உரக்கப் பேசினால் உண்மை ஆகிவிடாது. பேசவிட்டு பேசுவதை உள்வாங்கி பேசுவோர் ஒரு ரகம். பிறரை பேசவிடாமலே பேசுவோர் ஒரு ரகம். எதிரிகளும் மதிக்கும் வகையில் தனது கருத்தைப் பேசுவோர் ஒரு ரகம். மதிக்கிறார்களே என்று அவர்கள் பேசுவதை எல்லாம் சகிக்க முடியாது என்போர் ஒரு ரகம்.
எந்த மேடையானாலும் அமைதியாகவும் ஆணித் தரமாக, சமரசம் இல்லாமல் தனது சித்தாந்த கருத்தை எடுத்து வைப்பவர் தோழர் அருள்மொழி அவர்கள். தொலைக்காட்சி விவாதங்களில் எல்லாத் தலைப்புகளிலும் பேச அழைக்கப்படும் சில குறிப்பிட்ட நபர்களை செட் ப்ராப்பர்ட்டி என்று பெயர் சூட்டியவர். இவரைப் பற்றி கனடா நண்பர் ராதாமனோகரின் பார்வை...
திராவிடர் கழக பிரசார அணி செயலாளர் தோழர் அருள்மொழி அண்ணாமலை அவர்களை பற்றி, காகித ஆயுதம் மாதிமிருமுறை இதழுக்கு ஒரு கட்டுரை எழுத முடியுமா என்று திரு ஆதனூர் சோழன் கேட்டுக்கொண்டார். இது எனக்கு பெரு வியப்பை அளித்தது.
ஏனெனில், கடந்த இரண்டு நாட்களாக தோழர் அருள்மொழி பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நான் யோசித்து கொண்டிருந்தேன். நான் மனதிற்குள் எண்ணியது எப்படி அவருக்கும் தோன்றியது? இயற்கையின் ஒரு சின்ன அதிசயம் என்றுதான் கூறவேண்டும்.
தோழர் அருள்மொழியை நான் நேரில் பார்த்ததில்லை. ஒரு சில தடவைகள் தொலைபேசியில் பேசி உள்ளேன். சில விடயங்களை பற்றிய கருத்து பரிமாற்றங்கள் செய்துள்ளேன்.
முதன் முதலில் ஒரு கிளப் ஹவுஸ் சமூக ஊடக நிகழ்ச்சியில்தான் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
அவர் திராவிட இயக்க வரலாறு பற்றி பேசுவதற்காக வந்திருந்தார். அவர் பேசுவதற்கு முதலாகவே இலங்கை திராவிட முன்னேற்றக் கழக வரலாறு பற்றி என்னை சுருக்கமாக பேசுமாறு கூறினார்கள்.
அது, ஒரு மணி நேரம் மட்டுமேயான உள்ள நிகழ்வு. எனவே நான் இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் இலங்கை திராவிட வரலாறு பற்றி ஒரு முன்னுரையை மட்டுமே வழங்கினேன்!
நான் எப்போதும் பிரமிப்போடு நோக்கும் ஒரு பன்முக ஆளுமை இவர். சக மனிதர்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் இவரிடம் கொஞ்சம் அதிகமாகவே உண்டு என்று கருதுகிறேன்.
பொது விவாதங்களில் எதிரே இருப்பவர் பேசுவதை நிதானமாக கவனிக்கும் போது, எதிராளி பேசுவதைதான் கவனிக்கிறாரா? அல்லது அடுத்து அவர் என்ன பேசப்போகிறார் என்பதை முன்கூட்டியே கணிக்கிறாரா என்றுதான் தோன்றும்.
பொது விவாதங்களில் அதிக சத்தம் போடுவோர்களை மெதுவான குரலில் நிதானமாக சில சமயம் வேடிக்கையாக ஊதி தள்ளிவிடுவார். எதிராளி மனம் கோணாமல் அவரை தன்கருத்துக்கு இசைவாக மாற்றும் ஆற்றல் தோழர் அருள்மொழிக்கு இயற்கையாகாவே அமைந்துள்ளது.
வீட்டு பாடங்களை ஒழுங்காக படிக்கும் மாணவர்கள் பரீட்சைகளில் சுலபத்தில் சித்தி அடைந்து விடுவார்கள். எடுத்து கொண்ட விடயத்தை பற்றி ஆழமாக படித்து விட்டுத்தான் இவர் ஒலிவாங்கியை பிடிக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.
தப்பி தவறியும் பேச்சில் நுனிப்புல் மேய்ச்சல் இல்லை. கூறியது கூறல் இல்லை. வன்சொற்கள் இல்லை. எந்த எதிரியையும் நோகடிக்கும் சொற்களும் இல்லை. கூரான வாளுக்கு நிகரான வாதங்களாக முன்வைப்பார்.
இவர் பேசுவதில் உள்ள உண்மை கருதி மாற்று கருத்தாளர்கள் கூட வெளியில் எதிர்த்து கொண்டே சென்றாலும் உள்ளூர ரசித்து கொண்டே செல்வார்கள். அதில் பலரும் சத்தம் போடாமல் ஏற்றுக்கொண்டும் செல்வார்கள்.
தோழர் அருள்மொழி அவர்களின் சமூக பணி பிரமிக்கத்தக்கது. திராவிட இயக்கத்தின் ஆதார கோட்பாடுகளான சுயமரியாதை சமூகநீதி சுயசிந்தனை கருத்துக்களை சாதாரண மக்களுக்கும் இலகுவில் புரியும் வண்ணம் மிகவும் ரசனையோடு பேசுவதில் இன்றைய தேதியில் இவருக்கு நிகர் யாருமில்லை.
இவரது பேச்சுக்கள் தமிழ்நாட்டை தாண்டி பல கண்டங்களை தாண்டி, பெரும் சித்தாந்த சுவர்களையும் உடைத்து கொண்டு உலகம் முழுதும் ஒலித்து கொண்டிருக்கிறது.
இவரின் கருத்துக்களோடு கொஞ்சம் கூட நெருங்கி வர முடியாத பலரும் இன்று சத்தம் போடாமல் இவரின் பேச்சுக்கு ரசிகர்கள் ஆகி விட்டார்கள்.
திராவிட கோட்பாட்டுக்கு நேர் எதிர் முகாமில் இருப்பவர்களில் பலர் இன்று இவரின் ரசிகர்களாகி விட்டனர். புலம் பெயர்ந்த தமிழர்கள் பெரும்பாலும் தமிழ் தேசிய அரசியலில் ஊறிப்போனவர்கள்.
அவர்களில் பலர் எந்த அரசியல் கோட்பாடுகளும் அற்ற சாதாரண மக்கள். அவர்களில் பலர் தோழர் அருள்மொழியின் காணொளிகளை காண தவற மாட்டார்கள்.
திராவிட இயக்கமாகட்டும், இடதுசாரி இயக்கமாகட்டும், தலித் இயக்கங்களாகட்டும், இன்று மிக பெரிய சவால்களை எதிர்கொண்டு உள்ளன.
இந்திய துணைக்கண்டத்தில் கடந்த நூற்றாண்டுக்கு மேலாக நடந்து வரும் சித்தாந்த போர் இன்று ஒரு உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது.
மனித விழுமியங்களுக்கு எதிரான ஆரிய பார்ப்பனீய ஆதிக்கவாதிகள் மண்ணின் மைந்தர்களை நிரந்தர அடிமைகளாக மாற்றும் போர்முனையில் வீச்சோடு முன்னேறி வரும் காலம் இது.
கண்ணுக்கு தெரியாத பல சூழ்ச்சி வலைகள் அன்றாடம் பின்னப்பட்டு கொண்டே இருக்கிறன.
இந்த மனுவாதிகளின் கபட நாடங்களை மக்கள் எவ்வளவு தூரம் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி நம்முன்னால் எழுந்திருக்கிறது.
சுயசிந்தனை உள்ள எவராலும் இந்த ஆபத்தை புறந்தள்ளி விட்டு போய்விட முடியாது. இதில் நாம் இப்போது தோற்றால் பின்பு எப்போது நாம் எழுந்திருப்போம் என்று கூற முடியாது.
ஆரிய பார்ப்பனீயம் தொடுத்திருக்கும் போரானது இரும்பு ஆயுதங்களால் ஆனவை அல்ல. இந்த போர் இனிப்பு சொற்களாலும் நயவஞ்சகப் பிரசாரங்களாலுமே நடத்தப்படுகிறது.
இவர்களை எதிர்கொள்ள நமக்கு மிகவும் புத்தி கூர்மையுள்ள போராளிகள் தேவையாக இருக்கிறது.
சுருக்கமாகக சொன்னால் தோழர் அருள்மொழி போன்ற போராளிகள் ஏராளமாக தேவைப் படுகிறார்கள். இவர்களை தயார் செய்யும் பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது.
வருங்கால தலைமுறையை நாம் நிராயுத பாணிகளாக மனுவாத ஓநாய்களிடம் கையளித்து விட்டு செல்ல முடியாது.
ஒவ்வொரு இளையோர் கைகளிலும் சுயமரியாதை சமூக நீதி சுயசிந்தனை கருவிகளை கொடுத்து விடவேண்டும்!
இந்த பெரும்பணியை இவர் முதன்மையாக செய்து கொண்டுவருகிறார்.
தோழரின் இந்தப் பணியில் அவருக்கு துணையாக இருப்பது காலத்தின் கட்டாயம்! •
https://drive.google.com/file/d/1CYq_iYHKAvk_X7KAZw0-4qo1m1c7z64n/view?usp=sharing

