எல்லாம் நம் கையில்..! - ஆதனூர் சோழன்

 

ஞானி ஒருவர் வாழ்ந்தார்.

அவரை தனது மனக்கண்ணில் முக்காலத்தையும் அறிந்து சொல்பவர் என மக்கள் நம்பினர்.

குறும்புக்கார சிறுவன் ஒருவன் அவரை சோதிக்க விரும்பினான்.

சிறிய பூச்சி ஒன்றை தனது இரண்டு விரல்களுக்கு இடையில் பிடித்து மறைத்தபடி ஞானியிடம் போனான்.

“எனது விரல்களுக்கு இடையே ஒரு பூச்சி உள்ளது. அது செத்து விட்டதா? உயிரோடு இருக்கிறதா?” என்று அவரிடம் கேட்டான்.

ஞானி செத்துவிட்டது என்று சொன்னால் பூச்சியை உயிரோடு விடுவித்து விடுவது, உயிரோடு இருக்கிறது என்று சொன்னால் அந்த பூச்சியை அழுத்தி கொன்று விடுவது என அந்தச் சிறுவன் முடிவு செய்திருந்தான்.

ஞானி லேசாக சிரித்தபடி, “எல்லாம் உன் கைகளில் இருக்கிறது மகனே” என்றார்.

மனித உடலில் மனம், இதயம் நீங்கலாக கைகள் மிகச் சிறந்த உறுப்பாக கருதப்படுகின்றன.

மனித இனம்தான் கைகளை பெற்றுள்ளது. பெரும்பாலான விலங்குகளுக்கு கைகள் கிடையாது.

அணிலோ, குரங்கோ தங்கள் முன்னங்கால்களை அவ்வப்போது கைகளாக பயன்படுத்திக் கொள்கின்றன.

நிலத்தை உழவும், தானியங்களை சேகரிக்கவும், உணவை தயார் செய்து சாப்பிடவும் கைகள் பயன்படுகின்றன.

நாகரீக சமுதாயம் நமக்கு கற்றுக் கொடுத்த விஷயங்களை எழுதவும், டைப் செய்யவும் கைகள் உபயோகமாக உள்ளன.

இவை அனைத்தும் முக்கியமானவை என்றாலும் கூட, இன்னும் மிகப்பெரிய காரியங்களிலும் கூட கைகள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.

ஓவியம் வரைவது, வண்ணம் தீட்டுவது, இசைக்கருவிகளை இசைப்பதெல்லாம் இதமளிக்கிற விஷயங்கள்தானே.

நாட்டியத்திலும் கைகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட்டியத்தின் முக்கியமான பாஷைகளை கைகள்தான் அபிநயம் செய்து வெளிப்படுத்துகின்றன.

பேச இயலாதவர்கள் பிறருடன் தொடர்பு கொள்ளவும், பார்க்க இயலாதவர்கள் தங்கள் வழியை உணரவும் கைகள் உதவுகின்றன.

பார்க்கும் சக்தி இருந்தாலும், இருளுக்குள் ஒருவரை கொண்டு போய்விட்டால் அவர் தனது கைகளை அங்குமிங்கும் துழாவி பிடிமானம் தேடுவதை பார்த்திருக்கிறோம்.

நமது விருப்பங்களையும், வாழ்த்துக்களையும் வெளிப்படுத்த கைகளை அசைக்கிறோம் அல்லது வணங்குகிறோம்.

ஒருவரை உற்சாகப்படுத்தும் போதோ அல்லது ஒரு சாதனையை பாராட்டும் போதோ பெருவிரலை இறுக்கி முஷ்டியை உயர்த்துகிறோம்.

போக்குவரத்து போலீஸ்காரர் தனது கைகளை கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறார்.

இந்தச் சமயத்தில் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

இரண்டு சிறுவர்கள் தங்களுடைய தந்தையின் பெருமைகளை பேசிக் கொண்டனர்.

ஓடுற காரை என்னோட அப்பா ரெண்டு கையாலயும் இழுத்து நிறுத்திடுவார் -என்று ஒரு சிறுவன் சொன்னான்.

அடேங்கப்பா, இதென்ன பெரிய விஷயம் என்னோட அப்பா ஒரு கையாலேயே வரிசையா வர்ற வாகனங்களை நிறுத்திடுவார் என்று மற்றவன் கூறினான்.

அவனோட அப்பா ஒரு டிராபிக் போலீஸ்.

மற்றவர்களை உற்சாகப்படுத்த கைகளைத் தட்டுகிறோம்.

ஒரு கை ஓசை தராது என்கிறோம். ஒரு உடன்படிக்கை ஏற்பட வேண்டுமானால் இருதரப்பினரும் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒருவர் மட்டும் ஒப்புக் கொண்டு ஒன்றும் ஆகாது என்பதை இப்படிக் கூறக் கேட்டிருக்கிறோம்.

நாம் சிறு குழந்தைகளாக இருந்தபோது, பெற்றோரின் கை பிடித்து நடக்கிறோம். வளர்ந்த பிறகு நண்பர்களின் கரம் கோர்த்து நடக்கிறோம். திருமண வயதில் வாழ்க்கைத் துணையின் கைபற்றுகிறோம்.

பின்னர் குழந்தைகளை பெற்றுக் கொள்ளும்போது, அவர்களை கைகளில் வாரியெடுத்து கொஞ்சுகிறோம்.

அந்த வகையில் குழந்தைகளை கைகளில் எடுத்து கொஞ்சும் வாய்ப்பு மனித ஜீவனுக்குத்தான் உண்டு.

குரங்கு குட்டி தனது தாயின் வயிற்றை கவ்விப்பிடித்து கொள்ளும். கங்காரு குட்டி தனது தாயின் வயிற்றில் உள்ள பையில் பத்திரமாக பதுங்கிக் கிடக்கும்.

இப்படி நினைத்துப் பாருங்கள். பாம்பு தனது குட்டியை பற்ற முடியுமா?

கிரிக்கெட் வீரரின் கையில் பந்தடிக்கும் மட்டை, மந்திரவாதியின் கையில் மந்திரக்கோல், டாக்டரின் கையில் அறுவைக்கத்தி, வழக்கறிஞரின் கையில் சூட்கேஸ், ரயில்வே கேட் கீப்பரின் கையில் சிக்னல் கொடி, உழைப்பாளியின் கையில் அரிவாள் மற்றும் சுத்தியல் என்று தொழில் ரீதியாக பல்வேறு பொருட்களை கைகள் பற்றும்.

ஒருவர் பெரிய தர்பூசணி பழத்தை இரண்டு கைகளிலும் பற்றியபடி நடந்து கொண்டிருந்தார்.

எதிரே வந்தவர் ஒரு அட்ரசைக் காட்டி தெரியுமா என்றார்.

உடனே தர்பூசணிப் பழத்தை அட்ரஸ் கேட்டவரிடம் கொடுத்த அந்த நபர் பின்னர் தனது இரண்டு கைகளையும் விரித்து ஆட்டி எனக்குத் தெரியாது எனக் கூறினாராம்.

உதவும் கரங்கள் என்கிறோம். காக்கும் கரங்கள் என்கிறோம். எல்ஐசியின் அடையாளமே விளக்கை அணையாமல் பாதுகாக்கும் கைகள்தான்.

அவன் கை மேலோங்கி இருக்கிறது. கை மாறி விட்டது. கையை கடித்து விட்டது. கை நிறைய சம்பாதிக்கிறான். கைப்பாவையாக ஆடுகிறான். கைக்கும் வாய்க்கும் பத்தாத வாழ்க்கை வாழ்கிறான் என்று கையை பயன்படுத்திய சொற்றொடர்கள் ஏராளமாக உள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக கையெழுத்து மனிதனின் வர்த்தகம், தொழில் உள்ளிட்ட விசயங்களில் கையெழுத்து முக்கியமானது.

எழுதத் தெரியாதவர்களிடம் இடது கை பெருவிரல் ரேகை வாங்கப்படும்.  அது ஏன் இடது கை ரேகை மட்டும்?

எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் பெரும்பாலும் கடினமான வேலைகளில்தான் ஈடுபட்டிருப்பார்கள். அவர்களது பெருவிரல் காயம் படக்கூடும். அல்லது நைந்து போகக் கூடும்.

உலகில் ஒரு நபரின் பெருவிரல் ரேகை போல மற்றவரின் ரேகை இருக்காது என்பதுதான் இங்கு குறிப்பிட வேண்டியது.

சில தரகர்களைக் கவனித்தால், அவர்கள் தங்கள் கைகளை துண்டில் மறைத்துக் கொண்டு பொருட்களின் விலை சம்பந்தமாக ரகசிய பேரம் நடத்துவார்கள்.

கைகளிலும் வலது கையை ஆசிர்வாதம் வழங்குவதற்கு பயன்படுத்துவார்கள். நம்மை யாரேனும் தாக்க வரும்போது இடது கையால்தான் அதை நாம் தடுக்க முயற்சி செய்வோம்.

முழங்கால்வரை நீண்ட கைகளை உடையவர்கள் ஆஜானுபாகுவான தோற்றமுடையவர்களாக கருதப் படுகிறார்கள். சிலர் தங்கள் காரியங்கள் அனைத்திற்கும் இடது கையை பயன்படுத்துவார்கள். பெரும்பாலோர் வலது கையை உபயோகப்படுத்துகின்றனர். சிலர் தொட்ட காரியமெல்லாம் துலங்கும். அவர்களை கைராசிக்காரர்கள் என்று அழைப்போம்.

கைகள் உதவுவதற்கும், பாதுகாப்பதற்கும் மட்டும் பயன்படுவதாக நினைத்து விட வேண்டாம். கைகளால் கொலை செய்யவும் முடியும். அப்படி கொலை செய்துவிட்டு கை விலங்குகளையும் மாட்டிக் கொள்ள முடியும்.

ஒருவரை மன்னிக்க வேண்டுமென்றால் அவரது தோளில் கைகளால் தட்டி, சரி சரி நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும் எனக்கூறி மார்புற தழுவிக் கொள்வோம்.

ஷேக்ஸ்பியரின் மேக்பெத் கதையில் லேடி மேக்பெத் இப்படிக் கூறுவார்.

அரேபியாவில் உள்ள அத்தனை வாசனை திரவியங்களும் கூட இந்த என் சிறய கைகளுக்கு இணையாகாது என்று எகத்தாளமாக கூறுவார்.

காலையில் கண்களை திறக்குமுன் கைகளை தேய்த்து விரித்து அவற்றில் விழிப்பதை பார்த்திருப்பீர்கள். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே, இன்னும் இன்னும் எத்தனையோ பாடல்கள் உள்ளன.

கைகள் நம்மை பாதுகாப்பவை எனக் கூறும் போது அவற்றை நாம் பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டாமா? கைகளை உறுதியாக்குவோம். அதற்காக கடுமையாக உழைப்போம்.

 

 

 

 


Previous Post Next Post

نموذج الاتصال