பெரியாரை ஆண்கள் விமர்சிப்பதை விட பெண்கள் விமர்சிப்பது மிக அவசிய தேவையாகவே எனக்கு தோன்றும்.
ஜாதி ஒழிப்பு, சமூக நீதி, பார்ப்பன எதிர்ப்பு என்பதை எல்லாம் தாண்டி பெரியாரின் பெண்ணியத்தை மீறிய ஒரு பெண்ணிய விடுதலை பேச்சை, இன்றளவிற்கும் கூட (இந்தியாவில்) வேறு யாரும் பேசி இருப்பதாக தெரியவில்லை.
பேசுவதில்லையே தவிர, பல பெண்களும் பெரியாரின்பெண்ணிய கனவினை நிஜமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் பெரியாரை படித்தவர்கள் இல்லை. பெரியாரை படித்த பெண்கள் கூட அவ்வளவு தடைகளை உடைத்தவர்களாக இல்லை.
பல கேள்விகளை முன் வைத்து விடை கிடைத்த பின்னரே பெரியாரை முழுமையாக படிக்க துவங்கினேன்.
திராவிடம் பேசும் பெண்கள் ஒரு புதிய குழுவை ஆரம்பித்து தங்களை அறிமுகம் செய்து கொள்ள சொன்ன போது, பெரியார் ஒரு பெண் எப்படி எல்லாம் இருக்க கூடாது என்று சொன்னாரோ அதற்கு உதாரணமாக ஒரு பெண்ணை காட்ட வேண்டுமென்றால் அது நானாக தான் இருப்பேன் என்று கூறி இருந்தேன்.
இன்றளவிற்கும் அந்த வட்டத்தை தாண்டி வர சிரமமாகவே உள்ளது.
கல்லூரி முடிந்து மேற்கொண்டு படிக்க சென்ற இடத்திற்கு பொது வாகன வசதி இல்லாத பொழுது, சித்தப்பாவையோ அண்ணனையோ காலை மாலை என்று என்னை விட்டுட்டு அழைத்து செல்ல எதிர்பார்த்த நிலையில், அப்பா யாரையும் எதிர்பார்க்காமல் இருக்க இரு சக்கர வாகனம் வாங்கி கொடுத்தார்.
ஒருவர் பின் அமர்ந்து செல்வது எனக்கு மிக எளிதானதாக இருந்தது. நானே வாகனம் ஓட்டுவது பெரிய சுமையாக தெரிந்தது.
சில நாட்களில் அந்த வாகனம் எனக்கு கொடுத்த சுதந்திரத்தை அடைந்த பின்னர், இன்னொருவர் பின்னல் அமர்ந்து செல்வது கொஞ்சம் சுயமரியாதையை பாதித்தது.
திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்தது வரை பணிக்கு செல்லும் எண்ணம் எழுந்ததே இல்லை. வீட்டில் இருப்பதே சுகமாக இருந்தது.
சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்ல ஆரம்பித்த காலமும் பெரியாரை அறிந்து கொண்ட காலமும் ஏறக்குறைய ஒரே சமயமாக இருந்தது.
ஒரு பெண் வேலைக்கு செல்வது குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தும் என்பதை தாண்டி, என் தன்னம்பிக்கையையும் சுய மரியாதையையும் இந்த அளவிற்கு மீட்டு கொடுக்கும் என்று உணர்ந்த பொழுது, என் வேலையை மிக இறுக்கமாக பற்றிக் கொண்டேன்.
என் நிழலுக்கு அடுத்து நான் கற்ற கல்வி மட்டுமே துணை நிற்கும்.
இவை எல்லாம் நான் பெரியாரை கற்றதால் மட்டுமே நிகழ்ந்ததா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால் அந்த உணர்தல் என்பது பெரியாரை படித்ததால் மட்டுமே வந்தது.
மிக இயல்பாய் தோன்றிய பல விஷயங்களும் இப்போது சுயத்தை சுடுவதாய் இருக்கிறது.
பெண்ணிற்கும் ஆணிற்கும் உடல் வேறுபாடை தவிர வேறு ஒன்றும் இல்லை என்ற அறிவியல் அடிப்படையை புரிய வைத்தது பெரியாரியம் தான்.
இவையெல்லாம் விடுத்தது, பெரியாரை பெரியாரின் எழுத்துக்கள் மூலம் படிக்கும் பொழுது, சில கருத்துக்கள் மிகவும் பிற்போக்குத்தனமாக இருப்பதை மறுப்பதற்கில்லை.
அவரே உனக்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டுமே எடுத்துக் கொள் என்று சொல்லி இருப்பதால், அந்த கருத்துக்களை கடந்து விடுவதில் சிரமமில்லை.
வீட்டில் மாட்டி இருக்கும் சில கடவுள்களுக்கு இரண்டு புறம் இரண்டு மனைவிகள் இருக்கும் பொழுது, ஏன் எந்த பெண் கடவுளுக்கும் இரண்டு கணவன்கள் இருக்கவில்லை என்று கேட்டதில்லை. அது தவறாகவோ நீதி மறுக்கப்பட்டதாகவோ கூட தோன்றவில்லை. அது அப்படி தான் என்று கடந்து செல்ல கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளேன்.
அப்படி எல்லாம் இல்லை, நெருடலாக இருப்பதை கேள்வி கேள் என்பதை தான் பெரியாரின் ஆயிரம் ஆயிரம் சொற்களும் கற்றுக் கொடுத்திருக்கிறது.
இதுவரை ஆண்கள் பேசும் பெண்ணியம் ஏனோ எனக்கு ஒவ்வாமையையே கொடுத்திருக்கிறது. விதிவிலக்காக பெரியார்.
பெண்கள் பேசும் பெண்ணியம் எப்போதும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. அது எவ்வளவு பிற்போக்கு தனமாக இருந்தாலும்.
ஒரு காலத்தில் அந்த இடத்தில் இருந்து தான் நான் பயணத்தை மேற்கொண்டேன் என்பதால் அவர்களின் சிந்தனையை புரிந்து கொள்வது எளிதாகவே இருக்கிறது. பல சமயங்களில் பச்சாதாபமாக இருக்கும்.
பெரியார் கற்றுக்கொடுத்த இந்த சுதந்திரத்தை அந்த பெண்கள் தங்கள் வாழ்நாளில் என்றேனும் ஒரு நாலாவது உணர்வார்களா என்று.
கல்வி கற்பதும், வேலைக்கு செல்வதுமே பெண் விடுதலை என்று நினைக்கும் பெண்களுக்கு, இவை இரண்டும் எதில் இருந்து விடுதலையை கொடுத்திருக்கிறது என்பதை உணர வைக்க பெரியாரை தவிர வேறு யார் இருக்கிறார்கள்.
பெரியாரை படிக்காததால் பெண்களுக்கு நட்டம் ஒன்றுமில்லை. ஆனால் அந்த சுதந்திர உணர்தல் இல்லாமலே தங்கள் வாழ்க்கையை கடத்துபவர்களாகவே இருப்பார்கள்.
பெண்ணியம் பேசும் அனைத்து பெண்களும் அழகு. பெரியாரை படித்துவிட்டு பேசும் பெண்களோ, அழகு என்ற சொல்லையே உடைத்து எறிவார்கள். அவ்வளவு தான் வேறுபாடு.