பழைய நினைப்புடா பேரான்டி 3 - ஆதனூர் சோழன்

 சாமி இல்லாட்டி போகுது...  

 தலக்கட்டு வரியக் குடு!

ஊர்ச்சாமி கும்பிட்டு 15 வருஷம் ஆச்சு. கடைசியா 2007ஆம் ஆண்டு முத்தாளம்மன் கோவில், அய்யனார் கோவில் எல்லாத்தையும் புதுப்பித்து, பெயிண்ட் அடிச்சு கும்பாபிசேகம் செய்து சாமி கும்பிட்டாங்க. ஊர்ச்சாமியை வருஷா வருஷம் கும்பிடுவாங்க. அதெல்லாம் இல்லாமப் போச்சு.

அதுக்குக் காரணம் என்னன்னா மொதல்ல ஒரு வருஷம் மழை பெய்யலைனா சாமி கும்புடனும்னு சொல்லுவாங்க. மழை பெஞ்சு நல்லா வெளைஞ்சாலும் சாமி கும்புடனும்னு சொல்லுவாங்க. அப்போவெல்லாம் நிலத்தடி கிணத்து நீரையும், ஏரி குளங்களில் தேங்கும் நீரையும் மட்டுமே நம்பியிருந்த காலம்.

ஆனா இப்போ அப்படியில்லை. ஆயிரம் அடி வரைக்கும் பூமியை குடைந்து தண்ணீரை உறிஞ்சும் தொழில்நுட்பம் வந்துருச்சு. அதனால மழைக்காக சாமியை கும்பிடனும்னு அவசியம் இல்லாம போச்சு. அது ஒருபக்கம் இருக்கட்டும்.

எப்படிப் பார்த்தாலும் நிலத்தடி நீர் செழிப்பா இருக்கவாச்சும் மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி னால்தான் உண்டு. ஆனால், சாமி கும்பிட்டாத்தான் மழைபெய்யும்ன்ற நம்பிக்கையெல்லாம் இந்தத் தலைமுறைக்கு இல்லாம போச்சு.

மேலடுக்குச் சுழற்சி, வெப்பச் சலனம், தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவமழை என்று வானிலை ஆய்வு அறிக்கைகள் எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுகிறது. நாளை எவ்வளவு மழை பெய்யும் என்பதை வீட்டுக்குள்ளேயே அறிவித்துவிடுகிறது தொலைக்காட்சி.

எனவேதான், மழைக்காக சாமியை நம்பும் போக்கு குறைந்துவிட்டது. அதேசமயம், மழையே தேவைப்படாத பகுதிகள் வெள்ளக்காடாக மாறுவதும், மழை தேவைப்படும் பகுதிகளில் குறைவான மழைப் பொழிவும் தொடர் கதையாகிவிட்டது.

இந்த ஆண்டு தமிழகத்தின் பல பகுதிக ளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரியாறு அணைகூட வற்றாமல் இரு போகத்துக்கு திறந்துவிடப்பட்டது. ஆனால், அலங்காநல்லூரின் வடக்கு பகுதியில் குளங்கள்கூட நிரம்பவில்லை. இந்த பகுதியில் விவசாயத்துக்கு பயன்படும் வகையில் சாத்தியாறு அணை கட்டப்பட்டது. சுமார் 13 ஊர்க் கண் மாய்களுக்கு இந்த அணையின் தண்ணீர் கிடைக்கும். 

ஆனால், அந்த அணை பெருகுவதே பெரும்பாடாகி விட்டது. அதற்கு காரணம் அணை தூர்வாரப்படாமல் கிடப்பது ஒரு காரணம். அணையின் உள்பகுதியை அரசியல்வாதிகள் துணையுடன் ஆக்கிரமித்து விவசாயமே செய்யும் நிலைக்கு போய்விட்டார்கள். 

அவர்களுடைய விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அணையில் தண்ணீரை தேங்கவிடாமல் திறந்துவிடச் செய்கிறார்கள்.

அணையைத் தூர்வாரி, தண்ணீரை முறையாக தேக்கினால் இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் நிறைந்து, நிலத்தடி நீர் பெருக வாய்ப்பு இருக்கிறது. அணை பெருகாத பட்சத்தில் பெரியாறு கால்வாயை சாத்தியாறு அணையுடன் இணைக்கவும், பெரியாறு கால்வாயில் நீர் எஞ்சிய காலத்தில் அணையை நிரப்பி கண்மாய்களுக்கு வினியோகிக்கவும் ஒரு திட்டம் இருக்கிறது.

பெரியாறு அணையில் 152 அடி தேக்கும் உரிமை கிடைத்துள்ள நிலையில், சாத்தியாறு அணைக்கு உபரி நீரை பம்ப் செய்து கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியம் என்று பொறியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், அணையை மேடாக்கி, நிலத்தை ஆக்கிரமித்திருப்பவர்கள் இதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

காவிரி தண்ணீரை தமிழகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டு போகமுடிகிற இன்றைய காலகட்டத்தில், சுமார் 7 கிலோமீட்டர் தூரத்துக்கு பைப் பதித்து பெரியாறு கால்வாய் தண்ணீரை சாத்தியாறு அணைக்கு கொண்டுவருவது சாத்தியம் தான்.

இந்த திட்டத்தை முதன்முதலில் எங்கள் பகுதியில் பரப்பியது நான்தான் என்பதில் எனக்கு ஒரு பெருமை இருக்கிறது. 1984ல் எங்கள் பகுதியின் வறட்சிக் காலத்தில் சாத்தியாறு அணை பொறியாளர்களிடம் விசாரித்து இந்த விவரத்தை கணையாழி பத்திரிகையில் முதன்முதலில் எழுதினேன். திமுக சார்பில் எங்கள் ஊரில் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்தேன். த.அலெக்ஸாண்டரை அழைத்து பேச வைத்தேன். அதைத்தொடர்ந்து, சோழவந்தான் தொகுதி வேட்பாளர்களிடம் சாத்தியாறு அணையை பெரியாறு கால்வாயுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்கள்.



அதன்பிறகு எங்கள் பகுதி எவ்வளவோ வளர்ந்து விட்டது. இருக்கிற மலைகள், கரடுகளை கரைத்து, கிராவல் மற்றும் எம் சாண்ட் லோடுகள் ஏற்றிச் செல்ல சாலைகளை மேம்படுத்தினார்கள். கண்மாய்களில் மண் எடுத்து விற்க பாதைகளை அமைத்தார்கள். ஆனால், சாத்தியாறு அணையை இணைக்க முடியாது என்று கைவிட்டார்கள். பெரியாறு கால்வாயைக் காட்டிலும் சாத்தியாறு அணை உயரமான பகுதியில் இருப்பதாக காரணம் கூறினார்கள். 

இதோ, கடந்த 10 ஆண்டுகளில் நினைவுக்கு வராத இந்தத் திட்டம் இப்போது மறுபடியும் நினைவுக்கு வந்திருக்கிறது. எங்கள் பகுதியின் கண்ணீர் மாறாதா? என்று பேனர் வைத்திருக்கிறார்கள்.

அந்த பேனர் வச்சு இப்போ பலநாள் ஆச்சு. எதுக்காக வச்சாங்க யார் கவனத்தை கவருவதற்கு வச்சாங்க என்பது தெரியவில்லை. ஆனால், இதோ, முத்தாளம்மன் கோவிலையும், அய்யனார் கோவிலையும் புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்ய முடிவு பண்ணிருக்காங்க.

மொத்தமா 34 லட்சம் ரூபாய் செலவுன்னு சொல்றாங்க. அய்யனார் குதிரை, சிலையெல்லாம் சிமெண்ட்டில் செய்வார்கள். அதனால், உடைந்து போகிறது. இனி அதை கல்லில் செய்துவிடலாம் என்று பேசியிருக்கிறார்களாம். என்னமோ செஞ்சிட்டுப் போகட்டும். இதெல்லாம் எதுக்கு வெட்டிச் செலவுனு சொல்லமுடியுமா? முடியவே முடியாது. நம்மள பைத்தியக்காரனா ஆக்கிருவானுக.

முதன்முதலில் பெரியாறு கால்வாயை சாத்தியாறு அணையுடன் இணைக்கலாம் என்று சொன்னபோதே...

“அவன் கிடக்கான் லூசுப்பயÓ என்று சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது.

அப்படி இருக்கும்போது, கோவில் பூசாரி வீட்டுல பொறந்துட்டு, கோவில் கும்பாபிஷேகத்தை எதிர்த்து  பேசினா விட்ருவாங்களா?

அந்த பூசாரி உரிமை எப்படி எங்களுக்கு வந்துச்சு என்று பார்த்தால் அது ஒரு தனிக்கதை. ஆம், என்னோட பங்காளிகள்தான் ஊர் நாட்டாமை வகையறா. என்னோட தாத்தா தனியா வளர்ந்தவரு. முயற்சி எடுத்து படித்து, வாத்தியார் வேலைக்கு போனவரு. ஆனால், ஊர் விவகாரங்களில் அவருக்கு மரியாதை இல்லை. ஊர் கோவில் பூசாரியாக இருந்தவர், ஊரைவிட்டு போக விரும்பினார். இதையறிந்த தாத்தா, கோவில் பூசாரி உரிமையையும், கோவில் மானியமான 60 சென்ட் நிலத்தையும் பணம் கொடுத்து மாற்றிக்கொண்டார்.

அப்போதிருந்து, ஊர் நாட்டாமையாக இருந்தாலும் எனது தாத்தா கொடுக்கும் விபூதிக்காக வரிசையில் நிற்கும் நிலை வந்தது. இதுல அவருக்கு ஒரு திருப்தி. அந்தப் பூசாரி வேலையை அவர் செய்து நான் பார்த்ததே இல்லை. எனக்குத் தெரிந்து என் அப்பாதான் பூசாரித்தனம் செய்திருக்கிறார்.

இந்தக் கோவிலுக்கும் எனக்குமான தொடர்பு களை தனியாகத்தான் சொல்லனும். மரியாதைக் காக பூசாரித்தனத்தை விலைக்கு வாங்கிய தாத்தாவை நினைத்தால் இப்போவும் வியப்பாகத்தான் இருக்கும். பொதுவாக எனது தாத்தாவே எனக்கு ஆச்சரியம்தான்.

இப்போ எனது கவலை என்னவென்றால், கும்பாபிஷேகத்திற்கு தலக்கட்டு வரி 4 ஆயிரம் கொடுக்கனும். எனக்கு பிடிக் கலைனு தலக்கட்டு வரி தரமுடியாதுனு சொன்னா என்னாகும்? உன்னை எங்களுக்கு பிடிக்கலைனு பங்காளிகள் ஒதுக்கிருவாங்க. 

Previous Post Next Post

نموذج الاتصال