கற்பித்து ஒன்றுசேர்த்து புரட்சி செய் என்ற முழக்கத்தை தனது மக்களுக்கு கொடுத்தவர் அண்ணல் அம்பேத்கர்.
கற்றறிந்த மேதையைத் தலைவராக பெற்ற ஒடுக்கப்பட்ட மக்கள், அவரை தங்கள் முன்னோடியாகவும், தலைவராகவும், கொண்டிருப்பது தவறே இல்லை.
கல்வி பெற்றால் அதிகாரமும், பொருளாதாரமும் வந்து சேரும். சாதி வேறுபாடுகள் ஒழியும் என்று தந்தை பெரியார் கூறினார்.
இரண்டு தலைவர்களும் கல்விக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
இருவரில் தந்தை பெரியார் பணம் படைத்தவர். கல்வியிலும் சாதி அடுக்கிலும் பிற்படுத்தப்பட்டவர். ஆனால், அவரைக் காட்டிலும் பணத்திலும் அந்தஸ்த்திலும் குறைவான பார்ப்பனரிடம் பணிந்து போக வேண்டிய நிர்பந்தம்.
அம்பேத்கரோ ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறந்தவர். வகுப்பறையில் அவருடைய சாப்பாட்டு பாத்திரத்தின் அருகில்கூட மற்ற குழந்தைகள் தங்கள் பாத்திரத்தை வைக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு தீண்டாமைக் கொடுமை நிலவிய காலம் அது.
பெரியார் தனது வாழ்க்கை அனுபவத்தில் இந்தச் சமூகத்தின் கேடுகளை கற்றறிந்தார். அந்தக் கேடுகளுக்கு காரணங்களை அறிய நிறைய படித்தார். கற்றறிந்த மனிதர்களின் துணையோடு நிறைய கற்றுத் தேர்ந்தார்.
ஆனால், அண்ணல் அம்பேத்கரோ கல்வியைக் கசடறக் கற்றார். கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கெட்டியாக பற்றிக்கொண்டு மேலும் மேலும் படித்தார்.
இவ்வளவு பீடிகை ஏன் என்றால், எவ்வளவுதான் படித்தாலும், எத்தனை பட்டங்கள் பெற்றாலும், மன்னருடைய சமஸ்தானத்தில் மன்னர் வேலை கொடுத்தாலும், மன்னருடைய வேலைக்காரர்களில் இருந்த ஆதிக்க சாதியினர் அம்பேத்கரை மதிக்கவே இல்லை.
என் அனுபவத்தில் நான் ஒரு நிகழ்வைக் கூறமுடியும்.
எனக்குள் எப்போதும் இருக்கும் இடதுசாரிப் பார்வை, இன்றைய இந்தியாவின் முன்னேற்றத்திற்கு கருப்பு, சிவப்பு, நீலம் ஆகிய மூன்று இயக்கங்களும் ஒன்றுபட்டு போராட வேண்டிய தேவை இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறவன்.
2009ல் லெஃப்ட் டுடே என்ற இணைய இதழை தொடங்கினேன். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மாமேதை மார்க்ஸ் ஆகியோரின் படங்களைக் கொண்டு ஒரு லோகோ தயாரித்தேன்.
2015ல் எனது சொந்த ஊரான ஆதனூரில் வீடு கட்டி திறப்புவிழா அழைப்பிதழில் அந்த லோகோவை அச்சிட்டு இருந்தேன்.
எனது சாதியினரும், மற்ற சாதியினரும் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. தலித் நண்பர்கள் வெளிப்படையாகவே...
“நீங்க ஏன் இவரு படத்தை போட்டிருக்கீங்க?Ó என்று கேட்டனர்.
நான் அவர்களிடம் கோபமாக கேட்டேன்...
“ஒரு மாபெரும் மேதையை, உங்கள் அரிப்புக்காக சாதித் தலைவராக குறுக்கி வைத்து விட்டீர்கள். அவர் உங்கள் சாதிக்காக மட்டுமா அரசியல் சட்டத்தை வடிவமைத்தார்?Ó
உண்மையில் அம்பேத்கரை மட்டுமல்ல, பல தலைவர்களை சாதி வட்டத்துக்குள் சுருக்கி மடக்கி வைத்துவிடுவதை பார்க்கிறோம்.
இந்திய தேசிய தலைவர்களில் வேறு எந்தத் தலைவர்களையும் விட, அம்பேத்கர் எந்த வகையில் குறைந்தவர்? அவருடைய பங்களிப்பு இல்லையென்றால் உலகின் வேறெந்த நாட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காட்டிலும் மதிப்பு மிகுந்த அரணை நமக்கு கொடுத்த அம்பேத்கர் பல மடங்கு உயர்ந்தவர் அம்பேத்கர்.
அவர் பிறந்தபோதே சாதியும், குலமும், மதமும் அவருடன் சேர்ந்து கொண்டன. வாழ்நாளுக்கும் இவை அவருடன் தொடர்ந்தன.
ஆனால், அவர் அமைத்துக் கொண்ட வாழ்க்கை அவருடைய எதிர்காலத்தை வடிமைத்தது. இந்திய சமூக அமைப்பு எப்படியோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தனது வாழ்க்கையை வடிவமைத்தார்.
தனது மக்களுக்கு தானே ஒரு முன் மாதிரியாக இருக்க முயன்றார். கல்வியே தனது மக்களை மரியாதை மிக்கவர்களாக மாற்றும் என்று வலியுறுத்தினார்.
ஆம், ஒருவன் அவமானப்பட்டு அழிவதும், அறிவார்ந்தோர் மத்தியில் சுடர்ந்து ஒளிர்வதும் அவன் செய்கிற வேலையில் தான் இருக்கிறது.
பிறப்பால் மட்டுமே ஒருவன் வாழ்க்கை யில் உயர்ந்தவனாகி விடுவதில்லை. இது சந்தேகமில்லாத உண்மையாகும். வாழ்க்கையில் உயர்ந்தோர் அனைவருமே கடுமையான உழைப்பையும், தியாகத்தையும் செய்தே புகழ்பெறுகிறார்கள்.
ஒருவன் குறிப்பிட்ட சாதியில் பிறந்தா லும், அவன் தனதுசொந்த முயற்சியால்தான் உயர்வு பெறுகிறான்.
ரஷ்யாவை உருவாக்கியதில் ஸ்டாலின் பங்களிப்பும், அமெரிக்காவை உருவாக்கிய தில் ஆப்ரஹாம் லிங்கனின் பங்களிப்பும் முதன்மையானதுதான்.
ஸ்டாலின் செருப்புதைக்கும் குடும்பத்தில் பிறந்தவர். ஆப்ரஹாம் லிங்கன் பழத் தோட்டத்தில் கூலி வேலை செய்த நான்சி என்ற பெண்ணின் மகனாக பிறந்தவர்.
ரஷ்யாவிலோ, அமெரிக்காவிலோ இவர்கள் இருவரும் மேலே எழுந்து வரவும் அதிகாரத்திற்கு வரவும் சமூகத்தில் சாதிய பாகுபாடு எதுவும் தடையாக இருக்கவில்லை.
ஆனால், இந்தியாவில் மிகவும் தீண்டத் தகாதவர்களாக கருதப்பட்ட மஹர் என்ற சாதிப் பிரிவில் பிறந்த அம்பேத்கருக்கு அதுதான் மிகப்பெரிய தடையாக இருந்தது.
இந்திய மக்கள் மத்தியில் அவர் உருவாக்கிய எழுச்சிக்கு நிகராக, உலகில் எந்த உதாரணத்தையும் காட்ட முடியாது. அந்த அளவுக்கு சாதி என்ற கொடுமையில் சிக்கி உயர்ந்தவர் அவர்.
அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைத்து, வெள்ளையருக்கும் கருப்பருக்கும் இடையில் இருந்த வேறுபாடுகளைக் களைந்தவர் லிங்கன்.
ரஷ்யாவிலோ, தனி மனித சுதந்திரத்தை மறுதலித்து. நாடு முழுவதும் சமூகத்திற்கே அதிகாரம் வழங்கும் பொருளாதார அமைப்பை நிறுவியவர் ஸ்டாலின்.
இந்தியாவில் சக மனிதர்களுக்கு இடையிலேயே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஆயிரமாயிரம் வேறுபாடுகள் நிலவின. இந்து மதத்தின் பேரால் நிலவிய இந்த கொடுமைகளை அம்பேத்கர் உடைக்க முயன்றார்.
இந்தியர்களுக்கு சமமான உரிமைகளை வழங்கி அவற்றை நிலைநாட்டுகின்ற அரசியல் அமைப்புச் சட்டத்தை வழங்கினார். சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கொடுமைகளை நீக்கி, மக்களாட்சி முறைக்கு அடித்தளம் அமைத்தார். ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவில் பிறந்து, அவருக்கு முன் யாரும் முயற்சி செய்திராத ஒரு வாழ்க்கை முறையை அவர் அமைத்துக் கொண்டார். அவருடைய வாழ்க்கை சிலிர்ப்பு ஊட்டுவதாகவும் போராட்டமயமாகவும் அமைந்தது ஆகும்.
மாராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில், மண்டண்கட் தாலுகாவில் உள்ள ஆம்பவடே என்ற கிராமம் உள்ளது. அந்த மாநிலத்தில் வீரத்திற்கும், வலிமைக்கும், நேர்மைக்கும் புகழ்பெற்ற மஹர் சாதி, சமூகத்தில் தீண்டத்தகாத சாதியாக இருந்தது.
அம்பேத்கரின் தாத்தா பெயர் மாலோஜி ஸக்பால். இவர், ராணுவத்தில் ஹவில்தார் பதவி வரை உயர்வு பெற்றவர். முகாமில் ராணுவத்தினரின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பகலில் பள்ளி உண்டு. முத்தவர்களுக்கு இரவு நேரத்தில் வகுப்பு நடைபெறும்.
இந்தப் பள்ளியில் அம்பேத்கரின் தந்தை ராம்ஜி சூபேதார் தலைமை ஆசிரியராக பணி செய்தார். இவர் ராணுவத்தில் வேலை செய்தபோது, லட்சுமண் முர்பாட்கர் என்ற நண்பர் நெருக்கமானார். அவருடைய மகள் பீமாபாயை ராம்ஜிக்கு திருமணம் செய்து வைத்தார். இருவருக்கும் 1890ஆம் ஆண்டுவரை 13 குழந்தைகள் பிறந்தன.
ராம்ஜி சூபேதாரின் ராணுவப் பிரிவு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகில் உள்ள மஹுவில் முகாமிட்டிருந்தது. அங்குதான் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி அன்று பீமாபாய் தம்பதிக்கு 14 ஆவது குழந்தையாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது. பீமன் என்று அர்த்தப்படும் பீம் என்று குழந்தைக்கு பெயரிட்டார்கள். குழந்தை பிறந்த இரண்டாவது ஆண்டு 1893ல் ராம்ஜி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், ரத்னகிரி தாலுகாவில் ஓய்வு பெற்ற ராணுவத்தினருடன் வசிக்கச் சென்றார்.
அந்தக் காலகட்டத்தில் தாபோலியில் இருந்த பள்ளிக் கூடங்களில் தீண்டத்தகாத சாதி மாணவர்களுக்கு தடை இருந்தது. இதை எதிர்த்து தீண்டத் தகாத சாதியைச் சேர்ந்த ராணுவ ஓய்வு ஊதியர்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விண்ணப்பம் செய்தார்கள்.
பீம்ராவுக்கு ஆறு வயது ஆனபோது அவரது அம்மா பீமாபாய் இறந்தார். மீராபாய் என்ற அத்தையின் பாதுகாப்பில் அவர் வளர்ந்தார்.
பீம்ராவ் தீண்டத்தகாதவராக இருந்தாலும், பள்ளியில் அம்பேத்கர் என்ற ஆசிரியர் அவர் மீது பிரியமாக இருந்தார். தனது பெயருடன் அந்த ஆசிரியரின் பெயரையும் இணைத்து எழுதும் அளவுக்கு அவர் மீது பீம்ராவ் மரியாதை செலுத்தினார்.
சிறுவயதில் ஸாதாராவில் வசிக்கும் போது பீம்ராவுக்கு முடிவெட்டக்கூட நாவிதர்கள் மறுத்தார்கள். அவருடைய அக்காதான் அவருக்கு முடிவெட்டி விடுவார்.
பீம்ராவ் 1904ஆம் ஆண்டு ஆங்கில நான்காம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து, சூபேதார் ராம்ஜி தன் குடும்பத்துடன் பம்பாய்க்கு சென்றார். பரேல் பகுதியில் ஒரே அறை கொண்ட வீட்டில் குடியேறினார். அங்கு ஏற்கெனவே கொங்கண மஹர் சாதிக் குடும்பங்கள் வசித்தன. பீம்ராவை அரசு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்.
பள்ளியில் உயர் வகுப்புகளுக்கு செல்லச் செல்ல அவரது பிடிவாதம், படபடப்பு குறைந்தது. படிப்பில் கவனம் செலுத்தினார். பள்ளி முடிந்ததும் பொதுநுல்களைப் படிக்கத் தொடங்கினார்.
அவர் படிக்கும் அதே பூங்காவிற்கு ஆசிரியரும் எழுத்தாளருமான கிருஷ்ணாஜி அர்ஜுன் கேலூஸ்கர் என்பவர் மாலைநேரத்தில் வந்து படிப்பது வழக்கம். ஒருநாள் அவர் பீம்ராவை கவனித்து அவருடன் பேசினார். அப்போது, பீம்ராவ் படிக்க வேண்டிய நூல்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வழி கூறினார்.
எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே பீம்ராவுக்கு ரமாபாயுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ரமாவிற்கு பத்து வயதுக்குள் இருக்கும். பீம்ராவுக்குப் பதினேழு வயது!
அந்தக் காலத்தில் கடினமானதாக கருதப்பட்ட மெட்ரிகுலேஷன் தேர்வில் 1907ல் பீம்ராவ் தேறினார். பீம்ராவ்தான் முதன் முதலில் மெட்ரிக் தேறிய தலித் மாணவர். பீம்ராவின் குருவான கேலூஸ்கர் குருஜி பரோடா மன்னர் ஸயாஜிராவ் காயக்வாரிடம் பீம்ராவை அறிமுகம் செய்தார். மன்னர் ஸயாஜிராவ் மாதம் 20-25 ரூபாய் உதவித் தொகை அளிக்க ஒப்புக்கொண்டார்.
3-1-1908 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி பீம்ராவ் எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்தார். இப்போதுதான் அவருக்கு பொறுப்பு புரிந்தது. கல்லூரியில், ஷேக்ஸ்பியரின் “கிங் லியர்” நாடகத்தைத் தழுவி “ஷஹாணீ முல்கீ” என்ற நகைச்சுவை நாடகத்தை எழுதினார்.
எல்பின்ஸ்டன் கல்லூரியில் பணக்கார மாணவர்களும், உயர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். பீம்ராவ் ஆங்கிலத்திலும், பார்சி மொழியிலும் நல்ல திறமை பெற்றிருந்தார். எனவே பார்சி மொழி உதவிப் பேராசிரியார் கே.வி.இரானியும், ஆங்கிலப் பேராசிரியர் முல்லரும் பீம்ராவ் மீது மிகவும் அன்பு வைத்திருந்தனர். பேராசிரியர் முல்லர் தன் சட்டைகளைக்கூடப் பீம்ராவிற்குக் கொடுப்பார்.
அன்றைய காலகட்டத்தில் பீம்ராவின் தந்தை தன் மகனைப் பி.ஏ.வரை படிக்க வைப்பதில் ஈடுபாடும் அக்கறையும் கொண்டிருந்தார் மிகப்பெரிய விஷயம். நவம்பர் 1912இல் பீம்ராவ் பி.ஏ. வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 750க்கு 280 மதிப்பெண்கள் கிடைத்தன.
இந்த மதிப்பெண்களைப் பெற்ற பீம்ராவ் எதிர்காலத்தில் உலகம் புகழும் மேதையாவார் என்று யாருமே தீர்மானித்திருக்க முடியாது.
ஆனால் ஒருவரின் புத்திசாலித்தனமும், திறமையும் வெளிப்படுவதற்குப் பரவலான களம் கிடைத்துவிட்டால், அவை எவ்வளவு சிறப்பாக மலர்ச்சி பெறும் என்பது பீம்ராவின் பிற்கால வாழ்க்கை உணர்த்துகிறது.
பி.ஏ. படிப்பில் தேர்ச்சி பெற்றதும், தந்தையின் விருப்பத்திற்கு மாறாக, பரோடா சமஸ்தான அரசுக்கு வேலை கோரி விண்ணப்பம் அனுப்பினார். பரோடா சமஸ்தான ராணுவத்தில் உடனே லெப்டினென்ட் பதவியில் சேரும்படி ஆணை வந்தது.
பீம்ராவ் பணியில் சேர்ந்த 15 நாட்களில், 1913 ஜனவரியில் தந்தை கடுமையாக நோய்ப் படுக்கையில் இருப்பதாக தந்தி வந்தது. வீடு போனபோது, ராம்ஜி மகனுக்காக உயிரைப் பிடித்து வைத்திருந்தார். ஆம், ராம்ஜி சூபேதார் 1915 பிப்ரவரி 2 ஆம் தேதி காலமானார்.
அதன்பிறகுதான் அவர் வெளிநாட்டுக்கு படிக்கச் சென்றதும் பட்டங்கள் பெற்றதும் வரலாறு.
ஆம், பரோடா மன்னரின் உதவித் தொகையுடன் மேல் படிப்புக்காக அமெரிக்காவுக்கு படிக்கச் செல்லும் வாய்ப்பு பீம்ராவுக்குக் கிடைத்தது. அமெரிக்காவில் படிப்பு முடிந்ததும் பத்து ஆண்டுகள் பரோடா சமஸ்தானத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அமெரிக்கா சென்றார்.
22 வயதே நிரம்பிய ஒரு தீண்டத்தகாத இளைஞனுக்கு அமெரிக்காவில் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது எளிதில் அடைய முடியாத சாதனையாகும்.
அம்பேத்கர் 12.7.1913ல் நியூயார்க் போய்ச் சேர்ந்தார். அமெரிக்காவில் தன்னுடைய வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படுவதை அவர் உணர்ந்தார். அமெரிக்க வாழ்க்கை முறை அவருடைய சிந்தனைகளின் எல்லையை விரிவுபடுத்தியது.
இந்தியாவில் சக மனிதர்களால் ஒதுக்கப்பட்ட அவருக்கு அமெரிக்காவில் கிடைத்த மரியாதை அவருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது.
“மனிதனுடைய வாழ்வில் கடல் அலைகள் போல் வாய்ப்புகள் வருகின்றன. அந்த வாய்ப்புகளை அவன் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால் அவனுக்கு மேன்மை கிடைக்கிறது” என்று தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
அம்பேத்கரின் வாழ்க்கையை கவனமாக படித்தால், சுயமரியாதையை பாதுகாத்து, பொதுச் சமூகத்துடன் இணக்கமாக வாழ்வதையே அவர் வலியுறுத்துகிறார். அவர் தன்னை சாதித் தலைவராக கருதியதில்லை. சாதித்த தலைவர் அவர். •
முழு இதழையும் வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்...