உதயமுகம் ஏழாவது இதழ்

 


இந்த கரூர் கொடுமை பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிக்கொண்டுவந்துகொண்டே இருக்கிறது.

நாம் அரசியல், திரைப்படம், திரையிசைப் பற்றி கருத்துகளைப் பகிரும்போது போலி கிறிஸ்தவக் கூட்டம் ஒன்று அமைதியாகவே இருக்கும். எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும், ரசிக்கும், கருத்து வைத்திருக்கும், ஆனால் வாயைத் திறக்காது.

ஏனென்றால், இவையெல்லாம் அந்தக் கூட்டத்தைப் பொறுத்தவரை “பாவம்“ “அசுத்தம்“ “அருவருப்பு” “கர்த்தருக்கு எதிரானவை”. அந்தக் கருத்தை நான் விமர்சிப்பதுமில்லை, அவர்களுக்கு விளக்கம் சொல்லி மாற்ற முயற்சிப்பதுமில்லை. எனக்கு அது ஒரு பொருட்டே இல்லை.

கிறிஸ்தவரில் பலருக்கு நான் “சாத்தான்” “பிசாசு” என்பதையெல்லாம் நான் அறிவேன். அதைக்குறித்து எனக்கு எந்தக் கலக்கமுமில்லை.

ஆனால், நடிகர் விஜய்க்கு ஆதரவாக இன்று பொதுத்தளத்தில் பேசுகிறவரில் பெரும்பாலானோர் இந்தப் போலி கிறிஸ்தவக் கூட்டந்தான் என்பது பெரும்செய்தியாக வெளியாகியிருக்கிறது! இது எனக்கு வியப்புதான்! எங்கிருந்தார்கள் இத்தனை நாள்?

இயேசு கிறிஸ்து வந்திருந்தால் கூட இவ்வளவு வலிமையாகக் குரலெழுப்பி இருக்க மாட்டார்கள் இவர்கள்!

விஜய் இதுவரை நடிகர் மட்டுமே. வேறு எந்த வகையிலும் அவரை இவர்கள் அறிந்திருக்க முடியாது. திரைப்படத்தை பாவமாகக் கருதும் இந்தக்கூட்டம் இத்தனை நாள் விஜய்யின் படங்களை திருட்டுத்தனமாகப் பார்த்து அவரை மனதுக்குள் ரகசியாமாகக் கொண்டாடிக்கொண்டிருந்திருக்கிறது என்பது இப்போது வெளிவந்துவிட்டது. 

விஜய்யைப் பற்றிய பகிர்வுகளில் பதிவிடும் பெயர்களைப் பாருங்கள். அந்தப் பெயர்களின் பக்கங்களைச் சென்று பாருங்கள். எல்லாம் பைபிள் வசனமாகத்தான் இருக்கும். 

இந்த குருட்டுத்தனமான ஆதரவுக்கு ஒரே காரணம் மதவெறி!

அவர் ஜோஸப் விஜய் என்பதைத் தவிர இந்த நடிகரைப் பற்றி இவர்களுக்கு மட்டுமல்ல, நம் யாருக்குமே என்ன தெரியும்? அவர் நல்லவராக ஏற்ற கதாபாத்திரங்கள் மட்டுந்தானே தெரியும்? ஒரு தனிமனிதனாக அவரைப் பற்றி நமக்கு எதுவுமே தெரியாத பட்சத்தில், இவரை இந்த கிறிஸ்தவக் கூட்டம் இப்படி வலிந்து ஆதரிப்பதற்கு அவருடைய கிறிஸ்தவப் பெயர் மட்டுமே காரணம் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

சாதிய உணர்விலிருந்து மீளமுடியாத பெரும்பாலான ஏமாற்றுக் கிறிஸ்தவர் இப்போது திரைநட்சத்திர அடிமைத்தனத்திலும் சிக்கிக்கொண்டு, மதவெறியையும் சுமந்துகொண்டு பைபில் வசனங்களை அலங்கார அடையாளமாக வைத்துக்கொண்டிருப்பது என்ன ஒரு மாய்மாலம்!

யாரை ஆதரிப்பது என்று நான் அறையெடுத்து சிந்தித்ததில்லை. அது அரசியலை வைத்து பிழைப்பு நடத்த திட்டமிடுபவர்க்கானத் தேவை.

அன்றாடம் நம்மை, நம் சமூகத்தை, நம் கலாச்சாரத்தை, நம் மாநிலத்தை நேரடியாக அன்றே தாக்குகிற, நீண்டகாலப் பயணத்தில் மறைமுகமாகத் தாக்குகிற அரசியல் கட்சிகளின், அரசாங்கத்தின் செயல்பாடுகள் எனக்குத் தேவையானத் தெளிவைக் கொடுத்துக்கொண்டே வந்தது.

நம்மில் பலரைப்போலவே எனக்கு கட்சி பொருட்டில்லை. ஆட்சிதான். யாருடைய ஆட்சியில் குறைவான பிழைகளும், கூடுதலான நன்மைகளும் கிடைத்தன என்பது மட்டுமே என் அளவுகோல். உணர்ச்சிவசப்பட்டு, ஈர்க்கப்பட்டு வாக்களிக்கிற வயதையெல்லாம் நான் தாண்டி பலகாலம் ஆகிறது. 

ஆனால் என் இளவயதிலேயே நான் அப்படி இல்லை. என் ஊரில் ஒரு நல்ல அண்ணன் ஒருவர் சுயேச்சையாக நின்றார் என்று அவருக்காக தெருத்தெருவாக அவரோடு சென்று வாக்கு சேகரித்த நாட்களும் உண்டு. எல்லா கட்சிகளுக்கும் வாக்களித்திருக்கிறேன். இத்தருணத்தில் எங்கள் குடும்பத்தின் அரசியல் பார்வையை சொல்வது அவசியம்.

திருச்சியில், என் பள்ளி நாட்களில் எங்கள் குடும்பம் எம்ஜிஆர் குடும்பம். அவர் எங்கள் வீட்டில் ஒருவர் போல. அவருக்காக உயிரை விட என் அண்ணன்கள் இருந்தனர். இது மிகையல்ல. சில நிகழ்வுகளைச் சொன்னால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள். பலர் நலன் கருதி அவற்றைத் தவிர்க்கிறேன்.

எம்ஜிஆர் நல்லவர், கருணாநிதி கெட்டவர் என்கிற கோட்பாட்டுடன் வளர்க்கப்பட்டவர் நாங்கள். என் தந்தை அண்ணாதுரையின் பரம ரசிகர்; அவரைப்போலவே இங்லிஷிலும், தமிழிலும் சிறந்து விளங்கியவர். எம்ஜிஆர் படங்களை முதல்நாள் முதல் காட்சியில் பார்க்காமல் எங்கள் குடும்பம் இருந்ததில்லை. தினமும் திரையரங்கிற்கு குடும்பமாய் சென்று இரவுக்காட்சி பார்ப்பது எங்கள் வாடிக்கை. நான் சின்னப்பையன். போய் தூங்கிவிடுவேன். நான் ஆணையிட்டால், எங்க வீட்டுப் பிள்ளை படங்களை தினந்தோறும் பார்த்தது எங்கள் குடும்ப வரலாறுகளில் சில.

எம்ஜிஆர் துப்பாக்கியால் சுடப்பட்டபோது அண்ணன் ஒருவர் ஆரஞ்சுப் பழங்கள் வாங்கிக்கொண்டு சென்னை மருத்துவமனைக்கு வந்து பல லட்சக்கணக்கான ரசிகர்களோடு கூட்டத்தோடு கூட்டமாய் தூரநின்று அழுது புலம்பியவர். அவர் திரும்பி வந்து அவர் கேள்விப்பட்டக் கதைகளை சொன்னதைக் கேட்டு குடும்பமே ஒப்பாரி வைத்த கூத்தையெல்லாம் கேட்டால் சிரிப்பீர்கள்.

திமுகவுக்கு நான் சென்றமுறை வாக்களித்ததுதான் என் வாழ்வில் முதல்முறை. முதலில் சட்டமன்றம், பிறகு நாடாளுமன்றம். அதுவரை அதிமுகதான். மனசாட்சிக்கும் பழக்குநிலைக்குமான போராட்டத்திலும் அதுதான் நிகழ்ந்தது. ஜெயலலிதாவின் பன்முக அராஜகங்களுக்கும், பெரும்பிழைகளுக்குப் பிறகும் நான் அவருக்கு வாக்களித்தபோது என் மனசாட்சி என்னைச் சுட்டது.

சாதிக்கட்சிகள் என் பட்டியலுக்குள்ளேயே வராது. திருமாவளவனை மதிக்கிறேன்; நம்புகிறேன். கொள்கையோடு செயல்படும் கம்யூனிஸ்டுகளை பெரிதும் மதிக்கிறேன். இவர்கள் இருக்கும் கூட்டணியைக் கூர்ந்து நோக்கத் தொடங்கினேன். 

இந்தத் தருணத்தில் தேசிய அரசியலில் ஏற்படத் தொடங்கிய மாற்றங்கள் என் அளவுருகளை உறுதிப்படுத்தி, என் வேலையை எளிதாக்கியது. தேசநலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படத் தொடங்கிய சூழல் என்னை எச்சரிக்கை அடையவைத்தது. அதுவே என்னை ஒரு பக்கமாக இட்டுச் சென்றது. இது நான் பார்த்த இந்தியா அல்ல; இது நான் வளர்ந்த தேசம் அல்ல என்று என்னை கவலை கொள்ளவைத்தது.

2014-க்குப் பிறகு இந்தியா எப்படி உருமாறத் தொடங்கியது என்பதை முதலில் நான் உணரவில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக பல மோசமான மாற்றங்களை உணரத் தொடங்கினேன். பலரும் இதை உணர்வதை நான் கவனித்தேன். 

சாதாரணமாய் பழகிக் கொண்டிருந்தவன் எல்லாம் திடீரென வேறுமாதிரி பார்க்க, பேசத் தொடங்கினான். தொடக்கத்தில் நான் மட்டும் அப்படி நினைக்கிறேனோ என்கிற ஐயம்கூட இருந்தது. பலரும் இதைக்குறித்துப் பேசத்தொடங்கியபோது இது இந்த சமூகத்தையே, தேசத்தையே தாக்கத்தொடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

ஒருவனை அவன் மதத்தைக்கொண்டு ஒட்டுகிற, ஒதுக்குகிற மனப்பாங்கு உருவாகி வருவதைக் கண்டேன். இது இந்தியாவில், நம் தமிழ்நாட்டில் இதற்குமுன் நாம் கேள்விப்பட்டது கிடையாது, அனுபவப்பட்டது கிடையாது, இதைப்பற்றியப் பேச்சுகூட நம் காதில் விழுந்ததில்லை.

சிறுவயதிலிருந்து என் தெருவிலும், வாழ்ந்த பகுதியிலும் எல்லோரையும் போலவே பலமதங்களைச் சேர்ந்தவர்களோடு விளையாடி, பழகி, உறவாடி வந்த அந்த இயல்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருந்ததை உணர்ந்து தடுமாறினேன். எனக்கு அந்த எண்ணமே அசிங்கமாக இருந்தது. 

ஆனால் அதை ஊன்றி, நீரூற்றி ஒரு அரசியல் கட்சி திட்டமிட்டு வைராக்கியத்துடன் வளர்த்துக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்தபோது ஆத்திரம் வந்தது. அவர்களது வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தபோது எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை ஐயமின்றி அறிந்துகொள்ள முடிந்தது.

ஒரு இனம், ஒரு சமூகம், ஒரு நாடு பல்வேறு துறைகளிலும், பல்வேறு பரிமாணங்களிலும் முன்னேற வேண்டுமானால் குடிமக்களிடையே ஒற்றுமை அவசியம். அதுதான் அடிப்படை. அதுவே ஒரு நாட்டை வலுப்படுத்த முடியும், வளப்படுத்த முடியும். 

ஆனால் அதைக்குறித்த சிந்தனையெல்லாம் இல்லாமல், அதிகாரத்தைப் பிடித்து ஆட்சியில் அமர்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அதற்கு எதைவேண்டுமானாலும் செய்யத்துணிகிற அந்தக் கட்சியின் இழிவரலாறு மகாத்மா காந்தியின் படுகொலையில் தொடங்கி, இன்று இந்தியர்களை இரண்டாகப் பிரித்து அவர்களை ஒருவருக்கொருவர் பகைவர்களாக உணரச்செய்தது வரை, ஒற்றுமையைக் குலைக்கிற சூட்சமத்தை மட்டுமே மூலதனமாக்கி அதிகாரத்தைப் பிடித்து, மேலும் இந்த தேசத்தை நிர்மூலமாக்கும் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தக் கட்சி மனிதகுலத்துக்கே எதிரான கட்சி என்று என்னால் சொல்லமுடியும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே ஒரு நல்ல விடியல் வேண்டுமென்றால் இவர்கள் விரட்டப்பட வேண்டும். பொய், பித்தலாட்டம், திருட்டு, வஞ்சம், ஏமாற்று என எல்லாம் ஒருங்கே கொண்ட ஓரு அரசியல் கட்சி இது மட்டுமே. இதைக் கோபத்தில் சொல்லவில்லை; உணர்ந்த விரக்தியில் சொல்கிறேன்.

இந்த எதிர்மறை சக்தியை பல்லாயிரம் ஆண்டுகள் சீரும் சிறப்புமாய் வாழ்ந்து வந்திருக்கிற தமிழ் மண்ணில் தடுக்கக்கூடிய முனைப்பும், ஆற்றலும், திராணியும் இன்றைய சூழலில் திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது என்பது நான் விளங்கிக்கொண்டது. திமுகவை நான் ஆதரிக்க இது ஒரு வலுவான காரணம்.

தமிழ் மொழியையும், தமிழரின் மாண்பையும், தமிழினத்தின் எதிர்காலத்தையும், இன்று சிறந்து நிற்கிற தமிழ்நாடு இன்னும் சிறப்புற, அடுத்த தலைமுறையின் கையில் இவற்றை பத்திரமாய் கொடுத்துவிட்டுப் போவதற்கு இந்த நாசக்கார அசுரனை இந்த மண்ணில் கால்பதிக்க விடக்கூடாது. அதற்கு நான் திமுகவை ஆதரித்தாக வேண்டும். 

இன்றைய சூழலில், தமிழகத்திலுள்ள கட்சிகளில் எது இன்றைக்கும் எதிர்காலத்துக்கும் தேவை என்பதையும் நான் ஆய்ந்தறிந்தே இத்தீர்மானத்துக்கு வந்தேன். •

https://drive.google.com/file/d/15r_954WyHVc6fVqpLkUvEj7cZXRsM8Tn/view?usp=sharing

Previous Post Next Post

نموذج الاتصال