இன்றோடு 22 நாட்கள் ஆகின்றன மீண்டும் நான் திருப்புட்குழி பள்ளிக்கு வந்து.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்று வீட்டிலும், பள்ளியிலும் அவ்வப்போது பயமுறுத்தப்படுவதால், கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றனர்.
எட்டாம் வகுப்பும், ஒன்பதாம் வகுப்பும் எனக்கு பயங்கர சேலன்ஜ் தருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் புதுமை என்பது என் வகுப்பறைச் செயல்பாட்டு திட்டம்.
ஒவ்வொரு நாளும் ஆசிரியர் உள்ளே நுழைந்ததிலிருந்து வெளியேறும் வரை என்ன மாதிரியான செயல்களைச் செய்வார்கள் என்று மாணவன் கணித்து வைத்திருப்பான்.
உதாரணமாக ஆசிரியர் வருவார், வருகைப்பதிவேடு எடுப்பார், வீட்டுப்பாடம்கேட்பார், பாடம் நடத்துவார், இடையில் இவன் இவன் தொந்தரவு செய்வான், அவனையெல்லாம் பிடித்து ஆசிரியர் கண்டிப்பார், இறுதியில் வீட்டுப்பாடம் சொல்லுவார். வெளியே செல்வார் என்ற மாதிரி என்னைக் கணித்துவிடக்கூடாது என்று மிகுந்த திட்டமிட்ட பின்பே வகுப்பறைச் செயல்பாடுகளை மேற்கொள்வது என் வழக்கம்.
இத்தனை தூரம் யோசித்தும், வகுப்பறையில் நான் நடந்துகொண்டும், குழந்தை மைய வகுப்பறையாக நடத்தியும், பிள்ளைகள் வகுப்பறையில் ஆக்கப்பூர்வ வேலைகளில் ஈடுபடுவதில் நாட்டமின்றியே இருக்கின்றனர்.
பதினான்கு வயது என்பது பட்டாம்பூச்சீ பறக்கும் காலம்.
காதல், திருமண வயதிற்கு முன்பான திருமணங்களின் நிலை, பெண்களுக்கான படிப்புரிமை, கல்வியில் அரசின் திட்டங்கள் என பல தலைப்புகளில் ஒவ்வொரு நாளும் கலந்துரையாடக் காத்திருக்கிறேன்.
ஆனால் அவர்களின் ஒத்துழைப்பை என்னால் பெற முடியவே இல்லை.
கட்டுரையாளர் ஆசிரியர் உதயலட்சுமி
இன்று காலை குப்பைகளை அள்ளி குப்பைத்தொட்டியில் அள்ளி வைத்திருந்தனர் இன்றைய தினம் தூய்மை செய்ய வேண்டிய மாணவர்கள். ஆனால் காலையில் ப்ரேயர் முடிந்து வந்து பார்த்தால், குப்பைகள் கும்பல் கும்பலாக, எழுதும் மேஜைகள் மீது அள்ளி வைக்கப்பட்டிருந்தது.
தினமும் வகுப்பறைத் தூய்மைக்கு உதவும் மாணவி பதிவேடு, சுவரில் ஒட்டியிருந்ததும் கிழிக்கப்பட்டிருந்தது. நிச்சயமாக யாரோ சில மாணவர்கள் செய்த வேலை என்று புரிந்தது.
ஆனால் நான் அதிர்ச்சியாகிவிட்டேன். இத்தனை வன்மத்தை குழந்தைகளிடம் நான் எதிர்பார்க்கவில்லை.
நான் எதுவும் பேசவில்லை. வகுப்பறை நேரம் முடிந்ததும் வெளியேறினேன்.
மதியம் வரை மனம் நிலையிலில்லை. நிறைய யோசனைகள் வந்தன. இவர்களிடம் எப்படி மாற்றத்தை உருவாக்குவது? புரிதலை உருவாக்குவது?
தண்டனை கொடுத்திருக்க வேண்டும். அடித்திருக்க வேண்டும் என்ற ஆலோசனைகள் கிடைத்திருந்தன.
தண்டனைகளில் எனக்கு நம்பிக்கையில்லை.
மதியம் வகுப்பிற்குச் சென்றேன்.
காலையில் கோபப்படாமல் இருந்தேனே தவிர மாணவர் மீது வெறுப்பு இருந்தது.
மதியம் மாணவர்களிடம் கேட்டேன். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிறப்புற்று இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு உங்களிடம் சில மாற்றங்கள் ஏற்படுவது அவசியம். அப்படியானால் உங்களை அமைதியாக்க நான் என்ன செய்ய வேண்டூம் என்று கேட்டேன்.
லைப்ரவரி பீரியட் மட்டும் கதை புத்தகம் தரீங்க இல்ல. தினமும் கொடுங்க.
நாடகம் நடிக்கலாம்.
பாட்டு பாடலாம்
டான்ஸ் ஆடலாம்
தினமும் செய்தித்தாள் கொண்டுவாங்க. படிக்கலாம்.
Game விளையாடலாம்
G.k கேள்விகள் கேளுங்க.
வகுப்பறையை அழகு படுத்தலாமா?
கரும்பலகைக்கு பெயிண்ட் அடிக்கலாமா?
ஒட்டடை அடிக்கலாமா?
Light fan வகுப்பறைக்கு வேணும்.
Light and fan என்னால் கொண்டுவர முடிவது கடினம்.
ஆனால் கரும்பலகைக்கு கருப்பு பெயிண்ட் அடிக்கலாம் என்றேன்.
நாம எல்லாம் ஷேர் பண்ணிக்கலாம் என்றனர். நானும் ஷேர் போடறேன் என்றேன்.
மாலை வீட்டிற்கு வந்தபிறகு வாக்கிங் சென்றேன். YouTube ல் புத்தகம் பற்றி கேட்கத் தொடங்கியபோது, Influence is your superpower புத்தகம் பற்றி கேட்கத் தொடங்கியபோது, ஒருவரை Influence செய்ய இயலவில்லை என்றால், அவரிடமே சென்று உங்களை Influence செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்பது இறுதி வழிமுறை என்றார் Youtuber.
நான் சரியாகத்தான் மாணவர்களிடம் நட்பழைப்பை விடுத்திருக்கிறேன் என்று நானே தோள்தட்டிக் கொண்டேன்.
அடிப்பதும், கடுமையான வார்த்தைகளால் திட்டுவதும் உடனடி பலன் தரலாம்.
நான் மாணவர்களிடம் மனமாற்றத்தை காண காத்திருக்கப்போகிறேன்.
ஒருநாள் என் வகுப்பறை ஆக்கப்பூர்வமானதாக மாறும்.
எட்டாம் வகுப்பு தரும் சேலன்ஜ்கள் வேற லெவல். பல நாட்களாக முயன்று தற்போது நான்கு நாட்களாக அவர்களை அமைதியாக உட்கார வைத்திருக்கிறேன். இனி பேசுவதை கேட்கச் செய்ய வேண்டும்.
#INFLUENCE_is_your_superpower