அவர்களிடம், நீ படித்துக் காட்டியபோது, நிச்சயமாக அவர்கள் பெருமூச்செறிந்திருப்பார்கள் - அவர்களால் இப்போதைக்கு வேறெதுவும் செய்யமுடியாது. இன்னமும் பண்டிதர் ஊட்டும் மயக்கம் வேலை செய்கிறது. அவர்களாலே அவ்வளவு சுலபத்தில், எளிதாக அந்த மயக்கத்திலிருந்து விடுபட முடியாது. மெள்ள மெள்ளத்தான் உண்மை அவர்கள் உள்ளத்திலே நுழையும்.
அதுவரையில் நமக்குத்தான் பொறுமை வேண்டும். நமக்கு நமது கொள்கையில் திடமான நம்பிக்கை இருக்கும் போது பயமென்ன? எப்படியும் இன்று மாற்று முகாமில் உள்ளவர்களிலேயே பலர், நம்மோடு சேரும் நாள் வரத்தான் போகிறது!
உனக்கு நமது நண்பர், ஓயாது உழைக்கும் என்.வி. நடராசன் தெரியுமல்லவா! அவரை என்னவென்று எண்ணிக் கொண்டாய்!! ஏ! அப்பா! அதி தீவிரக் காங்கிரஸ் காரராச்சே! சண்டமாருதச் சிங்கம் சத்தியமூர்த்தியின் பிரத்யேகப் பயிற்சிக் கூடத்தில் பல ஆண்டுக்காலம் இருந்தவர்! சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியிலே உறுப்பினர் எதிர்கால கார்ப்பரேஷன் மெம்பர் என்றும், ஒரு சான்சு அடித்தால் எம்.எல்.ஏ ஆகலாம் என்றும் கூறி வந்தனர்.
சென்னையில் எங்கு பார்த்தாலும் இந்த “எலும்பு மனிதர்’ காங்கிரசல்லாத கட்சிகளின்மீது கண்டனம் பொழிவார்! வசை மொழியால் என்னை அர்ச்சிப்பதில் அவருக்கு அப்போது அலாதி ஆசை!! நான் கார்ப்பரேஷன் தேர்தலில் ஈடுபட்டபோது என்னைத் தோற்கடிக்க, முழுமூச்சாக வேலை செய்தவர். அப்போதெல்லாம், அவரிடம் “நாலாம் தமிழ்’ நடமாடும்! நாலாம் தமிழ் என்றால், தெரியவில்லையா, இயல் இசை நாடகம் - முத்தமிழ்! வசை, நாலாம் தமிழ்!! என்ன அப்படி பிரத்யேகப் பெயரிட்டு அழைக்க வேண்டிய அளவுக்கு வசை இருந்தது, என்கிறாயா கேள், தம்பி; சொல்கிறேன்! நீ, எத்தனையோ விபூதி வில்வங்கள் ஏசிப் பேசக் கேட்டிருப்பாய், இதுபோலக் கேட்டதுண்டா சொல், பார்ப்போம்.
“நெஞ்சிலே
இருக்கிற மஞ்சா சோறு வெளியே
வரும் - ஆமாம்.’’
இதற்கு
நாலாம் தமிழ் என்று தனிச்
சிறப்பு அளிக்காமல் இருக்கலாமா, சொல்லு.
பொருள்
என்ன தெரியுமோ இதற்கு - ஒரு தாக்குத் தாக்கியதும்
கிறுகிறு என்று தலைசுற்றி, வாந்தி
எடுக்க வேண்டி நேரிடும் - அப்போது
உண்ட சாதம் மஞ்சள் மஞ்சளாக
வெளியே வரும்! இது தான்
பொருள்!
பேசினது
- நம்ம நடராசன்! எனக்குத்தான் இந்த அர்ச்சனை! தேர்தல்
காலம்! தேச பக்தி அவருக்குத்
தலையில் ஏராளமான! தூபம் போட சத்தியமூர்த்திகள்;
எனவே நாலாம் தமிழைத் தாராளமாகப்
பொழிந்தார்; எனக்கு அவர் எப்படி
அந்த நடையை இப்போது மறந்துவிட்டார்
என்று கூடச் சில சமயங்களிலே
ஆச்சரியமாக இருப்பதுண்டு.
நடை இது; உடை கதர்!
படையும் உண்டு. மாலைக் கலகத்துக்கு
ஆறணா; இரவுக் கலகத்துக்கு எட்டணா;
நோட்டீசைக் கிழிக்க ஒரு ரூபாய்;
சாணிவீச இரண்டணா; கனைத்துக்காட்ட ஒரு அணா; முண்டா
தட்ட மூன்றணா; மூலை முடுக்கிலே நின்று
வம்புச் சண்டை போட மூன்று
ரூபாய் இப்படி “ரேட்’ பேசிக் கொண்டு, பாரதமாதாவுக்குச்
சேவை செய்யும் படை வீரர்கள் உண்டு!
இத்தனைக்கும் எனக்கு அவர் அப்போதும்
நண்பர்தான்! தொழிலாளர் இயக்கக் காரியத்தில் ஒன்றாகவே
வேலை செய்வோம். உன்னிடம் உண்மையைச் சொல்வதிலே தவறு என்ன, ஆங்கிலத்திலே
ஏதாவது தொழிலாளர் சங்கத்துக்குக் கடிதம் வந்துவிட்டால்,என்னிடம்தான்
கொண்டுவந்து காட்டுவார்!! காலையில் இது-மாலை வந்தாலோ
“போலோ பாரத்மாதாக்கீ’
யாகி விடுவார்!
அப்படிப்பட்டவர்
இன்று, எவ்வளவு அரும்பணியாற்றி வருகிறார்,
திராவிடர் இயக்கத்தில், என்பதைப் பார்க்கிறாயல்லவா!
கட்டாய
இந்தியை நுழைத்தார் ஆச்சாரியார்.
இந்தி எதிர்ப்புப் போர் துவங்கிற்று! நாம்
பதறாமல் பகை வளர்த்துக் கொள்ளாமல்,
தமிழ்ப் பண்பு கெடாமல், கொள்கை
வழுவாமல், குறிக்கோள் மறவாமல், எதிர்ப்புக்கு அஞ்சாமல், பணியாற்றினோம் - காங்கிரஸ் வட்டாரத்திலேயே நமக்கு ஆதரவு அரும்பிற்று;
நடராசன் போன்ற பல காங்கிரஸ்
நண்பர்கள். நாங்களும் தமிழர்களே! எங்களுக்கும் தமிழார்வம் உண்டு! நாங்களும் இந்திக்கு
அடிமையாக மாட்டோம்‘ என்று பேசினர் - முதலில்
நம்மவர்களைச் சந்திக்கும் போது - பிறகு தங்களுக்குள்ளேயே
- அதற்கும் பிறகு காங்கிரஸ் மேடைகளிலேயே!!
இதை நான் மிகவும் ரசித்திருக்கிறேன்.
இந்தி எதிர்ப்பும் பேசும் காங்கிரஸ்காரர்களை அடக்கியாக
வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டு
விட்டது, சத்தியமூர்த்திகளுக்கு.
சத்தியமூர்த்திகள்
தடை விதித்தாலும் மீறி, தாய் மொழியைக்
காக்கும் பணிபுரிந்தாக வேண்டும் என்ற கட்டம் வந்துவிட்டது,
நடராசன் போன்றோருக்கு.
சென்னை
ஜில்லா காங்கிரஸ் கமிட்டியில் இந்தப் பிரச்சினை கிளம்பிவிட்டது!
நல்ல வார்த்தை சொல்லி நடராசனைக் கோட்டையில்
பூட்டிவிடச் சத்தியமூர்த்தி திட்டமிட்டார்! தாய்மொழிப்பற்றுக்கு இடமளித்து விட்ட பிறகு, நடராசன்
காங்கிரசின் கட்டுதிட்டத்தை உடைத்தெறிந்து விட்டு வெளி வந்து
விடுவார் என்று எனக்கு நன்றாகத்
தெரிந்துவிட்டது.
எனவே, சென்னை ஜில்லா காங்கிரஸ்
கமிட்டிக் கூட்டம் நடைபெறும் நாளே,
நான், நமது நண்பர்கள், சென்னை
பெத்துநாயக்கன்பேட்டையில் நடத்தும் இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில்,
காங்கிரசை விட்டு விலகிய என்.வி. நடராசன் பேசுவார்
என்று துண்டு அறிக்கை அச்சிட்டு,
காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெறும்
இடத்துக்கே நண்பர் கணேசன் மூலம்
அனுப்பி விட்டேன்.
உள்ளே,
கெஞ்சுதல், கொஞ்சுதல், மிரட்டல், சபித்தல் ஆகிய எல்லா ரசமான
கட்டமும் நடந்தேறி, நடராசன் ராஜிநாமா செய்துவிட்டு
வெளியே வந்தார் - அவரிடம் இந்த “நோடீஸ்’ தரப்பட்டது
- “எப்படி இதற்குள் அச்சிட்டு விட்டீர்கள்’ என்று கேட்டார் - இது
காலையிலேயே அச்சாகிவிட்டது. இதுபோலத்தான் நடக்கும் என்று தெரிந்து அச்சிடப்பட்டது
என்று கணேசன் கூற, நடராசன்,
அப்படியா? என்று கேட்டுவிட்டு, நேரே,
இந்தி எதிர்ப்புக் கூட்டத்துக்கு வந்தார். அன்று துவக்கப்பட்ட அரும்பணி,
நாளாகவாக, தரமும் திறமும் வளரும்
வகையில் நடைபெற்றவண்ணம் இருக்கிறது, எனவே தான் தம்பி,
“நான் சொல்வது, காங்கிரஸ் நண்பர்களிடம், நமது கொள்கையை எடுத்துக்
கூறுவதிலே, பண்புவேண்டும் என்று அவர்கள் இன்று
கோபம் கொண்டவர்களாக இக்கிறார்களென்றால், நாம் இன்னும் அவர்கள்
உள்ளத்தில் புகத்தக்க விதமாக, நமது கொள்கையை
எடுத்துரைக்கவில்லை என்று தான் பொருள்!
நடராசர்கள், எங்கும் இருக்கிறார்கள் அவர்களை
“நம்மவர்’களாக்கிக் கொள்ளும்திறமை நமக் கெல்லாம் வளரவேண்டும்!!
அவர்கள் எப்போதும் எதிர் முகாமிலேயே இருந்து
தீருவோர்கள் என்று எண்ணி, அவர்களைக்
கண்டதும் முகத்தைச் சுளித்துக் கொள்வதும், அவர்கள் உருட்டு விழி
காட்டினால் நாமும் அது போலாவதும்
கூடாது. நாளாகவாக அவர்களுக்கு, காங்கிரஸ் இன்று யாருடைய கூடாரமாகி
வருகிறது என்பது புரியத்தானே போகிறது!
உழைக்க ஒரு கூட்டம், அரசியல்
உல்லாச வாழ்வு நடாத்த வேறோர்
கூட்டமல்லவா வந்துவிட்து! தடியடியும் சிறைவாசமும், முத்துராமலிங்கத் தேவருக்கு! மந்திரிப் பதவியும் அதனால் கிடைக்கும் மதிப்பும்,
ராமநாதபுரம் ராஜாவுக்கு - அதாவது ராஜாவாக இருந்தவருக்கு!!
பட்டேல் வருகிறார் - பணப்பை ஜாக்கிரதை!! என்று
லட்சக்கணக்கில் எச்சரிக்கை நோடீஸ், அபாய அறிவிப்புத்தாட்களை
அச்சிட்டு வழங்கிய வட்டி வேந்தர்கள்,
காங்கிரஸ் வட்டாரத்திலே இன்று வட்டமிடுகிறார்கள். உண்மை
ஊழியம் செய்து, காங்கிரசை ஊராளும்
கட்சியாக மாற்றி அமைத்த காங்கிரஸ்காரர்களுக்கு
இந்தக் காட்சி, பெருமையும் பூரிப்புமா
தரும் என்றுஎண்ணுகிறாய்! அவர்களும் மனிதர்கள்தானே, தம்பி! மனம் படாதபாடு
படத்தான் செய்யும்.
செட்டிநாடு
அரசர் இன்று காங்கிரசுக்கு ஒரு
செல்லப் பிள்ளையாக இருக்கிறார்! இது காங்கிரசின் வளர்ச்சியையா
காட்டும்!! தியாகத் தழும்பேற்ற காங்கிரசார்களைப்
பார்த்து, கேபேசும் கண்களல்லவா, செட்டி நாட்டரசருக்கு இருந்திடக்
காண்கிறோம்! ஆளுங்கட்சிக்கு எந்நாளும் ஆதரவாளர் நாங்கள் - முன்பு வெள்ளையன் ஆண்டு
வந்தான், வெண்சாமரம் வீசி நின்றோம். இடையே
தமிழார்வம் ஓங்கி நின்றது, ஆட்சி
தமிழரிடம் வந்து சேரும்போல் தோன்றிற்று,
உடனே அவர்களோடு குலவினோம். செங்கோட்டையில் காங்கிரஸ் கொடி ஏறிற்று, உடனே
எங்கள் கோட்டையிலும் மூவர்ணக் கொடி ஏற்றிவிட்டோம் - எப்போதும்
ஆளவந்தாரின் ஆதரவாளர் நாங்கள் என்று தானே
செட்டி நாட்டரசரின் புன்னகை பேசுகிறது. இது
காங்கிரஸ் நண்பர்களுக்குத் தெரியாதா!
கொடியைக்
கரத்தில் ஏந்திக்கொண்டு, தமிழர் வாழ்க! இந்தி
ஒழிக! என்று முழக்கமிட்டுக் கொண்டு
ப்யூக்கும் செவர்லேயும் இருக்க, தங்கசாலைத் தெருவிலிருந்து,
கடற்கரைவரையில் நடந்து வந்தார், இன்றைய
செட்டி நாட்டரசர், அன்று குமாரராஜா. நாமாவது
அவரை ஓரளவுக்கு வேலை வாங்கினோம் - மணிமாடத்துக்குச்
சொந்தக்காரர். அவர், எனினும் மணல்மேடுகளுக்கு
இழுத்து வந்தோம்! வியர்வை அரும்புமோ என்று
எண்ணினாலே வெட்டிவேர் விசிறி கொண்டு வீசிட
ஏழெட்டுபேர் எப்போதும் தயாராக இருந்தனர் அவருக்கு
- கொட்டிடும் வியர்வையைத் துடைக்கவும் கூச்சப்பட்டுக் கொண்டு, கொடி பிடித்து
ஊர்வலத்தில் நடந்தார் குமாரராஜா! நாம், குமாரராஜாவுடன் கூட்டுறவு
வைத்துக் கொண்டதால், அவருக்கு ஏற்றபடி கொள்கையைக் குறுக்கிக்
கொள்ளவில்லை, கொள்கையின் குணமும் மணமும் வளர்ந்தது
- வளருகிறது - காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது, அவர் அந்தப்
பக்கம் திரும்பினார், அங்கு அழைப்புக் கிடைத்தது.
சென்றார், வென்றார்; வென்றார் என்றால் உண்மைக் காங்கிரசைக்
கொன்றார் என்று பொருள் - நாமோ,
இருந்தார், சென்றார்; நாம் இலட்சியபுரி நோக்கி
நடைபோடுவோம், என்று தொடர்ந்து நமது
பணியினை ஆற்றி வருகிறோம் காங்கிரஸ்
நண்பர்களுக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும்! இவை தெரியாதது போல
இருக்கிறார்கள் - ஆனால் நமது கழகம்
மக்கள் மன்றமாகி விட்டதையும் காங்கிரஸ் சிங்காரச் சீமான்களின் மாளிகையாகிவிட்டதையும் அவர்கள் அறியாமலில்லை - அறிந்தோர்
மனதிலே ஆயாசம் எழாமலில்லை! வெளியே
காட்டிக் கொள்ளமாட்டார்கள் - அதுவும் கொஞ்சகாலம் வரையில்
தான்!
தம்பி!
சென்ற கிழமை, காங்கிரசின் உண்மை
உழைப்பாளியின் உள்ளன்பைப் பெற்று உயர்இடத்தில் அமைந்துள்ள
காமராஜரின் திருவுருவப்படத்தை, மத்திய சர்க்கார் மந்திரி
டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் திறந்து
வைத்து, பாராட்டுரை வழங்கியிருக்கிறார், என்றோர் செய்தி வந்தது,
பார்த்திருப்பாய். யார், இந்த, டி.டி.கி.? காமராஜர்
வனவாசம் செய்த போது உடன்
இருந்தவரா? இல்லை! இல்லை! அப்போது
சுகவாசம் செய்து கொண்டிருந்தவர்! சிறையில்
தோழரோ? இல்லை உப்புச் சத்தியாக்கிரகத்துக்கும்
திட்டம் தீட்டிய தீரரோ? கள்ளுக்கடை
மறியலில் கலந்து கொண்ட கர்ம
வீரரோ! அன்னியச் சாமான்களை பகிஷ்கரித்த ஆற்றல்மிக்க தேசபக்தரோ? இல்லை, தம்பி, இல்லை.
சோப்புச் சீமான்; சொகுசான வாழ்க்கை
நடத்தி வந்தவர், அன்னிய நாட்டு லக்சும்,
வினோலியாவும் அவருடைய கதர், கைராட்டை,
காங்கிரசைத் தேர்தலிலே எதிர்த்து முறியடித்து, ஒரு முறை சென்னை
சட்டசபையில் எதிர்க்கட்சியிலும் வீற்றிருந்தார். ஆகஸ்டுப் புரட்சி, செப்டம்பர் சத்தியாக்கிரகம், எதிலும் அவர் ஈடுபட்ட
தில்லை. ஆனால் இன்று, அவர்
மத்திய சர்க்கார் மந்திரியானார்! அவர் திருக்கரம் பட்டால்
மதிப்பு, அவருடைய திருவாயால் புகழுரை
சொரிந்தால் பெருமை என்று கருதும்
வகையில் அவரைக்கொண்டு காமராஜரின் திருவுருவப்படத்தைத் திறக்கச் செய்தனர். அந்த நேரத்தில், அந்நாள்
இந்நாள் நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் உள்ளம் கொண்ட உண்மைக்
காங்கிரஸ் காரர் வெட்கமும் வேதனையும்
அடையாமலிருக்க முடியுமா? வெளியே காட்டிக் கொள்ள
மாட்டார்கள் - உள்ளத்திலே வேதனை அரித்தபடிதான் இருக்கும்.
அவர்களெல்லாம், ஒரு கொள்கை புனிதமானது,
திட்டம் தேவையானது, என்று உணரும் வரையில்தான்
நம்மீது காய்வர், பாய்வர். ஆனால் நாம் எடுத்துரைக்கும்
கொள்கை நியாயமானது, திட்டம் தேவையானது என்று
உணர்ந்து விட்டால், நிச்சயமாக, நம்மைப்பின்னணியில் தள்ளிவிட்டு, முன்னணியில் நின்று, வீரப்போர் புரியக்கூடியவர்கள்-இதை அவர்களிடம் பேச
நேரிடும் போதெல்லாம் மட்டுமல்ல, நம்மைப் புரிந்து கொள்ளாததால்
அவர்கள் நம்மை ஏசும் போதெல்லாம்கூட
நினைவிலே வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
மேடை தவறாமல் நம்மை நிந்தித்துத்தான்
வருகிறார்கள் - ஐந்தாண்டு திட்டத்தை நாம் கண்டிப்பது அக்ரமம்
என்று பேசத்தான் செய்கிறார்கள். ஆனால் குற்றாலத்திலேகூடி என்ன
தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனித்தாயா, தம்பி. தென்னாட்டிலே சில
பெரிய கனரகத் தொழிற் சாலைகளையாவது
அமைத்தாக வேண்டும் என்று, வேண்டிக் கேட்டுக்
கொள்கிறார்கள்.
“இப்படியாவது
ஒரு தீர்மானம் போடாவிட்டால் மக்களின் மனம் எரிமலையாகும்.’’
“வடநாட்டாருக்கு,
நாமும் விழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டியாக வேண்டும்.’’
“குட்டக்
குட்ட குனிந்து கிடப்பது, அறிவுடைமையு மல்ல, ஆண்மையுமாகாது.’’
“முதல்
ஐந்தாண்டுத் திட்டத்தில்தான் துரோகம் செய்தனர்-ஏமாற்றப்பட்டோம்-இரண்டாவது திட்டத்திலாவது நியாயம் கிடைக்கவேண்டும்“
“கழகக்காரர்கள்
மானம்போகிற மாதிரிப் பேசு கிறார்கள் - அவர்கள்
சொல்வதும் உண்மையாகதான் இருக்கிறது. வடநாடு, நம்மைக் கேவலமாகத்தான்
நடத்துகிறது’’
“கழகம்
கிடக்கட்டும், சுதேசமித்திரன் கார்ட்டூனுக்கு என்ன சொல்கிறீர்கள்?’’
“அழுத
பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்; தூங்குபவன்
துடையில் கயிறு திரிக்கத்தான் செய்வார்கள்’’
இதுபோலவும்,
இதைவிடக் கடுமையாகவும் பேசினவர்கள், எத்துணை பேரோ, யார்
கண்டார்கள்.
ஒரு தீர்மானம் போட்டாக வேண்டிய நிலைமை
பிறந்திருக்கிறது - சாதாரணமென்றா இதற்குப் பொருள்!
குற்றாலத்துத்
தீர்மானம், கண்களை இறுக மூடிக்கொண்டு,
காதுகளையும் அடைத்துக் கொண்டு இருப்பதுபோலக் காணப்பட்டு
வந்த காங்கிரஸ் நண்பர்கள், உண்மையில், நாம் கூறிவந்ததை மிகக்
கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள் என்பதையும், நம்மைக்
கண்டித்துப் பேசியவர்கள், அதேபோது உள்ளூர வடநாட்டு
வஞ்சனையைப் கண்டித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதையும்தானே, காட்டுகிறது. இல்லையானால். இப்படி, ஒரு தீர்மானம்
தீட்டவேண்டிய அவசியமும் அவசரமும் என்ன வந்தது? தென்னாடு
புறக்கணிக்கப்படுகிறது என்ற உண்மை உள்ளத்தை
உறுத்துவதாலேதான், இரண்டாவது திட்டதிலாவது நியாயம் கிடைக்கச் செய்யுங்கள்
என்று கேட்கவேண்டி வந்தது. இல்லையானால் வீரதீரமாக,
வடநாடு தென்னாட்டுக்கு ஐந்தாண்டுத்திட்டத்தில் துரோகம் செய்தது என்று
கூறுவது தேசத்துரோகம்-என்று கனல் கக்கிடும்,
தீர்மானம் நிறைவேற்றி விட்டல்லவா மறு காரியம் பார்த்திருப்பார்கள்.
தம்பி!
நம்மைவிட அடிக்கடி, வடநாடு போய் வருகிறவர்கள்தானே,
காங்கிரஸ் தலைவர்கள்! அங்கே பொங்கிடும் வளமும்,
அதன் பயனாக ஓங்கிடும் கர்வமும்
அவர்கள் காணாமலா இருக்கிறார்கள்! கண்டு
வெட்கமும் வேதனையும் கொண்டு, பிறகு, கட்சி
கட்டு திட்டம் இவைகளை எண்ணி
விம்முகிறார்கள்! வீறுகொண்டெழும் காலம் வெகு தொலைவில்
என்று கருதாதே - விரைவிலே வரக்கூடும். நீயும் நானும், அவர்களுடைய
இதயத்தைத் தொடும் வகையில், விஷய
விளக்கம் தரவேண்டும்.
எங்களுக்கும்
தெரியும் - என்று ஆரம்பத்தில் ஆதீன
கர்த்தா பாணியில் பேசுவர்.
எங்களுக்கு
மட்டும் தெரியாமலா இருக்கிறது - என்று அன்பாகப் பிறகு
கூறுவார்.
எங்களுக்குத்
தெரியும். நாங்கள் இதற்காவன செய்வோம்
- என்று உறுதி அளிக்க முன்வருவார்கள்
அடுத்த கட்டத்தில்.
நாம் ஒன்றுபட்டுக் கேட்டால்தான், வடநாடு வழிக்கு வரும்!
கொஞ்சியது
போதும் - இனி கிளர்ச்சிதான்!
மயிலே மயிலே இறகு போடென்றால்
போடுமா!
பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்தையே ஒருகை பார்த்தோம்; இந்த
மார்வாடி ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதா முடியாத காரியம்!
விழித்தெழுவீர்
விடுதலைப் போரில் ஈடுபடுவீர்!
திராவிடநாடு
திராவிடருக்கே!
இவ்விதமெல்லாம்,
படிப்படியாகத்தான், பிரச்சினை உருவெடுக்கும்.
அந்த நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டியதுதான் நமது பொறுப்பு.
திருவாவடுதுறை
ராஜரத்தினம் பாணி, தம்பி, உனக்குத்
தெரியுமோ என்னமோ!
அவருடைய
உள்ளத்தில் நன்றாக வாசிக்கவேண்டும் என்ற
எண்ணம் பிறந்துவிட வேண்டும். பிறகு, கேளேன் அந்த
நாத இன்பத்தை! வீணையும் பிடிலும், குழலும், ஷனாயும், கோட்டும் பிறவும் ஒன்றை ஒன்று
தழுவிக்கொண்டு, வெளியே உலவி, கேட்போரின்,
மனமெல்லாம் இசைமயமாக்கி விடுகிறது. அவரிடம் உள்ள நாயனம்
நமக்கு நல்ல இசை அமுது
அளிக்க வேண்டுமானால், நமக்கு மகிழ்வளிக்க வேண்டும்
என்று அவர் எண்ணினால்தானே! கால்
ஆயிரம் தருகிறேன் காம்போதி வாசித்துக் களிப்பூட்டு; ஆயிரம் தருகிறேன், தோடி
நடக்கட்டும்; மேலும் தருகிறேன், மோகனம்
நடக்கட்டும், என்று கூறினால், இசையா
கிடைக்கும்? கங்கிரசிலுள்ள உண்மை ஊழியர்கள், இதுபோலத்தான்,
அவர்களின் உள்ளம், நமது கோரிக்கைக்கு
இடமளிக்கவேண்டும்-பிறகு பாரேன், அவர்களின்
தீவிரத்தை! தீரத்தை! அந்த நிலையைப் பெற,
நாம்தான், முறையாகப் பணியாற்ற வேண்டும்.
இழிமொழி,
பழிச்சொல், ஈனத்தனமான தாக்குதல், இட்டுக்கட்டிப் பேசுவது, இல்லது புனைதல், ஏசல்
வீசுதல், என்பன போன்ற எத்தகைய
கணையும் நம்மை நிலை இழக்கச்
செய்யக்கூடாது. இந்தப் பரிபக்குவம் நமக்குக்
கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற
நல்லெண்ணம் கொண்டவர்கள் இல்லாமற் போகவில்லை - இருந்து விட்டு வந்த
இடத்தில் நுழைந்து கொண்டு, நோட்டம் பார்க்கும்
நண்பர் வீசும் நரகல் நடை
நமக்கு வேறு எதற்குப் பயன்படுகிறது
என்று எண்ணுகிறாய்! இந்தப் பரிபக்குவம் பெறத்தான்!
ஒரே கலத்தில் உண்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளத்தக்க
அளவுக்கு உறவு இருந்த இடத்திலிருந்தே
நித்த நித்தம், குறி தவறினாலும் கவலைப்
படாமல், ஏசல் பாணங்கள் சரமாரியாகக்
கிளம்புகிறது - துவக்கத்தில் தம்பி, உன் போன்றவர்களுக்குக்
கோபமாகக்கூட இருந்தது. இப்போது நாலு நாளைக்கு
அவ்விதமான பாணம் கிளம்பாவிட்டால், ஐயோ
பாவமே; என்ன உடம்புக்கு, என்று
கேட்கும் பரிதாப உணர்ச்சி அல்லவா
வருகிறது - அந்த தூற்றல் பாணங்களைப்
பார்த்துப் பார்த்து பழகிவிட்ட நமக்கு, காங்கிரஸ் வட்டாராம்
ஏவும் கண்டனக் கணை பிரமாத
மானதாகத் தெரியக் காரணமில்லை. நம்மைப்
புரிந்து கொள்ளாததால், காங்கிரஸ் வட்டாராம் கணைவிடுகிறது. நாம் பிரிந்துவிட்டதால் குருபீடம்
கணைவிடுகிறது!! பொறுமை, அமைதி, கண்ணியம்
எனும் அருங்குணத்தையும் பெறவும்; தூற்றலைத் தாங்கிக் கொள்ளும் மனத்திடத்தையும்; நோக்கத்தை மாற்ற முனைவோர் வீசும்
நிந்தனையைப் பொருட்படுத்தலாகாது என்ற உள்ளப்பாங்கையும் நாம்
பெற இப்போதும் குருபீடம் அருள் புரிகிறது!! இன்னும்
நமக்கென்ன குறை!!
குருபீடத்தில்
நாமெல்லாம் குற்றேவல் புரிந்துகொண்டு கேட்டறிந்த உபதேசத்தை மறவாமல், நாம் தொடர்ந்து பணியாற்றி
வருகிறோம்.
என்னைப்
பொறுத்த வரையில், தம்பி! நான் அங்கு
இருந்தபோது கிடைத்த பாடத்தைவிட, அரும்பெரும்
பாடத்தை, இப்போது குருபீடத்திலிருந்து பெறுகிறேன்.
ஏசல் கணைகள் மூலம்-என்
உள்ளம், தாங்கும் சக்தியை மிகத் திறம்படப்
பெற்று வருகிறது. எனவேதான், என்னால் மாற்றுக் கட்சிக்காரரிடம்
மனமாச்சரியம் துளியும் கொள்ளாமல், கொள்கைகளை எடுத்துச் சொல்லும் பக்குவம் நிரம்பத் தேவைப்படும் வகையான பணியாற்றும்படி, உன்னைக்
கேட்டுக் கொள்ளமுடிகிறது; அண்ணனுக்குக் கிடைத்துள்ள மனப்பாங்கு, தம்பிக்கும் உண்டு என்ற நம்பிக்கையுடன்
தான் இவ்விதம் கூறுகிறேன்.
அன்புள்ள,
