எம்.ஜி.ஆரும் விஜயகாந்தும் சோறு போட்ட மொக்கைக் கதை - ராஜா ராஜ்பிரியன் Raja Rajpriyan

 


விஜயகாந்த் எப்படிப்பட்டவர் தெரியுமா என இப்போதும் உருட்டிக்கொண்டு இருக்கிறது சமூக ஊடகமும், காட்சி ஊடகமும். அதில் முக்கியமானது விஜயகாந்த் தினமும் சோறு போட்டார். 


யாருக்கு சோறு போட்டார்? என்கிற கேள்வியை இதுவரை யாரும் எழுப்பவில்லை. விஜயகாந்த்துக்கு முன்பே நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர் க்கும் இதே வரியை சொல்லி கொண்டாடினார்கள்.


தினமும் சோறு போட்டார்.


யாருக்கு போட்டார் எம்.ஜி.ஆர்? தன்னை பார்க்க தினமும் ராமாவரம் தோட்டத்திற்கு வந்த ரசிகர்களுக்கு சோறு போட்டாரா? அல்லது முதலமைச்சரானபின் தன்னை சந்திக்கவந்த பொதுமக்களுக்கு சோறு போட்டாரா? 


எனக்கு தெரிந்தவரை அவர் சோறு போட்டதுயெல்லாம் அவருடன் சினிமாவில் நடித்த பிரபலங்கள், அவருக்கு பின் சினிமாவில் நடித்து பிரபலமாக இருந்தவர்கள், இயக்குநர்கள், முதலமைச்சராக இருந்தவரை பார்க்கச்சென்ற தொழிலதிபர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி பிரமுகர்களுக்கு சோறு போட்டுயிருக்கார், தன்னுடன் உட்காரவைத்து சாப்பிட வைத்திருக்கிறார். அப்படி சாப்பிட்டவர்கள் எல்லாம் சோத்துக்கு செத்தவர்களா?


இவர்கள் சாப்பிட்டுவிட்டு வந்தால். வீட்டுக்கு வெளியே காத்திருக்கும் ரசிகனும், தொண்டனும் சாப்பிட்டது போல் ஆகிவிடுமா? எம்.ஜி.ஆர் வீட்டில் அடுப்பு அணையாமல் இருந்தது என்றால் அவ்வளவு பேர் அந்த வீட்டில் இருந்தார்கள். குடும்பத்தினராக, வேலை செய்பவர்களாக இருந்தார்கள். அவர்களுக்காக மூன்று வேளையும் சமையல் நடந்துக்கொண்டு இருந்தது. ஒருவரை விட்டுவிட்டு சாப்பிடும் பழக்கம் நம்மிடம் இல்லை என்பதால் வீட்டுக்கு வந்தவர்களை தன்னோடு அமரவைத்து சாப்பிட சொல்லி சாப்பிடுகிறார்கள். அப்படி சாப்பிட்டவர்கள், முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மூலம் பலன்பெற்றவர்கள் அவரை ஆஹா ஓஹோ என புகழ்ந்தார்கள். 


சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் காரியம் ஆகவேண்டும் என்றால் எப்படி வேண்டுமானாலும் புகழ்வார்கள். திமுகவுக்கு எதிராக நடிகர் எம்.ஜி.ஆரை, முதலமைச்சர் எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்திய ஊடகங்கள் அவரைப்போல வருமா என ஆஹா ஓஹோ என ஊதி ஊதி பெரியதாக்கி வள்ளல் அளவுக்கு இன்றளவும் புகழ்கிறார்கள். 


எம்.ஜி.ஆர்க்கு பின்னர் தமிழ்நாட்டில் அதே டெக்னிக்கை தான் நடிகர் விஜயகாந்த்துக்கு செய்யப்பட்டது. இன்று நேற்றல்ல தொடக்கத்தில் இருந்தே அப்படித்தான்.


மதுரையில் ரைஸ்மில் வைத்திருந்தார்கள், அப்போதே யாராவது வீட்டுக்கு வந்தால் சாப்பாடு போடாமல் அனுப்பமாட்டார். ரைஸ்மில்லில் எத்தனைப்பேர் வேலை செய்தார்கள் என யாரும் கேள்வி கேட்கவில்லை.


அந்த காலத்தில் விவசாய பணிகள் செய்யும்போது வேலை செய்யும்  பணியாளர்களுக்கு களி, கூழ், அரிசி கஞ்சி, சோறு போன்றவற்றை வேலை செய்யும் இடத்திலேயே சமைத்து தருவார்கள். அதைத்தான் அந்த ரைஸ்மில்லில் நடந்துயிருக்கும், அதை பார்த்துவிட்டு நடிக்க வருவதற்கு முன்பு மக்களுக்காக உழைத்தார் என உருட்டினார்கள் அவரது விசுவாசிகள்.  


விஜயகாந்த் சினிமாவில் புதிய முகங்கள் பலரை அறிமுகப்படுத்தியிருக்கலாம். அதில் சுயநலம் உண்டு. திரைத்துறையில் புழங்குபவர்களுக்கு தெரியும்.  வேண்டும்மென்றால் நக்கீரனில் தொடர் எழுதும் விஜயகாந்த் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் வசனகர்த்தா லியாகத் அலிகான் எழுதும் தொடரை உன்னிப்பாக வாசியுங்கள் விஜயகாந்த்தின் மறுப்பக்கம் புரியும். 


அரசியலுக்கு நுழையும் முன்பே திட்டமிட்டே கறுப்பு எம்.ஜி.ஆர் என்று உருவகப்படுத்தப்பட்டவர் விஜயகாந்த். அரசியல் நுழைவுக்காக தன்னை திட்டமிட்டு உருவாக்கிக்கொண்டவர். 


சோறு போட்டார் தெரியுமா என விஜயகாந்த் குறித்து பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள். விஜயகாந்தின் “மக்களுக்கான தியாகம்“ குறித்து அவர்களுக்கு சொல்வதற்கு ஒன்றும்மில்லை, அதனால் சோறு தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். இந்த சோறு விவகாரத்தில் நேரடி அனுபவம் இருக்கிறது. 


1999 மே மாதம் நடிகர் விஜயகாந்த் மீதான மோகத்தில் அவரை பார்க்கவேண்டும், அவருக்கு ரசிகர் மன்றம் தொடங்கவேண்டும்மென எங்கள் கிராமத்தில் இருந்து 16 வயதான நானும், ஏழுமலை என்கிற நண்பனும், திருவண்ணாமலை சென்னை ரோட்டில் ரயில்வே கேட் அருகே சின்னதாக சைக்கிள் பஞ்சர் கடை வைத்திருந்த விஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் திருவண்ணாமலை மாவட்டதலைவராக இருந்த சுரேஷ் (பிற்காலத்தில் செங்கம் தொகுதி எம்.எல்.ஏவானார்.) சிடம் விஜயகாந்த் வீட்டு முகவரியை வாங்கிக்கொண்டு சென்னை சாலிகிராமத்துக்கு தேடிக்கொண்டு போனோம். விஜயகாந்த் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை 11 மணிக்கு சென்றுவிட்டோம். விஜயகாந்த் சூட்டிங்கில் இருக்கிறார் எனச்சொல்லி கேட் வாட்ச்மேன் எங்களை துரத்திவிட்டார். ஒருமணி நேரம் காத்திருந்துவிட்டு கிளம்பி பக்கத்து தெருவில் இருந்த நடிகர் விஜய்யை பார்க்க காத்திருந்த நூறு ரசிகர்களோடு சேர்ந்து நாங்களும் சந்தித்துவிட்டு வந்தோம். வேகாத வெய்யிலில் சென்ற எங்களுக்கு விஜயகாந்த் வீட்டு வாசலில் ஒரு டம்பளர் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. ஆனால் அவர் வீட்டுக்கு போகும் ரசிகர்களுக்கு சோறு நிச்சயம் என உருட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.


விஜயகாந்த் வீட்டுக்குள், அவரது அலுவலகத்தில் சோறு போட்டார்கள் என்பவர்களா? விஜயகாந்த் வீட்டுக்குள், அலுவலகத்துக்குள் யார் செல்ல முடியும்? சாதாரண பொதுமக்கள், ரசிகர்கள் செல்ல முடியுமா? திரை பிரபலங்கள் செல்வார்கள். அவர்களுக்கு சோறு போட்டார் என்பதற்காக அவரை பார்க்க வந்த அனைவருக்கும் சோறு போட்டார் எனச்சொல்வது அபத்தம்.


வள்ளல் என புகழச்செய்து மக்களை நம்பவைத்து எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனார். விஜயகாந்த் அரசியலில் எதிர்கட்சி தலைவரானார். இருவரும் சினிமாவில் மட்டும்மல்ல நிஜத்திலும் நடித்தார்கள். அந்த நடிப்பை நிஜம் என மக்கள் இன்றளவும் நம்பவைத்திருப்பதுதான் சாதனை.

Previous Post Next Post

نموذج الاتصال