கொரிய தமிழ்ச் சங்க கலை, இலக்கியச் சந்திப்பு மற்றும் விருது வழங்கும் விழா - 2023


கொரிய தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்கியச் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி 2023 அக்டோபர் 29 ஆம் தேதி ஞாயிறன்று தென்கொரியா, சொங்னம், கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. கொரியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்து கொண்டார்கள்.

பெண்கள் குத்துவிளக்கு ஏற்றியும், சங்கத்தின் கலைக்குழுவினர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியும் நிகழ்ச்சியை இனிதே தொடங்கி வைத்தனர்.


இந்தியத் தூதரகத்தின் அலுவலர் திருமிகு. நரேந்தர் சர்மா கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். செல்வி சாரா பாலச்சந்திரன் “தமிழே தமிழே” என்ற பாடலுக்கு தமிழரின் பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தை, வரவேற்பு நடனமாக நிகழ்த்தினார். 

கொரிய தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் (செயல்பாடுகள்) முனைவர் சரவணன் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்றார்.  சங்க அறிமுகத்துடன், சங்கம் செய்து வரும் செயல்பாடுகளை தலைவர் முனைவர். அரவிந்த ராஜா செல்வராஜா தொகுத்தார். இந்தியத் தூதரக அலுவலர் நரேந்திர சர்மா, இந்தியாவில் இருந்து சிறப்பு அழைக்கப்பட்டிருந்த கோ.பாலச்சந்திரன் இ.ஆ.ப. (ப.நி), சங்கத்தின் அறிவுரைக்குழு உறுப்பினர் ஆ. அந்தோணிசாமி, சங்கத்தின் மூத்த உறுப்பினரும் அண்மையில் கொரியாவின் சொங்சு நகர காவல் துறையால் ‘சிறந்த குடிமகன்’ விருதைப் பெற்றவருமான சு. பிரபாகரன் மற்றும் பேராசிரியர் ம. பாலச்சந்திரன் ஆகியோருக்கு சங்கத்தின் ஆளுமையிக்குழுவினர் (தலைவர் முனைவர் செ. அரவிந்த ராஜா, துணைத் தலைவர் திருமதி. விஜயலட்சுமி மற்றும் செயலாளர்கள் பீ. சகாய டர்சியூஸ் மற்றும் கோ. சரவணன்) ஆகியோர் மதிப்பளித்தனர்.

சங்கத்தின் கலைக் குழுவினர் (விபின், பத்மப்பிரியா, ரங்காநாயகி, இராமச்சந்திரன்-இராதிகா இணையர், மைக்கேல்-இணையர், ஜெயஸ்ரீ, மற்றும் பிரியா பெரியசாமி) பாடல், நடனம், நாடகம் உள்ளிட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர். குறிப்பாக குழந்தைகள் பங்களிப்புடன் கலை நிகழ்வுகள் நடைபெற்றது.


மக்களின் ஆவலுக்கு நடுவே சிறப்பு விருந்தினர் திருமிகு. கோ. பாலச்சந்திரன் அவர்கள் “பொன்னியின் செல்வன் சோழ தேசம் நோக்கி” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தனது உரையில் அவர் கூறியதாவது,  ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரில் மூன்று கதைகள் உள்ளன. அவைகள் 1) இயக்குநர் மணிரத்னத்தின் வியாபார நோக்கத்துடனான திரைப்படக்கதை, 2) கல்கி எழுதிய வரலாற்றுப் பிறழ்வு கொண்ட நாவல், மற்றும் 3) உண்மையான சோழ வரலாறு என்று தனக்கே உரிய நடையில் நகைச்சுவை கலந்த அதே வேளையில் கருத்து செறிந்த பேச்சால் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் வகையில் உரையை நிகழ்த்தினார். பகை, புகைச்சல் இருப்பினும் அடிப்படையில் மூவேந்தர்களும், சிற்றரசர்களும் சிறந்த பண்பாளர்களாக விளங்கினார்கள் என்பதனை புறநானூறு போன்ற பழந்தமிழ் இலக்கியங்களின் மேற்கோள்களுடன் எடுத்துரைத்தார். உரையின் இறுதியில் மக்களின் வினாக்களுக்கு பதிலளித்த அவர், அரசைக் காட்டிலும் மக்கள் வலுவாக இருக்க வேண்டும், அதற்கு செம்மொழியாகிய தமிழ் மற்றும் அதன் பண்பாடுகளைக் கொண்டிருக்கின்ற நாம், தொழில் தேடுவோர்களாக மட்டுமல்லாமல், தொழில் முனைவோர்களாகவும் விளங்க வேண்டும் என்ற தனது சிந்தனைக் கருத்தை வலியுறுத்தினார். சிறப்புரையின் முடிவில் திருமிகு. கோ. பாலச்சந்திரன் அவர்களுக்கு கொரிய தமிழ்ச் சங்கத்தின் இவ்வருடத்திய உயரிய விருதான ‘உலகின் தமிழன்’ என்ற விருதை சங்கத்தின் ஆளுமைக்குழுவினர் வழங்கினர்.


நிகழ்வில் கொரிய-தமிழ் மொழி மற்றும் நடவியல் ஆராய்ச்சி பணிகளை ஊக்குவிக்கும்வண்ணம் ஆராய்ச்சிக்கென கொரியா-தமிழ் மற்றும் உலகத்தமிழ் ஆராய்ச்சிக்கழகம் என்கிற அங்கம் தொடங்கப்பட்டது.

மேலும், சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் முனைவர் இரா. இராஜ்மோகன் அவர்கள் எழுதிய சிந்தனை சிதறல்கள் என்கிற கவிதைத்தொகுப்பு மற்றும் திருமதி மதுமதி வீரபாண்டியன் எழுதிய சிறுகதை (தாய் மற்றும் ஊர்க்கிணறு) மற்றும் கவிதைத் தொகுப்பு (பொங்கும் காதல்) ஆகியவற்றை சிறப்பு விருந்தினர் கோ. பாலச்சந்திரன் வெளியிட நூலாசிரியர்கள் பெற்றுக்கொண்டனர்.


திரு. ஆனந்த், முனைவர். இராமன் மற்றும் செல்வன். பிரியந்த் ஆகியோர் அடங்கிய புகைப்பட குழு நிகழ்ச்சியின் ஒவ்வொரு அசைவினையும் அழகாக படமாக்கியது. முன்னதாக நிகழ்ச்சியைத் திருமதி. பிரியா ஆனந்த் மற்றும் செல்வி. ஜெயஶ்ரீ உற்சாகத்துடன் தொகுத்து வழங்கினார். நிறைவாக, சங்கத்தின்  இணைப்பொருளாளர் முனைவர் ஜெரோம் அவர்கள் நன்றியுரை வாசிக்க விழா இனிதே நிறைவுற்றது. மிக்க நன்றி! தமிழ் வாழ்க!

 

Previous Post Next Post

نموذج الاتصال