தென் கொரியா தமிழருக்கு தமிழ்நாடு அரசின் மொழியியல் விருது

 



ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை ஆகியவை இணைந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும், தமிழுக்குப் பங்களிப்புச் செய்த பல்வேறு ஆய்வாளர்களும் பங்கேற்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சென்னையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழுக்கு பங்காற்றிய வெளிநாடுவாழ் தமிழ் ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விருதுகள் வழங்கித் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் தென்கொரியாவின் செஜோங் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் தமிழரான முனைவர் ஆரோக்கியராஜ் 2021 ஆம் ஆண்டுக்கான உலகத்தமிழ்ச்சங்கம் மதுரை சார்பில் மொழியியல் பிரிவுக்கான விருது வழங்கப்பட்டது.

கொரியா தமிழ் ஒற்றுமைக குறித்த ஆய்வுக் கட்டுரை, அறிவியல் பூர்வமான தமிழ் ஆராய்ச்சிக்காக இந்த விருது வழங்கப்பட்டது.



விருதை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கினர். இந்த விருதைப் பெற்றுக்கொண்ட முனைவர் ஆரோக்கியராஜ் நம்மிடம் கூறியதாவது...

தமிழ்நாடு அரசு தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமிழ் மீது பற்றுள்ள, தமிழுக்குப் பங்காற்றிய தமிழ் ஆய்வாளர்களை அழைத்து கவுரவித்து வருகிறது.



அரசாங்கத்தின் இந்த அரவணைப்பு, தமிழ் ஆராய்ச்சியிலும், அறிவியல் ரீதியான தமிழ் வளர்ச்சியிலும் எங்களைப் போன்றவர்கள் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் ஈடுபட உதவியாக இருக்கிறது. குறிப்பாக அறிவியல் தமிழில் எனது பங்களிப்புக்காக இந்த விருதுக்கு தமிழ்நாடு அரசு என்னை தேர்வு செய்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இதுவரை வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளும், பேட்டிகளும், வீடியோக்களும் இந்தியாவுக்கும் குறிப்பாகத் தமிழ்நாட்டுக்கும் கொரியாவுக்கும் இடையே பெரிய ஒருங்கிணைப்புக்கு அடிகோலியுள்ளது என்பதை அறியும்போது மகிழ்ச்சி அடைகிறேன். அதுமட்டுமின்றி, இந்தப் பணியில் மேலும் என்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்ள உதவியாக இந்த விருது அமைகிறது.


இந்தப் பணியில் எனக்கு உதவிய தென்கொரியாவில் நான் பணிபுரியும் சொஜோங் பல்கலைக்கழகம், எனது பேராசிரியர்கள் குறிப்பாக எனது பெற்றோர்கள், எனது நண்பர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.



எனக்கு வழங்கப்பட்டுள்ள விருதை நன்றியுடன் பெற்றுக் கொள்வதுடன், இந்த விருதுத் தொகையில் ரூ 50 ஆயிரத்தை அறிவியல் தமிழில் பங்களிக்கும் தமிழ் மாணவர்களுக்கு வழங்க விரும்புகிறேன். இந்த விருதுகளைப் பெற்றுள்ள அயலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் அனைத்து தமிழ் வளர்ச்சித் திட்டங்களுக்கும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதி அளிக்கிறேன்.

Previous Post Next Post

نموذج الاتصال