இரண்டு கொள்ளைக்காரிகள் 3 - ஆதனூர் சோழன்

உலகை உலுக்கிய கடற்கொள்ளைக்காரிகள்

 ஆனியின் முன்கதையும், மேரி ரீடின் முன்கதையும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தது.

ஆனியும் ஜேம்ஸும் பஹாமஸ் வந்த அதேசமயத்தில் தான் மேரி ரீடும் அங்கே வந்து சேர்ந்திருந்தாள். ஆனியைப் போலவே மேரியும் சட்டவிரோதமான உறவில் பிறந்தவள்தான். அவளும் இங்கிலாந்தில் ஒரு ஆண் குழந்தையைப் போலவே வளர்க்கப் பட்டிருந்தாள். மேரியின் தந்தை இறந்ததும், அவளுடைய தாய், கப்பலோட்டி ஒருவருடன் வாழத் தொடங்கினாள். அந்த உறவில் பிறந்தவள்தான் மேரி. அவளுடைய தாயின் முந்தைய திருமணத்தில் ஒரு பையன் இருந்தான். அவன் இறந்துவிட்டான். அதைத்தொடர்ந்து மேரி ஆணைப் போல வளர்ந்தாள். 

எனவேதான், அவளுடைய தாயின் முந்தைய கணவர் குடும்பத்தினரின் பொருளாதார உதவி அவர்களுக்குத் தொடர்ந்தது. 13 வயது ஆகும் வரை மேரி தன்னை பெண் என்றே உணரவில்லை. மேரி வேலை செய்த முதலாளியிடமிருந்து வெளி யேறினாள். தன்னை மார்க் என்றே அழைத்துக் கொண்டாள். 

உயரமாக வளர்ந்தாள். சுருளான முடியுடன் கன்னங்களின் எலும்புகள் லேசாக துருத்தியபடி அழகாக வளர்ந்திருந்தாள். முடியை போனிடைல் போல கட்டியிருந்தாள். அது அவளுக்கு ஆண் தோற்றத்தை கொடுத்தது. பிரிட்டனின் கட்டுப் பாட்டில் இருந்த பெல்ஜியத்தின் வடக்குப் பகுதிக்கு சென்றாள். அங்கு பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தாள். 

ராணுவத்தில் வீரர் ஒருவருடன் காதல் கொண்டாள். இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இருவரும் ஒரு உணவு விடுதியைத் தொடங்கினார்கள். ஆனால், மேரியின் கணவர் இறந்துவிட்டார். மீண்டும் மேரி தன்னை ஆண் உடைக்குள் புதைத்துக் கொண்டாள். மார்க் என்று பெயர் சூட்டிக் கொண்டாள். அவளுக்கு சில வேலை வாய்ப்புகள் வந்தன. ஆனால், அவள் அவற்றை மறுத்துவிட்டாள்.

தொடர்ந்து ஆண் உடையிலேயே, பல கடல் பயணக் குழுக்களுடன் வேலை செய்தாள். ரிவெஞ்ச் கப்பலில் சேர்ந்ததும்தான், அவளுடைய ஆண் வேடம் முடிவுக்கு வந்தது.

ஆம், ஆனியுடன் படுத்திருந்த மேரியை ஆண் என்று நினைத்து அவளுடைய கழுத்தில் ஜாக் கத்தியால் குத்தினான். தனது கேப்டனின் கோபத்திற்கு காரணத்தை புரிந்துகொண்டாள் மேரி.

“ஆனியை அடைவதற்காக இவ்வளவு கேவல மாக நடந்து கொண்டாய். உன்னை சும்மா விட மாட்டேன்” என்று ஆத்திரத்தில் வெடித்தான் ஜாக்.

உடனே, மீண்டும் தனது மேலாடைய திறந்து மார்பகங்களை வெளிப்படுத்தினாள் மேரி. ஜாக் அதிர்ச்சியில் சரிந்து விழுந்தான். தன்னை சரிசெய்த பின் அமைதியாக யோசனை செய்தான். பின்னர்,

“முதலில் சந்தேகப்பட்டது உண்மைதான். ஆனால், இருவரும் பெண்கள்தானே. உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டீர்கள். நட்பு என்பதை தாண்டி உறவு கொண்டீர்கள். இனியும் நீங்கள் வேஷம் போடத் தேவையில்லை. இருவரும் உங்கள் உறவைத் தொடரலாம். ஆனால், இருவரும் எனது மனைவியாக வேண்டும்” என்றான். அதன்பிறகு இருவரும் இயல்பான பெண்களாக, ஜாக்குடன் வாழத் தொடங்கினார்கள்.

ஜாக் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்ட பின்னர் ஆனியும் மேரியும் புதிய எழுச்சியுடன் செயல்பட்டார்கள். அட்லாண்டிக் பெருங்கடலை ஆட்டிப்படைக்கத் தொடங்கினார்கள். கடல் கொள்ளையரின் பொற்காலமாக இவர்களுடைய காலத்தை கூறினார்கள். கடல்கொள்ளையில் பெண்கள் ஈடுபடும் விஷயமே வெளியுலகுக்கு புதுமையாக இருந்தது. அன்றைய சமூகத்தையும், கலாச்சாரத்தையும், சட்டத்தை காலடியில் மிதித்து அவர்கள் கொள்ளையில் ஈடுபட்டார்கள்.

ரிவெஞ்ச் கப்பலை கொள்ளையடித்த பிறகு, மேலும் பல கப்பல்களை அவர்கள் கைப்பற்றினார்கள். தேவைப்படும்போது ஆண் உடை அணிந்தார்கள். அதிலும் தங்கள் பெண்மையை மறைக்காதபடி உடை அணிந்தார்கள். அவர்களிடம் பிடிபட்டிருந்தவர்களில் சிலர் அவர்களைப் பற்றி இப்படி சொன்னார்கள்...

“அந்த பெண்கள் இருவரும் ஒரு கையில் துப்பாக்கியும் இன்னொரு கையில் வாளும் ஏந்தியிருப்பார்கள். சண்டையின் போது இரு வருமே தங்கள் மார்புகளை அனைவரும் பார்க்கும் வகையில் திறந்து விட்டிருப்பார்கள்” 

அவர்களைப் பற்றிய தகவல்கள் கரிபியன் கடல் பிரதேசத்திலும், அமெரிக்க குடியேற்ற நாடுகளிலும், இங்கிலாந்திலும் பரவியது. அவர்கள் பெண் கடல் கொள்ளையர் என்பதால் மட்டுமல்ல, சண்டையின்போது தங்களை பெண்களாக வெளிப் படுத்தியதுதான் வியப்பை ஏற்படுத்தியது.

மற்றவர்களைப் போலவே ஆனியின் கணவன் ஜேம்ஸ் போனிக்கும் இந்தத் தகவல் தெரியவந்தது. அவளால் உடைக்கப்பட்ட கப்பல்கள் அவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவளை பிடித்து வெறிதீர கொல்ல வேண்டும் என திட்டமிட்டான். அவளைக் கொல்வதைக் காட்டிலும் அவளை தன்னிடமிருந்து பிரித்துப் போன ஜாக்கை கொல்ல வேண்டும் என்பதே அவனுடைய நோக்கமாக இருந்தது. 

இன்னொரு பக்கம், ஜேம்ஸ் போனியை கொல்ல வேண்டும் என்று ஆனி திட்டமிட்டிருந்தாள். ஆனால், இன்னொரு புகழ்பெற்ற கொள்ளைக்காரனான சார்லஸ் வானேவை விரட்டி கைது செய்தால், ஆனியைப் பற்றிய தகவல் கிடைக்கும் என்று ஜேம்ஸ் நினைத்தான். அவனை விரட்டிப் பிடிக்க முயன்ற சண்டையில், சார்லஸின் கத்திக்கு ஜேம்ஸ் பலியானான்.

இதைக் கேள்விப்பட்டதும், ஆனி வருந்தினாள். தனது கத்தியால் ஜேம்ஸ் சாகவேண்டும் என்ற அவளுடைய நினைப்பு நிறைவேறவில்லையே என்ற வருத்தம்...


Previous Post Next Post

نموذج الاتصال