மதுரை: மதுரையில் தமிழியக்கத்தின் 8-ம் ஆண்டு தொடக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் கவிஞர் அறிவுமதிக்கு ரூ.1 லட்சம் பரிசுடன் “தமிழியக்க விருது” வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
விழாவில், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் தமிழ் இணையக்கல்விக்கழகம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறது என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
மதுரை தியாகராசர் கல்லூரியில், தமிழியகத்தின் 8-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. மாநில செயலாளர் மு.சுகுமார் வரவேற்று பேசினார்.
விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:
தமிழக அரசு தமிழுக்கு பல்வேறு வகையில் தொண்டாற்றி வருகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற பன்முகத்தன்மை வாய்ந்த குணத்தை மாற்றும் முயற்சிகளை நாட்டிலேயே எதிர்த்து தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மொழி, மரபு, பண்பாட்டை காக்க அரசுக்கு முதல் கடமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
கீழடி அகழாய்வு இடத்தில் அருங்காட்சியகத்தை உருவாக்கி பழமை வாய்ந்த பொருட்கள், கலாச்சார அடையாளமாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வை மத்திய அரசு நிறுத்திய பிறகு தமிழக அரசு நடத்தியது.
கீழடியில் தோண்ட, தோண்ட உண்மை வரலாறு, இனத்தின் திறமையை அறிந்து வருகிறோம். கீழடி அருகில் அலங்காநல்லூரில் வீரத்தின் அடையாளமாக உலக்கத்தரம் வாய்ந்த ஜல்லிக்கட்டு அரங்கத்தை அமைத்துள்ளோம். கலாசாரத்தையும், மொழியையும் உலகுக்கு அறிய செய்து கொண்டிருக்கிறோம்.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் தமிழ் இணையக்கல்விக்கழகம் தமிழ் மொழி வளர்ச்சியில் நல்ல பங்களிப்பை அளித்து வருகிறது. தமிழ் இணைய நூலகத்தில் 2015 முதல் 2021 வரை 1.50 கோடி பார்வையாளர்களை பெற்றிருந்தது. தற்போது நூல்கள் மட்டுமின்றி ஓலைச்சுவடிகள், ஒலி-ஒளி, மல்டி மீடியா சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 17.2 கோடி பார்வையாளர்கள் இணைய வழி நூலகத்தை பார்வையிட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் சுமார் 199 தமிழ் சங்கங்கள் வழியாக வெளிநாட்டு வாழ் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் பயிற்றுநர்களுக்கு சான்றிதழ் வழங்கி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனது தாத்தா பி.டி.ராஜன் அரசு கொறடா, அமைச்சர், சென்னை மாகாண முதல்வராக இருந்துள்ளார். அவர் திருவள்ளுவர் கழகம் தொடங்கி மதுரை தமிழ் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். அவர் தமிழுக்கு பல்வேறு தொண்டுகளை ஆற்றியவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழியக்கத்தின் பொதுச் செயலாளர் அப்துல் காதர் பேசும்போது, “புரட்சி கவிஞர் பாரதிதாசன் ஒரே இரவில் தமிழியக்கம் நூலை எழுதினார். அதேபோல தமிழ் மொழி பாதுகாப்பை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில், தமிழியக்கத்தை மீண்டும் மதுரையில் தொடங்கியவர் விஐடி வேந்தரும், தமிழியகத்தின் நிறுவனருமான கோ.விசுவநாதன். பெரியார், அண்ணா ஆகியோர் இருந்த காரணத்தால் தமிழகம் பெரியதொரு மாற்றத்தை திராவிட இயக்கம் தந்துள்ளது. அதேபோல தமிழியக்கம் வேர் பிடிக்க மண் தந்த இடம் மதுரை தியாகராஜர் கல்லூரி. இக்கல்லூரி இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் பெரியதொரு மாணவர் போராட்டத்தில் பங்கெடுத்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.
தொடர்ந்து கவிஞர் அறிவுமதிக்கு, தமிழியக்க விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விருதுடன் பட்டயம், ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும் தமிழ் மொழியில் சிறந்த பங்களிப்பை அளித்து வரும் பள்ளி மாணவி பூஜிதா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
தமிழியக்கத்தின் பொருளாளர் புலவர் வே.பதுமனார், பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் பேசினர். விழாவில் தியாகராஜர் கல்லூரி நிர்வாக அறங்காவலரும், மேலாண்மைக் குழு உறுப்பினருமான ஹரி தியாகராஜன், தமிழியக்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் பழனிசாமி, மதுரை மண்டல செயலாளர் கார்த்திகேயன், எம்எல்ஏ-க்கள் பூமிநாதன், தளபதி, ஒருங்கிணைப்பாளர் ஷேக் நபி ஆகியோர் பங்கேற்றனர். கவிஞர் அறிவுமதி ஏற்புரையாற்றினார். தமிழியக்கத்தின் மதுரை மாநகர செயலாளர் காளிமுத்து நன்றி கூறினார்.
- ஆதி