இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு - ராதா மனோகர்


நல்லூர் கோயில் வழக்கு!

தமிழர்களின் வாழ்வியலில் வரலாற்றை சரியாக பதிவு செய்யவேண்டும் என்ற கருத்து இன்னும் சரியாக உணரப்பட வில்லையோ என்ற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு.

இதற்கு பல காரணங்களை கூறலாம். குறிப்பாக ஆடிப்பெருக்கு நீரோட்டத்தில்  அருந்தமிழ் ஏடுகளை எல்லாம் ஆற்றோடு ஓடவிட்ட கதை உண்டல்லவா?

போகி பண்டிகை என்ற கொண்டாட்டத்தின் போதும் பழைய ஏடுகளையும் பெறுமதியான பொருட்களையும் தீயில் போட்டு எரிப்பது உண்டல்லவா?

இவை மட்டுமல்லாமல் பழையன கழிதல் என்று, பாரம்பரிய விழுமியங்களை எல்லாம் மறந்து கடந்து போதல் ஒரு நல்ல பழக்கம்தான் என்று பொது சமூகத்தின் மனோநிலையில் பதியவைத்தது உண்டல்லவா?

இவை எல்லாமே ஆரிய வரவின் பக்க விளைவுகள்தான். நமது வரலாற்று அடையாளங்களையும் செய்திகளையும் விழுமியங்களையும் பதிவு செய்தல் மிக மிக முக்கியமான சமூகப்பணியாகும். 

நான் ஒரு வரலாற்று மாணவன் அறியாத விடயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு அதிகமுண்டு. அதன் காரணமான தேடலில் தற்செயலாக நல்லூர் கந்தசாமி கோயில் பற்றிய ஒரு சுவாரசியமான செய்தி கிடைத்தது.

அதுதான் நல்லூர் கோயில் உரிமை தொடர்பாக 1928 ஆம் ஆண்டு நடந்த அந்த வழக்கு.

இந்த வழக்கு வரலாறானது பலவகையிலும் மிக மிக முக்கியத்துவம்  வாய்ந்த வரலாற்று ஆதாரமாகும். அன்றைய காலக்கட்டங்களில் யாழ்ப்பாண வாழ்வியல் சமூக கட்டமைப்பு,  வியாபாரம். தொழில், கலாச்சாரம் பற்றிய பல செய்திகள் இந்த வழக்கு விசாரணைகளில் மிகவும் ஆதாரங்களோடு பதியப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து படகுகள் மூலம் இலங்கை வடபகுதிக்கு மக்கள் வருவதும் போவதும் மட்டுமல்லாமல் பண்டங்களின் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரமும் செழித்தோங்கிய சிறப்பான வரலாற்று ஆதாரங்கள் எல்லாம் நீதிமன்ற பதிவாகவே காணக்கூடியதாக உள்ளது.

இன்னொரு கோணத்தில் இந்த வழக்கிற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் இருக்கிறது.

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் உள்ள கோயில்கள் பலவற்றிலும் ஏராளமான வழக்குகள், உரிமைகள் சார்ந்தும் நடைமுறைகள் சார்ந்தும் நடந்தன. இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டு கோயில்களின் சட்ட சிக்கல்கள் இலங்கை கோயில்களுக்கு இருக்கும் சட்ட சிக்கல்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது

நல்லூர் கோயில் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் பிரிட்டிஷ் நீதிபதிகள் தொடர்புடையதாகும். இந்து நீதிபதிகளின் பல தீர்ப்புகள் இந்து மனு நீதி அடிப்படையில் அமைத்திருப்பதாக பல விமர்சனங்கள் பல காலக்கட்டங்களிலும் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டன.

சிதம்பரம் கோயில் மட்டுமல்ல அயோத்தி மதுரா போன்ற பல கோயில் வழக்குகளும் கூட பல விமர்சனங்களை சந்தித்தவைதான். 

ஒரு கோயில் வழக்கை அந்த கோயிலுக்கும் மதத்திற்கும் எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத ஒரு நீதிபதி,. அதுவும் நீதியும் சட்டமும் மிகவும் சிறப்பாக இயங்கி கொண்டிருந்த அந்த காலத்து நீதிமன்ற விசாரணை எப்படி நடந்திருக்கும்?

எந்தெந்த கோணத்தில்  வழக்கை எதிர்கொண்டிருப்பார்கள்?  என்பது போன்ற விடயங்கள் வழக்கறிஞர் சமூகத்திற்கு மிக பெரிய ஒரு ஊசாத்துணையாகவும் இந்த வழக்கு விபரங்களை இருக்கும். இது போன்ற பல காரணங்களால் இவ்வழக்கு விபரங்களை நூலுருவில் கொண்டுவரவேண்டும் என கருதினோம்.

இந்நூலை சிபி பதிப்பகம் மூலம் சிறப்பாக வெளியிட்டிருக்கும் அன்பர் திரு ஆதனூர் சோழன் அவர்கள் இதன் மூலம் வரலாற்றுக்கு மிக சிறந்த ஒரு பங்களிப்பை வழங்கி உள்ளார்

வெறுமனே இலாப நோக்கத்தை தாண்டி ஒரு சமூக சேவை நோக்கத்தில் இந்நூலை அவர் வெளிகொண்டு வந்திருக்கிறார்.

தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் திரு ஆதனூர் சோழன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

-நல்லூரான்


Previous Post Next Post

نموذج الاتصال