ஸ்ரீ சபாரத்தினம் கொலைக்கு எம் ஜி ஆரே காரணம்! - Vetri Chelvan

 


 எம்ஜிஆர் தமிழ் ஈழ விடுதலைப் போரை ஆதரித்தாரா?


இன்றும் பல பல இலங்கை தமிழர்கள், குறிப்பாக விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள்,  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார் என்று எழுதுகிறார்கள்... பதிவுகள் போடுகிறார்கள்.

விடுதலைப் புலிகளை எம்ஜிஆர் ஆதரித்தது ஏன் தெரியுமா? தனது சொல் கேட்டு TELO இயக்கத்தையும் அதன் தலைவர் சிறி சபாரத்தினத்தையும் விடுதலைப் புலிகள் இயக்கம்அழித்ததுதான் காரணம். 

டெலோ தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் கொலை செய்தது. இதையடுத்து எம்ஜிஆர் மனம் மகிழ்ந்து விடுதலைப் புலிகளுக்கு அளவில்லா பணமும் உதவிகளும் செய்தார் என்பதே உண்மை.

தனிப்பட்ட முறையில் எல்லா இயக்கங்களும் தங்கள் சக சகோதரர்களை கொலை செய்வது வழக்கம்தான். ஆனால், டெலோ மாதிரி ஒரு பெரிய இயக்கத்தை அழித்து, தொடர்ச்சியாக மற்ற விடுதலை இயக்கங்களையும் அழிப்பது சிங்கள அரசுக்கு உதவியாகத்தான் அமையும். ஒருவகையில் விடுதலைப்புலிகளை மட்டும் ஒரு சர்வாதிகார இயக்கமாக மாற்ற அது உதவும். 

அரசுக்கு எதிரான ஒரே இயக்கமாக விடுதலைப் புலிகள் மட்டுமே என்ற நிலை உருவானது. இதுதான், எம்ஜியாரின் திட்டம். விடுதலைப் புலிகள் அழிந்தால் அத்தோடு ஈழ விடுதலைப் போராட்டமும் முடியும் அல்லவா? 

அதற்கான தொடக்கப் புள்ளியை விடுதலைப் புலிகளைக் கொண்டே வைத்தவர் எம்ஜியார்.

ஆரம்ப காலத்தில் இயக்கங்கள் பல இருந்தன. எல்லா இயக்கங்களும் ஏதோ ஒரு வகையில் ஒற்றுமையாக சிங்கள ராணுவத்தை எதிர்த்து நின்றன. 

அதாவது, ராணுவ முகாம்களை விட்டு வெளியில் வந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த விடாமல், பல முனைகளில் இருந்தும் எச்சரிக்கை செய்தும், ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியும், தமிழ் மக்களை காப்பாற்றினார்கள். இதை யாரும் மறுக்க முடியாது.

எல்லா தமிழ் விடுதலை இயக்கங்களும், விடுதலைப் புலிகளால் தடை செய்யப்பட்டதோ, அப்போது இருந்து இலங்கை ராணுவம் முன்னேறி  பொதுமக்களையும் விடுதலைப் புலிகளையும் கடுமையாக தாக்கினார்கள்.

இந்தியா ஆபரேஷன் பூமாலை நடத்தியிருக்கா விட்டால்,  1987 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே இலங்கை ராணுவம் நடத்திய ஆபரேஷன் லிபரேஷன் தாக்குதல் மூலம் போர் முடிவுக்கு வந்திருக்கும்.

இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து யாழ்ப்பாணத்தை கைப்பற்ற போகிறது என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் எச்சரித்தார். அவர்தான், சென்னைக்கும் டெல்லிக்கும் பறந்து பறந்து இந்திய அரசிடம் இலங்கையை எச்சரிக்க வற்புறுத்தினார்.

யாழ்ப்பாணம் நகரம் இலங்கை இராணுவத்திடம் சிக்கினால், இனிமேல் ஒரு காலமும் இந்தியா இலங்கையில் தலையிட முடியாது என்று அடித்துப் பேசினார்.

இந்திய அரசு உடனடியாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்ததில் பாலசிங்கத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

உடனடியாக இந்திய அரசு ஆப்பரேஷன் பூமாலை நடத்தியது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அவசர கோலத்தில் செய்ய வைத்தது விடுதலைப் புலிகள் இயக்கம்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? 

விடுதலைப் புலிகள் சொல்வதும் செய்வதும் மட்டுமே உண்மை என்று எல்லோரும் நம்பினார்கள். இன்றும் நம்புகிறார்கள்.

தமிழ்நாட்டில் பழ .நெடுமாறன் ஆதரவோடு தங்கியிருந்த விடுதலைப்புலிகள் இயக்கமும் பிரபாகரனும் நெடுமாறனின் ஆலோசனைப்படி கலைஞர் கருணாநிதியிடம் நெருக்கம் காட்டவில்லை.

காரணம் நெடுமாறன் ஐயாவுக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இடையில் கடுமையான அரசியல் விரோதங்கள் இருந்தன. நெடுமாறன் ஐயா தனது அரசியல் எதிரியான கலைஞர் கருணாநிதி உடன் பிரபாகரன் எந்த தொடர்பும் வைக்காமல் பார்த்துக் கொண்டார். 

உமா மகேஸ்வரன் விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்தபோது உமாவும் பிரபாவும் நடு இரவில் கலைஞர் கருணாநிதியை மெரினா பீச்சில் ரகசியமாக சந்தித்து பல நாட்கள் ஆலோசனை பெற்றனர்.

அப்போது கலைஞர் எதிர்க்கட்சி தலைவர் மட்டுமே. ஆரம்பகால விடுதலைப்புலி இயக்கத்துக்கு தமிழ்நாட்டில் பல ஆலோசனைகளை வழங்கியவர் கலைஞர் கருணாநிதி. 

இந்த சரித்திரங்கள் எத்தனை பேருக்கு தெரியும்? இவை எல்லாம் மூடி மறைக்கப்பட்ட ரகசியங்கள் ஆகும்.

1982 மே மாதம் 19 ஆம் தேதி சென்னை பாண்டிபஜாரில் பிரபாகரனும் அவரின் நண்பர் ராகவனும், சேர்ந்து ஒரு ஹோட்டலின் முன்பு உமா மகேஸ்வரனையும் அவரின் நண்பர் ஜோதீஸ்வரனையும் சுட்டு கொலை செய்ய முயன்ற போது பொதுமக்களால் சுற்றி வளைக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்கள்

பிரபாகரன், ராகவன். காயமடைந்த ஜோதீஸ்வரன் போலீசாரால் காவலில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிய உமா மகேஸ்வரன் மறுநாள் இரவு கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

அப்போதுதான் இலங்கையிலும் இந்தியாவிலும் உலக நாடுகளிலும் விடுதலை புலிகள் இயக்கம் பற்றிய விபரங்கள் தெரியவந்தன. 

அதன் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், பிரிவுகள் பற்றியும் பல உண்மைகள் வெளிவந்தன.

கைது செய்யப்பட்டவர்களை இலங்கை அரசுக்கு பிடித்து கொடுக்க எம்ஜிஆர் அரசாங்கமும், தமிழ்நாட்டு உளவுத்துறை தலைவர் மோகன்தாஸ் ஆகியோர்  பெரும் முயற்சி எடுத்தார்கள்.

இலங்கை போலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜ சிங்கம் தமிழ்நாட்டின் அரசு விருந்தினராக பல நாட்கள் தங்கியிருந்து, பிரபாகரன், உமா மகேஸ்வரன் மற்றும் அவர்களுடைய நண்பர்களை இலங்கைக்கு கொண்டு போக முயற்சி செய்து கொண்டிருந்தார்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் முயற்சியால் அதற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை.

இதன் பின்புதான் மத்திய அரசு தனது ஐ பி உளவுத்துறை மூலம் சிறையில் அவர்களை சந்தித்து இலங்கை போராட்டம் இயக்கங்கள் பற்றிய முழு விபரங்களையும் எடுத்தார்கள். 

விபரங்கள் எடுத்த ஐபி அதிகாரிகள் கோபாலன், ராமதாஸ் ஆகியோரின் ரிப்போர்ட்டைக் கொண்டே, மத்திய அரசு இலங்கைப் பிரச்சனையில் மறைமுகமாக ஈடுபட தொடங்கியது.

அப்போது திமுக காங்கிரஸ் கட்சி அரசியலில் கூட்டாக இருந்தன.
ஆனாலும் எம்ஜிஆர் அரசு இலங்கை போராளிகளை எப்படியும் பிடித்து கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் இருந்ததால், மதுரையில் ஜாமீனில் இருந்த பிரபாகரனும் ராகவனும் தலைமறைவானார்கள்.

தலைமறைவாகும் முன் பிரபாகரன் புலவர் புலமைப்பித்தன் மூலம் உமா மகேஸ்வரனையும் நண்பர்களையும் தலைமுறைவாகப் போகும்படி செய்தி அனுப்பி இருந்தார்.

தலைமறைவாகும் எண்ணத்தோடு இருந்த உமா மகேஸ்வரனும் இரவு கலைஞரை சந்தித்து விபரம் கூறிய போது கலைஞர் தடுத்துவிட்டார்.

நீங்கள் போராளிகள். தமிழ்நாட்டில் நீங்கள் துப்பாக்கி சண்டை போட்டது தவறு. ஆனால் தலைமறைவானால் உங்களையெல்லாம் தமிழ்நாட்டில் குற்றவாளிகளாகத் தான் பார்ப்பார்கள். எந்த நேரமும் உங்களை கைது செய்யலாம். 

அதனால் என்ன நடந்தாலும் பயப்படாமல் இருங்கள் நாங்கள் இருக்கிறோம் என்று தைரியம் கூறி அனுப்பி வைத்தவர் கலைஞர் கருணாநிதி.

இது நடக்கும்போது அந்த இடத்தில் நானும் இருந்தவன்.

கிட்டத்தட்ட ஏப்ரல் 23, 1983 ஆம் ஆண்டு பிரபாகரன் ராகவன் தலைமறைவு.
ஏப்ரல்  30 , 1983ல் உமா மகேஸ்வரன், ஜோதீஸ்வரன், மற்றும் நிரஞ்சன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஒரு பக்கம் இவர்களது வழக்கறிஞர் பெருமதிப்பிற்குரிய என் டி வானமாமலையர் சட்டத்துடன் போராட்டம் நடத்த கலைஞர் தனது அரசியல் சாணக்கியத்துடன் மத்திய அரசுக்கு நெருக்கடி தந்தார்.

ஆனால் எம்ஜிஆர் அரசின் முக்கியமானவர்கள் எஸ்டி சோமசுந்தரம் மதுரை காளிமுத்து, புலவர் புலமைப்பித்தன் போன்றவர்களும், உளவுத்துறை தலைவர் மோகன்தாஸ் போன்றவர்கள், ரகசியமாக ஏதோ வேலை நடக்கிறது, எச்சரிக்கையாக இருங்கள், கலைஞரின் உதவியை நாடுங்கள் என்று எமது இயக்க அரசியல் செயலர் சந்ததியர் அவர்களுக்கு செய்திகள் அனுப்பினார்கள்.

அதன்பின்பு சந்ததியர் கலைஞரை சந்தித்தார். பல மாற்றங்கள் நடந்தன.
டெல்லிக்கு திமுக எம்பி தஞ்சாவூர் எல்கணேசன் தலைமையில், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க கலைஞர் முயற்சிகள் செய்தார்.

இவர்களுக்கு எங்கள் போராட்டம் பற்றிய உண்மை நிலைகளை கூற என்னையும் இவர்களுடன் அனுப்பினார் சந்ததியார்.

டெல்லியில் பல மாற்றங்கள் நடந்தன. அப்போது வெளிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் நடந்தன. இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

மத்திய அரசு முழு ஆதரவு கொடுப்பதைக் கண்ட எம்ஜிஆர் பயந்தார். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் கைதிகள் விடயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், உளவுத்துறை தலைவர் மோகன்தாஸஸை ஒதுக்கினார். 

மத்திய அரசுக்கு பயந்து எஸ்டி சோமசுந்தரம், காளிமுத்து சபாநாயகர் ராஜாராம் ஆலோசனைப்படி சென்னை மத்திய சிறையில் இருந்த உமா மகேஸ்வரன் ஜோதீஸ்வரன், நிரஞ்சன் ஆகியோரை விடுதலை செய்தார்.

அதிலும் ஒரு குறுக்கு புத்தி எம்ஜிஆருக்கு வேலை செய்தது.
இவர்கள் விடுதலையான பின் நேரடியாக உடன் கலைஞரை சந்திப்பார்கள் என்று நினைத்து, அதைத் தடுக்க திட்டமிட்டார். 

மந்திரி காளிமுத்து  மூலம் மத்திய சிறையில் இருந்து நேரடியாக அவர்களை அழைத்துக் கொண்டு ராமாபுரம் எம்ஜிஆர் வீட்டுக்கு வர செய்ததார். 

உமா மகேஸ்வரனைக் கட்டிப்பிடித்து அழுது, நான் உங்களுக்கு என்றும் துணை நிற்பேன். இலங்கைத் தமிழர் போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பேன் என்று பேசி நடித்து உள்ளார். உங்களை எல்லாம் இலங்கைக்குப் பிடித்துக் கொடுக்க நான் முயற்சி செய்யவில்லை. இது கலைஞர் பரப்பிய பொய்யான வதந்தி என்றும் கலைஞரை சாடத் தவறவில்லை.

இதன் பின்பு ஒன்றரை வருடங்களுக்கு மேலாக எம்ஜிஆர் உமாமகேஸ்வரனுக்கு தேவையான சில உதவிகள் செய்தார்.

ஆனால் அவரின் கட்சியில் இருந்த மந்திரி சோமசுந்தரம், அவரின் ஆதரவாளர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உதவிகள் செய்தார்கள். 

குறிப்பாக இளவழகன், ராமசாமி சாமித்தவுடன் போன்றவர்கள்.
எம்ஜிஆர் கலைஞரை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு ஒரு முட்டாள்தனமானஅறிக்கை வெளியிட்டார்.

அதில் 1974 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஸ்போர்ட் இல்லாமல் பாஸ்போர்ட் சட்டத்தின்படி, கைது செய்யப்பட்ட யோக சந்திரன் என்ற குட்டிமணி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். 

அதற்கு அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், அன்று நாடு கடத்தாமல் இருந்திருந்தால் குட்டிமணியின் உயிர் வெளிக்கடைச் சிறைச்சாலையில் போயிருக்காது என்றும், குட்டி மணியின் படுகொலைக்கு கலைஞர் தான் காரணம் என்றும் அறிக்கையில் கூறியிருந்தனர்.

உண்மை நிலை தெரியாத பலர் கலைஞர் மேல் கோபப்பட்டார்கள். இலங்கையில்1974ல் இலங்கை போலீசார் தவிர வேறு யாருக்கும் குட்டி மணியை தெரியாது. அதுவும் வல்வெட்டிதுறை கடத்தல்காரன் என்று தான் தெரியும்.

எம்ஜிஆர்  குட்டி மணியை வைத்து அரசியல் நாடகம் ஆடுவது தெரிந்த குட்டிமணியின் மனைவியும் ஒரு கடிதம் மூலமும்,telo இயக்க இரட்டைத் தலைவர்கள் ஆன ஸ்ரீ சபாரத்தினம் மற்றும் ராசு பிள்ளை கலைஞரை சந்தித்து உண்மை நிலையை விளக்கி அறிக்கை வெளியிட்டார்கள்.

அதோடு 1981 ஆம் ஆண்டு தான் குட்டிமணி தங்கத்துரை இலங்கை அரசிடம் பிடிபட்ட விபரத்தையும் விபரமாக கூறினார்கள். அப்போதுதான் அவர்களது வழக்கறிஞர் கரிகாலன் பிரபாகரன் தான் தங்களை காட்டிக் கொடுத்ததாக கூறியதாக எல்லோரிடமும் கூறினார். பின்பு பயந்து போய் அமைதியாக இருந்து விட்டார்.

எம்ஜிஆரின் பொய்யான குற்றச்சாட்டை மறுத்து உண்மைகளை கூறி  அறிக்கை வெளியிட்ட ஸ்ரீ சபாரத்தினமும் telo இயக்கமும் கலைஞரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்கள். அதேநேரம் மற்ற இயக்கங்களும் கலைஞரை சந்தித்தார்கள்.

Telo இயக்கம் தன்னை அவமதித்து விட்டதாக  நினைத்த எம்ஜிஆர்telo இயக்கத்தை பழிவாங்க வேண்டும் என்று காத்திருந்தார்.

அப்போது எம்ஜிஆருக்கு நெருக்கமாக இருந்த ப்ளாட் தலைவர் உமா மகேஸ்வரன் அவர்களிடம் எம்ஜிஆர், மற்றும் உளவுத்துறை தலைவர் மோகனதாஸ் இருவரும் telo இயக்கம் உங்கள் இயக்கத்தை விட வளர்ந்து வருகிறது அதை வளர விட்டால் உங்கள் இயக்கத்துக்கு ஆபத்து, இந்திய அரசாங்கமும் அவர்களுக்குத்தான் கூடுதலாக உதவி செய்வார்கள். அதனால் அந்த இயக்கத்துக்கு எதிராக செயல்படுங்கள் என்று பலவாறு புத்திமதிகள் கூறியுள்ளார்கள்.

அவற்றை சிரித்தவாறு மழுப்பலாக கேட்டுக் கொண்டு வந்த உமா மகேஸ்வரன் ஒரு கட்டத்தில் உளவுத்துறை தலைவர் மோகன்தாஸ் நேரடியாக ஸ்ரீ சபா ரத்தினத்தை கொலை செய்து டெலோவை அழிக்க வேண்டும் என்று மிரட்டத் தொடங்கினார். 

உடனே, உமா மகேஸ்வரன் கடும் கோபம் கொண்டு எம்ஜிஆர் இடம் நேரடியாக, இந்த ஆள் அதாவது உளவுத்துறை தலைவர் மோகனதாஸ் நான் உங்களிடம் பேசும் போது இருக்கக் கூடாது. என்னை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது என்று கடும் கோபத்துடன் கூறி விட்டு வெளியில் வந்து விட்டார்.

அதன் பிறகு எம்ஜிஆர் உமா மகேஸ்வரனிடம் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. எமது இயக்கத்துக்கு பலவித தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

உளவுத்துறை தலைவர் மோகன்தாஸ் பிரபாகரனை தேடிப்பிடித்து நெடுமாறன் ஆசியோடு எம்ஜிஆர் இடம் கொண்டு வந்து சேர்த்தார்.

 எம்ஜிஆர் நினைத்ததை விட விரைவாக பிரபாகரன் telo இயக்கத்தையும் ஸ்ரீ சபாரத்தினத்தையும் கொலை செய்து அழித்தார் .

பெரிய அளவில் தமிழ் இளைஞர்கள் பகிரங்கமாக துரோகிகள் என்று கொலை செய்யப்பட்டார்கள். மிகவும் சந்தோஷப்பட்ட எம்.ஜி.ஆர் பல கோடி ரூபாய், மற்றும் ஆயுதங்களை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு கொடுத்து சந்தோசப்பட்டார்.

ருசி கண்ட விடுதலைப் புலிகள் இயக்கம் தன்னைத் தவிர வேறு தமிழ் இயக்கங்கள் இருக்கக் கூடாது என்ற நோக்கில் மற்றவர்களையும் தடை செய்து கொலை செய்தார்கள்.

இதற்கு எம்ஜிஆரின் பரிபூரண ஆசி இருந்தது உண்மை. இந்தியாவில் மத்திய அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருந்தபடியால் விடுதலைப் புலிகளால் நேரடியாக மற்ற இயக்கங்களின் மேல் கை வைக்க முடியவில்லை. அப்படியும் தமிழ்நாடு உளவுத்துறையின் ஆதரவோடு ஆட்களை கடத்துவது போன்ற செயல்களில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டார்கள்.

சொந்த இன தமிழ் மக்களையே கொலை செய்யும், சகோதர படுகொலையின் கொடூர தன்மையையும் அறிந்த கலைஞர் கருணாநிதி, இலங்கைப் பிரச்சனையில் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிக் கொண்டது உண்மை.

ஆனாலும் தன்னை சந்திக்க வரும் இயக்கத் தலைவர்களிடமும் மற்ற அரசியல் தலைவர்களிடமும் ஒற்றுமை பற்றியே வலியுறுத்தி வந்தார். அந்த காலகட்டத்தில் இவை நான் நேரடியாக ஈடுபட்டு அறிந்தது. யாரோ கூறிக் கேள்வி பட்டு இதை எழுதவில்லை.

அதை இன்று எழுதுவதற்கு காரணம் இன்று பல முகநூல் பதிவுகளில் எம்ஜிஆர் ஈழ விடுதலை போருக்கு உதவி செய்ததாக அறியாமையால் எழுதுகிறார்கள்.
உண்மையில் எம்ஜிஆர் தான் அழிக்க நினைத்த telo இயக்கத்தை அளித்த பிரபாகரனுக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் செய்த நன்றி கடன் ஆகும்.

1981 ஆண்டு இலங்கையில் நடந்த இனக் கலவரத்தை அடுத்து சென்னையில் மாபெரும் கண்டன பேரணியை கவிஞர் கண்ணதாசன் நடத்தியதாக அறிந்தேன். அப்போது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை சிங்களவர்களை தன்னால் கண்டிக்க முடியாது என்றும், தனக்குப் பெருந்தொகையான சிங்களர்கள் ரசிகர்களாக இருப்பதாகவும் பகிரங்கமாகவே கூறி உள்ளார்.

தயவுசெய்து இனிமேல் உண்மைகளை அறிந்து கொண்டு எழுதுங்கள்
Previous Post Next Post

نموذج الاتصال