உலகை உலுக்கிய கடற்கொள்ளைக்காரிகள்
மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள சிறையில் சில வாரங்கள் ஆனி, மேரி, ராக்ஹாம் உள்ளிட்ட கடல் கொள்ளையர் அடைக்கப்பட்டிருந்தனர்.
அது வெப்பமான பகுதியாக இருந்தாலும், சிறைக்குள் குளிர்ச்சியாகவும் ஈரமாகவும் இருந்தது. ராக்ஹாம் மற்றும் அவருடைய குழுவைச் சேர்ந்த ஆண் உறுப்பினர்கள் வேகமாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் அவர்களுக்கு மரணதண்டனை என்று நவம்பர் மாதம் முடிவாயிற்று.
நவம்பர் 18 ஆம்தேதி காலையில் சிறையில் தூங்கிக்கொண்டிருந்த ஆனியையும் மேரியையும் சிறைக்காவலர்கள் வலுக்கட்டாயமாக எழுப்பினர். அவர்களுடைய விசாரணை சமீபத்தில் இல்லை. எதற்காக எழுப்புகிறார்கள் என்பதை அவர்கள் ஊகிக்கமுடியவில்லை.
இருவரில் ஆனியை மட்டும் காவலாளி வெளியே இழுத்தார். மேரியை சிறைக்குள்ளேயே விட்டுச் சென்றார். ஆனியை சிறையின் வேறு ஒரு பகுதிக்கு அழைத்துப் போனார். ராக்ஹாமின் சிறை அறை முன் அவளை நிறுத்தினார்கள்.
“நான் சாகும் நாள் வந்துருச்சு ஆனி. எனக்கு சில ஆறுதல் வார்த்தைகளை சொல் ஆனி” என்று கெஞ்சினான். அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அவன் பரிதாபமாக காட்சியளித்தான். அவனைப் பார்க்கவே ஆனிக்கு பிடிக்கவில்லை.
அவனும், அவனுடைய கூட்டாளிகளும் அடுத்த சில மணி நேரத்தில் ஜமைக்காவின் துறை முக நகரமும், கடல் கொள்ளையரின் புகலிடமுமான போர்ட் ராயலில் தூக்கில் தொங்கவிடப்படுவார்கள்.
இதையறிந்தும் ஆனியின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்தாள். கடல் கொள்ளையருக்கான தகுதியை அவர் இழந்துவிட்டதாக கருதினாள்.
“உங்களை இப்படிப் பார்க்க வருந்துகிறேன். ஆனால், நீங்கள் ஒரு மனிதனைப் போல சண்டையிட்டிருந்தால், இப்படி ஒரு நாயைப்போல தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டியதில்லை” என்றாள்.
உடனே அவள் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டாள். அத்துடன் அவள் தனது முன்னாள் கணவனும் கேப்டனுமான ராக்ஹாமைப் பற்றி சிந்திக்கவில்லை. தனது அறைக்கு வந்ததும், அவளுடைய எதிர்காலம் குறித்து யோசிக்க தொடங்கினாள்.
ஆனியும் மேரியும் சாதாரண பெண்களைக் காட்டிலும் துணிச்சல் மிக்கவர்கள். அவர்களுக்கு எதிரான விசாரணை தொடங்கியது. அவர்களால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த வணிகக் கப்பல் கேப்டன்களான தாமஸ் ஸ்பென்லோ, தாமஸ் டில்லன், டோரதி தாமஸ் ஆகியோர் சாட்சிகளாக நின்றனர்.
“இவர்கள் இருவரும் ஒரு கையில் கத்தியும், மறுகையில் துப்பாக்கியும் வைத்துக்கொண்டு எதிர்படுவோரை கொன்றனர். என்னையும் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள்” ஸ்பென்லோ சொன்னார்.
“ஆனியும் மேரியும் கைகளில் துப்பாக்கியுடன் அநாகரிகமான கொலைகாரிகளா இருந்தார்கள். கொள்ளையடிப்பதற்காக எதையும் செய்யத் தயாரானவர்களாக இருந்தார்கள்” என்று டில்லன் சொன்னார்.
இந்தச் சாட்சியங்கள் இருவருடைய குற்றங்களையும் உறுதிப்படுத்தின.
“உங்களுக்கு எதிரான இந்தச் சாட்சிகளை மறுக்கிறீர்களா? ஏதேனும் வழக்காட விரும்புகிறீர்களா?” என்று நீதிபதி கேட்டார்.
“எங்களிடம் எதிர் சாட்சிகள் இல்லை. வாதாடவும் விரும்பவில்லை” என்று இருவரும் சொன்னார்கள். இதையடுத்து அவர்களுடைய குற்றம் உறுதி செய்யப்பட்டது. இருவரும் தூக்கிலிடப்படுவார்கள் என்று நீதிபதி அறிவித்தார்.
ஆனால், திடீரென,
“நாங்கள் இருவரும் வயிற்றில் குழந்தைகளுடன் இருக்கிறோம்” என்றார்கள். இது நீதிமன்றத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இருவரும் குழந்தை பெற்றவுடன் தூக்கிலிடப்படுவார்கள் என்று தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி.
பெண்களுக்கு தூக்குத்தண்டனை விதிப்பது ஏற்கெனவே சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் கர்ப்பமாக இருப்பது அறிந்ததும் தண்டனை தள்ளி வைக்கப்பட்டது.
ஆனால், 1721 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேரி சிறையிலேயே காய்ச்சல் வந்து இறந்தாள். அவளுக்கு குழந்தை பிறந்ததா என்று பதிவு ஏதுமில்லை. ஜமைக்காவில் உள்ள செயின்ட் கேத்தரின் பாரிஷில் அடக்கம் செய்யப்பட்டாள் என்று சிலர் கூறுகிறார்கள். இது உறுதியான தகவல் இல்லை என்றும் சொல்கிறார்கள்.
அதேசமயம் சமயம் ஆனியைப்பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவளைப்பற்றி பல தலைமுறைகளாக வதந்திதான் பரப்பப்படுகிறது.
அவளுடைய தந்தை அவளை சிறையிலிருந்து மீட்டு தனது ஊருக்கு அழைத்துச் சென்றதாக கூறுகிறார்கள். அங்கு அவள் ராக்ஹாமின் குழந்தையை பெற்றாள். 1721 ஆம் ஆண்டு ஜோசப் பர்லீ என்ற நபரை ஆனி திருமணம் செய்தாள் என்றும் இருவருக்கும் 8 குழந்தைகள் பிறந்தன என்றும் கூறுகிறார்கள். 1782 ஆம் ஆண்டு இறந்தாள் என்றும் சொல்கிறார்கள்.
(முற்றும்)