குறியீடு கண்டுபிடிக்கும் இன்னுமொரு குறிசாலன் என்று என்னைத் தவறாகக் கேவலமாக நினைக்க மாட்டீர்கள் என்றால் ஒன்று சொல்வேன்.
வாழை படத்தில் அந்த சிறுவனை மற்ற கதாபாத்திரங்கள் சிவனைஞ்சான் என்று அழைத்தாலும், விமரசனங்களிலும் வீடியோக்களிலும் (நெல்லை வட்டாரத்தைச் சேராத) பலரும் அந்த பெயரைச் சிவனைந்தான், சிவநந்தன் என்று பல வடிவங்களில் குறிப்பிட்டாலும் உண்மையில் அந்த பெயர் சிவனிணைந்தான் என்பதே.
சிவனிணைந்த அல்லது சிவனணைந்த பெருமாள், நெல்லை வட்டார சுடலை மாடன், சாஸ்தா, அய்யனார் கோயில்களில் காணப்படும், 'சிவனின் ஒரு அவதாரம்' என்று மக்களால் பரவலாகத் தவறாக நினைத்துக் கொள்ளப்படும் ஒரு நாட்டார் தெய்வம். 90கள் வரை சிவனணைந்தான் என்கிற பெயர் அந்த வட்டார கிராமங்களில் குழந்தைகளுக்கு வைக்கப்பட்டதொரு பெயர் தான்.
சரி.. ஒரு சாமி பெயரை ஒரு கதாபாத்திரத்துக்கு வைப்பதில் என்ன பெரிய விசயம் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது..
அந்த சாமியே சாதி ஆணவப் படு கொலைக்கு ஆளான அப்பாவி என்பது உங்களுக்குத் தெரியுமா?
நாயக்கர்கள் மதுரையைப் பிடித்துக் கொள்ளத் தென்காசிக்கு வந்து, அதைத் தலைநகராகக் கொண்டு குறுநில மன்னர்களாக ஆண்ட பிற்கால பாண்டியர்களில் கடைசியில் இருந்து நான்காவதாக, 16ம் நூற்றாண்டின் கடைசியில் ஆண்ட சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் என்கிற மன்னனின் சகோதரி மகன் தான் இந்த சிவனிணைந்த பெருமாள்.
அந்த சிவனிணைந்தான் ஒரு வண்ணார் சாதியில் பிறந்த பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து, அவளைப் பெரும்பாடு பட்டுச் சம்மதிக்க வைத்து, அவளுடன் ஊரை விட்டு ஓடிப் போய், ஒரு மலைக் குகையில் குடும்பம் நடத்த, கவுண்டம் பாளையம் ரஞ்சித் போல கொலைகார காட்டுமிராண்டி சாதிவெறிக் கிரிமினலாகிய அந்த தாய் மாமா மன்னன், அவனைப் பிடித்துக் கொண்டு வந்து, காவி உடை, ஆணிச் செருப்பெல்லாம் போட்டு விட்டு, ஆறு மாதமாகக் கட்டி வைத்துப் பட்டினி போட்டு அடித்துத் துன்புறுத்திக், கடைசியில் கழுவேற்றிக் கொன்றான். சொந்த மருமகனையே கொடூரமாகக் கொன்றவன் அந்த பெண்ணை, அவள் குடும்பத்தை என்ன செய்தானோ?!
அப்படி அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட அந்த அப்பாவி, முனியாக வந்து பயமுறுத்தக் கூடாது என்பதற்காகத்தான், அந்த அரசகுல இளைஞனை, அவன் இறக்கும் முன் போட்டிருந்த சடாமுடி காவி உடை சகித முனிவர் கெட்டப்பில் வைத்து, ஒரு நாட்டார் தெய்வமாகவே ஆக்கி விட்டார்கள் மக்கள்.
அதே நெல்லைச் சீமையில் இன்னொரு நாட்டார் தெய்வமான பட்ராயனும், பார்ப்பனச் சாதியில் பிறந்து அருந்ததிய சாதிப் பெண்ணை மணந்ததற்காகக் கொலையில் முடிந்த கொள்ளை போல் சித்தரிக்கப்பட்ட சாதி ஆணவக் கொலைக்குப் பலியான இன்னொரு அப்பாவி தான்.
இப்படி நம் சாமிகள் கூட சாதி வெறியில் இருந்து தப்ப முடியவில்லை! வேத மதம், பக்தி இயக்கம் வந்த பிறகான, நமது, கடந்த சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டு கால வரலாறு இப்படிப்பட்ட கேவலமான சாதிவெறி பிடித்த கப் அடிக்கிற வரலாறு தான்.
இந்த சொரி சிரங்குச் சீழ் பிடித்த உடம்பை மறைத்துப் பாதுகாக்கத் தான் குடிகளுக்கான தமிழ்த் தேசியம் என்கிற போர்வை போர்த்தப் பார்க்கிறது ஒரு லும்பன் சங்கிக் கும்பல். ஆனால் அதே சீழை வழித்தெடுத்து மருந்து வைத்துக் கட்டுப் போடப் பார்க்கிறது திராவிட கருத்தியல்.
மாரி செல்வராஜ் இந்த கதையெல்லாம் தெரிந்து தான், ஒரு குறீயீடாக இந்த பெயரை முக்கிய பாத்திரத்துக்கு வைத்தார் என்று தோன்ற வில்லை. ஆனாலும் எதோ இது பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. எழுதி விட்டேன்!
பி.கு:
1) இந்த சடையவர்மன் அதிவீரராம பாண்டியனுக்கு ஸ்ரீவல்லப மாறன் என்கிற 'சீவல'மாறன் என்கிற பெயரும் உண்டு. சீவலப்பேரி பாண்டி படப் புகழ், நெல்லைக்கு அருகிலுள்ள சீவலப்பேரி ஊர்ப் பெயர்க் காரணம் இது தான்.
2) இவன் கொற்கையை ஆண்டவன் என்று சொல்லப்பட்டாலும் செங்கோட்டை பார்டர் பரோட்டா கடை முதல், கடற்கரை நகரான கொற்கை வரை இன்றைய தென்காசி,நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைத், தென்காசியில் இருந்து ஆண்டவன் என்பதே உண்மை.
3) இதே மன்னன் தான் வெற்றி வேற்கை என்கிற நீதி நெறி நூலை எழுதி, அதில் 'பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று பிச்சை எடுத்தாவது படிக்கச் சொன்னவன். அதே நூலில் இந்த குலத்தில் பிறந்தவர் இதைச் செய்வதே நீதி என்று சனாதன வர்ணாசிரமம் பேசியவனும் அவனே. இது போக பல புராண பக்தி இலக்கியங்களை எழுதிய அதே மன்னன் தான் கொக்கோகம் என்கிற பலான சமஸ்கிருத நூலை தமிழில் கஷடப்பட்டு மொழிபெயர்த்தவன். பக்தி - பலானது.. குட் காம்பினேஷன்!
4) சிவனிணைந்த பெருமாளின் தந்தை பிற்காலச் சோழ வம்சத்தில் அரியனை ஏற முடியாத இளவரசர்கள் பாண்டிய நாட்டுக்குச் சிற்றரசர்களாக அனுப்பப்பட போது உருவான 'சோழ பாண்டிய' பரம்பரையில் வந்து, நெல்லையை அடுத்த மானூரின் 'குற்றரசனாக' இருந்த செண்பகராமச் சோழ பாண்டியன்.