கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 11 – ராதா மனோகர்



 திராவிட தேசங்களை வென்ற செருக்கு!

வழுக்கியாற்றை வேடிக்கை பார்க்க போய் புத்தூர் நம்பியிடம் பிடிபட்ட பார்பனர்கள் பற்றிய செய்திகள் எதுவும் வெளி உலகிற்கு தெரியவில்லை.

ஒரு மாளிகையில் கைதிகளாக ஆனால் போதிய வசதிகளோடு தடுத்து வைக்கப்பட்டார்கள். இனி தொடர்ந்து பிடிபடப்போகும் பார்பனர்களுக்கும் சேர்த்து பெரிய அளவில் சில கரந்துறை காப்பகங்கள் பாக்கியத்தம்மாளின் ஆலோசனைப்படி புத்தூர் நம்பியால் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. பாலாவோரை மக்களை ஆழம் பார்க்கவென கிளம்பிய பல பார்ப்பனர்கள் திடீர் திடீர் என்று காணமல் போவது குலதிலகனுக்கு திகைப்பை அளித்தது. அவனின் அமைச்சர் பெருமக்களோ பார்ப்பனர்களின் பெண்கள் சகவாசம் மதுபோதை பழக்கம் காரணமாக எங்காவது உல்லாசமாக இருக்கக்கூடும் என எண்ணினார்கள். குலதிலகனும் ஓரளவு அப்படியே நம்பினான்.

நாட்கள் செல்ல செல்ல குலதிலகன் முற்று முழுதாகவே தனது சுய நிலையை இழந்து கொண்டே வந்தான்.

நேமிநாதர் கோவில் வேலைப்பலுவையும் மெதுவாக அக்கா பாகியத்தம்மாளின் வழுக்கியாற்று குலக்கட்டுமான பணிகளோடு சேர்த்து விட்டதனால் தனது நேரமும் சக்தியும் வீணாகாமல் இருப்பதாக எண்ணி தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் மனோநிலையில் இருந்தான்.

அவன் எந்த நேரமும் சுய நினைவு பெற்று விடகூடாது என்பதற்காக பார்ப்பன அழகிகளும் புரோகித பெருச்சாளிகளும் பெரும் கவனம் எடுத்து வேடிக்கை வினோதங்கள் களியாட்டங்கள் சோமபானம் ரகசிய யாகவேள்வி போன்றவற்றை வழங்கி கொண்டே இருந்தனர்.

ஒருபுறம் குலதிலகன் ஒரு கேளிக்கை பொம்மை அரசனாகி கொண்டிருந்தான். மறுபுறம் வழுக்கியாற்றின் கரையோரம் ஒரு பேரரசுக்கு உரிய அடிமானம் கட்டுமானம் எல்லாம் உருவாகிக்கொண்டிருந்தது.

பாலவோரையின் குடியை கெடுக்க வந்த குலதிலகனோ வழுக்கியாற்று பணிகள் எல்லாம் தனது கனவு திட்டத்துக்காகவே நடைபெறுவதாக எண்ணி மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டான்.

பார்பன பெருந்தலைகள் மத்தியில் இன்னும் பல விடயங்கள் சரியாக புரியவில்லை.

நடப்பது எல்லாம் தங்கள் சித்தப்படியே நடப்பது போலவே தோன்றினாலும் எங்கோ ஒரு மூலையில் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள் மறைந்து இருப்பதாகவும் தோன்றியது.

இடக்கு மடக்காக ஒரு சிலந்தி வலையில் தாங்களும் குலதிலகனும் சிக்குண்டு விட்டோமோ என்ற சந்தேகமும் மெதுமெதுவாக தலை தூக்கியது. நடைபெறும் சில கருமங்கள் முன்னுக்கு பின் முரணாக நடப்பதாக சந்தேகப்பட்டார்கள். இதுவரையில் ஏறக்குறை முப்பது பார்பனர்களையும் வேறு பல பணியாளர்களையும் காணவில்லை.

பார்பனர்கள் பலரும் மடங்களை விட்டு அயலில் உள்ள ஊர்களுக்கு சென்று ஜாதகம் மந்திரம் புரோகிதம் போன்ற வித்தைகளை புரிந்து செல்வம் ஈட்டுவர் சில சமயங்களில் வேண்டாத விபரீதங்களையும் ஈட்டுவர். சென்றவர்கள் திரும்பி வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான்.

இவர்களை பற்றி அரசனிடம் கூறவும் முடியாது. கோவில் கட்ட வந்தவர்கள் தேவை இல்லாமல் வெளியே உலா சென்றது ஏன் என்று வினாவுவான். அவர்களை தேடிவருமாறு பணியாளர்களை அனுப்பவும் கூடும்.

அதுவும் சிலவேளை தங்களுக்கே விபரீதமாகி விடவும் கூடும். அரச பணியாளர்கள் தேடும் பொழுது பார்பனர்கள் சமணபெண்கள் வயப்பட்டு இருந்தால் வந்த நோக்கம் முழுதும் கெட்டுவிடும்.

எப்படி பார்த்தாலும் காணமல் போய் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் தாங்களாகவே வரும்வரை அமைதியாக இருப்பதை தவிர வேறு வழியில்லை.

என்ன செய்வது? தங்களால் புத்தியை இழந்து வெறும் காமக்கிளான் ஆகிவிட்டான் குலதிலகன்.

அக்கா பாக்கியத்தம்மாள் சொல்வதை முற்று முழுதாக அப்படியே நம்புகிறான். அதற்கு மாறாக நாம் ஏதாவது சந்தேகத்தை எழுப்பினால் நம்மீது எகிறி பாயவும் கூடும். அதே சமயம் அதை பாக்கியத்தமாளின் காதிலும் போட்டு விடுவான். அதன் பின் நமது நிலை மிகவும் ஆபத்தானதாகிவிடும்.

அதிகமாக சிந்திக்க சிந்திக்க குழப்பம்தான் மிஞ்சியது.

மழைக்காலம் வேகமாக அண்மித்து கொண்டிருந்தது. இம்முறை வரப்போகும் மழையானது பாலவோரையின் தலையெழுத்தை தன்னகத்தே கொண்டிருந்தது.

மழைக்காலம் முடிந்து அறுவடைதொடங்கியதும் மக்களின் நெல் கிட்டங்கிகள் நிறைந்துவிடும். அதில் வழமையாக வரும் வரிப்பங்கை விட அதிகமாக வாங்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தனர் குலதிலகனின் அமைச்சர் பெருமக்கள்.

கோவில் வேலைகள் மட்டுமல்லாமல், பார்ப்பன சமயம், கலாசாரம், மொழி எல்லாம் வளரவேண்டும் அதற்கு அதிக நிதி வேண்டும் என்று அரசனின் காதில் சதா யோசனைகளை கூறி அவனை ஒரு கொடுங்கோல் அரசனாக மாற்றி விட்டிருந்தனர்.

பார்ப்பன கூடாரத்தில் நிம்மதி போய்விட்டிருந்தது. காணமல் போனவர்கள் இன்னும் திரும்பவில்லை. அரசனோடு எதுவும் நிதானமாக பேசமுடியவில்லை. நாம் கூட்டிக்கொண்டு வந்த அழகிகளோ எப்படியாவது அரசனிடம் இருந்து ஏராளமாக கொள்ளை அடித்து விடவேண்டும் என்ற முனைப்பில் அவனை கணப்போதும் பிரியாமல் மாறி மாறி கண் பார்வையிலேயே வைத்திருந்தார்கள்.

வழுக்கியாற்று பணிகளும் நேமிநாதர் கோவில் பணிகளும் ஒரே திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டமையால் குலதிலகனின் கோவில் கொட்டகைகளில் இட நெருக்கடி ஏற்பட்டது.

ஏராளமான கட்டுமான கருவிகளும் பணியாட்களுமாக நிறைந்து காணப்பட்டது.

பார்ப்பனர்கள் தங்கள் தூய்மையை பேணுவதற்கு சிரமப்படுவதாக குலதிலகனிடம் தெரிவித்தனர்.

கொட்டகை வசதிகளை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதை கேள்வியுற்ற பாக்கியத்தம்மாள் உடனேயே மேலும் சில புதிய கொட்டகைகளை அமைக்க தனது பணியாட்களை அனுப்பி வைத்தாள்.

புதிய கொட்டகைகள் கொஞ்சம் நேர்த்தியாகவும் அதிக வேலைப்பாடுகளுடனும் பார்ப்பதற்கு கொட்டகைகள் போலல்லாது நிரந்தர மாளிகைகள் போன்று இருந்தன.

இவ்வளவு அழகான கொட்டகைகளை சமண பணியாட்களுக்கு வழங்க வேண்டுமா என்ற எண்ணம் பார்ப்பனர்கள் மனதில் முளைவிட்டது.

மெதுவாக தங்கள் மனக்கிடக்கையை வெளியிட்டார்கள்..

இதற்காகவே காத்திருந்தது போல பாக்கியத்தம்மாள் அவர்களை அழைத்து கொண்டுபோய் அங்குள்ள பணியாளர் களிடம் பார்ப்பனர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்குமாறு கட்டளையிட்டாள்.

ஐந்து அழகான கொட்டகை குடியிருப்புகள் பார்ப்பனரை மிகவும் மகிழ்வித்தது.

வழுக்கியாற்று பணியாளர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. குளகட்டுமான பணிகள் மெதுவாகவே நடைபெற்று கொண்டிருந்தது.

கோவில் கட்டுமானமோ படுவேகமாக நடைபெற்று கொண்டிருந்தது.

காலம் யாருக்கும் காத்திருக்காதல்லவா? மழைக்காலம் அண்மித்து கொண்டிருந்தது.

பார்ப்பனர்கள் நாட்டு நடப்பில் ஏராளமான மர்மங்கள் நடப்பதாக சந்தேகப்பட்டாலும், கோவில் கட்டுமானம் வேகமாக நடப்பது அவர்களுக்கு மிகுந்த திருப்தியை அளித்தது. நாளாக நாளாக அவர்கள் ஒரு அரச பரம்பரையினர் போன்ற நடக்க தலைப்பட்டனர்.

உண்மையில் குலதிலகனின் அரசபோகத்தில் பல பார்ப்பனர்களும் கொஞ்சம் கொஞ்சமாக குடியும் கூத்துமாக குலதிலகன் வழியே பின்பற்றி கொண்டிருந்தனர்.

ஒரு முட்டாளை ஏமாற்றுவதாக எண்ணிக்கொண்டு தாங்களும் முட்டாளாகி கொண்டிருந்தனர். மெதுவாக வெளியுலக செய்திகள் போக்குகள் பற்றிய பொது அறிவு அவர்களுக்கு அருகி கொண்டே வந்தது. எதுவேண்டும் என்றாலும் உடனேயே அது கிடைத்தது.

மதுவும் மாதுவும் புலாலும் மட்டுமல்ல ஆடலும் பாடலும் கேளிக்கை விநோதங்களும் அவர்களுக்கு ஒரு புதிய எதிரியாகி கொண்டிருப்பதை அறியாமல் தோற்று கொண்டிருந்தார்கள்.

ஏனைய திராவிட தேசங்களில் எல்லாம் அவர்கள் கண்ட வெற்றிகள் அவர்களுக்கு ஒரு கண்மூடித்தனமான செருக்கை அளித்திருந்தது.

தற்போது தூங்கவைத்து தாலாட்டி அப்படியே அப்பாவிகள் ஆக்கி விடுவது என்ற போர்த்தந்திரத்தின் அரிச்சுவடியை படித்து கொண்டிருந்தார்கள். அந்த பாடம் படிப்பது தெரியாமலேயே காலத்தை வீணடிக்கலாயினர்.

வழுக்கியாற்று பேரரசி தங்களுக்கு ஒரு புதிய பாடத்தை படிப்பித்து கொண்டிருக்கிறாள் என்பதை அறியும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கவில்லை.

அறம் பிறழ்ந்த பார்ப்பனர்களுக்கு எதிர்கொள்ள வழமையான நேர்மையான போர்த்தந்திரங்களை பாவித்து மக்களை காவு கொடுப்பதா?

பாக்கியத்தம்மாளின் மேன்மையான பெண் மனம் அதற்கு ஒப்பவில்லை.

ஒரு நேர்மையற்ற எதிரியை கூட நேர்மையாகவே பொருத வேண்டும் என்ற கொள்கையில் அவளுக்கு உடன்பாடில்லை.

நேர்மையாக பொருதி பல திராவிட தேசங்கள் வீழ்ந்த வரலாறுகள் ஏராளம் இருக்கிறதல்லவா?

உலகம் எப்படி வேண்டும் என்றாலும் கருதி கொள்ளட்டும். என் தேச மக்களை தோற்று போகவிடக்கூடாது என்பதுதான் அவளின் உயிர்மூச்சாக ஓடிகொண்டிருந்தது.

Previous Post Next Post

نموذج الاتصال