அலங்காநல்லூரின் 60 ஆண்டு வளர்ச்சி - ஆதனூர் சோழன்

 அலங்காநல்லூரில் முதல் விறகுக் கடையை எனது தாத்தாதான் தொடங்கினார். ஆம் முதல் எரிபொருள் சப்ளையர்.  

தனியாருக்கு சொந்தமான மரங்களை வாங்கி வெட்டி அடிமரம், கிளைகள், சுள்ளிகள் என்று பிரித்து கட்டை வண்டிகளில் ஏற்றி அப்பா கொண்டு வருவார்.

அடிமரத்தை பலகைகளாகவும், கிளைகளை நிலை, ஜன்னல் கட்டைகளாகவும் அறுப்பார்கள். மரம் அறுக்க ஒரு ரம்ப கிடங்கு இருக்கும். கிடங்கிற்கு குறுக்கே ஒரு தென்னை மரத்தை போட்டிருப்பார்கள். பலகை அறுக்க வேண்டிய மரத்தை கிடங்கிற்கு குறுக்காக தென்னை மரத்தின் மீது வைப்பார்கள். நூல் பிடித்து அளந்து நீளமான ரம்பத்தை மேலிருந்து ஒருவரும், கிடங்கிற்குள் நின்று ஒருவரும் அறுப்பார்கள்.

அப்போவெல்லாம் கை ரம்பம்தான். கோடாரி தான். இப்போதெல்லாம் எல்லாவற்றுக்கும் மிஷின் வந்துவிட்டது. ஒரே ஆள் எவ்வளவு பெரிய மரத்தையும் துண்டு துண்டாக நறுக்கிவிட முடிகிறது.

அப்பாவிடம் மட்டும் ஏழெட்டு மரம் வெட்டிகள் இருந்தார்கள். ஒரு மரத்தை வெட்டி முடிக்க வேண்டுமென்றால், கோடாரிகள், கடப்பாரைகள், சின்ன ரம்பம், பெரிய ரம்பம், சம்மட்டி, ஆப்பு என்று பல வகையான கருவிகள் தேவைப்படும்.

பல நாட்கள் வேலை இழுக்கும். மரம் அறுக்கும் போது விழும் பக்கவாட்டுத் துண்டுகளை உடைத்து விறகாக்குவோம். அடிமரம் போக சிறு கிளைகளையும் விறகாக உடைத்து காயவைத்து விற்போம். விறகு உடைக்கும் போது சிறு சிறாய்த் தூள்கள் விழும். மரம் அறுக்கும்போது ரம்பத்தூள் கிடங்கிற்குள் விழும்.

எல்லாமே காசுதான். சிறாய்தூள், ரம்பத்தூள் அடுப்பு பற்ற வைக்க உதவும். வேம்பு, கொய்யா, புளி, சவுக்கு போன்ற மரங்களுக்கு விலை அதிகம். புகையில்லாமல் எரியும். சீமைக்கருவை, மா போன்ற விறகுகள் புகை வரும் என்பதால் விலை குறைவு.

விறகு உடைப்பதற்கென்று, உடப்பன், பகடை என்று சிலர் இருந்தார்கள். விறகு உடைத்து பரவலாக வீசி எறிவார்கள். நானும் அக்காவும் பள்ளிக்கூடம் முடிந்து வந்தவுடன் அவற்றை கைகளில் அடுக்கி, ஷெட்டுக்குள் அடுக்குவோம்.

கதவு, நிலை, ஜன்னல் செய்வதற்கென்று பக்கத்தில் உள்ள குறவன்குளத்திலிருந்து ஆசாரிகள் வருவார் கள். காலையிலிருந்து மாலை வரை வேலை செய்வார்கள். அவர்களுக்கான உளி, சுத்தியல், மரத்தால் செய்யப்பட்ட கொட்டாப்புளி, சிறு ரம்பம், இழைப்புளி எல்லாம் நாங்களே தருவோம். எல்லாமே எங்கள் வீட்டில் இருக்கும்.

எங்கள் விறகுக்கடை மட்டுமே இருந்ததால், அலங்காநல்லூரில் இருந்த ஹோட்டல்கள், வீடுகளுக்கு எங்கள் கடையைத்தான்  தேடி வருவார்கள். இதைப்பார்த்த வேறு இருவர் போட்டிக்கு கடை போட்டார்கள். இருந்தாலும் எங்கள் கடையில் இருக்கும் வெரைட்டி விறகுகள் அவர்களிடம் இருக்காது.

மரக்கடை விறகுக்கடை வியாபாரத்துடன், அலங்கநல்லூரில் உள்ள பல கடைகளுக்கு அப்பா தவணைக்கு பணமும் கொடுத்திருப்பார். பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும் அப்பா இல்லாத நாட்களில் தவணை வசூல் செய்யச் செல்வோம்.

ஹோட்டல், டீக்கடை, பொறிகடலைக் கடை, வெற்றிலை பாக்குக் கடைகள் என்று வசூல் செய்து வருவோம். தவணை வசூலுக்கென்று ஒரு பின்னல் பை இருக்கும். வசூலுக்குப் போகும்போதே .....

“பொறிகடலைக் கடைகளில் வசூல் பண்ணும் போது, ஒரு கை பொறிகடலை கேட்டு பைக்குள் போட்டுக்கடா... சட்னிக்கு ஆகும்” என்று அம்மா சொல்லும்.

அன்றைக்கு அலங்காநல்லூல் மெயின்ரோடு என்றால் ஆங்காங்கே ஒரு சில கடைகள் மட்டுமே இருக்கும். ஊருக்கு முக்கியத்துவமே மூன்று ரைஸ் மில்கள்தான். பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்தது அரசமரத்து ரைஸ்மில். முனியாண்டி கோவிலைத் தாண்டினால் நடு ரைஸ்மில் அப்புறம் கிழக்கு ரைஸ்மில் ஆகியவை எப்போதும் பிசியாக இருக்கும். மில்லிலேயே நெல்லை ஊறவைத்து அவித்து காயப்போட்டு அரைத்துச் செல்லும் வசதி இருந்தது. இப்போ அந்த மூன்றில் நடு ரைஸ்மில் மட்டுமே அடையாளத்துக்கு இருக்கிறது. அறவை இருக்கிறதா என்றே தெரியவில்லை. மற்ற இரண்டையும் பிளாட் போட்டு விட்டார்கள்.

இப்போது, எவ்வளவு பெரிய விவசாயி யாக இருந்தாலும் நெல்லை மொத்தமாக விற்று விடுகிறார்கள். சேமித்து வைத்து, தேவைக்கு அரைத்து சாப்பிடும் பழக்கமே இல்லாமல் போயிற்று. எல்லோருமே அவரவர் வசதிக்கு தகுந்தபடி அரிசியை மொத்தமாகவோ சில்லறை யாகவோ வாங்கிக் சாப்பிடுகிறார்கள்.

அலங்காநல்லூரின் நுழைவாயிலான கேட்கடையில்தான் சிறு கடைகளும் சின்ன ஹோட்டல்களும் இருக்கும்  விடிய விடிய சில கடைகள் திறந்திருக்கும். சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து மதுரைக்கு போகும் கட்டை வண்டிகள் அங்கே வந்து நிற்கும்.

பத்து பதினைந்து வண்டிகள் சேரும்வரை ஹோட்டல்களில் சாப்பிடுவார்கள். டீக் குடிப்பார்கள். வெற்றிலை பாக்கு போடுவார்கள். திருட்டு பயத்திலிருந்து விடுபடவே இப்படி மொத்தமாக சேர்ந்து செல்வார்கள்.

இப்போ நினைத்து பார்க்கிறேன். அலங்காநல்லூரில் இருந்து மதுரைவரை சாலையோரம் முழுவதும் விளை நிலங்கள் வீட்டடி மனைகளாக மாறிவிட்டன. தொடர்ச்சியாக வீடுகள் வியாபாரக் கடைகள், அலுவலகங்கள் என்று மாறிவிட்டன.

செம்மண் சரளை ரோடாக இருந்தது,  இப்போது இருவழிச் சாலையாக மாறி இருக்கிறது. அலங்காநல்லூர் கரடு முழுக்க வீடுகளாகி விட்டன. எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் ஹைஸ்கூல் கட்டடம் தெரியவில்லை. மதுரையில் கிடைக்கிற அத்தனை பொருட்களும் அலங்காநல்லூரிலேயே கிடைக்கத் தொடங்கி விட்டன.

விறகுக்கடை சுத்தமாக இல்லை. ஆனால் நான்கு மர அறுவை ஆலைகள் வந்துவிட்டன. வீட்டு உபயோக சாமான்கள் மொத்தமாக பல்வேறு டிசைன்களில் தேவைக்கேற்ப செய்து வைத்து வியாபாரம் செய்கிறார்கள். எல்லாமே மிஷின்தான். கன கச்சிதமாக அளவு முன்பின் இல்லாமல் துல்லியமாக செய்து கொடுக்கின்றன.

அரசு நகரப் பேருந்துகள் ஏராளமாக ஓடுகின்றன. அலங்காநல்லூர் வழியாக எல்லாப் பகுதிகளுக்கும் பேருந்துகள் ஓடுகின்றன. பேருந்து நிலையத்தை விரிவு படுத்திவிட்டார்கள். தொழிற்சாலை களுக்கும், பள்ளிகளுக்கும் ஆட்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துகளும் வேன்களும் அதிகரித்து விட்டன.

கிராமமாக இருந்த அலங்காநல்லூர் இப்போது நகரமாகிவிட்டது. மகப்பேறு அறுவை சிகிச்சை வசதியுடன் கூடிய மருத்துவமனையே வந்துவிட்டது. மல்டி ஸ்பெஷாலிட்டி வசதி கொண்ட தனியார் மருத்துவமனைகளும் வந்து விட்டன.

அரசுப் பள்ளிகளுடன் தனியார் பள்ளிகளும், ஐந்து வங்கிகளின் கிளைகளும் இருக்கின்றன. ஊரின் வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. நான் சின்ன வயதில் பார்த்த அலங்காநல்லூர் பல வகைகளில் அசுத்தமானதாக இருந்தது.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு ஒன்றியத் தலைநகர என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாத ஊராக இருந்தது. பத்திரப்பதிவு அலுவலகம் தனியார் கட்டிடத்தில் இருந்தது. மின்சார அலுவலகம், போஸ்ட் ஆபீஸ் எல்லாமும் தனியார் இடங்களில்தான் இயங்கின.

சொல்லப்போனால், அவையும் அலங்காநல்லூர் எல்லையில் இயங்கமுடியாத நிலை இருந்தது. கல்லணை ஊராட்சியில் இயங்கிய காலம் இருந்தது. 

அப்புறம்தான் படிப்படியாக அரசுக்கு சொந்தமான இடங்களை கண்டுபிடித்து கைப்பற்றி, பத்திரப்பதிவு அலுவலகம், போஸ்ட் ஆபீஸ், மின்சார அலுவலகம் ஆகியவற்றை அலங்காநல்லூர் மையத்திற்கு கொண்டுவந்தார்கள்.

நான் சிறுவனாக இருந்தபோது பொழுது போக்கு பூங்கா இருந்தது. அதில், உடற்பயிற்சி கருவிகள்கூட இருந்தன. இப்போ அந்த பூங்கா இருந்த இடத்தில் சமுதாயக் கூடத்தைக் கட்டி இருக்கிறார்கள். 

வாடிவாசல் மைதானம்தான் ஊரின் பொதுக் கழிப்பிடமாக இருந்தது. அதற்குள் பெண்கள் நிம்மதியாக உட்காரக்கூட முடியாது. மைதானத்திற்குள் மட்டுமல்ல ஊர்முழுக்க பன்றிகள் திரியும். மனிதக் கழிவுகளையும், பன்றிக் கழிவுகளையும் வாரியெடுக்க சுத்திகரிப்பு தொழிலாளர்கள் இருப்பார்கள். சிலிண்டர் வடிவ கைவண்டியில், கரண்டி போன்ற ஒரு வாரியை வைத்து கழிவுகளை எடுத்து போடுவார்கள்.

பெரிய வீடுகளில் ஒரு மூலையில் ஒரு ஓட்டை இருக்கும். அது தகரம் கொண்டு மூடியிருக்கும். அந்தத் தகரத்தை தூக்கினால் உள்ள ஒரு தகரத்தில் ஆய் போயிருப்பார்கள். அதையும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள்தான் எடுக்க வேண்டும்.

முன்பெல்லாம் ஜல்லிக்கட்டுக்கு முன் பொதுக் கழிப்பிடத்தை 4 நாட்கள் வேலி போட்டு அடைத்து விடுவார்கள். அந்த நாட்களில் பெண்கள் இயற்கை உபாதையைக் கழிக்க கரட்டு பகுதிக்கு மறைவிடம் தேடி அலைவார்கள். இப்போது அந்த மைதானத்தில் உயரமான பெரிய வாட்டர் டேங்க் கட்டியிருக்கிறார்கள். பெண்களுக்கான சில கழிப்பறைகள் மட்டும் கட்டப்பட்டு உபயோத்தில் இருக்கின்றன.

அலங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்தால் முன்பெல்லாம் நாற்றம் மூக்கைத் துளைக்கும். இப்போதும் நான் சிறுவனாக பார்த்த அதே பஸ்நிலையம்தான். ஆனால், விரிவு படுத்தி கான்கிரீட் தளத்துடன், வணிக வளாகத்துடன்  கட்டணக் கழிப்பறை கட்டி சுத்தமாகி இருக்கிறது.  பேருந்து நிலையத்திற்கு அம்பேத்கர் பெயரை ¢அதிகாரபூரவமாக ஆக்கியிருக்கிறார்கள்.  முத்துராமலிங்கத் தேவர் சிலையையும் வைத்திருக்கிறார்கள். பேருந்து நிலையத்துக்கு கலைஞர் பெயரை வைக்கமட்டும் எதிர்க்கிறார்கள்.


Previous Post Next Post

نموذج الاتصال