ஸ்டீபன் ஹாக்கிங் - ஆதனூர் சோழன்


இன்றைய காலகட்டத்தின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் ஸ்டீபன் ஹாக்கிங். முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டவர். ஆனால், அறிவியல் உலகத்துக்கு தொடர்ந்து தனது பங்களிப்பைச் செலுத்துகிறார். “காலத்தைப் பற்றிய சுருக்கமான வரலாறு” உள்ளிட்ட தனது புத்தகங்கள் மூலம் அறிவியல் கருத்துக்களை சாதாரண பொதுமக்களுக்கும் வெளிப்படுத்துகிறார். அவரைப் பற்றிய முக்கியமான தகவல்ள்...

* ஸ்டீபன் ஹாக்கிங் பிரிட்டனைச் சேர்ந்தவர். 1942 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி பிறந்தார். இவரை கோட்பாட்டு இயற்பியலாளராக கருதவேண்டும். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்த இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராக உள்ளார்.

* அண்டவியல் (cosmology), குவாண்டம் ஈர்ப்பு (quantum gravity)  துறைகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கிறார். கருந்துளைகளுக்கும் (black holes),   வெப்ப இயக்கவியலுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய இவருடைய கட்டுரைகளில் இவரது முக்கியமான பங்களிப்புகள் அடங்கியுள்ளன. 

கருந்துளைகளில் இருந்து ஒளி உட்பட எதுவுமே வெளியேற முடியாது என்று நம்பப்பட்டது. அதற்கு மாறாக, கருந்துளைகளில் இருந்து துணுக்குகள் (Particles)  வெளியேறுகின்றன என்றும் அதன்மூலம் காலப்போக்கில் கருந்துளைகள் காணாமல் போகின்றன என்றும் இவருடைய ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தின.  இப்படி வெளியேறும் துணுக்குக் கற்றைகளுக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இவரது ‘A Brief History of Time’  என்ற புத்தகம் அதிக அளவில் விற்பனையானது. அந்தப் புத்தகத்தின் விற்பனையைத் தொடர்ந்து மக்களுக்கு தனது ஆய்வுகளை வெளிப்படுத்தும் வகையில், ‘The Universe in a Nutshell’, மற்றும் குழந்தைகளுக்கான அறிவியல் புத்தகமான  ‘George’s Secret Key to the Universe’ ஆகியவற்றை வெளியிட்டார். 

 * ஹாக்கிங் அம்யோடிரோபிக் லேட்டரல் ஸ்லிரோசிஸ் (amyotrophic lateral sclerosis) என்ற நரம்பு நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய், தசையை இயக்கும் நரம்பு அணுக்களை படிப்படியாக சிதைத்துவிடும். இதையடுத்து, நமது விருப்பப்படி இயக்க முடிகிற தசைகள்கூட இயக்க முடியாத அளவுக்கு பழுதடைந்து விடுகின்றன. எனவே, அவரால் அசையக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், சிந்திக்கும் ஆற்றல் மற்றும் குறையவே இல்லை.

* ஸ்டீபன் ஹாக்கிங், 1979 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பதக்கத்தைப் பெற்றார். 1982 ஆம் ஆண்டு பிரிட்டன் அரசின் கவுரவ விருதும், 1988 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான வோல்ஃப் பரிசும் கிடைத்தது.

* ஸ்டீபன் ஹாக்கிங்கின் முக்கியமான கருத்துக்களில் சில... 

“பிரபஞ்சத்தின் எல்லை குறித்து ஏதாவது சிறப்பு இருக்க வேண்டும். பிரபஞ்சத்துக்கு எல்லையே இல்லை என்பதைக் காட்டிலும் வேறு சிறப்பு இருக்கிறதா?”

* “ஏற்கனவே வகுக்கப்பட்ட வரையறைகளின்படி வேலை செய்தால், சரியான கோட்பாட்டை வகுக்க முடியும் என்பதை நான் நம்புவதில்லை. நமக்கு புதிதாக வேண்டும். அது என்னவாக இருக்கும்? அதை எப்போது கண்டுபிடிப்போம் என்பதை நம்மால் கணிக்க முடியாது. அது நமக்கு தெரிந்திருந்தால், ஏற்கனவே நாம் அதைக் கண்டுபிடித்திருப்போம்.”

* “பல கோடி ஆண்டுகளாக மனித இனம் விலங்குகளைப் போலவே வாழ்ந்தது. பிறகு ஏதோ ஒன்று நடந்தது. அது மனித இனத்தின் கற்பனைகளை விரித்தது. சிந்திக்கும் திறனைப் பெற்றது. பேசவும், கேட்கவும் கற்றுக் கொண்டது.”

* “எனது குறைபாடுகளைக் கண்டு கோபப்படுவது நேரத்தை வீணடிக்கும் செயல்.  தனது வாழ்க்கையில் தவறாக எதையும் செய்யவில்லை என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் எப்போதும் கோபமாகவோ அல்லது குறைகூறிக் கொண்டோ இருந்தால், உங்களுக்கு நேரமே இருக்காது.”

* “நாம் விண்வெளியில் பரவாவிட்டால், அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மனித இனம் வாழ்ந்துகொண்டிருக்காது என்று கருதுகிறேன். ஒரு கிரகத்தை அழிக்க பல்வேறு விபத்துக்கள் ஏற்படலாம். எனினும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நாம் நட்சத்திரங்களை சென்று அடைவோம்.”


Previous Post Next Post

نموذج الاتصال