ஆத்திரம் அறிவுக்கு
சத்ரு என்பார்கள். சர்வம் சாந்த மயம் என்று போதிப்பார்கள்.
புதிய ஆத்திசூடியில்
ரௌத்திரம் பழகு என்றார் பாரதி.
முடிவு கிடைக்காத
விஷயங்களுக்கு தியானத்தில் விடிவு பிறக்கும் என்று ஆன்மீகவாதிகள் நம்புகின்றனர்.
அசட்டுத்துணிச்சல்தான்
ஆத்திர உணர்வுக்கு மூலகாரணம் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது.
ஆத்திரத்தில் எடுக்கும்
முடிவு அசட்டுத்தனமாக அமைந்து விடக்கூடும் என இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆத்திரம்
மனிதனின் சிந்தனையை குறுக்கிவிடும். அவர்களை நெருக்கடியில் தள்ளிவிடும் என முந்தைய
ஆய்வுகள் தெரிவித்தன.
இப்போது என்னடாவென்றால்,
ஆத்திரப்படும் போது நல்ல முடிவுகள் கிடைப்பதாக ஆராய்ச்சி முடிவுகளில் தெரியவந்துள்ளதாக
விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர்.
ஒரே குழப்பமாக
இருக்கிறதா?
குழப்பத்தின் முடிவில்
தெளிவு பிறக்கும் என்றும் வழக்குமொழி இருக்கிறது.
சரி, ஆய்வு முடிவுகளைப்
பார்ப்போம்.
அமெரிக்காவில்
உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மனோதத்துவ பேராசிரியராக பணிபுரியும் வெஸ்லி மூன்ஸ்
என்பவர் தலைமையிலான குழு, மாணவர்களிடம் மூன்றுவிதமான சோதனை களை நடத்தியது. அதன் முடிவில்,
ஆத்திர உணர்வு பகுத்தாய்ந்த அல்லது மிகக்கவனமான முடிவுகளை எடுக்க உதவுகிறது என்பதை
கண்டறிந்தது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட
மாணவர்களில் ஒரு பிரிவினரிடம், அவர்களை கடுங்கோபத்திற்கு ஆளாக்கிய அனுபவம் குறித்து
எழுதும்படி கூறப்பட்டது. அல்லது, சக தோழர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அவர்களது
நம்பிக்கைகள் மற்றும் கனவுகளைக் குறித்து எழுதும்படி கூறப்பட்டது.
மற்றொரு மாணவர்
குழுவிடம் ஆத்திரம் தூண்டிவிடப் படவில்லை.
பணத்தைக் கையாளுவதில்
மாணவர்கள் திறமையானவர்கள் என்று இந்த இருகுழுவினரையும் ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்தம்
செய்யும் வகையிலான அல்லது மறுக்கத்தக்க வகையிலான
வலுவற்ற வாதங் களை வாசிக்கும்படி கோரப்பட்டது.
வலுவான வாதங்கள்
பல்வேறு அறிவியல் பூர்வமான ஆய்வுகள் அடிப்படையில் அமைந்தவை. வலுவற்ற வாதமோ பெரும்பாலும்
ஆதாரமற்ற அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.
இந்த இருவகை வாதங்களில்
எது தர்க்க ரீதியாக ஏற்றுக்கொள் வதாக இருக்கிறது என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
இரண்டாவது குழுவினரிடம்,
இந்த வாதங்களை யார் எழுப்பியது என்ற கூடுதல் விவரங்களும் தரப்பட்டது. அவர்களில் சிலரிடம்,
நிதி விஷயங்களில் திறமையான நிபுணர்களைக் கொண்ட அமைப்பு தயாரித்த வாதங்கள் இவை எனக்
கூறப்பட்டது. வேறுசிலரிடமோ, நிதி விஷயங்களுடன் பொருத்தமற்ற மருத்துவம் தொடர்பான அமைப்பு
தயாரித்த வாதங்கள் என கூறப்பட்டது.
இரண்டு விதமான
ஆய்வுகளிலும் ஒரு விஷயம் தெளிவானது.
அதாவது, ஆத்திரமூட்டும்
வகையிலான விஷயங்கள், வலுவான மற்றும் வலுவற்ற வாதங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை தீர்மானிக்க
உதவிகரமாக இருந்தன. ஆத்திர உணர்வுக்கு ஆளானவர்கள் வலுவான வாதங்களில் சமரசமாகினர். இந்த
வாதங்களை எந்த அமைப்பு தயாரித்திருக்கும் என்பதைக்கூட அவர்கள் துல்லியமாக அனுமானித்தனர்.
ஆனால் ஆத்திர உணர்வு
தூண்டப்படாதவர்கள் இரு விதமான வாதங்களையும் ஏற்கக்கூடிய நிலையில் இருந்தனர். அதாவது,
அவர்களிடம் பகுத்தாயும் திறன் போதவில்லை.
ஆத்திர உணர்வுக்கு
ஆளானவர்கள் பகுத்தறிவு மிக்க முடிவுக்கு வழிகாட்டும் விஷயங்களில்தான் அக்கறை செலுத்துவார்கள்.
பகுத்தறிவுக்குப் பொருந்தாத முடிவுகளை அவர்கள் நிராகரித்து விடுவார்கள் என்று ஆய்வுக்குழு
முடிவு செய்தது.
மொத்தத்தில், முடிவெடுப்பதில்
செயலூக்கம் அளிப்பதற்கு வசதியாகவே ஆத்திர உணர்வு படைக்கப்பட்டுள்ளது. சரியான நடவடிக்கையை
மேற்கொள்ள அது உதவுகிறது என்று அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.