(உதயமுகம் வார இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்)
கவிஞர் கருணானந்தம்
இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் இல்லாத பெயர்.
ஈரோட்டில் தந்தை பெரியாரின் அறிவாயுத தயாரிப்பு பட்டறையில் உருவான மற்றொரு ஆயுதம்.
அண்ணா கண்டெடுத்த கொள்கை முத்துகளில் கலைஞரும் கருணானந்தமும் முக்கியமானவர்கள்.
கலைஞர் 1924ஆம் ஆண்டு பிறந்தவர். கருணானந்தம் 1925 அக்டோபர் மாதம் பிறந்தவர்.
ஆனால், கலைஞருக்கு முன்பே பெரியாரின் பட்டறையில் இணைந்தவர். அதற்கு காரணம் அண்ணா. இதெல்லாம் இருக்கட்டும். முதலில் கருணானந்தத்தின் கதையை பார்த்துவிடுவோம்.
தஞ்சை நகரத்துக்கு உட்பட்ட சுங்கந்தவிர்த்த சோழன் திடல் என்ற ஊரில் 1925 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி பிறந்தவர் கவிஞர் கருணானந்தம்.
1942ல் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இண்டர்மீடியட் என்ற புகுமுகவகுப்பில் சேர்ந்தார். அங்கு படிக்கும்போதே இவரும் சில நண்பர்களும் இணைந்து, திராவிட மாணவர் கழகத்தைத் தொடங்கினார்கள். அந்த அமைப்பின் சார்பில் மாநாடு ஒன்றையும் நடத்தினார்கள். இதை தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து படிப்பைத் துறந்த இவரும், இவருடைய நண்பர் தவமணி ராசனும் ஈரோடு சென்று தந்தை பெரியாரின் குருகுலத்தில் சேர்ந்தனர்.
அங்கு அவருக்கு முன், அன்னை மணியம்மையார், எஸ்.கஜேந்திரன், ஏ.பி.ஜனார்த்தனம் ஆகியோர் இருந்தனர். அவர்களுடன் குடிஅரசு இதழில் ஆஸ்தான கவிஞராக பணியாற்றினார்.
அண்ணாவுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தார். அவருடைய தந்தை சுந்தரமூர்த்தியோ மகனின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டார். அரசு அதிகாரியான அவர், மகனை அரசுப் பணியில் சேர்த்துவிட விரும்பினார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
தனது தந்தையின் விருப்பத்தையும் முயற்சியையும் அண்ணாவிடம் கூறினார் கருணானந்தம்.
“அவருடைய விருப்பமும் நியாயந்தானே. உனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டாமா? வேலையில் சேர்ந்தாலும் ஓய்வு நேரத்தில் இயக்கப் பணியில் ஈடுபடலாம்” என்று அண்ணா கூறினார்.
ஆனால், அதை தந்தை பெரியாரிடம் எப்படி கூறுவது என்றுதான் தயங்கிக் கொண்டிருந்தார்.
இந்தச் சமயத்தில்தான் புதுவையில் தாக்குதலுக்கு உள்ளான கலைஞரை தந்தை பெரியார் சந்தித்தார். அவருடைய காயங்களுக்கு மருந்திட்டு,
“என்னுடன் ஈரோட்டுக்கு வந்துவிடு” என்று அழைத்தார்.
திருமணம் ஆகியிருந்த கலைஞர், தனது வீட்டுக்குச் சென்று அனுமதிபெற்று வருவதாக கூறிச் சென்றிருந்தார்.
இந்தச் சமயத்தில்தான் அவருக்கு அஞ்சல் துறையில் வேலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வேலையில் சேர்ந்துவிட்டால், தனது இடத்துக்கு ஒருவர் வேண்டுமே என்பதால், பெரியார் அனுமதியோடு, திருவாரூர் சென்று, கலைஞரை அழைத்து வந்தார்.
1946ஆம் ஆண்டு, அஞ்சல்துறையில் வேலையில் சேர்ந்தார். பெரியார், அண்ணா, கலைஞரிடம் விடைபெற்று ஈரோடிலிருந்து வெளியேறினார். அவருக்கு அடுத்தபடியாக கலைஞரும் கோவை மாடர்ன் தியேட்டர்ஸில் திரைப்படத்துக்கு பணியாற்றச் சென்றார்.
தஞ்சையில் பணியில் சேர்ந்த அவர், சில காலம் கழித்து ஈரோட்டுக்கே மாற்றப்பட்டார். பெரியாரைச் சந்தித்து இதைச் சொன்னதும்ஞ்
“அட, சனியனே, ஈரோட்டுக்கே மாத்திட்டானா” என்று மகிழ்ச்சி அடைந்தார்.
ஈரோட்டில் இருந்தவரை பெரியாரின் வீட்டில் ஒரு பகுதியை கவிஞர் இல்லம் என்று பெயரிட்டு இவருக்கு ஒதுக்கிக் கொடுத்தார். ஈரோட்டில் இருந்த சமயத்திலேயே பெரியார் அண்ணா கருத்து மோதல் தொடங்கியது.
அரசு ஊழியரான இவரோ நடுநிலை வகித்தார். 1948ல் இவருடைய திருமணம். ஆனால், பெரியார் வேறு ஒரு திருமணத்துக்கு ஒப்புதல் கொடுத்திருந்தார். எனவே, அண்ணாவை அழைத்துப் போகச் சொன்னார்.
அண்ணாவோ, “அய்யாவின் ஒப்புதலை பெற்று வா” என்றார்.
இருவருக்கும் இடையில் கருத்து மோதல் குறைந்திருந்த நேரம். அண்ணா தலைமையில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பிறகு மாயூரத்திலேயே பணி மாறுதல் கிடைத்தது. இயக்கமும் பிளவு பட்டது. மணியம்மையாருடன் திருமணம் முடிந்தது. அதன்பிறகு இருமுறை பெரியார் இவருடைய வீட்டுக்கு வந்து சில நாட்கள் ஓய்வாக தங்கியிருந்தார்.
அந்தச் சமயத்தில், இவருடைய தந்தை சுந்தரமூர்த்தி, “அண்ணாவை நீங்கள் இழந்திருக்கக்கூடாது” என்று வெளிப்படையாகவே சொன்னாராம். அதற்கு தந்தை பெரியார் சிரித்துக்கொண்டாராம்.
இயக்கம் பிளவுபட்டாலும் பெரியாருடனும் அண்ணா, சம்பத், கலைஞர் உள்ளிட்ட திமுக தலைவர்களுடனும் இணக்கமாகவே இருந்தார். அவர்கள் மாயூரம் வந்தால் இவருடைய வீட்டில்தான் தங்குவார்கள்.
1951ல் ஒருநாள் திருச்சி பெரியாள் மாளிகையில் பெரியாரைச் சந்தித்தார். அப்போது அவருடைய அணுகுமுறையில் வித்தியாசம் இருந்ததை உணர்ந்தார்.
“அண்ணாதுரை, கருணாநிதி, சம்பத் மாயூரம் வந்தால் உன் வீட்டில்தான் தங்குகிறார்களாமே” என்று கேட்டார்.
“ஆமாங்கய்யா” என்று இவரும் தயங்காமல் பதில் சொன்னார்.
பெரியாரிடம் கோபம் இருந்ததை உணர்ந்தார். மணியம்மையிடம் போய் சொல்லிவிட்டு வந்தார்.
இந்த நிகழ்வைக் கேட்டதும் அண்ணாவும் சம்பத்தும் வருத்தப்பட்டார்கள். கலைஞரோ சந்தோஷப்பட்டாராம். அதற்கு காரணம், “நாங்கள் மட்டும் அய்யாவுடன் பகை. நீ மட்டும் நல்ல பிள்ளையா?” என்று அடிக்கடி கூறுவாராம் கலைஞர்.
அய்யாவிடம் இருந்து வந்தபிறகு, திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர் எழுதிய அண்ணா காவியம் என்ற கவிதை நூலுக்கு பெரியாரின் மதிப்புரை வாங்கவே அவரைச் சந்தித்ததாக கூறியிருக்கிறார்.
இயக்கப்பணிகள் காரணமாக இவர் நடத்திய போராட்டத்தில் இரண்டு நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார். அதன் காரணமாக துறை நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கிறார். கேரளாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
1969ஆம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்தார். உடனே, மாநில அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பிரசார அலுவலராக நியமிக்கப்பட்டார். அந்தத் துறையில் துணை இயக்குனர் அளவுக்கு பதவி உயர்வு பெற்றார்.
1976ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நெருக்கடி நிலை அமலாக்கப்பட்டது. அதையடுத்து, இவரை பதவி இறக்கம் செய்தார்கள். பணி நிறைவுக்கு 4 ஆண்டுகள் இருந்த நிலையில், மூன்று மாத சம்பளத்தைக் கையில் கொடுத்து, கட்டாய ஓய்வு என்ற அரசைணையுடன் பணியிலிருந்து விடுவித்தனர்.
அதன்பிறகு முழுநேர எழுத்தாளனாக மாறி சுமைதாங்கி என்ற கவிதை நூலையும், பெரியார் வாழ்க்கை வரலாறையும் அண்ணா சில நினைவுகள் என்ற நூலையும் எழுதி வெளியிட்டார்.
திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான கவிஞர் கருணானந்தம் அவர்களின் நூற்றாண்டு விழாவுக்கு உதயமுகமும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
உதயமுகம் வார இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்...
https://drive.google.com/file/d/1eVWRbsHGiP1GHrxC4NE0m10MhIBIl1xZ/view?usp=sharing