ஆர்.எஸ்.எஸ்.சின் அக்கிரம விளையாட்டுகளை தடுக்குமா தமிழ்நாடு - இனியன்

நண்பன் பிரபா திருச்சியிலிருந்து சென்னைக்கு காலை வந்ததும் வழக்கம்போல் அறைக்குத்தான் வந்திருந்தான் இன்று. வந்தவன் கடந்த ஒரு மாதகாலமாக child protection task force உடன் இனைந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் மற்றும் அதில் வளரும் குழந்தைகள் பற்றிய ஆய்விற்காக அமைக்கப்பட்ட குழுவோடு வேலைச் செய்த தனது அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தான்.

அப்போது திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் மேலான காப்பகங்கள் “இந்து சேவா” அமைப்புகள் மற்றும் “RSS”யின் நேரடிக் கண்காணிப்பில் இயங்குவதாகச் சொல்லி அவற்றில் மாணவர்களுக்கான விளையாட்டுகள் என்ற பெயரில் எதையெல்லாம் கற்றுத் தருகிறார்கள் பார். நீதான் விளையாட்டுகள் பற்றிப் பேசினால் பேசிக் கொண்டேயிருப்பாயே. அதனால் இந்தக் காணொளியைப் பாரு என்று மூன்று காணொளியைக் காண்பித்தான். அவற்றைப் பார்த்துவிட்டு சற்று ஆட்டம் கண்டுதான் போயிருகிறேன்.

அவர்களுக்குக் கற்பிக்கப்படும் விளையாட்டுகளின் பெயர்கள், சக்கரவீயுகம், விஷ்ணு சக்கரம், துதிக்கை விளையாட்டு என்று மூன்று விளையாட்டுகளுக்கான வீடியோ இருந்தது. அதில் சக்கர வீயுகம் விளையாட்டு மாணவர்களை வட்ட வடிவில் நிறுத்தி உள்ளே சில மாணவர்களை நிறுத்தி வைத்திருகின்றனர். வெளியே ஒரு சிறுவன் நிற்கிறான். இப்படியொரு அமைப்பு உருவான பின்பு அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்ந்து “பார்த் மாத்தாகி ஜே” என்று கோசம் போட்டு விளையாட்டைத் துவக்குகின்றனர். வெளியே நிற்கும் மாணவன் வட்ட வடிவ சக்கர வியுகத்தினுள் பிளவு ஏற்படுத்தி உள்புகுந்து உள்ளே நிற்பவர்களைத் தொட்டு விட்டு மீண்டும் வெளியேற வேண்டும் இதுதான் விளையாட்டு. உள்ளே புகும் போது “ஜெய் காளி” என்று கத்திக் கொண்டு உள்ளே சென்று வரவேண்டும்.

அதே போல் விஷ்ணு சக்கர விளையாட்டு ஒருவன் தனித்து நிக்கிறான் அவனை ஓரிடத்திற்குக் கார்னர் செய்து வட்டமாக நிற்பவர்கள் இணைந்து சுற்றிக்கொண்டே சென்று அவனை வீழ்த்த வேண்டுமாம். இந்த விளையாட்டுத் துவங்கும் போதும் 

“பாரத் மாத்தாகி ஜே” என்று சொல்ல வேண்டுமாம்.

இறுதியாகத் துதிக்கை விளையாட்டு அதில் இரு குழுக்களாகப் பிரிந்து விளையாட வைக்கின்றனர். ஒரு குழுவின் பெயர் இந்தியா மற்றொரு குழுவின் பெயர் பாகிஸ்தான். இந்தியக் குழுவில் இருக்கும் அனைவரும் “பாரத் மாத்தாகி ஜே” என்று சொல்லிக் கொண்டு கைகளைத் துதிக்கைகள் போல் சற்று மடக்கிக் கொண்டு தாக்க ஆரம்பிகின்றனர். இதில் எப்பாடு பட்டேனும் இந்தியக் குழு வெற்றி பெற வேண்டும் இந்த ஒன்றுதான் நிபந்தனை.

மேலும் இதுபோன்ற விளையாட்டுகளை மாணவிகள் விளையாட அனுமதியில்லையாம். அவர்களுக்கு விளையாட்டுகள் என்ற ஒன்றே இல்லையென்றும் வேறு சொல்கிறான் நண்பன். மாணவிகள் காப்பக வேலைகளில் மட்டும் ஈடுபடுத்தப் படுவதாகவும், அங்கு இருக்கும் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் பெற்றோர்களால் கைவிடப் பட்டவர்களாகவும், ஒற்றைப் பெற்றோர் உள்ள வறுமை நிலையில் இருப்பவர்களின் குழந்தைகளாக இருப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்று சொல்கிறான்.

இவற்றையெல்லாம் பார்த்தப் பிறகும் கேட்ட பிறகும் சிறி்து கோபம் வந்தாலும், அடிப்படைவாதிகள் எங்கிருந்து தனது பயிற்சியைத் துவங்குகின்றனர், இதுபோன்ற குழந்தைகளையும் மாணவர்களையும் தங்களது கர சேவகர்களாக மாற்றிக் கொண்டிருப்பதும் தெளிவாகவும் எளிதிலும் புரிந்து கொள்ளமுடிகிறது. இதில் இன்னொரு பெருந்துயரம் என்னவென்றால் விளையாட்டுகள் மட்டுமில்லை ஒவ்வொரு நிகழ்வின் போது அவர்களை “பாரத் மாத கீ ஜே” அப்படியென்று முழங்க வேண்டுமாம். இன்று பாபா ராம்தேவ் போன்றவர்கள் இதையேதான் முன்வைத்து 

”பாரத் மாத கீ ஜே” சொல்லாதவர்கள் தலையை வெட்டியெறிய வேண்டுமென பேசி வருகின்றனர். இதுபோன்ற காப்பகங்களினால் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்காலத்தில் என்னாவார்கள் என்று நினைத்தால் தலைதான் சுற்றுகிறது.

பொதுவாக விளையாட்டுகள் சமத்துவத்திற்கும், உடல்வலுவிற்கும், மனோதிடத்திற்கும்தான் விளையாடப் பட வேண்டும். ஆனால் இதுபோன்ற அமைப்புகள் விளையாட்டுகளிலே மதத்தையும் வெறுப்புணர்வையும் தூண்டி விட்டுக் கொண்டிருகின்றனர் என்பதும். அதைவிட நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டிய காலக் கட்டாயத்தில் இருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

Previous Post Next Post

نموذج الاتصال