புரட்சிக்காரர் ஏசுவைப் பற்றி நேரு - ஆதனூர் சோழன்


புரட்சிக்காரர் ஏசு

ஏப்ரல் 12, 1932

வடமேற்கு இந்தியாவை ஆட்சி செய்த குஷாண பேரரசு தொடர்பான வரலாறையும், சீனாவை ஆட்சி செய்த ஹான் பரம்பரையின் வரலாறையும் பார்த்தபோது, முக்கியமான வரலாற்று காலகட்டத்தை கடந்துவிட்டோம். 

இதுவரையில் நாம் கிறிஸ்து பிறப்பதற்கு முற்பட்ட காலத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். நாம் இப்போது கிறிஸ்துவுக்கு பிறகான காலத்தில் வாழ்கிறோம். கிறிஸ்து பிறந்ததாகக் கருதப்படும் நாளில் இருந்து இது தொடங்குகிறது. பார்க்கப்போனால் அந்த குறிப்பிட்ட நாளில் இருந்து நான்கு ஆண்டுகள் முன்புகூட கிறிஸ்து பிறந்திருக்கலாம். அதனால் அதிக வித்தியாசம் ஒன்றுமில்லை. 

ஏசு கிறிஸ்துவின் வரலாறு பைபிளில் புதிய ஏற்பாடு எனும் பகுதியில் இருக்கிறது. அது உனக்கு கொஞ்சம் தெரியும். அவரைப்பற்றிய வரலாறில் அவருடைய இளமைப் பருவத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ‘அவர் நாசரேத்து என்னும் ஊரில் பிறந்தார். கலிலேயாவில் மக்களுக்கு நற்போதனைகள் செய்தார். தன் முப்பதாவது வயதில் ஜெருசலேம் நகருக்கு வந்தார். அதற்குப் பிறகு அவர் ரோமாபுரியை ஆண்ட பொன்டியஸ் பிலாது என்பவனால் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்’ என்று கூறப்படுகிறது.

மக்களுக்குப் போதிக்க ஆரம்பிக்குமுன் அவர் என்ன செய்தார், எங்கு சென்றார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மத்திய ஆசியா முழுவதிலும், காஷ்மீர், லடாக், திபேத் ஆகிய இடங்களுக்கும் ஏசு சென்றிருப்பதாக சிலர் நம்புகிறார்கள். சிலர் அவர் இந்தியாவுக்கும்  வந்ததாக நம்புகிறார்கள். ஆனால், எதையும் நிச்சயமாகக் கூறுவதற்கில்லை. 

ஏசுவின் வாழ்க்கையை ஆராய்ந்தவர்கள் அவர் இந்தியாவுக்கோ, மத்திய ஆசியாவுக்கோ போகவில்லை என்கிறார்கள். ஆனால் அந்த நாளில் இந்தியாவில் புகழ்பெற்ற கலாசாலைகள் இருந்தன. வெளிநாட்டு மாணவர்கள் வந்தார்கள். அதுபோல ஏசுவும் வந்திருக்கலாம். இந்தியாவில் பவுத்த மதம் வலுவாக இருந்ததால் அந்த மதத்தைப் பற்றி அவர் அறிந்திருக்கலாம். அவருடைய போதனைகளும் பவுத்த போதனைகளை ஒத்திருக்கிறது. அல்லது இந்தியாவுக்கு வராமலே பவுத்த போதனைகளை அவர் அறிந்திருக்கலாம்.

மதங்கள் மக்கள் இடைய மோதல்களுக்கு காரணமாக இருந்திருக்கின்றன. மதங்களின் நோக்கங்களும் போதனைகளும் பெரும்பாலும் ஒரே மாதிரி இருக்கும். ஆனால், மக்கள் ஏன் மூடத்தனமாக அர்த்தமற்ற  காரணங்களுக்காக சண்டை போட வேண்டும்? 

மதங்களின் தொடக்ககால போதனைகள் பழைய வடிவத்திலேயே எப்போதும் இருப்பதில்லை. அவற்றோடு வேறு பல விஷயங்களும் சேர்ந்து திரிந்து உருமாறி விடுகின்றன. மதத்தை போதித்தவரின் இடத்துக்கு குறுகிய மனமும், வெறுப்பு உணர்வும், பிடிவாத குணமும், மூட நம்பிக்கையும் கொண்ட மதவாதிகள் வந்துவிடுகிறார்கள். மக்களிடையே மூடநம்பிக்கைகளையும், மூட பழக்க வழக்கங்களையும் வளர்க்க வேண்டும் என்பது பழைய ரோமர்களின் ராஜதந்திர முறையாகும். அதன்மூலம், மக்களை அடக்கி சுரண்டிப் பிழைப்பது மிகவும் எளிதானது. 

ரோம பிரபுக்களின் தத்துவங்கள் அவர்களுக்கு மட்டுமே நன்மை தரும். மக்களுக்கு நன்மையானதல்ல என்று மாக்கியவல்லி என்ற  இத்தாலிய ஆசிரியர் எழுதியிருக்கிறார். அரசனாக இருப்பவன். தனக்கு பொய் என்று தெரிகிற மதத்தைக் கூட ஆதரிக்க வேண்டியது கடமை என்று கூறியிருக்கிறார். சமீபகாலத்திலும் மதம் என்ற போர்வைக்குள் புகுந்து ஏகாதிபத்தியக் கொள்கை வளர்வதை நாம்  அறிந்திருக்கிறோம். எனவேதான், கார்ல் மார்க்ஸ் என்ற அறிஞர், ‘மதம் மக்களின் அறிவை மயக்கும் அபினி என்ற போதைமருந்து’ என்று கூறியிருக்கிறார்.

ஏசு ஒரு யூதர். யூதர்கள் எப்போதும் தனி இயல்பு கொண்ட பிரிவினராக இருக்கிறார்கள். விடாமுயற்சி கொண்டவர்கள். தாவீது, சாலமோன் காலத்தில் சிறப்புடன் இருந்தார்கள்.  அதன் பிறகு கெட்ட காலம் பிறந்தது. ஆனால், அதை ஒரு பொற்காலம் என்ற தோற்றத்தை கற்பனையில் உருவாக்கி வருகிறார்கள். ரோமாபுரியிலும் அதைத் தாண்டியும் பரவியிருந்தார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்காக ஒரு ரட்சகர் அதாவது கிறிஸ்து தோன்றுவார் என்று நம்பினார்கள்.  யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாமல் பிறரால் அளவிட முடியாத துன்பத்துக்கு ஆளானாலும் தங்கள் அடையாளத்தை இழக்காமல் 2000 ஆண்டுகளாக ஒன்றுபட்டு நிற்பது வரலாற்றில் வியப்பானது. 

யூதர்கள் தங்களை விடுவிக்க வந்த கிறிஸ்துவே ஏசு என்று நம்பியிருக் கலாம். ஆனால் ஏசு அந்தக் காலத்தில் நிலவிய சமுதாய அமைப்பை எதிர்த்து பேசினார். செல்வமும் சிறப்பும் தருவதாக கூறுவதற்கு பதிலாக, பரலோக ராஜ்யத்திற்காக எல்லாவற்றையும் இழக்கும்படி கூறினார். அவர் பிறவியில் ஒரு புரட்சிக்காரர். அந்தக் காலத்தில் நிலவிய கொடுமைகளை மாற்றுவதற்கு உறுதி கொண்டிருந்தார். யூதர்கள் இதை விரும்பாததால் பெரும்பாலோர் அவருக்கு எதிராக கிளம்பி, அவரை ரோம அதிகாரிகளிடம் பிடித்து கொடுத்தனர்.

ரோமர்களுக்கு மதங்கள் மீது வெறுப்பில்லை. கடவுளை யாராவது எதிர்த்தால் தண்டனை இல்லை. “கடவுளை நிந்தனை செய்தால் அவர்களைக் கடவுளே பார்த்துக் கொள்வார்” என்று டைபீரியஸ் என்ற சக்கரவர்த்தி கூறியிருக்கிறான். ஏசு மீதான வழக்கில் மதம் தொடர்பான விஷயத்தை போன்டியஸ் பிலாது விசாரித்திருப்பான் என்று கருதமுடியாது. ஏசுவை ஓர் அரசியல் புரட்சிக்காரர் என்று அதிகாரிகள் கருதினார்கள். யூதர்களோ அவரை ஒரு சமூகப் புரட்சிக்காரர் என்று கருதினார்கள். இந்தக் காரணங்களுக்காக அவரை  விசாரித்து, மரண தண்டனை விதித்து, கொல்கதா என்ற இடத்தில் சிலுவையில் அறையப்பட்டார். அவருக்குத் துன்பம் வந்த காலத்தில் சீடர்களும் அவரை விட்டு நீங்கினார்கள். சாகும் நேரத்தில் இந்தத் துரோகத்தை நினைத்து “என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று கல்லும் கரையும்படி  கதறினார்.

ஏசு இளவயதிலேயே இறந்துவிட்டார். அவர் சிலுவையில் அறையப்பட்ட சோகம் அழகாக எழுதப்பட்டுள்ளது. அதைப் படிக்கும்போது நாம் மனம் கசிந்து உருகுகிறோம். பிற்காலத்தில் கிறிஸ்தவ மதத்தில் பல கோடிப் பேர்  இணைந்து ஏசுவை வணங்க தொடங்கினார்கள். ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது பாலஸ்தீனத்துக்கு வெளியில் அவரைப்பற்றி யாருக்கும் அதிகமாகத் தெரியாது. ரோமாபுரி மக்களும் பிலாத்தும் ஏசு என்ன செய்தார் என்பதைப் பற்றியே தெரிந்திருக்க மாட்டார்கள்.

ஏசுவின் நெருங்கிய சீடர்கள் அச்சம் காரணமாக அவரிடமிருந்த பிரிந்தனர். ஆனால் அவர் இறந்தவுடன் பால் என்பவர் தோன்றினார். அவர் ஏசுவைக் கண்டதில்லை. கிறிஸ்தவ மதக் கோட்பாடு என்று தான் கருதியதைப் பரப்பத் தொடங்கினார். ஏசுவின் போதனைகளுக்கும் பால் என்பவர் போதித்த கிறிஸ்தவ மதத்துக்கும் நிறைய வேறுபாடு இருந்தது என்று பலர் கூறுகிறார்கள். 

பால் கல்வியறிவும் திறமையும் மிகுந்தவர். சமுதாயப் புரட்சிக்காரர் அல்ல. கிறிஸ்தவ மதம் சிறிது சிறிதாகப் பரவியது. ரோமர்கள் முதலில் இதை பெரிதாக கருதவில்லை. கிறிஸ்தவர்களை, யூதர்களில் ஒரு பிரிவாக கருதினார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் வேறு மதங்களை  எதிர்த்தார்கள். சக்கரவர்த்தியின் சிலைக்கு வணக்கம் செலுத்த மறுத்தார்கள். ரோமர்களுக்கு இது புரியவில்லை. கிறிஸ்தவர்களைப் பைத்தியங்களாகவும், சண்டைக்கு வருபவர்களாகவும், முன்னேற்றத் துக்கு எதிரானவர்கள் என்றும் ரோமர்கள் கருதினார்கள். 

ரோமச் சக்கரவர்த்தியின் சிலைக்குக் கிறிஸ்தவர்கள் வணக்கம் செலுத்த மறுத்ததை ராஜத் துரோகக் குற்றமாக கருதினார்கள். அந்தக் குற்றத்துக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் துன்பத்துக்கு ஆளானார்கள். அவர்களுடைய சொத்து சுதந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் சிங்கங்களுக்கு இரையாக எறியப்பட்டனர். இப்படி உயிர் துறந்த கிறிஸ்தவ மதத் தியாகிகளின் கதைகளை நீ வாசித்திருப்பாய். ஒருவன் ஒரு கொள்கைக்காக உயிரையும் கொடுக்க துணியும்போது அவனையோ அல்லது அந்தக் கொள்கையையோ யாரும் அடக்கிவிட முடியாது. ரோம பேரரசுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் நடந்த போராட்டத்தில் கிறிஸ்தவர்கள் வெற்றி பெற்றனர். கி.பி. நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கான்ஸ்டண்டைன் என்ற ரோம சக்கரவர்த்தி ஒருவன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினான். அப்போதிருந்து  ரோமப் பேரரசில் கிறிஸ்தவ மதமே அரசாங்க மதம் ஆனது. கான்ஸ்டாண்டிநோபிள் என்னும் நகரத்தை அவனே உருவாக்கினான்.

கிறிஸ்தவ மதம் வளர வளர ஏசுவின் தெய்வத் தன்மை பற்றி விவாதங்கள் எழுந்தன. புத்தர் தமக்குத் தெய்வத்தன்மை உண்டென்று சொல்லா விட்டாலும் மக்கள் அவரை  கடவுளாகவும் அவதாரமாகவும் வணங்கத் தொடங்கினார்கள். அதுபோலவே, ‘தேவ குமாரன்’ என்றும் மனுஷகுமாரன்’ என்றும் சொன்ன ஏசுவையும் கடவுளாக்கி விட்டார்கள். தங்களிடையே தோன்றும் பெரியவர்களைத் கடவுளாக்கி விடுவது மனிதர்களின் வழக்கம். அப்படிக் கடவுளாக்கிவிட்டு அதுவே போதும் என்று அவர்கள் போதனைகளை தூக்கி போடுகிறார்கள்.


அஹிம்சையைப் போதித்த ஏசுவின் மலைப்பிரசங்கம்


ஏசுவின் மொழிகளை உணர்ந்து அவற்றின்படி நடப்பதற்கு  மாறாக ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரை நாஸ்திகர் என்பதும், தலைகளைத் துண்டிப்பதும் சாதாரணமாக இருந்தது. கிறிஸ்தவர்ள் இரு பிரிவாக பிரிந்தனர். ஒரு பிரிவினர், தொழுகையின்போது கடவுளே மனிதனாக வந்தார் என்று சொல்ல வேண்டும் என்றார்கள். இன்னொரு பிரிவினர் கடவுள் தன்மை பெற்ற மனிதன் என்பதே சரி என்றார்கள். ஏசுவின் கடவுள் தன்மை குறித்த மோதலில் இரு பிரிவினருக்கும் மூண்ட சண்டையில் பலர் கொல்லப்பட்டனர்.

கிறிஸ்தவ மதம் இங்கிலாந்திலும் மேற்கு ஐரோப்பாவிலும் பரவுவதற்கு முன்னரே இந்தியாவுக்கு வந்து விட்டது. ஏசு கிறிஸ்து இறந்த நூறு ஆண்டுகளுக்குள் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் கடல் வழியாகத் தென் இந்தியாவுக்கு வந்தனர். அவர்கள் தங்கள் மதத்தை பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். அவ்வாறு மதம் மாறியவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் இப்போதுவரை நம்நாட்டில் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் பழைய  கிறிஸ்தவ மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இந்தப் பிரிவுகள் இன்று ஐரோப்பாவில் கூட இல்லை. 

இன்று அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது கிறிஸ்தவம் மதம். ஐரோப்பியர்கள் இந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருக்கலாம்.  ஆனால் சமுதாயத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்த, அஹிம்சையைப் போதித்த ஏசுநாதர் எங்கே? அவரைப் பின்பற்றுவதாக இன்று வாயளவில் பேசிக்கொண்டு, மண்ணுக்கும் பொன்னுக்கும் ஆசைப்பட்டு வல்லரசுகளையும் யுத்தங்களையும் யுத்த தளவாடங்களையும் வளர்க்கும் இவர்கள் எங்கே! ஏசுநாதர் மலையின் மீது செய்த உபதேசத்தில் அடங்கிய தத்துவங்களுக்கும் இன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நாம் காணும் கிறிஸ்தவ மதத்துக்கும் எத்தனை வேற்றுமை. இன்று இருக்கும் மேல்நாட்டுப் போலிக் கிறிஸ்தவர்களை விட உண்மையில் ஏசுவைப் பின்பற்றி நடப்பவர் நமது காந்திஜிதான் என்று பலர் எண்ணுவதிலும் சொல்வதிலும் என்ன ஆச்சரியம் இருக்கிறது.

Previous Post Next Post

نموذج الاتصال