மக்ஸீம் கார்க்கியின் 'தாய்' நாவல் பற்றி... - ஆதனூர் சோழன்

 

மக்ஸீம் கார்க்கியின் என்கிற நாவலில் ஒரு தாய் வருவாள். அவள் பெயர் பெலகெயா நீலவ்னா. குடிகாரப் புருஷனிடம் அடிவாங்குவதும், அவனுடைய முரட்டுத்தனமான இச்சையை தீர்ப்பதும் மட்டுமே அவளுடைய வாடிக்கையான கடமை. கணவன் ஒருநாள் இறந்துவிட்டான்.
அவளுடைய மகன் பாவெல் விலாஸவ். அன்றைய ரஷ்ய சமூக அமைப்பின்படி ஒரு மகன் எப்படி மாறுவதற்கு வாய்ப்புகள் மலிந்திருந்தனவோ, அந்தத் திசையில் அவனும் திரும்பினான்.
தந்தையின் மரணத்துக்கு பின், தந்தையைப் போலவே குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தாயிடம் சண்டையிட்டான். தாய், ஒரு கனிவான பார்வையுடன் மகனின் தலையைக் கோதி,
“உன் அப்பாவைப் போலவா நீயும் மாறப்போகிறாய்?” என்று கேட்டாள்.
அவன் போல்ஷ்விக் இயக்கத்தில் சேர்ந்தான். அவனுடைய அறிவு உலகளாவி விரிந்தது. அவன் மனிதனை நினைத்தான். தன்னுடைய சக அடிமைச் சகோதரர்களைப் பற்றிச் சிந்தித்தான்.
ஜார் அரசாங்கத்திற்கு எதிராகவும், அன்றைய பயங்கர அடக்குமுறைகளுக்கு எதிராகவும் திரைமறைவு வேலைகள் செய்து மக்களை உசுப்பிவிட்டான்.
சாஷா என்ற இயக்கத் தோழியை பாவெல் விலாஸவ் மிகவும் விரும்பினான். பாவெல் சிறைப்படும் சமயங்களில், பாவெலின் தாய்க்கு கல்வியறிவு கொடுத்தாள். அவளையும் அறிவுப்பூர்வமாக சிந்திக்கச் செய்தாள்.
தனது மகனின் புனிதப் போராட்டம் குறித்து தாய்க்கு புரிந்தது. அந்தப் போராட்டத்தில் அவளுக்கும் அளவுகடந்த பற்று ஏற்பட்டது. சாஷாவை அவளும் நேசித்தாள்.
ஆனால், விடுதலை வீரனுக்கு காதல் கனவு வீணானது என்கிற அடிப்படையில் சாஷாவின் காதலை பாவெல் நிராகரித்தான். ஆனால், அவளுடைய நட்பை விரும்பினான். சாஷாவும் அவனைப் புரிந்துகொண்டாள்.
தாயும் சாஷாவும் கிராமப்புறங்களில் மாறுவேடத்தில் துண்டறிக்கைகளை வினியோகித்து மக்களை ஒன்றுபடுத்தினர். ஒரு சிக்கலான நேரத்தில் மகனை நீதிமன்றக் கூண்டில் ஏற்றி விசாரித்தனர்.
தனது குழுவினரின் சார்பில் பாவெல் நீதிமன்றத்தில் பேசினான். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தும் தங்கள் முயற்சியை பகிரங்கமாக விளக்கி முழக்கமிட்டான்.
அந்த அற்புதமான முழக்கத்தை இரவோடு இரவாக அவனுடைய தோழர்கள் அச்சேற்றினர். அந்த துண்டு அறிக்கையை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு ஏற்பாடு செய்தனர். அதாவது தகுதியான ஆட்களிடம் ஒப்படைத்தனர். ஆனால், அவர்கள் தாயை ஒதுக்கினார்கள்.
அந்தத் தாய் இயக்கத் தோழர்களிடம் கெஞ்சினாள். தனது மகனின் வீர முழக்கத்தை பரப்புவதற்கு தனக்கும் ஒரு வாய்ப்பு வேண்டும் என்று மன்றாடினாள்.
“இது உங்கள் உயிருக்கு ஆபத்தான வேலை” என்று அவளுக்கு விளக்கினார்கள். ஆனால், அவள் பிடிவாதமாக கெஞ்சினாள். கடைசியாக அவளுக்கும் ஒரு பகுதிப் பொறுப்பு வழங்கப்பட்டது.
தனது மகனின் வீர முழக்கம் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை தோளில் சுமந்து புகை வண்டிக்கு காத்திருந்தாள். ரகசியப் போலீஸ் அவளைக் கண்காணித்தது. ரயில் நிலையத்திலும் அவளை பின்தொடர்ந்தது.
இனி தப்ப முடியாது என்று தாய் முடிவுக்கு வந்தாள். உடனே, அவள் தனது பையிலிருந்த துண்டுப் பிரசுரங்களை அள்ளி ரயிலுக்கு காத்திருந்த கூட்டத்தினர் மத்தியில் வீசினாள். கூட்டம் அவளை நோக்கித் திரும்பியது. போலீஸ் விரைந்து வந்து அவளுடைய குரல்வளையை அழுத்தியது.
இருந்தாலும் தனது மகனின் வீர முழக்கத்தை ரயில் நிலையத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வினியோகித்த மன நிறைவோடு,
“ஜார் அரசாங்கம் ஒழிக”
“பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் வாழ்க” என்று கீச்சிட்ட குரலில் முழங்கிச் சாய்ந்தாள்.
வாழ்ந்தால் இந்தத் தாயைப் போல வாழ வேண்டும்.
“இறக்கக் காலம் வந்தால் அல்லவோ, பறக்கச் சிறகை விரிக்கும் ஈயலும்” என்று ஒரு மொழி உண்டு.
இறப்பதற்காகவே ஈசலுக்கு சிறகு முளைக்குமாம்.
ஒருநாள் வாழ்ந்தாலும் உலகுக்காக வாழ வேண்டும்!

(1979ல் கல்லூரி முடித்து வீட்டில் இருந்த சமயத்தில் நான் படிப்பவற்றைப் பற்றியும் சொந்தமாக யோசிப்பதையும் எழுதிக் கொண்டே இருப்பேன். அந்தக் கையெழுத்துத் தாள்கள் நொறுங்கும் நிலையில் இருக்கின்றன. பெரும்பாலும் பதிப்பித்து விட்டேன். துண்டு துண்டாய் எழுதப்பட்ட தாள்கள் கண்களில் பட்டன. அவற்றில் தாய் நாவல் குறித்து எனது சுருக்கமான விளக்கம் இது.)
-அ.சோழராஜன்
Previous Post Next Post

نموذج الاتصال