ஜூன் 4 மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டதை வெளிப்படையாகக் காண முடிந்தது. 2024 பொதுத் தேர்தலில் இந்தியா பிழைத்தது. இந்திய ஜனநாயகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. ஜனநாயக நடவடிக்கைகள் தொடர தேர்தல் முடிவுகள் ஆதாரமாக உள்ளதாக உணர்கின்றனர்.
மூன்றாவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி தோல்வியற்றவராகத் தோன்றுகிறார்.அவரது ஆதரவாளர்கள் தங்கள் தோற்றுவிட்டது போல நடந்து கொள்கின்றனர். ஆனால் மறுபக்கத்தில் எதிர்க்கட்சிகளோ வெற்றி பெற்றவர்கள் போலத் தெரிகின்றனர்.
இன்னொரு கிரகத்திலிருந்து வந்துள்ள பார்வையாளர் ஒருவருக்கு இரு தரப்பும் வெற்றி பெற்ற தொகுதிகள் எண்ணிக்கையைப் பார்த்தால் தேர்தலுக்குப் பின்னர் நடப்பது பொருத்தம் அற்றதாக தோன்றலாம்.
அனைத்திலும் தன்னை மட்டுமே முன்னிறுத்தும் மோடி இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் கேரண்டி,தேசிய ஜனநாயக கூட்டணியின் தொடர்ச்சியான மூன்றாம் முறை ஆட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்று தனது முழக்கங்களை மாற்றுகிறார்.
இப்போது, மோடி மூன்றுமுறை பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட அவரது கட்சியைச் சேர்ந்த வாஜ்பாயின் (1996,1998,1999) வழியை பின்பற்றுகிறார். ஆனால் மோடி விரும்புவது விடுதலைப் போராட்ட வீரரும் ,இந்தியாவின் புகழ் பெற்ற தலைவருமான நேருவின் சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்பதுதான்.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1946 தேர்தலில் காங்கிரசை வழிநடத்தி அக்கட்சி வெற்றி பெறவைத்ததில் நேருவுக்கு முக்கிய பங்கு இருந்தது. பின்னர் 1946 பிரிட்டிஷ் இந்திய அரசு வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் துணைத் தலைவரான நேரு அலுவல் முறை பிரதமராக இருந்தார். 1947 ஆகஸ்ட் 15 மற்றும் 1950 ஜனவரி 26 லும் பிரதமராக பதவி ஏற்று கொண்டார்.1952, 1957 மற்றும் 1962 பொதுத்தேர்தல்களில் காங்கிரசை வெற்றி பெறச் செய்தார்.
2024 தேர்தல் முடிவுகளால் மோடி அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் செல்வாக்கு இழந்து நிற்கிறார். உத்தரப் பிரதேசம் அவர் தத்தெடுத்துக் கொண்ட மாநிலம். அந்த மாநிலம்தான் அவரை மூன்று முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்தது. அந்த உத்தரப்பிரதேசம் இப்போது பாஜகவுக்கு அதிர்ச்சிகரமான தோல்வியை வழங்கியுள்ளது.
வாரணாசி மண்டலத்தில் உள்ள 12 தொகுதிகளில் 9 தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்துள்ளது. அயோத்தி மண்டலத்தில் உள்ள 9 தொகுதிகளில் 5 தொகுதிகளில் பாஜக தோற்கடிக்கப்பட்டுள்ளது. வளரும் சமூகங்களில் ஆய்வுக்கான மையம் (Centre for the Studies of Developing Societies) எனும் நிறுவனத்தின் தேர்தலுக்குப் பிந்தைய ஆய்வின்படி, உத்தரப்பிரதேச வாக்காளர்கள் 36% பேர் ராகுல் காந்தி பிரதமராவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். 32 % பேர் மோடி பிரதமராகத் தொடர ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். 1992 இல் இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் அரைகுறையாக, அவசரமாகக் கட்டப்பட்ட ராமர் கோவிலை மோடி இந்து வாக்குகளைக் கவர்வதற்காக அவசரமாகத் திறந்தார். ராமர் கோவில் மோடியின் பெருஞ் சாதனையாகவும் 2024 தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பெரும் வாய்ப்பாகவும் கருதப்பட்டது.
இந்தியா முழுவதும் மோடி நடத்திய ரோடு ஷோக்கள் மிகச் சிறிய அளவிலான பலனையே அளித்தது. அவர் பிரச்சாரம் செய்த மொத்த தொகுதிகளில், 50% தொகுதிகளில் அவரது கட்சியினர் தோல்வி அடைந்தனர். ஆனால் 2019 தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்த தொகுதிகளில் 85% இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தலில் மோடி முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரமாக மதவெறி நெஞ்சைக் கக்கினார். அவர் தீவிரமாக மதவெறிப் பிரச்சாரம் மேற்கொண்ட தொகுதிகளில், அது ராஜஸ்தானின் பனஸ்வாரா ஆனாலும், குஜராத்தின் பனஸ்கந்தா ஆனாலும் சரி- வாக்காளர்கள் பாஜகவை நிராகரித்தனர். அவரது வேடங்கள் சலித்துப் போய்விட்டன.
மோடியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட சோர்வை முக்கிய மீடியாக்கள் மறைத்தன. ஆனால் வாக்காளர்களின் உணர்வு வாக்குச்சாவடிகளில் வெளிப்பட்டது.மோடி தப்பிப் பிழைத்து விட்டார். 2024 தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சமமான ஆடுகளம் இல்லை. மோடிக்கு சாதகமாக தேர்தல் களம் உருவாக்கப்பட்டது.
இந்தியத் தேர்தல் ஆணையம் தனது பாரபட்சம், திறமையின்மையை நிரூபித்தது. தேர்தலின் போது, ஒவ்வொரு நாளும் மோடியும், பாஜக தலைவர்களும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினார்கள். தேர்தல் பத்திரங்கள் தீர்ப்புக்குப் பின்னர் உச்சநீதிமன்றமும் காணாமல் போய்விட்டதாகவே தோன்றியது.தேர்தல் நடைமுறைகள் பற்றிய மக்களின் சந்தேகங்களை இந்தியத் தேர்தல் ஆணையமும்,உச்ச நீதிமன்றம் வலுப்படுத்தியது.
இந்திய தேர்தல் ஆணையமும், நீதித்துறையும் இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.தேர்தலின் போது இரண்டு மாநில முதல்வர்கள் கைது செய்யப்பட்டனர். ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் மோடி அரசின் அழுத்தங்களினால் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறி வைத்து வேட்டையாடின. தேர்தல் காலம் முழுவதும் இந்த விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களை விசாரணைக்கு அழைத்துக் கொண்டே இருந்தன. எதிர்க்கட்சிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. முக்கியமான பெரும் ஊடகங்கள் அனைத்தும் மோடி மற்றும் பாஜகவின் ஏவலாட்களாக மாறி வெளிப்படையாகவே எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் தொடுத்தன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் வாக்காளர்களை பாஜகவுக்கு வாக்களிக்கத் தூண்டும் வகையில் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன.
மோடிக்கு சாதகமாக எல்லா வகையிலும் தேர்தல் மோசடிகள் நடந்தன. குத்துச்சண்டைப் போட்டியில், நடுவர் ஒரு குறிப்பிட்ட வீரருக்கு சார்பாகவும், அவரை எதிர்த்துப் போட்டியிடும் வீரரின் கால்களும் கைகளும் கட்டப்பட்டது போன்ற நிலைமை தான் 2024 பொதுத் தேர்தலில் இருந்தது.
பத்திரிகையாளர் எட்வர்டு லஸ் என்பவர் “ சமநிலை தவறாமல் உரத்துக் குரல் எழுப்பும் நடுநிலை மீடியாக்கள், சுதந்திரமான நீதித்துறை, விழிப்புணர்வு மிக்க குடிமைச் சமூகம் ஆகியவற்றின் துணையும், ஆதரவும் இருந்திருக்குமானால் 2024 பொதுத் தேர்தலில் மோடியும், அவரது கட்சியும் நிச்சயமாகத் தோற்று போயிருக்கும்” என்கிறார்.
எனவேதான் இந்தத் தேர்தல் முடிவுகள், இந்திய ஜனநாயகம் ஆரோக்கியமான நிலையில் உள்ளது என்பதற்கான தீர்ப்பாகாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சிகள் நன்றாகவே செயல்பட்டன. எதிர்க் கட்சிகள் அப்பட்டமான, பாரபட்சமான, நியாயமற்ற அமைப்புகளுக்கு மத்தியில் தான் இதைச் சாதிக்க முடிந்தது. எனவேதான், அவர்கள் பெரும்பான்மையை பெற முடியாவிட்டாலும் கூட அவர்களே வெற்றியாளர்கள் என்று பாராட்டப்படுகின்றனர்.
கூட்டணி அரசு மோடியின் எதேச்சதிகார நடவடிக்கைகளை ஓரளவு கட்டுப்படுத்தும் என்று சொல்லவே முடியாது. ஒன்றிய அரசின் வலிமையான அதிகார அமைப்புகள் அனைத்தும் மோடி- அமித்ஷா இரட்டையரின் கைகளில் உள்ளன. எனவே இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் பாதுகாப்பான எதிர்காலம் இல்லை. மோடி ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளின் ஆதரவு அவசியம். இவை தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பவாதக் கட்சிகள். பல்வேறு பிரச்சனைகளில் உறுதியான நிலைபாடு இல்லாதவை. அரசியல் உறுதியோ, தைரியமோ கொள்கைப் பிடிப்போ இல்லாதவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 2002இல் குஜராத்தில் முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது இந்த இரண்டு கட்சிகளுமே பாஜக ஒன்றிய ஆட்சியில் நீடித்தன. 2014 தேர்தலில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்டனர். இப்போது மீண்டும் திரும்பி விட்டனர்.
மோடி ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளின் ஆதரவு அவசியம். இவை தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பவாதக் கட்சிகள். பல்வேறு பிரச்சனைகளில் உறுதியான நிலைபாடு இல்லாதவை. அரசியல் உறுதியோ, தைரியமோ கொள்கைப் பிடிப்போ இல்லாதவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 2002இல் குஜராத்தில் முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது இந்த இரண்டு கட்சிகளுமே பாஜக ஒன்றிய ஆட்சியில் நீடித்தன. 2014 தேர்தலில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்டனர். இப்போது மீண்டும் திரும்பி விட்டனர்.
இப்படிப்பட்டவர்கள் இந்திய ஜனநாயகம் மற்றும் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பார்கள் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது. இது உலகக் கால்பந்து போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதைப் போன்றதாகும்.
மோடி கூட்டணி அரசை நடத்த வேண்டிய கட்டாயம் குறித்து உற்சாகம் அடைகின்றனர்.இது இந்தியாவுக்கு மிகவும் நல்ல விசயம் என்று மேலை நாடுகளின் மீடியாக்களும் ரகுராம் ராஜன் போன்ற அறிஞர்களும் கூறுகின்றனர்.
இது போன்ற ஆரவாரப் பேச்சுகள் மிகவும் தவறானவை. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வெற்றி பெற்றபோது இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்கள் மோடியை கட்டுக்குள் நிறுத்தி வைக்கும் என்று பலரும் உறுதி அளித்தனர். என்ன நடந்தது என்பதை நாம் எல்லாம் அறிவோம்..
பத்து ஆண்டுகளாக தங்களை விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்களுக்கு எதிராக அரசமைப்பு நிறுவனங்களைத் தவறாக பயன்படுத்தி மோடியும், அமித்ஷாவும் செயல்பட்டார்கள்; தங்களின் RSS திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தினார்கள் என்பதைப் பார்த்தோம். அரசமைப்பு நிறுவனங்கள் அனைத்தையும் தவறாகப் பயன்படுத்தி பலன் அடைந்த மோடியும், அமித்ஷாவும் முன்பை விட ஆபத்தானவர்களாக இருக்கின்றனர். இனி எதிர்காலத்தில் பாஜக மிக மோசமான தீங்குகளைச் செய்யும்; ஈவிரக்கமின்றி நடந்து கொள்ளும்.
மோடி தனது குணத்தை அவ்வளவு எளிதாக மாற்றிக் கொள்ள மாட்டார்.தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது ஆயிரம் ஆண்டுகளுக்கான தொலைநோக்கு பார்வை பற்றிப் பேசினார். ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,” தான் உயிரியல் ரீதியாக பிறக்கவில்லை. கடவுள் ஒரு நோக்கத்திற்காக தன்னை அனுப்பி உள்ளதாக அறிவித்தார்.”
அந்த நோக்கம் எது?
குஜராத் முதல்வராக, நாட்டின் பிரதமராக அவரது கடந்த கால செயல்பாடுகளாக இந்துத்துவ சித்தாந்த அடித்தளத்தில் சர்வாதிகாரம், தேசியவாதம், பாப்புலிசம் ஆகியவற்றைப் பார்த்தோம். அரசியல் ரீதியாகவும், தேர்தல் ரீதியாகவும் கடும் இழப்பைச் சந்தித்த பின்னரும் கூட மோடி திருந்தியுள்ளார் என்பதற்கான எந்த அறிகுறியும் அவரிடம் காணப்படவில்லை. இந்திய வாக்காளர்கள் தேர்தல் தீர்ப்பு மூலம் வழங்கிய செய்தியை மோடி ஏற்றுக் கொள்ளவே இல்லை.
இப்போது மோடி திடீரென தாராளவாதியாக மாறி விடுவார் என்று முட்டாள்கள் தான் பந்தயம் கட்டுவார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும். எதேச்சதிகார நிகழ்ச்சி நிரல் முன்பை விட இரு மடங்கு அதிகமாகும். அரசமைப்பு நிறுவனங்கள் எதிர்க்கட்சிகளை வேட்டையாடுவது தொடரும். எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பழி வாங்கப்படும். முஸ்லிம்கள் ஓரம் கட்டப்படுவதும் குறிவைத்து தாக்கப்படுவதும் தொடரும். சட்ட ரீதியான வழிமுறைகள் மூலமாக மசூதிகளை கோவில்களாக மாற்றும் நடவடிக்கைகள் தொடரும். கார்ப்பரேட் மீடியாக்கள் மோடியின் அறிவிக்கப்படாத பிரச்சாரகர்களாக செயல்படுவது தொடரும். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பாகிஸ்தானை குறிவைத்து தேச வெறியை , மத உணர்வுகளைத் தூண்டுவதன் மூலம் மக்களைத் தன் பின்னால் திரளச்செய்யும் மோடியின் முயற்சிகள் தொடரும்.
இவையெல்லாம் தேசத்தை மதரீதியாக, பிராந்திய ரீதியாக பிளவுபடுத்தும் எனும் போதிலும், தனது ஆட்சி அதிகாரத்தை பாதுகாக்க, வலுப்படுத்திக் கொள்ள RSS பிரச்சாரகர் மோடிக்கு தெரிந்த ஒரே வழி இதுதான்!
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரே ஒரு முஸ்லிம், சீக்கிய, கிறிஸ்தவ எம்.பி கூட இல்லை. நடப்பு நாடாளுமன்ற மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐந்தில் ஒரு இந்தியர் பிரதிநிதித்துவப் படுத்தப்படவில்லை. பஞ்சாப், காஷ்மீர், லடாக், மணிப்பூர், நாகலாந்து மற்றும் லட்சத்தீவு ஆகிய எல்லையோர மண்டலங்களில் பாஜகவுக்கு ஒரு மக்களவை உறுப்பினர் கூட இல்லை. இந்தப் பகுதிகளில் பாஜகவின் மண்டல ரீதியான, மத ரீதியான ஆதரவு மிகவும் சுருங்கிப் போய்விட்டது. பலவீனமான மோடி மீண்டும் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் தமது செல்வாக்கை மீட்க வாய்ப்பு இல்லை.
சர்வாதிகாரிகள் தோல்வியுற்றுப் போராடும்போது, மக்களைத் தங்களின் பின்னால் அணிதிரளச் செய்ய மிகவும் மோசமான நடவடிக்கைகளை நாடுவார்கள். அதிருப்தியாளர்களின் குரலை ஒடுக்குதல், சக இந்திய குடிமக்களுக்கு எதிராகக் வெறுப்புணர்வைத் தூண்டுதல் மூலமாக பாஜக இன்னும் கூடுதலாக மதப் பிளவுவாத, மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காத கட்சியாக மேலும்மேலும் மாறும்.
மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் எதிர்காலம் கடுமையான ஆபத்தில் உள்ளது. தேர்தல் முடிவுகள் இந்திய ஜனநாயகத்திற்கு வெற்றிதான் எனினும் மோடியின் கீழ் உள்ள மோசடி அரசியல் முறைகளை நாம் காண தவறி விடக்கூடாது. கூட்டணி ஆட்சி என்றாலும் கூட்டணி இல்லாவிட்டாலும் கூட மோடி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நிலையில் இந்தியாவின் பயணம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது.இதைத் தடுத்து நிறுத்துவதற்கான ஊக்கத்தை தேர்தல் முடிவுகள் நமக்கு வழங்கியுள்ளன. மக்களின் இந்த நீண்ட ஜனநாயகப் பயணத்தில் மோடியின் அரசியல் இழப்பு என்பது முதல் அடிதான்...