கரூரில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 41 உயிர்கள் பலியானது வெறும் விபத்து அல்ல. திட்டமிடலின்மை, பொறுப்பற்ற தன்மை, மனிதாபிமானமின்மை ஆகிய வற்றின் கூட்டுப் பேரிடராகும் இது. இதில், விஜய்க்கும் அவரது கட்சிக்கும் நேரடிப் பொறுப்பு உண்டு.
அரசியல் தலைவரின் முதல்பொறுப்பு:
விஜய் தன்னை அரசியல் தலைவர் என்று அறிவித்துக் கொண்டவர். அரசியல் தலைவரின் அடிப்படைக் கடமை மக்களின் உயிரை காப்பாற்றுவதுதான். ஆனால் கரூர் பேரழிவு, இந்தப் பொறுப்பை அவர் முற்றிலும் புறக்கணித்ததை அம்பலப்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சிக்கு மக்கள் பெருந்திரளாக வருவார்கள் என்பதை அறிந்தும் தாமதமாக வந்தது, கடும் நெரிசல் ஏற்பட்டபோதும் அதைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காதது - இவை அனைத்தும் தன் சொந்தக் கட்சித் தொண்டர்களையே பாது காக்கத் தவறியவர், “அடுத்த தமிழக முதல்வர் நான்தான்” என்று சொல்வது வெட்கக் கேடானது.
இதைவிட வேதனையானது, சம்பவத் திற்குப் பிறகான அவரது கள்ள மவுனம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களிடம் சென்று ஆறுதல் கூறவில்லை. மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடு பவர்களைச் சந்திக்க வில்லை.
சினிமா அரசியலின் மாயத்தோற்றம்
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற் றில் சினிமாவுக்குப் பங்குண்டு என்பது உண்மை தான். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா - அனைவரும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். ஆனால் அவர்களது காலத்தில் சினிமா ஒரு சிந்தனை யோடும், கொள்கையோடும், சமூக இயக்கத்தோடும் இணைந்திருந்தது.
இன்றைய நிலையோ வேறு. விஜயின் அரசியலில் எந்தக் கொள்கையும் இல்லை. வேலையின்மை, தொழிலாளர் உரிமைகள், பெண்கள் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைப் பிரச்சனைகளுக்கு எந்தத் தீர்வும் முன்வைக்கப்படவில்லை.
அரசியல் என்பது மக்களின் உண்மையான பிரச்சனைகளைப் புரிந்து, அதற்கான தீர்வுகளை வகுத்து, போராட்டங்களை நடத்துவது. ஆனால் சினிமா நட்சத்திர அரசியலோ, உணர்ச்சிகளைத் தூண்டி, அரசியல் மேடையை அநாகரிக மேடையாக மாற்றி, மக்களை உண்மையான போராட்டங்களிலிருந்து தள்ளி வைக்கிறது.
புதிய தலைமுறையின் நெருக்கடியும்,
சினிமா அரசியலின் ஏமாற்றுவேலையும்
இன்றைய புதிய தலைமுறை (நிமீஸீ ஞீ) இளைஞர்கள் முந்தைய எந்தத் தலைமுறையும் சந்திக்காத அளவிற்கு தீவிர பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் இளைஞர் வேலையின்மை விகிதம் 18 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. பட்டதாரிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். பல லட்சம் ரூபாய் கல்விக் கடன் வாங்கி படித்தவர்கள், மாத ஊதியம் 15,000 ரூபாய்க்குக் கூட வேலை கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
தனியார் மயமாக்கலின் விளைவாக கல்வி ஒரு வணிகமாகிவிட்டது. உயர்கல்விக்கு லட்சக்கணக்கில் கட்டணம். ஆனால் வேலை உறுதியோ இல்லை. சுகாதாரத் துறை முழுக்க முழுக்க பணக்காரர்களின் சொத்தாகிவிட்டது. ஒரு நோய்க்கு சிகிச்சை பெற நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் வாழ்நாள் சேமிப்பையே இழக்க வேண்டியுள்ளது.
இந்தச் சூழலில்தான் விஜய் போன்ற சினிமா நட்சத்திரங்கள் “மாற்றுத் தலைவர்கள்” என முன்வைக்கப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் என்ன மாற்றம் பேசுகிறார்கள்? வேலையின்மைக்கு என்ன தீர்வு?
உண்மை என்னவெனில், சினிமா நட்சத்திர அரசியல் என்பது முதலாளித்துவ அமைப்பின் திட்டமிட்ட ஏற்பாடு. இளைஞர்கள் தங்கள் உண்மையான பிரச்சனைகளை அடையாளம் கண்டு, அதற்கு எதிராகத் திரள் வதைத் தடுக்கவே இது. ஒரு பக்கம் கார்ப்பரேட் நிறுவனங்கள் வேலைகளை நசுக்குகின்றன, தொழிலாளர் சட்டங்களைத் தகர்க்கின்றன. அதே நேரம், மக்களின் கவனத்தை “நட்சத்திரத் தலைவர்கள்” பக்கம் திருப்ப சினிமா பிம்பம் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய “அரசியலற்ற” அரசியல் - இன்று மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியாளர்களின் பல உத்திகளில் ஒன்றாகவும் இருக்கிறது.
இளைஞர்களின் ஆத்திரமும் ஏமாற்ற மும் நியாயமானவை. ஆனால் அந்த ஆத்தி ரம் அமைப்பு மாற்றத்துக்கான போராட்ட மாக மாறாமல், “புதிய முகம்” தேடும் பயனற்ற முயற்சியாக மாற்றப்படுகிறது. ரசிகர் மன்றங் களில் சேர்ந்து கொண்டாட்டம் நடத்துவதால் வேலை கிடைக்காது. நடிகர்களைத் தலைவ ராக்குவதால் கூலி உயராது. அதற்கு திட்டவட்ட மான கொள்கைகள், தெளிவான நிகழ்ச்சித் திட்டங்கள், நிலையான போராட்டங்கள் தேவை.
41 உயிர்கள் - ஓர் எச்சரிக்கை
கரூரில் பலியான 41 உயிர்கள் வெறும் எண்கள் அல்ல. அவர்கள் தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் - தங்கள் குடும்பங்களின் முதுகெலும்புகள். விஜய் தனது அரசியல் ஆசைக்காக இவர்களைப் பலி கொடுத்ததை நியாயப்படுத்த முடியாது.
இன்று தமிழ்நாட்டில் “சினிமா + ரசிகர்கள் = வாக்காளர்கள்” என்ற கணக்கு நடக்கிறது. மக்களின் அரசியல் உணர்வை வளர்ப்ப தற்குப் பதிலாக, அவர்களை நடிகர்களின் பின்னால் ஓடச் செய்வது, ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. ரசிகர்கள் ஒருவரை தலைவ ராகத் தேடிக்கொண்டே போகிறார்கள் - அவர் பிரபலமாக இருந்தால்மட்டும் போதும், என்பது மக்களாட்சிக்கு எதிரானது.
கரூர் சம்பவம் நமக்கு ஒரு எச்சரிக்கை மணி. மக்கள் உண்மையான அரசியலை யும் சினிமா அரசியலையும் பிரித்துப் பார்க்கத் தொடங்க வேண்டும். குறிப்பாக இளைஞர் கள் உணர வேண்டும் - தங்கள் பிரச்சனை களுக்குத் தீர்வு வர்க்க அரசியலில்தான் உள்ளது, சினிமா பிரமைகளில் அல்ல. மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் அரசியல் நமக்குத் தேவை - மக்கள் உயிர்களைப் பலி கேட்கும் “சினிமா அரசியல்” அல்ல.
உதயமுகம் வார இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்...
•