80 ஆயிரம் கடற்கொள்ளையரை கட்டியாண்ட பெண் கொள்ளைக்காரி - ஆதனூர் சோழன்


ஒரு பெண், 80 ஆயிரம் கடற்கொள் ளையர்களுக்கு தலைமை ஏற்றிருக்கிறாள் என்றால் நம்ப முடிகிறதா?

அவள் பெயர் சிங் ஷிஹ். 1800ஆம் ஆண்டு தொடக்கத்தில் இது நடந்திருக்கிறது. தெற்கு சீனாவில் உள்ள கேண்டன் நகரில் வாழ்ந்த பாலியல் தொழிலாளி சிங் ஷிஹ். குய்ங் முடியாட்சி காலத்தில் தென் சீன கடலை மிரட்டிய கடல் கொள்ளையன் முதலாம் செங் என்பவனை இவள் திருமணம் செய்துகொண்டாள்.

அவன் இறந்ததும் அவனுக்கு கீழ் இருந்த 1800 கப்பல்களையும், அவற்றில் இருந்த 80 ஆயிரம் கடல் கொள்ளையரையும் சிங் ஷிஹ் வழிநடத்தினாள். சிங் ஷிஹ் என்றால் சீனமொழியில் செங்கின் விதவை என்கிறார்கள்.

1800களில் 4 கப்பல்களில் 300 கடல் கொள்ளை யர்களுக்கு பிளாக்பியர்ட் என்ற கொள்ளையன் தலைமை ஏற்றிருந்தான். அதுதான் அதுவரையான வரலாற்றில் பெரிய விஷயமாக இருந்தது.

முதலாம் செங், கடற்கொள்ளையர்களின் கப்பல் பிரிவுகளில், செங்கொடி கப்பல் பிரிவின் அசைக்கமுடியாத தளபதியாக இருந்தான். கடல் கொள்ளையர்களை ஒன்று திரட்டுவதில் அவன் வெற்றிபெற்றான். எதிரிகளாக இருந்தாலும் அவர்களை சமாதானப்படுத்தி ஒன்றிணைத்தான். 1801 ஆம் ஆண்டு அவன் சிங் ஷிஹ்ஹை திருமணம் செய்தான். அன்று முதல் அவள் தனது கணவனின் கொள்ளைகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள்.

சிங் ஷிஹ் ரொம்பவும் புத்திசாலி. அவளுக்கு பாலியல் தொழில்ரீதியாக நிறைய பணக்காரர்களும், அரசியல் தொடர்புடையவர்களும் பழக்கத்தில் இருந்தார்கள். அவளுடைய இந்தச் செல்வாக்கை பயன்படுத்தவே முதலாம் செங் அவளை திருமணம் செய்துகொண்டான் என்கிறார்கள்.

திருமணத்திற்கு முன், கடல்கொள்ளையர்களின் கப்பல்படையில் தனக்கு சரி பங்கு கட்டுப்பாடு வேண்டும் என்று சிங் ஷிஹ் நிபந்தனை விதித்தாள் என்று சொல்கிறார்கள். காலப்போக்கில் தனது கணவருக்குப் பின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவள் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தாள் என்று வரலாற்று ஆசிரியர் முர்ரே கூறுகிறார்.

சிங் ஷிஹ்ஹிஹ்கு பின்னர், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கடல்கொள்ளையர்களுக்கு ஹோன் சோ லோ என்ற பெண்தான் தளபதியாக இருந்ததாக முர்ரே கூறியிருக்கிறார். 

திருமணமாகி ஆறு வருடங்கள்தான் முதலாம் செங், சிங் ஷிஹ் உடன் வாழ்ந்தான். அவர் தனது  42 வயதில் இறந்தார். ஆனால், அவர் எப்படி இறந்தான் என்பது பற்றி அதிகம் தெரியவில்லை. திடீர் சுனாமி அலையால் அவன் கொல்லப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள். வியட்நாமில் அவன்  கொல்லப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள்..

முதலாம் செங், தனது திருமணத்திற்கு முன் ஒரு மீனவரின் மகனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்திருந்தான். முறைப்படி அவன்தான் கப்பல்படையின் முழுமையான வாரிசாக இருந்திருக்க வேண்டும். 

முதலாம் செங்  இறந்த சில வாரங்களுக்குள், சிங் ஷிஹ் தனது கணவனின் வளர்ப்பு மகனையே காதலனாக்கிக் கொண்டாள். இறுதியில் சியுங் போ என்ற பெயருடைய அவனை திருமணமும் செய்துகொண்டாள். அதன்மூலம்தான் முழு கடற்படைக்கும் தன்னை தலைவராக்கிக் கொள்ள முடிந்தது. ஒருவழியாக செங்கொடி கடற்படையின் தலைமையை கைப்பற்றினாள்.

உலகின் மிகப்பெரிய கடற்கொள்ளையர்களுக்கான கப்பற்படையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண்ணாக தன்னை உருவாக்கிக் கொண்டாள். “கடற்கொள்ளையர் கப்பல்களில் பெரும்பாலும் சில பெண்களே இருந்தனர், ஆனால் அவர்கள் எந்த அளவிற்கு கடற்கொள்ளையில் பயிற்சி பெற்றார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை” என்று முர்ரே கூறுகிறார். 

மேற்கத்திய நாடுகளைப் போல இல்லாமல், தென் சீனாவில் பெண்கள் கப்பலில் செல்வதோ, கப்பலில் இருப்பதோ ஆபத்து என்றோ துரதிர்ஷ்டம் என்றோ சொல்லப்படுவதில்லை. இருந்தாலும், ஒரு கடற்கொள்ளையனின் விதவை மனைவி, இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான கொள்ளையர்களுக்கு தலைமை ஏற்பதை யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது.

பிரிட்டனின் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழியரான ரிச்சர்ட் கிளாஸ்பூல் சிங் ஷியின் கடற் கொள்ளையர்களால் 1809 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறைபிடிக்கப்பட்டு, அந்த ஆண்டு டிசம்பர் வரை காவலில் வைக்கப்பட்டார். அவருடைய கணக்குப் படியே, சிங் ஷியின் தலைமையில் 80 ஆயிரம் கடற்கொள்ளையர்கள் இருந்ததாகவும், சுமார் 1,000 பெரிய கப்பல்களும் 800 சிறிய கப்பல்கள் மற்றும் படகுகள் இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

சிங் ஷி தனது கொள்ளையர்களை ஒருங்கிணைக்க ஒரு சட்டக் குறியீட்டைப் பயன்படுத்தினாள். அந்தக் குறியீடு மிகவும் கண்டிப்பானது. எந்தவொரு கடற்கொள்ளையனும் தனது உத்தரவுகளையோ, ஒரு கப்பல் கேப்டனின் கட்டளையை மீறினாலோ அந்த இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டது. பிணையாக பிடிக்கப்படும் பெண் கைதியை, கடற்கொள்ளையர் ஒருவர் கற்பழித்தால், உடனே அவன் கொல்லப்படுவான். அதேசமயம் கைதியின் சம்மதத்துடன் உடலுறவு இருந்தால், இருவருமே கொல்லப்படுவார்கள்.

சிறைப்பிடிக்கப்படும் பெண் கைதியை கடல் கொள்ளையன் திருமணம் செய்ய முடிவெடுத்தால், அவன் அவளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்றும் சிங் ஷி சட்டம் வகுத்திருந்தாள். அவளைப் பற்றி கடல்கொள்ளையர்கள் எவ்வளவு தவறாக கணித்திருந்தாலும், அறிந்திருந்தாலும், அவளுடைய கட்டளைக்கு அடிபணிந்தார்கள் என்கிறார் முர்ரே.

சிங் ஷி தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரை அவளுடைய செங்கொடி கடற்பிரிவை யாரும் தோற்கடிக்க முடியவில்லை. குய்ங் வம்ச அதிகாரிகளும், போர்ச்சுகீசிய கடற்படையும், கிழக்கிந்திய கம்பெனியின் கடற்படையும் அவளுடைய கடற்படையை முறியடிக்க முயற்சி செய் தார்கள். ஆனால், மூன்று ஆண்டுகள் தென் சீனக் கடலில் சிங் ஷியின் கடற்படை ஆதிக்கம் செலுத்தியது. கடைசியாக, சீன அரசாங்கம் அவளுக்கு பொதுமன்னிப்பு வாய்ப்பு வழங்கியது. அதை ஏற்ற அவள், 1810 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றாள்.

அவள் இவ்வளவு விரைவாக சரணடைந்து ஓய்வு பெற்றதற்கு ஒரு மோதல்தான் காரணம் என்று கூறுகிறார்கள். அதாவது, சிங் ஷியின் சிவப்பு கடற் கொள்ளைப் படைக்கும், மற்றொரு கருப்பு கடற் கொள்ளைப் படைக்கும் பெரிய மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் ஏற்பட்ட இழப்பைத் தொடர்ந்து கருப்பு கடற்கொள்ளையர் அரசாங்கத்திடம் சரணடைந்தனர். இதையடுத்து சிங் ஷியின் கடற்படைக்குள் ஒற்றுமை குலையத் தொடங்கியது. எனவே, அவள் சரணடைய முடிவெடுத்தாள் என்கிறார்கள்.

சிங் ஷி 1844ல் தனது 69வது வயதில் இறந்தாள். தனது கடைசி நாட்களை அமைதியாகவும், பெயர் தெரியாத நபராகவும் வாழ்ந்து கழித்தார் என்கிறார் முர்ரே.

முற்றும்.
Previous Post Next Post

نموذج الاتصال