கோயிலிழந்தார் கதை! - கலைஞர் கடிதம்

உடன்பிறப்பே,

இந்துமதக் கடவுள்களில் மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவுக்குக் கோயிலே எங்கும் கிடையாது. எங்கேயாவது ஒரு கோயில் இருக்குமேயானால் அது அதிசயம்தான். 

சிவனுக்கு நாடெங்கும் ஆலயங்கள் உண்டு. விஷ்ணுவுக்கும் எண்ணற்ற கோயில்கள் உண்டு. ஆனால் படைக்கும் தொழிலை மேற்கொண்ட பிர்மதேவனுக்கு ஒரு ஆலயம் கூட இல்லாதிருப்பது வியப்புக்குரிய ஒன்றல்லவா? 

நல்ல வேளை; சிருஷ்டிகர்த்தாவான பிரம்மாவுக்குக் கோயில் இருந்து ஒவ்வொரு ஊர்க் கோயிலிலும் பிரார்த்தனை நடத்துகிற பக்தர்களுக்குப் பிரதி உபகாரமாகப் பிள்ளைச் செல்வங்களை வழங்கிடத் தொடங்கியிருந்தால், இந்தியாவின் மக்கள் தொகையை எந்தக் குடும்ப நலத் திட்டப் பிரச்சாரத்தாலும் குறைத்திட முடியாமற் போயிருக்கும்.

இப்போதே; பட்டினத்தார் பாடியது போல;

"பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப் புலபுல எனக் கலகல என புதல்வர்களைப் பெறுவார் காப்பதற்கும் வகையறியார், கைவிடவும் மாட்டார், ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப்போல அகப்பட்டார்"

எனச் சொல்லும் விதத்தில் குழந்தைச் செல்வம் வீடுகளிலே குவிந்து கொண்டிருக்கின்றன. ஊருக்கு ஊர் பிர்மாவுக்குக் கோயில் வேறு இருந்திருந்தால் எதிர்காலமல்ல; நிகழ்காலமே சமாளிக்க முடியாமல் போயிருக்கும்.

இதையெல்லாம் எதிர்பார்த்துத்தான் அப்போதே பிரம்மாவுக்குக் கோயில் இல்லாமற் போய்விட்டதோ என எண்ணிடத் தோன்றுகிறதல்லவா? யாராவது கதாகாலட்சேபம் செய்கிற பாகவதர்கள் குடும்பநலத் திட்டப் பிரச்சாரம் செய்யும்போது இந்தப் புராணக் கதையையும் சுவையாக இணைத்துச் சொன்னால்; பக்தர்களையும் குடும்ப நலத் திட்டத்தின் பக்கம் சுலபமாக இழுத்துவிடலாம்.

சிவபெருமானின் சாபத்தினால்தான் பிரம்மாவுக்குக் கோயிலே இல்லாமற் போய்விட்டதாம்! அந்தச் சாபம் ஏற்படக் காரணம் என்ன தெரியுமா? அது ஒரு ரசமான கதை!

ஒருநாள் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களுக்குள் "யார் பெரியவர்” என்ற போட்டி ஏற்பட்டுவிட்டது. அந்தப் பிரச்சினையைத் தீர்க்க இருவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவன் அவர்களுக்கு ஒரு வேலை கொடுத்தார். என்ன வேலை தெரியுமா?

"சிவன், விண்ணுக்கும் மண்ணுக்குமாக விசுவ ரூபம் எடுத்து நிற்பார். அவரது அடியைக் கண்டு திரும்பவேண்டும் திருமால்! அதுபோல சிவனின் முடியைக் கண்டு திரும்பவேண்டும் பிரம்மதேவன். யார் முதலில் திரும்புகிறார்களோ அவரே பெரியவர்."

என்று கூறிவிட்டு, சிவபெருமான் ஆகாயத்திற்கும் பூமிக்குமாக உருவமெடுத்து நின்றார்.

அந்த அறைகூவலை ஏற்றுக்கொண்ட திருமால், பன்றி உருவம் எடுத்து பூமியைக் குடைந்து கொண்டே போனார் சிவனின் பாதத்தைக் கண்டுபிடிக்க!

பிரம்மரோ, அன்னக்கிளி உருவமெடுத்து சிவனின் ஜடாமுடியைக் கண்டு திரும்ப வானோக்கி “ராக்கெட்” வேகத்தில் பறந்தார்.

விஷ்ணு, பூமியைத் தோண்டிக் கொண்டேயிருக்கிறார்; சிவனின் பாதம் தென்படவே இல்லை.

பிரம்மா, விண்ணோக்கிப் பறந்து கொண்டேயிருக்கிறார் சிவனின் ஜடாமுடி தெரியவே இல்லை.

பிரம்மாவின் இறக்கைகள் வலியெடுத்துவிட்டன. மெத்தவும் களைத்துப் போய்விட்டார். மேலே பறக்க முடியாமல் தவித்தார். அப்போது சிவனின் தலையிலிருந்த ஒரு தாழம்பூ தவறிக் கீழே விழுந்து பூமியை நோக்கி வந்துகொண்டிருந்தது. பிரம்மா, அந்தத் தாழம் பூவைப் பார்த்து, "எங்கிருந்து வருகிறாய்” என்று கேட்டார்.

"சிவனாரின் தலையிலிருந்து வருகிறேன்" என்றது தாழம்பூ.

"எனக்கு உதவியொன்று செய்யமுடியுமா" எனப் பிரம்மா கெஞ்சிக் கேட்டார்.

"என்ன உதவி வேண்டும்?"

"பிரமாதமான உதவியொன்றும் தேவையில்லை. நான் சிவனின் முடியைப் பார்த்ததாகவும், நாம் இருவரும் சேர்ந்துதான் கீழே வந்ததாகவும் சொல்ல வேண்டும்.”

"சரி, அப்படியே ஆகட்டும்”

தாழம்பூ ஒத்துக்கொண்டதும் பிரம்மாவுக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. இருவரும் சிவனிடம் வந்தனர். “எம்பிரானே! நான்தான் பெரியவன்! உங்கள் தலைமுடியை முதலில் தரிசித்துவிட்டு வந்தவன்" என்று பிரம்மா, தெரிவித்தார்.

சிவன் வியப்புற்று "அப்படியா? நீ என் தலைமுடியைப் பார்த்ததற்கு என்ன ஆதாரம்? ஏதாவது சான்று இருக்கிறதா?” எனக் கேட்டார்.

உடனே பிரம்மா, "இதோ! இந்தத் தாழம்பூ, தங்கள் முடியிலிருந்து வருகிறது. நான் தங்கள் ஜடாமுடியைத் தரிசனம் செய்தது இந்தத் தாழம்பூவுக்குத் தெரியும்" என்றார்.

சிவபெருமான் பிரம்மாவின் வார்த்தையை உடனடியாக நம்பிவிடவில்லை. தன் தலையிலே உள்ள கங்கா தேவியையும், பிறைச் சந்திரனையும் அழைத்தார். இருவரும் ஓடோடி வந்தனர்.

"கங்கா! உண்மையைச் சொல்! பிரம்மதேவன் அன்னக்கிளி உருவத்தில் என் தலைமுடிக்கு அருகே வந்ததை நீ பார்த்தாயா?"

"இல்லை, பிரபூ! இல்லவே இல்லை!"

"சரி, சந்திரா! நீ சொல் - நீயாவது பிரம்மதேவன் என் தலை முடியைக் கண்டதை பார்த்தனையா?"

"கிடையவே, கிடையாது! இந்தத் தாழம்பூ பொய் சொல்லுகிறது”

உடனே சிவனுக்குக் கோபம் பொங்கிற்று. பிரம்ம தேவனைப் பார்த்துச் சீறினார்.

"பிரம்ம தேவரே! நீரே பொய் சொல்வதைக் கண்டு நான் வேதனை அடைகிறேன், உம்மை நம்பி நான் தாழம்பூவின் பேச்சை மட்டும் கேட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? நல்லவேளை, உங்கள் இருவரையும் நம்பாமல் கங்கையையும், பிறைச் சந்திரனையும் அழைத்து வினவியதால் உண்மை வெளியாயிற்று! என்னிடமே பொய் சொன்ன குற்றத்திற்காக உமக்கு பூலோகத்தில் கோயிலே இல்லாமற் போகக் கடவது! அதேபோல் பொய் உரைத்த தாழம்பூவும் இனிமேல் என் பூஜைக்கு வரக்கூடிய தகுதியை இழக்கிறது”

இந்தச் சாபத்தினால்தான் பிரம்மாக்குக் கோயிலே இல்லாமற் போய்விட்டது என்பது புராணம்! அதுவும் திருவண்ணாமலை ஸ்தல புராணம்! பாவம், பிரம்மாவுக்காகப் பொய் சொல்லப் போய்த் தாழம்பூவும் சாபத்திற்கு ஆளானது!

உடன்பிறப்பே,

இந்தக் கதையை நம்புகிறோமோ இல்லையோ, கதையின் மூலம் கிடைக்கிற நீதி நன்றாக இருக்கிறதல்லவா? 

பொய் சொன்னது கடவுள்களிலே ஒருவராக இருந்தாலும், அது பொறுத்துக் கொள்ளக்கூடியதல்ல! நம்பக்கூடியதுமல்ல! கண்ணாரக் கண்டதும் பொய் -காதாரக் கேட்டதும் பொய் - தீர விசாரிப்பதே மெய் - என்பதற்கு ஏற்ப, சிவனார் எடுத்த நடவடிக்கையால் பிரம்மா, கோயிலிழந்தார். தாழம்பூ பூஜைக்குரிய தகுதியை இழந்தது!

எனவே கோயிலிழந்த பிரம்மாவின் கதையைச் சொல்லி, எதிர்காலக் குழந்தைச் செல்வங்களை பொய் பேசாத உண்மையின் வடிவங்களாக உருவாக்க வேண்டும்.

அதற்கு இந்தக் கதை பயன்படும். படைப்புத் தொழில் குறை வாக நடைபெற வேண்டுமென்றுதான் அப்போதே பரமசிவன் பிரம்மாவுக்குக் கோயில் இல்லாமல் செய்துவிட்டார்; அதை உணர்ந்து அனைவரும் குடும்பநலத் திட்டத்தைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கவர்ச்சிகரமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

அன்புள்ள,

மு.க. 25-09-1976
Previous Post Next Post

نموذج الاتصال