ஆட்சிக்கு எதிராக குடிமகன்களின் கோபம்! - ஒரு ஆண்டுக்கு முன் உதயமுகம் வெளியிட்ட எச்சரிக்கை! (ஒரு ஆண்டுக்கு முன்னே நாம் நல்ல நோக்கத்தோடு சொன்னோம்... யாரு கேக்குறா...)

லகத்துலேயே வேறு எங்கும் இல்லாத கொடுமையெல்லாம் தமிழ்நாட்டில்தான் நடக்கும். தனியார் ஸ்டோர்களில்கூட எல்லாப் பொருட்களையும் எம்ஆர்பி ரேட்டிலிருந்து குறைத்து கொடுப்பார்கள்.
ஆனால், இங்கேதான் அரசாங்கமே நடத்துகிற மதுக்கடைகளில்கூட பாட்டில் எடுத்துத் தருவதற்கே குவார்ட்டருக்கு 5 ரூபாய் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. பில்லும் கொடுக்க மாட்டார்கள். கேட்கிற சரக்கும் கொடுக்க மாட்டார்கள். எந்த சரக்காக இருந்தாலும், அதாவது, குவார்ட்டர் 100 ரூபாயாக இருந்தாலும், 500 ரூபாயாக இருந்தாலும் 5 ரூபாய் லஞ்சம் கொடுக்கனும்.
அரசு விற்கும் பொருளுக்கே பில் இல்லாமல் வாங்க வேண்டிய கொடுமை இங்கேதான் நடக்கும். உயிரைக் குடிக்கும், குடியை கெடுக்கும் ஒரு பொருளை அரசாங்கமே விற்பது என்று முடிவாயிருச்சு. அந்தப் பொருளையாவது நியாயமா விக்க வேண்டாமா?
சாதாரண உழைப்பாளிகள்தான் அதிகமாக குடிக்கிறார்கள். அவர்கள் உழைக்கும் பணத்தையே இப்படி கொள்ளையடிப்பது நியாயமா?
அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்தே கூடுதல் ரூபாய் கொடுக்காதீர்கள் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், ரூபாய் கொடுக்காவிட்டால் சரக்கு இல்லை என்று பகிரங்கமாகவே விற்பனையாளர்கள் சொல்கிறார்கள்.
பல இதைவைத்தே சண்டை வந்தது... இப்போதும் வருகிறது...
இதையெல்லாம் கடந்த 10 ஆண்டுகளாக விமர்சித்துவந்த திமுக ஆட்சிக்கு வந்தபிறகும் இதெல்லாம் நின்றபாடில்லை. நிறுத்தவும் முயற்சி மேற்கொள்ளவில்லை.
கொடுமை என்னவென்றால், அரசாங்கம் மதுப்பாட்டிலுக்கு 10 முதல் 20 ரூபாய் அதிகரித்து உத்தரவிடுகிறது. அப்படி உத்தரவிட்டதும், அதுவரை தயாரித்து வைத்திருந்த பாட்டில்கள், கடைகளில் இறக்கியிருந்த பாட்டில்கள் எல்லாவற்றின் விலையையும் 20 ரூபாய் ஏற்றினார்கள். அதுமட்டுமின்றி, அதுவரை குவார்ட்டருக்கு 5 ரூபாய் வாங்கிவந்த விற்பனையாளர்கள் அதை 10 ரூபாய் ஆக்கிவிட்டார்கள்.
இதெல்லாம் அதிகாரிகள் சொல்கிறார்களா? கட்சிக்காரர்கள் சொல்கிறார்களா? அமைச்சரே சொல்கிறாரா? முதலமைச்சருக்கே தெரிந்து இதெல்லாம் நடக்கிறதா? ஒன்றும் புரியவில்லை.
ஆனால், மதுவிற்பனையில் சாமானிய மக்களின் பணம் படுபயங்கரமாக கொள்ளையடிக்கப்படுகிறது.
ஒரு அரசாங்கம் மது விற்பனை விலையை அதிகரிக்கிறது என்றால், எந்த தேதியிலிருந்து, எந்தெந்த பிராண்டுகளுக்கு எவ்வளவு விலை உயருகிறது என்று அறிவிக்க வேண்டாமா?
உயரும் என்று அறிவித்தவுடன் அடுத்த நாளே விலை உயருகிறது என்றால், பாட்டில்களில் லேபிள் மாற்றாமலே விற்கலாமா?
விலையை ஏற்றி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இப்போதும் 180 ரூபாய் லேபிள் ஒட்டி 200 ரூபாய் பிளஸ் 5 ரூபாய் லஞ்சம் சேர்த்து 205 ரூபாய் வாங்குகிறார்கள். கேட்டால், கோடிக்கணக்கில் லேபிள் அடித்து வைத்திருப்பார்கள். அதை என்ன செய்வது? என்கிறார்கள்.
சரி, பாட்டிலில் ஒட்டப்பட்டுள்ள விலையை வைத்து வரி வசூலிப்பார்களா? கடைகளுக்கு சரக்கு வாங்குவார்களா? அல்லது, விற்பனை செய்யும் விலைக்கு வாங்குவார்களா? என்பது அரசுக்கே வெளிச்சம்.
மதுக்கடைகளை மூட அரசு முயற்சிக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், கடைகளை மூட வேண்டாம், மது விற்பனையில் நடக்கும் முறைகேடுகளையாவது களைய முயற்சிக்கலாமே என்று நினைக்கிற நிலைமைக்கு குடிமகன்களை புலம்ப வைத்துவிட்டார்கள்.
எவ்வளவு அடித்தாலும் குடிமகன்கள் தாங்குவான்கள்... அடுத்தநாள் அடிவாங்கிய வலியை மறக்க மறுபடியும் மதுக்கடைக்கு வந்தே தீருவார்கள் என்று அரசு நினைக்கலாம்.
2024 மக்களவைத் தேர்தலில் இதெல்லாம் கடுமையாக எதிரொலிக்கும்.
ஊழலை ஒழிக்கப் போவதாக கூறும் ஒரு அரசு, நிஜத்தில் அதில் உறுதியாக இருந்தால், கேரளாவைப் போல பில்லுடன் மது விற்க சொல்லுமா?
அதிமுகவே பரவாயில்லை என்று குடிமகன்கள் பேசுகிறார்கள். அவர்கள் பேசுவது சக குடிமகனுக்கு மட்டுமே கேட்கிறது. அரசுக்கு எதிரான அவர்கள் மனநிலை நல்லதில்லை என்பதால், அரசுக்கு கேட்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் எழுதுகிறோம்.
-ஆதனூர் சோழன்
31-05-2022 அன்று உதயமுகம் வார இதழுக்கு எழுதியது..
Previous Post Next Post

نموذج الاتصال