மு.வாவின் சிறுகதைகள் – 4



 கட்டாயம் வேண்டும்

ஒரு நாள் பகல் 10 மணிக்குச் சென்னை பிரபாத் டாகீஸ் அருகே நின்று கொண்டு, சைனா பசாருக்குச் செல்லும் டிராம் வண்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் எதிரே சிறுவன் ஒருவன் ஓடிவந்து “அய்யா!” என்றான். அவன் வயது பன்னிரண்டு இருக்கும். மேலே கிழியாத சட்டை; கீழே கிழிந்த துண்டு; இரண்டும் அவ்வளவாக அழுக்குப் படவில்லை. மெலிந்த உடல்; ஆனாலும் நலம் கெடவில்லை; முகத்தில் ஒருவகை மலர்ச்சி; கண்களில் கரவற்ற நல்ல பார்வை; கண்டவர் எல்லோரையும் கவர்ச்சி செய்யும் தோற்றம்; இவை அவனிடம் கண்டவை. அவனுடைய வாய்ச்சொல்லைக் கேளாமல், தோற்றத்தை மட்டும் கண்டிருப்பேனானால், நான் இந்த நாட்டைப் பற்றிப் பெருமை கொண்டு, ‘இவன் ஓர் இளஞாயிறு’ என்று எண்ணிச் சென்றிருப்பேன். “அய்யா” என்று மெல்லிய குரலில் விளித்து, அவன் கை நீட்டிய போதுதான் எனக்கு இரக்கம் பிறந்தது. ஆயினும், அந்த இரக்கம் உடனே மாறியது.

சென்னையில் உண்மையான பிச்சைக்காரர் யார் உலகை ஏமாற்றும் சோம்பேறிகள் யார் என்று பிரித்தறிய முடியவில்லை. பஸ் நிற்கும் இடங்களிலெல்லாம் கூட்டம் கூட்டமாக ஏழை மக்கள் நிற்கிறார்கள். அந்தக் கூட்டங்களை நாள்தோறும் பலமுறை கண்டு, இரப்புரையை அடுத்தடுத்து கேட்டுக் கேட்டுப் பழகிய என் மனம் எப்படி இருக்கும்? கொடுங்கோல் மன்னனாய் மாக்பெத் என்னும் கொடியோன் ஆண்ட நாட்டில், சாவுமணி ஒலித்தால் செத்தவன் யார் என்று கேட்பார் ஒருவரும் இல்லை என்று ஷேக்ஸ்பியர் தம் நாடகத்தில் எழுதியுள்ளார். ஏழை மக்கள் ஆக்கமும் அறிவும் உணவும் உடையும் இல்லாதவர்களாய் விலங்கினங்களாய் வாழ்ந்துவரும் இந்த நாட்டில் அவர்களுடன் நன்றாகப் பழகினவர்களுக்கு இரக்கம் உண்டாகுமா? அதிலும், இரப்பவர் மிகுந்த சென்னையில் அவர்களுடைய வறுமைக்கே காரணமாக இருந்து மனம் மரத்துப்போன தமிழருக்கு இரக்கம் தோன்றினாலும் உடனே மறைந்து விடும் அல்லவா?

அந்த ஏழைச் சிறுவன் நீட்டிய கையைப் பார்த்து “இந்த வயதில் உனக்கு இந்த வேலை ஏன் அப்பா? மீன்குஞ்சுக்கு நீந்தத் தெரிவதுபோல் தமிழ்ப் பையனுக்குப் பிச்சை எடுப்பது இயற்கையாய்விட்டதே! போய் மூட்டை தூக்கிப் பிழை அப்பா!” என்றேன்.

“எல்லாரும் இப்படித்தான் சொல்கிறார்கள். நீ என்ன கூனா, குருடா என்று கேட்கிறார்கள். என் பசிக்கு வழி காட்டினவர்கள் யாரும் இல்லை. ஒரு காலணா கொடுங்கள் அய்யா” என்றான்.

“காலணா அல்ல; கட்டாயம் ஓரணா கிடைக்கும். இந்தப் பட்டணத்தில் மூட்டை தூக்கும் வேலைக்குப் பஞ்சம் இல்லை. நான் ஒன்றும் கொடுக்கமாட்டேன். வழக்கம் இல்லை. வீட்டுக்கு வந்தால், சோறு இருந்தால், போடச் சொல்லுவேன்” என்றேன்.

“உங்கள் கையில் இருக்கும் இரண்டு புத்தகங்களைக் கொடுங்களேன். நான் சுமந்துகொண்டு வருகிறேன். அதற்குக் கூலியாகக் கொடுங்கள். காலணா கொடுங்கள் போதும்“ என்றான்.

“எப்படியாவது என்னிடம் காலணா வாங்கவேண்டும் என்று பார்க்கிறாய். பிச்சைக்காரர்க்குக் கொடுப்பதில்லை என்று விரதம், தெரியுமா? உன்னைப் போன்ற சோம்பேறியிடம் நான் ஏமாற மாட்டேன்” என்றேன்.

“அய்யா! நான் சோம்பேறி அல்ல. கோபித்துக் கொள்ள வேண்டா. வேலைதான் வேண்டும்; கட்டாயம் வேண்டும். வேலை கொடுத்தால் கட்டாயம் செய்வேன். இந்தப் பட்டணத்திற்கு வந்த நாளாக அலைகிறேன். முந்தா நேற்றெல்லாம் சென்ட்ரல் நிலையத்தில் இருந்தேன். கூலி வேலை கிடைக்கும் என்று காத்திருந்தேன். அங்கே இருக்கும் மூட்டை தூக்கிகளிடம் நான் பட்டபாடு போதும். அவர்கள் எல்லாரும் ஒரே கட்சி. என்னை அங்கே நிற்கவும் விடாமல் துரத்தினார்கள். ஆனால் எல்லாரையும் பழிக்க வில்லை. நல்லவன் ஒருவன் எனக்கு இரண்டு ஆப்பம் வாங்கிக் கொடுத்தான். அதனால் தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்” என்று சொன்னான்.

அதற்குள், டிராம் வண்டி தொலைவில் வருவது கண்ணுக்குத் தென்பட்டது. “இன்னும் ஒன்று கேளுங்கள் அய்யா!” என்று அந்தச் சிறுவன் என் கவனத்தைத் திருப்பினான். “அந்த மாதிரி பிச்சை வாங்கி வயிறு வளர்க்க எனக்குப் பிடிக்கவில்லை. நேற்று முழுவதும் பூக்கடையண்டை இருந்தேன். அங்கே ரிக்ஷாக்காரர் என்னைச் சும்மா விடவில்லை. யாரிடமாவது கூலி மூட்டைக்குப் போனால், அவர்கள் என்னைக் கொன்று கூவத்தில் போட்டுவிடுவதாகப் பயமுறுத்தினார்கள். போலீசாரிடம் சொல்லி மூடி வைப்பதாக விரட்டினார்கள். அவர்களின் பேச்சைக் கேட்டுப் போலீசாரும் என்னைத் துரத்தினார்கள். ஆனால் ஒருவரிடம் கூலி வேலை எப்படியோ கிடைத்தது. கூலியும் பேசாமலே அவர் கையில் இருந்து பழக்கூடையைத் தலைமேல் வைத்துக் கொண்டேனோ இல்லையோ, இரண்டு ரிக்ஷாகாரர் ஓடிவந்து ‘சாமி சாமி, அந்தப் பையனுக்குக் கொடுக்கிறதை எங்களுக்குக் கொடுங்கள். ரிக்ஷாவில் ஏறிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி என் தலைமேல் இருந்த பழக்கூடையை வலியப் பிடுங்கிக் கொண்டு என்னைத் தள்ளினார்கள். ஒரு ரிக்ஷாவில் பழக்கூடையுடன் அவர் போய்விட்டார். போய்விட்ட பிறகு மற்றொரு ரிக்ஷாக்காரன் என்னைச் சும்மாவிடவில்லை. இதோ அடையாளம்“ என்றான். சட்டையைத் தூக்கி முதுகில் பட்ட புண்ணைக் காட்டினான். “இந்தக் கதி வரும் என்று நான் எப்போதுமே நினைக்கவில்லை. ஆறாம் வகுப்பு வரைக்கும் நான் படித்தும் ஒரு பயனும் அடையவில்லை. நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலாவது உறவினர் காப்பாற்றுவார்கள். அம்மா ஒரு சாதி, அப்பா ஒரு சாதி. தாய் செத்த பிறகு எனக்குத் திக்கு இல்லை, வீடு இல்லை, வாசல் இல்லை, ஊர் இல்லை... இன்னும் ஒன்று சொல்கிறேன். கொஞ்சம் கேளுங்கள். நேற்றிரவு தான் - “ என்று சொல்லிக் கொண்டே இருந்தபோது பிரபாத் டாக்கீஸ் எதிரே டிராம் நின்றது. நான் ஏறிக் கொண்டேன்.

டிராம் நகர்ந்தது; உடனே திரும்பினேன்; அந்தப் பையனைப் பார்த்தேன். அவன் கை எடுத்துக் கும்பிட்டுக் கண்ணீர் விட்ட நிலையில் இருந்தபோது, அவன் கழுத்தின் மேல் கை வைத்தபடி ஒரு தடியன் தள்ளிக்கொண்டே போய்க் கீழே விழச் செய்தான்; தூ என்று துப்பினான்; காலால் உதைத்தான். அந்தப் பையனோ எதிர்க்கவும் இல்லை; ஏன் என்று கேட்கவும் இல்லை. கும்பிட்டுக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்தாற் போலத் தெரிந்தது. டிராம் மண்ணடி அருகே வந்து விட்டது. பையனைப் பார்க்க முடியவில்லை.

என் மனம் அவனை நாடிச் சென்றது. அவனுடைய வரலாற்றைப் பொறுமையுடன் கேட்டு ஆறுதல் அளிக்க முடியவில்லையே என்று வருந்தினேன். தொழிலுக்கு நேரம் ஆனதே என்று விரைந்து டிராம் ஏறினேன்; என்ன நடந்ததோ, என்ன காரணமோ என்று எண்ணி ஏங்கினேன். பெருமூச்சு விட்டேன். என் பக்கத்தே வண்டியில் இருந்த நண்பர் ஒருவர் என்னைப் பார்த்து “அய்யா! நீங்களும் அந்தக் கொடுமையைத்தான் பார்த்துக் கொண்டு வந்தீர்களா? அந்தச் சிறுவனை அடித்துத் தள்ளி உதைத்த தடியனைப் பற்றி நினைக்கும் போது என் மனம் பதறுகிறது. அந்தத் தடியனை நான் அறிவேன். அவன் தந்தை எங்கள் தெருவில் ஒரு பெரிய மாடிவீட்டுக்காரர். பெரிய கண்ட்ராக்டராக இருந்து நல்ல செல்வம் சேர்த்தார். அவருக்கு ஒரே மகன் அவன். மகன் எப்படியாவது பி.ஏ. படிக்க வேண்டும் என்பது தந்தையின் அவா. அதற்காக ஆங்கிலத்துக்கு வேறே தமிழுக்கு வேறே, கணக்குக்கு வேறே என்று ஆசிரியர் மூவரை வீட்டில் வருவித்துக் கற்பிக்கச் செய்தார். அவனோ சினிமாக்களையும், புதிய ஓட்டல்களையும், வேலைக்காரச் சிறுமிகளையும் தேடித் திரிந்தான். எட்டாம் வகுப்பிலேயே இரண்டு முறை தவறி எப்படியோ ஒன்பதாவது வகுப்பிற்கு வந்து விட்டான். தனக்கு இணங்கி நடக்காத சிறுவர்களை அடிப்பதும் உதைப்பதும் அவனுடைய முதல் வேலை. போலீசாரையும் அவன் வசப்படுத்தி வைத்திருக்கிறான். அவன் இன்னும் சில ஆண்டுகள் வாழ்வானானால், பல கொலைகளும் கொடுமைகளும் செய்வான். தந்தையின் செல்வம் அவனுக்குத் துணையாக இருக்கும். உலகம் அப்படித்தான் இருக்கிறது. இருந்தாலும் மனம் பொறுக்கவில்லை. என்ன செய்வது?” என்றார். நானும் ஏழைச் சிறுவன் பேசிய எல்லாம் எடுத்துச் சொன்னேன். அவர் மனம் உருகி வருந்தினார். “காலம் கெட்டுப்போனது” என்றார்.

அன்று பகல் தொழில் முடிந்த பிறகு, மாலையில் திரும்பி வந்தபோது பழைய நினைவுகளும் திரும்பி வந்தன. அந்தச் சிறுவனின் முகத் தோற்றம் என் மனத்தை விட்டு நீங்கவில்லை. அறிஞர் முகத்திலும் பெண்கள் முகத்திலும் குழந்தைகள் முகத்திலும் உள்ள அறிவும் அமைதியும் அன்பும் சேர்ந்து கலந்து அவனுடைய முகத்தில் விளங்கியதை நினைத்தேன். அவனுடைய துன்பத்தை ஒரு சிறிதும் நீக்காமல் வந்து விட்டோ மே என்று எண்ணி நொந்தேன். என்ன செய்வது? நகர வாழ்வு! “ஈகையோடு இரக்கம் என் சென்மத்தும் நானறிகிலேன்” என்று தாயுமானவர் பாடியது நகரத்தில் வாழ்கிறவனுக்கே பொருந்தும்.

 யார் எங்கே எதுவானாலும் என்ன? நகர மனிதன் நாண மாட்டான்; கருதமாட்டான்; அப்படியா என்று சொல்வான்; காலத்தின் கோலம் என்று சொல்வான்; வழக்கம் போல் நாளைக் கழிப்பான்.

நானும் வழக்கம்போல் கடற்கரைக்குச் சென்று உலாவி வரத் தொடங்கினேன். ஓரிடத்தில் சிறு கூட்டம் கண்டேன். அங்கிருந்து வருவோரைக் காரணம் என்ன என்று கேட்டேன்.

“யாரோ ஒரு சிறு பையன் அழகான பையன். பெற்றோர் இன்னார் என்று தெரியவில்லையாம். ஊர் பேர் தெரியவில்லையாம். கடலில் பிணம் மிதந்து வந்ததாம். எடுத்துக் கரையில் போட்டிருக்கிறார்கள். கண்டால் கண்ணீர் விடாதவர்கள் இல்லை. அய்யோ அந்தச் சாவு எனக்கு வரக் கூடாதா? இந்தப் பட்டணத்தில் பொல்லாத போக்கிரிப் பயல்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்! அவர்களுக்கு வரக்கூடாதா?” என்றார் கிழவர் ஒருவர்.

நான் விரைந்து சென்றேன். ஓடினேன். அந்தக் கூட்டத்தை அணுகுவதற்கு முன் அது கலைந்தது. போலீசார் இருவர் ஒரு வண்டியில் அந்தப் பிணத்தை ஏற்றினார்கள். நெருங்கிச் சென்றேன். முகம் மட்டும் தெரிந்தது. வண்டி ஓடிவிட்டது.

அந்த முகத்தை - மறுபடியும் காண முடியுமா என்று நான் கவலைப்பட்ட அந்த அழகு முகத்தைத்தான் - கண்டேன். ஆனால் அது காலையில் பேசியது. மாலையில் பேசவில்லை. காலயைல் அறிவு அமைதி அன்பு இவற்றோடு துன்பமும் அந்த முகத்தில் இருந்தது. மாலையில் துன்பம் ஒரு துளியும் அந்த முகத்தில் இல்லை. மற்ற மூன்றும் இருந்தன. என்ன பயன்?

கண்ணீர் விட்டு வருந்தினேன். பிச்சைக்காரர்க்கு ஈயா நோன்பு கொண்டிருப்பதாக நான் அவனிடம் சொன்னதை நினைந்து நினைந்து வாடினேன். வீட்டுக்குச் சென்றபிறகும் அந்த முகத்தின் அழகு - அறிவும் அமைதியும் அன்பும் கலந்த அழகு என்னை விடாது தொடர்ந்தது; என் மேசையின் மேலே இருந்த திருக்குறளைப் படித்து அந்த முகத்தை மறக்க முயன்றேன். ஒரு குறள் நினைவுக்கு வந்தது.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்.

அந்தோ! இரந்து வாழ எண்ணவில்லையே அந்தத் தமிழன். கூலி வேலை வேண்டும், கட்டாயம் வேண்டும் என்று தானே கேட்டான்?

Previous Post Next Post

نموذج الاتصال