே திரண்டு போய் ஒரு முயல் அடிக்க கஷ்டப்பட்டதை பார்த்த எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது.

இது எப்படி என்று கேட்டேன். முயலுக்கு கண்ணி வைத்து பிடித்ததாக சொன்னார். கண்ணி வைப்பதற்கு முன், முயல் புழுக்கைகளை வைத்து அவை உலவும் இடத்தை முதலில் கண்டுபிடிக்கனும் என்றார். சின்னவயதில் முயல் காதை சாப்பிடமுடியாமல் குமட்டிக் கொண்டு வந்தது நினைவுக்கு வந்தது.

அம்மாவிடம் வந்து, “முயல் கறி சமைச்சு தர்றியா? சீனி அண்ணன் முயல் வச்சிருக்கார் என்றேன்.

“அட போடா வேலையத்தவனே... நீயாவது முயல்கறி சாப்புடுறதாவது

“இல்லம்மா சாப்பிடுவேம்மா.. என்று வலுக் கட்டாயமாக அவளை சமைக்க சொன்னேன். வேறு வழியில்லாமல் முயலை அறுத்து குழம்பு வைத்து, கொஞ்சத்தை வறுத்து கொடுத்தாள். நான் ஆசை ஆசையாக சாப்பாட்டு தட்டு முன் உட்கார்ந்தேன்.

கறிக்குழம்பு வாசம்தான் மூக்கை துளைத்தது. வறுத்த முயல்கறி துண்டு ஒன்றை வாயருகில் கொண்டுபோனேன்... சின்னவயதில் முயல் காது சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. அவ்வளவு தான்... உவ்வ்வேய்ய் என்று குமட்டிக்கொணடு வந்தது...

பிறகென்ன... அன்றைக்கு நமக்கு கிடைச்சது ரசம் சோறும் ஊறுகாயும்தான்.


Previous Post Next Post

نموذج الاتصال