காவிகளால் கொல்லப்பட்ட பெண் எழுத்தாளர் கௌரி லங்கேஷ் - ஆதனூர் சோழன்

கொல்லப்பட்ட கௌரி லங்கேஷுடன் நண்பர் பிரகாஷ் ராஜ்... இவருடைய கொலையைத் தொடர்ந்தே, மோடி அரசை கடுமையாக எதிர்த்து வருகிறார் பிரகாஷ் ராஜ்.

என்ன செய்யக் காத்திருக்கிறது காவித் தீவிரவாதம்?
எதிர்க்கருத்துக்கு பதில் துப்பாக்கிக் குண்டுகளா?

செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி. பெங்களூருவில் உள்ள தனது வீட்டின் முன் சுடப்பட்டு இறந்து கிடந்தார் கௌரி லங்கேஷ்.

ஹெல்மட் அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் அவர் வீட்டு முன் நிற்பதையும், பின்சீட்டில் அமர்ந்திருந்தவர் கௌரி லங்கேஷை அடுத்தடுத்து சுட்டுவிட்டு, விருட்டென்று தப்புவதையும் காட்டுகிறது அவர் வீ்டடு சிசிடிவி கேமரா.

இந்தியா முழுவதும் ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் இந்தக் கொலைக்கு காரணமான இந்து காவித் தீவிரவாதிகளை வன்மையாக கண்டிக்கின்றனர்.

அந்த அளவுக்கு கௌரி மீதும் அவருடைய லங்கேஷ் பத்திரிகை மீதும் இந்துத்துவாவாதிகள் வன்மம் கொண்டிருந்தனர். கௌரியின் சமரசமற்ற இந்துத்துவ எதிர்ப்பு கர்நாடகம் முழுவதும் மட்டுமல்ல பத்திரிகையுலகினர் அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயம்தான்.

லங்கேஷ் பத்திரிகையை பற்றி சுருக்கமாக...

கர்நாடகாவில் லங்கேஷ் என்ற கன்னடப் பத்திரிகை ரொம்பவும் பிரபலம். அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் பி.லங்கேஷ். 

அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளில் இந்தப் பத்திரிகையின் பார்வை கன்னட மக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஊட்டியது. மதசார்பின்மைக்காக விடாப்பிடியான போராட்டங்களை இது நடத்தியது. இதற்காக இந்துத்துவா வாதிகளுடன் சமரசமில்லாத போராட்டத்தை அது நடத்தியது. கர்நாடக மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்து தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை அறிந்தவர் லங்கேஷ். சமூக மாற்றத்தை மட்டுமே லட்சியமாக கொண்டு தனது பத்திரிகையை நடத்தினார். அவர் 2000ம் ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இறுதி நிகழ்ச்சியில் கௌரி லங்கேஷின் தாயாருடன் பிரகாஷ் ராஜ் 

அவருடைய மகள்தான் கௌரி லங்கேஷ். தனது தந்தையின் மரணத்துக்கு பிறகு அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றார். தனது தந்தையின் அதே கொள்கைகளை பின்பற்றி இவரும் இந்துத்துவா கோட்பாடுகளுக்கு எதிராக தனது போராட்டத்தை தொடர்ந்தார்.

அதற்காக தன்னை தொடக்கத்திலிருந்தே தயார்படு்த்தி வந்திருந்தார். பத்திரிகைத்துறையில் பட்டம் பெற்றார். பல்வேறு ஆங்கில பத்திரிகைகளில் பணியாற்றிய அவர் டெல்லியில் பணிபுரிந்து நல்ல அனுபவம் பெற்றார். 10க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார். இவருடைய நெருங்கிய நண்பர் நடிகர் பிரகாஷ் ராஜ்.

2015 ஆம் ஆண்டு கன்னட புரட்சிகர எழுத்தாளர் கல்புர்கியை காவித் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அந்தக் கொலையை எதிர்த்த போராட்டங்களில் கௌரி மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கேற்றார்.

உலகளாவிய அளவில் மனித உரிமைகளுக்கான போராட்டங்கள் அனைத்திலும் தானாக முன்வந்து பங்கேற்கும் மனிதநேயப் போராளியாக இருந்தார் கௌரி. 

கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ்

பாஜகவில் சேர்ந்த ஒரே காரணத்துக்காக தனது 35 ஆண்டுகால நட்பையே உதறித் தள்ளியவர். 

இவரை 2001 காலகட்டத்தில் நக்ஸலைட்டுகளை சரணடையச் செய்யும் குழுவில் முதல்வர் சித்தராமையா நியமித்தபோது அதை பாஜகவினர் கடுமையாக எதிர்த்தனர். கௌரி நக்ஸலைட்டுகளுடன் தொடர்புடையவர் என்று பாஜகவினர் குற்றம்சாட்டினார்கள். அதைப்பற்றியெல்லாம் சித்தராமையா கவலைப்படவில்லை.

அதற்கு காரணம் இருந்தது. நக்ஸலைட்டுகளை கொன்று குவிக்க சித்தராமையா அரசு முயன்றபோது, அதை எதிர்த்து, காட்டுக்குள் சென்று, நக்ஸலைட்டுகளின் உண்மையான முகத்தை வெளிக் கொண்டுவந்து, கட்டுரைகளை எழுதினார்.


இதையடுத்தே, முதல்வர் சித்தராமையா அரசு நடவடிக்கையை நிறுத்தி நக்ஸலைட் மறுவாழ்வு திட்டத்தை அறிவித்து, லங்கேஷை உறுப்பினராக நியமித்தார். சுமார் 5 ஆயிரம் நக்ஸலைட்டுகள் மறுவாழ்வு பெற்றனர்.

கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், இலக்கியத்திலும் இந்துத்துவா தீவிரவாதிகள் மூக்கை நுழைப்பதை கௌரி கடுமையாக எதிர்த்தார். தமிழ்நாட்டில் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நாவலுக்கு இந்துத்துவாவாதிகள் எதிர்ப்பைக் கிளப்பிய சமயத்தில் அவர்களுக்கு கௌரி விடுத்த கேள்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

மாதொருபாகன் நாவலில் கணவன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத மனைவி அடையாளம் தெரியாத ஆணுடன் கூடி குழந்தை பெற்றுக் கொள்வதாக இருந்தது. அதையே கலாச்சார சீரழிவு என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

ஆனால், கௌரி, கன்னட இந்துத்துவ எழுத்தாளரான பைரப்பா எழுதிய பர்வா என்ற நாவலில் அதேமாதிரியான உள்ளடக்கம் இருப்பதை குறிப்பிட்டு, அதை ஏன் இந்துத்துவாதிகள் எதிர்க்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

தனது பத்திரிகையை வெறுமனே இந்துத்துவ எதிர்ப்புக்காக மட்டும் அவர் நடத்தவில்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மதவெறி, ஜாதிவெறி, கனிமவள கொள்ளை, இயற்கை வளங்கள் சீரழிப்பு என எல்லா பிரச்சனைகளிலும் நேர்மையான விமர்சனங்களை முன்வைத்தவர் கௌரி.

ஆளும் காங்கிரஸ் அமைச்சர்களைப் பற்றிக்கூட இவர் தனது பத்திரிகையில் எழுதி இருக்கிறார்.

ஆனால், 2008 ஆம் ஆண்டு பாஜக தலைவர்களான பிரகலாத் ஜோஷி, உமேஷ் துஷி, சிவானந்த் பாட், வெங்கடேஷ் மேஸ்திரி ஆகியோரின் மோசடிகளை தனது பத்திரிகையில் வெளியிட்டார் கௌரி. இந்த செய்திக்கான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று கௌரிக்கு ஆறுமாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

அதிலிருந்து ஜாமீனில் விடுதலைப் பெற்ற அவர், தனது செய்திகளுக்கான ஆதாரங்களை திரட்டி மீண்டும் நீதிமன்றம் செல்லப்போவதாக எச்சரித்திருந்தார்.

இந்நிலையில்தான், பல இளம் பத்திரிகையாளர்களின் ரோல்மாடலாக கருதப்பட்ட கௌரியை, புரட்சிகர எழுத்தாளர் கல்புர்கியை சுட்டுக்கொன்ற அதே ஸ்டைலில் கௌரியையும் காவிப் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். தனது நண்பர் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி அறிந்தவுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.  இறுதி நிகழ்ச்சி முடியும்வரை அவருடைய தாயாருக்கு உதவியாக இருந்தார்.

காவிகளின் குண்டுகளுக்கு இரையான முற்போக்காளர்கள்!



கர்நாடக மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள யரகல் என்ற ஊரில் பிறந்தவர் கல்புர்கி. கன்னடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஹம்பியில் உள்ள கன்னடப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றியவர். 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் காவித் தீவிரவாதிகளால் அவரது வீட்டிலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மகாராஸ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நரேந்திர தபோல்கர். பகுத்தறிவாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், மருத்துவர் ஆவார். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டவர். இதற்காகவே இவரை 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி காலை நடைப்பயிற்சி சென்றபோது காவித் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மராட்டிய மாநிலத்தில் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள கோலார் என்னும் சிற்றூரில் பிறந்தவர் கோவிந்த் பன்ஸாரே. மார்க்சிய கொள்கையாளராகவும்,  கம்யூனிஸ்ட் தலைவராகவும் சமூகச சீர்திருத்தவாதியாகவும் வழக்குரைஞராகவும் இருந்தார். 2015 ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 16 ஆம் நாள் அன்று பன்சாரே தனது  மனைவியுடன் நடந்து சென்றபோது, இரண்டு காவித் தீவிவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

(2017 செப்டம்பர் 7 ஆம் தேதி நக்கீரனுக்காக நான் எழுதியது)

Previous Post Next Post

نموذج الاتصال