இது ஒரு நைட் செட்டில்மெண்ட் அல்ல ஒரு தலைமுறைக்கான செட்டில்மெண்ட் - கோவி.லெனின்


அவர் கைக்குழந்தையாக இருந்தபோது அவரது குடும்பம் படகில் பயணித்து, தமிழ்நாட்டில் கரை சேர்ந்தது. ஆயிற்று, 33 ஆண்டுகள். அவருக்கு தனது சொந்த நிலம் நினைவில் இல்லை. அவருக்குத் திருமணமாகி, பையன் பிறந்து, வளர்ந்து, அவருக்கும் திருமணமாகி, அந்த இணையருக்கும் கைக்குழந்தை உள்ளது. எப்போது சொந்த மண்ணுக்குத் திரும்புவோம், வந்து வாழ்கிற மண்ணில் நமக்கென்று என்ன உரிமை இருக்கிறது என்ற கேள்வியுடன்தான் அவரைப் போல தமிழ்நாட்டில் உள்ள 106 முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் பெரும்பாலானோர் பரிதவிப்பில் இருந்தார்கள்.

அவர்களுக்கான உரிமையை வழங்க வேண்டிய அதிகாரம் ஒன்றிய அரசிடம் இருக்கிறது. அவர்களுக்கான உதவிகளை வழங்கக்கூடிய உள்ளம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நிறைந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் மாண்புமிகு சிறுபான்மை-அயலகத் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களைத் துணைத் தலைவராகக் கொண்டு, சட்டமன்ற உறுப்பினர் திருமதி.தமிழரசி உள்ளிட்ட பலரையும் உள்ளடக்கிய இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. அதில் ஓர் உறுப்பினராக எனக்கு வாய்ப்பளித்தார் மாண்புமிகு முதலமைச்சர்.
தமிழ்நாடு அரசின் மறுவாழ்வுத் துறை வாயிலாக, முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பணி தொடங்கியது. 2021 நவம்பர் 2ஆம் நாள் வேலூர் மாவட்டம் மேலமொணவூரில் மாண்புமிகு முதலமைச்சரே புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து அனைத்து முகாம்களில் அதற்கான பணிகள் தொடங்கின. பல முகாம்களுக்கும் நேரில் சென்று, அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அரசாங்கத்திடம் தெரிவிக்கக்கூடிய நல்வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆலோசனைக் குழு கூட்டங்கள், அறிக்கைகள் வாயிலாக தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நிலையை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டன.
பணிகள் தொடங்கி இரண்டாண்டுகள்கூட முழுமையாக நிறைவேறாத நிலையில், அதே மேலமொணவூரில் புதிதாக கட்டப்பட்ட வீடுகளைத் திறந்து வைத்து, பயனாளிகளிடம் சாவியை வழங்கினார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அந்த மக்களின் முகத்தில்தான் எத்தனை புன்னகை
தமிழ்நாடு முழுவதும் 1591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, அதே நாளில் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
நிலம் பெயர்ந்து வந்தவர்களுக்கு, இடம் தந்து, வீடு கட்டிக் கொடுத்து, பாத்திரங்கள், துணிமணிகள் வழங்கி, மாத உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, உணவுப் பொருட்கள், சமையல் சிலிண்டர், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வேலை வாய்ப்பு அளித்து வருகிறது மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான அரசு. மேலும் பல முகாம்களிலும் வீடு கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. மொத்தமாக, 7000 வீடுகள் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.
இந்தியாவில் I.N.D.I A. மூலமாக மாற்றம் வந்தால், அந்த மக்களின் குடியுரிமை, நாடு திரும்புதல் கோரிக்கைகளும் நிறைவேறும் வாய்ப்புள்ளது. அதற்கான அடிப்படைத் தரவுகளையும் திரட்டியுள்ளது ஆலோசனைக் குழுவினரை உள்ளடக்கிய துணைக் குழு.
அகதி முகாம்களை மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் அந்தப் பெயரை செயலாக்கியும் காட்டியிருக்கிறார். நேற்றைய விழாவில் அவரை நேரில் வரவேற்று, நன்றி தெரிவிக்கின்ற நல்வாய்ப்பு அமைந்தது. மகிழ்ச்சியும் மனநிறைவும் இணைந்த நாளாக அமைந்தது.
தொப்புள் கொடி உறவு என்று சொல்லி, வசூல் வேட்டை நடத்தி, அந்தப் பணத்தில் அரசியல் பிழைப்பு-சொந்தப் பிழைப்பு நடத்தி, அந்தப் பணத்தை வைத்தே ஒரே நைட்டில் எது எதற்கோ ‘செட்டில்மெண்ட்’ செய்யும் ஈழ அரசியல் வியாபாரிகள் சூழ்ந்த அரசியல் களத்தில், 1956 முதல் இன்றைய நாள் வரை இலங்கைத் தமிழர் நலனுக்காகத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து, அவர்களுக்காக ஆட்சியை-பதவியை இழந்து, பொய்ப்பழி சுமந்து, தம்பிடி அளவுக்குக்கூட எந்தப் பயனும் அடையாத நிலையிலும், இலங்கைத் தமிழர் நலனுக்காக ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் ஒரே இயக்கம் தி.மு.கழகம்தான்.
Previous Post Next Post

نموذج الاتصال